மிகினும் குறையினும் - டாக்டர் அருண்

Friday, September 1, 2017

“பொடுகு நானும் சொல்லாத நாளில்லை, தலைக்கு எண்ணெய் வைன்னு, கேட்கவே மாட்டேங்கறா. இப்ப பாருங்க பொடுகு நிறைய வந்துருச்சு. டிவில விளம்பரத்துல வர்ற எல்லா ஷாம்புவையும் போட்டுப் பாத்தாச்சு. சரியான மாதிரி தெரியல, நாளுக்கு நாள் கூடிக்கிட்டே போகுது”

“ஹாஸ்டல்ல இருக்கும் போது லேசா பொடுகு இருந்தது டாக்டர். அப்புறம் தன்னாலயே சரியாயிடுச்சு. இப்ப டெலிவரிக்குப் பிறகு திடீர்னு அதிகமாயிருக்கு”

“தலை அரிக்கிற மாதிரி இருக்கும். கைய வைச்சா வெள்ளையா உதிரும். தலைக்குக் குளிச்சிட்டா சரியாயிடும். இப்பலாம் தலைக்குக் குளிச்சாலும் சரியாகறதில்லை. முடியும் கொட்ட ஆரம்பிச்சிருக்கு”

“பொடுகு ரொம்ப வருசமா இருக்கு டாக்டர். நா கண்டுக்கிட்டதே இல்லை. ஆனா, இப்ப கொஞ்ச நாளா புருவம், மீசை இங்க கூட வெள்ளை வெள்ளையா உதிர்ற மாதிரி இருக்கு”

“தலைக்கு தொடர்ந்து குளிச்சா பொடுகு வர்றது இல்ல டாக்டர். விட்டுட்டம்னா உடனே வந்துருது”

“டாக்டர் பொடுகை குணப்படுத்தவே முடியாதா? என்ன செஞ்சாலும் திரும்ப வந்துருது”

பொடுகுக்காரர்களின் கேள்விகள் பலவிதமாக ஒலிக்கத் தொடங்கியது. கட்டுரை எழுத அமர்ந்தேன்.

 

‘உடற்சூடு’ என்ற பதம் நமது கட்டுரையில் தொடர்ந்து இடம்பெறுவதைக் கண்டிருப்பீர்கள். ‘ஆதாரமான சுழல்’ என்று சித்த மருத்துவ இலக்கியத்தில் இதனைக் குறிப்பிடுவோம். உயிர் வாழ்வதற்கு ஆதாரமான உடற்சூடு இயல்பாக இருந்தால் எந்த ஒரு நோயும் நம்மைத் தாக்காது. இயல்பிற்கு மிகும் போதோ, குறையும் போதோ பலவிதமான நோய்களைத் தோற்றுவிக்கும். எனவேதான் ‘ஆதாரமான சுழல்’ என்றோம்.

 

சித்தர் பாடல் வடிவில் கூறுவதாக இருந்தால்,

“ஆதாரமான சுழல் உஷ்ணமாச்சே

அணுகி வரும் பல பிணிக்கும் இறையுமாச்சே..”

குறிகுணங்கள்

தலையில் அரிப்பு.

செதில் உதிரல்.

சிறுசிறு கட்டிகள், கரடு போல தலையில் தென்படல்.

முடி உதிரல்.

மருத்துவம்!

உணவே மருந்து!

உடற்சூட்டை இயல்பில் வைக்கும் உடல்திறனை வளர்க்கும் கீரை வகைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உருக்கிய நெய்யை மதிய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மாதுளை, கொய்யா, நெல்லி போன்ற கனி வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.  

சித்த மருந்துகள்!

பொடுதலை என்னும் மூலிகையை அரைத்து தலையில் பூசி, ஊறவைத்து பின் குளித்து வர பொடுகுத் தொல்லை நீங்கும்.

கோழிமுட்டை வெண்கருவை தலையில் தேய்த்து பத்து நிமிடங்கள் ஊறவைத்து, சுடுநீரில் குளித்து வர பொடுகு நீங்கும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம்.

புளித்த தயிரை தலையில் தேய்த்து ஊற வைத்து, சுடுநீரில் குளித்து வர பொடுகு குணமாகும். இதனையும் வாரம் இருமுறை செய்து வரலாம்.

வெள்ளை மிளகை அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர பொடுகு நீங்கும். இது காரத்தன்மை மிக்கது என்பதால் ஒரு சிலருக்கு தலையில் சிறிது எரிச்சலைத் தரலாம்.

 

பொடுதலை தைலம்!

சித்த மருந்தகங்களில் கிடைக்கும். இதனைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர பொடுகு நீங்கும்.

பிரம்ம தண்டு தைலம்!

சித்த மருத்துவர்களிடம் கிடைக்கும். இதனைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர பொடுகு நீங்கும். தீவிர நிலையில் இதனை மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் 5 மி.லி. அளவு காலையில் வெறும் வயிற்றில் பாலுடன் கலந்து, எடுத்துக் கொள்ளலாம்.

வெட்டாலைத் தைலம் - தலைக்குத் தேய்த்து வர பொடுகு குணமாகும்.

பொடுகு வராமல் தடுக்க:

வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல்

ஷாம்புவை பயன்பாட்டில் இருந்து ஒதுக்கி சிகைக்காய்க்கு மாறுதல்.

தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்தல்.

தலைக்குத் தொடர்பான சீப்பு, தலையனை உறை, போர்வை, ஹெல்மெட் போன்றவற்றை சுத்தமாகப் பராமரித்தல்.

அடுத்த இதழில் ‘பித்த வெடிப்பு’

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles