மிகினும் குறையினும் - டாக்டர் அருண் (பித்த வெடிப்பு)

Monday, September 18, 2017

“கால்ல எப்பவும் வெடிப்புதான், அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகுதுன்னு விட்டுட்டேன். இப்ப ஒரு மாசமா கால ஊன முடியாம வலிக்கு. லேசா இரத்தமும் எட்டிப்பாக்கு சார்”

“அம்மாக்கு பித்த வெடிப்பு உண்டு. நானும் என்னென்னமோ செஞ்சு பாத்துட்டேன் டாக்டர். அப்ப குணமான மாதிரி இருக்கு. ரெண்டு மூணு மாசத்துல திரும்ப வந்துருது”

 

“கால்ல எப்பவும் பித்த வெடிப்பு உண்டு. இப்ப உள்ளங்கையிலும் வெடிக்கிற மாதிரி இருக்கு டாக்டர். இதுவும் பித்த வெடிப்பு தானா இல்ல வேற எதுவும் வியாதியா டாக்டர்”“சுடுதண்ணில உப்பு போட்டு கால முக்கி வைப்பேன். ப்யூமிஸ் ஸ்டோன் போட்டு காலத் தேய்ப்பேன். காலுக்கு மாய்ஸ்ரைச்சர் க்ரீம் தடவுவேன். எல்லாம் செஞ்சும், வெடிப்பு வந்துருது டாக்டர். உள்ளே சாப்பிடுற மாதிரி மருந்து இருந்தாலும் கொடுங்க. இனிமே எனக்கு பித்த வெடிப்பே வரக் கூடாது”

“கால சுத்தமாதான் வைச்சுக்குறேன் டாக்டர். அப்படியும் பித்த வெடிப்பு வருதே ஏன்? அம்மா சொல்றாங்க. உடம்பு சூடா இருந்தாலும் வரும், எண்ணெய் தேய்ச்சிக் குளின்னு. அப்படியா டாக்டர், எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சா பித்த வெடிப்பு வராதா”

சொற்கள் வெடிக்க, பித்த வெடிப்பைக் காட்டுவார்கள் பாதிக்கப்பட்டோர்!

நோய் விளக்கம் :

பித்த வெடிப்பு என்ற பெயரே நோய்க்கான காரணத்தை பாதி, விளங்கச் செய்து விடும். ஆம் பித்த நாடியில் ஏற்பட்ட பாதிப்பினால் வாத நாடியும் பாதிப்படைந்து வரும் நோய்தான் பித்த வெடிப்பு!

குறி குணங்கள் :

உள்ளங்கால்களில் வெடிப்பு.

வலி, எரிச்சல்.

தீவிர நிலையில் கால்களை ஊன்றி நடக்க சிரமம்.

சிலருக்கு உள்ளங்கைகளிலும் வெடிப்பு.

சித்த மருத்துவம் :

உணவே மருந்து :

உடற்சூட்டை இயல்பில் வைக்க, கீரைகள், பழங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை, சிறுகீரை, பருப்பு கீரை ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மாதுளை, நெல்லி போன்ற கனி வகைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

உருக்கிய நெய், வெண்ணெய் சேர்த்துக் கொள்வதின் மூலமும் பித்த வெடிப்பு வருவதைத் தவிர்க்கலாம்.

சித்த மருந்துகள் :

உள் மருந்துகள் :

மருதமர இலையை அரைத்து எலுமிச்சை அளவு உருட்டி விழுங்கி, காய்ச்சிய பசும்பால் அருந்தி வர பித்த வெடிப்பு குணமாகும்.

அதிமதுரப் பொடி மூன்று விரல் அளவு காலை, மாலை உணவிற்கு பின்

நன்னாரி குடிநீர் - 100 மி.லி. அளவு காலை, மாலை உணவிற்கு முன்

பரங்கிப்பட்டை சூரணம் - ஐந்துவிரல் கொள்ளும் அளவு காலை, மாலை பாலுடன்.

நன்கு கழுவிய கற்றாழைச் சோறு - 20 கிராம் அளவு மோருடன் காலை வெறும் வயிற்றில்.

வெளி மருந்துகள் :

மருதாணி இலைகளை அரைத்துப் பூசி வர, பித்த வெடிப்பு மறையும்.

வெற்றிலை, மஞ்சள், ஆடாதோடை இலை மூன்றையும் அரைத்துப் பூசி வர பித்த வெடிப்பு குறையும்.

சுத்தமான தேனைத் தடவி வர, பித்த வெடிப்பு குணமாகும்.

நெல்லி வற்றலைப் பொடித்து விளக்கெண்ணெய்யுடன் கலந்து குழைத்துப் பூசி வர பித்த வெடிப்பு குணமாகும்.

கிளிஞ்சல் மெழுகு-சித்த மருந்தகங்களில் கிடைக்கும். இதனை பூசி வர பித்த வெடிப்பு குணமாகும்.

பித்த வெடிப்பு வராமல் தடுக்க:

கால்களைச் சுத்தமாகப் பராமரித்தல்.

வெறுங்காலில் நடக்காமை, காலுக்கேற்ற காலணி அணிதல்.

உடற்சூட்டை இயல்பில் வைக்க வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல்.

நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து எடுத்து, வாத நாடியை இயல்பில் வைத்திருத்தல்.

மேற்கண்ட வழிகாட்டுதல் படி பின்பற்றியும் பித்த வெடிப்பு குணமாகவில்லையெனில் அருகில் இருக்கும் சித்த மருத்துவரை நாடி ஆலோசனை பெறுக!

அடுத்த இதழில் “வாயுத் தொல்லை”

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles