மிகினும் குறையினும் (குரற்கம்மல்) - டாக்டர் அருண்

Monday, October 16, 2017

“டாக்டர் இவரு சைக்கிள்ல தெருத் தெருவா போய் பழைய பாத்திரங்களை வாங்கி, கடைக்கு கொடுக்கிற வேலை பாக்காரு. போனவாரம்  சளி, இருமல், காய்ச்சல்னு ரெண்டு நாளு வேலைக்குப் போகலை. மெடிக்கல்ல மாத்திரை வாங்கிப் போட்டாரு. காய்ச்சல் சரியாயிடுச்சு.

தொண்டைக்கட்டு இருந்துச்சு. சளியால இருக்கும்னு மிளகு ரசம்லாம் வைச்சுக் கொடுத்தேன். ஆனா குரல் சுத்தமா வர மாட்டேங்குது. இவரு தொழிலுக்கு கத்திக் குரலு கொடுக்கலேன்னா வியாபரமே நடக்காது. ஏதாவது நல்ல மருந்தா தாங்க!”

“அப்பப்ப தொண்டைக்கட்டு, காய்ச்சல் வரும். நாலஞ்சு நாள் இருக்கும் சரியாயிரும். இந்த தடவை குரல் வரவே மாட்டேங்குது”

“உப்புப் போட்டுக் கொப்புளிச்சாச்சு. என்னென்ன மாத்திரை உண்டோ எல்லாம் சாப்பிட்டாச்சு. இன்னியோட 15 நாளாகுது. அடுத்த வாரம் இவளுக்கு வைவா வேற இருக்கு டாக்டர். உடனே சரியாகுற மாதிரி மருந்தா கொடுங்க டாக்டர்”

“குளிர்ச்சியாக் கூட ஒண்ணும் சாப்பிடல டாக்டர். ஒரு வாரம் காய்ச்சல் இருந்தது. வைரல் ஃபீவர்ன்னாங்க. குரல்தான் பழைய மாதிரி வரமாட்டேங்குது!”

“எந்நேரம் பாடிக்கிட்டே இருப்பாரு டாக்டர். நான் கூட எதுக்குக் கனைச்சீக சித்த நேரம் சும்மா இருங்களேன்னேன். இப்ப ஏதோ மொபைல கைல வச்சுக்கிட்டு அதுலயே மீசிக்லாம் வருது. பழைய பாட்டெல்லாம் பாடிக்கிட்டு இருப்பாரு. அன்னைக்கு அப்படித்தான் ஒரே நேரத்துல தொடர்ந்து நாலு பாட்டு பாடினாரு. அது “அந்த பாவம் என்ற கல்லறைக்கு பல வழி” என்றும் “தர்மதேவன் கோயிலுக்கு” திரும்பத் திரும்ப முக்கிக்கிட்டு பாடிக்கிட்டு இருந்தாரு. அதுல கட்டுனதுதான் அதுக்கப்புறம் இப்படி சைகை பாசைதான். வீடு அமைதியா இருக்குன்னு நிம்மதியா மூணு நாளு விட்டுட்டேன். இன்னும் பழைய குரல் வரலைங்கவும் தான் இவரக் கூட்டிட்டு வந்துட்டேன்!”

குரல் கம்மியவர்களுடன் வருபவர்களும் குரல் கம்மியே பேசுகிறார்கள்.

நோய் விளக்கம்

வாதம், கபம் ஆகிய நாடிகளில் ஏற்படும் கோளாறினால் குரல்நாண் பாதிப்படைந்து குரற்கம்மல் ஏற்படும்.

குளிர்ச்சியான நீர், குளிர்பானங்கள், தொடர்ச்சியான பணி, தூக்கம் தவிர்த்தல், மழையில் நனைதல், குளிர் காற்றில் ஈடுபடல் போன்ற காரணங்களால் வாத, கப, நாடிகள் பாதிப்படையலாம்.

சித்த மருத்துவம்:

உணவே மருந்து:

  • மிளகு சேர்த்த உணவினை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • காய்ச்சிய பாலுடன், மிளகுத்தூள், மஞ்சள் தூள், பணங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சி சூடாக அருந்தி வரலாம்.
  • தூதுவளை ரசம் சேர்த்து வர குரற்கம்மல் குறையும்.
  • இஞ்சி, சீரகம், குரலுக்கு நலம் பயக்கும்.
  • சுடுநீர் அருந்துதலே நல் மருந்தாக பயன்படும்.
  • இனிப்புப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

 

சித்த மருந்துகள்

ஆடாதோடை குடிநீர் - காலை, மாலை உணவிற்கு முன்

பெரியவர்கள் 60 -100 மி.லி. வரை

குழந்தைகள் 30- 60 மி.லி. வரை

 

ஆடாதோடைக்கு பாடாத நாவும் பாடும் என்பது மருத்துவப் பழமொழி.

ஓமவள்ளி மாத்திரை - காலை இரவு உணவிற்கு பின் தேனுடன்.

பெரியவர்கள் -2 மாத்திரை

குழந்தைகள்- 1 மாத்திரை

 

தாளிசாதி வடகம் -  காலை, மதியம், இரவு சுவைத்து சாப்பிடவும்.

திரிபலா சூரணம் - கொப்புளிக்கும் மருந்தாக.

150 மி.லி. சுடுநீரில் ஒரு தேக்கரண்டி திரிபலா சூரணத்தை இட்டுக் கலக்கி, இளஞ்சூடான பருவத்தில் தொண்டையில் படுமாறு கொப்பளிக்கவும். ஒரு நாளைக்கு மூன்று முறை இதேபோன்று செய்து வரவும்.

 

மேற்கண்ட உணவு மருந்துகளைப் பயன்படுத்தி வர குரற்கம்மல் குணமாகும். தொடர்ந்து இருந்தால் அருகிலுள்ள சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி உயர் வகை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி உயர்வகை சித்த மருந்துகளை எடுத்துக் கொள்ளவும்.

அடுத்த இதழுடன் மிகினும் குறையினும் நிறைவுறும்!

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles