மிகினும் குறையினும் வெண் படை

Monday, May 15, 2017

டாக்டர் முதல்ல விரல்லதான் வெள்ளையா புள்ளி மாதிரி ஆரம்பிச்சது. ரெண்டு மூணு வருசம் அப்படியேதான் இருந்தது. இப்ப ஒரு ஆறு மாசத்துக்குள்ள கைக்கு பரவ ஆரம்பிச்சுருச்சு. சரியாக எவ்வளவு நாளாகும் டாக்டர்"

"சார் அஞ்சு வருசம் முன்னாடி ஒரு ஆக்சிடண்ட் கால்ல காயம். ஆறுனதுக்கு ஒரு மாசம் ஆயிடுச்சு. காயம் ஆறுன இடத்துல இப்படி வெளுப்பா இருக்கு. கொஞ்சநாளா பரவுற மாதிரி இருக்கு"

"டாக்டர் எனக்கு வந்து பத்து வருமாச்சு. பல ட்ரீட்மெண்ட் எடுத்துட்டேன். எதுலயும் குறைஞ்ச மாதிரி தெரியல. சித்தால சரி பண்ணினதா பஸ்ல என்னைப் பார்த்தவரு சொன்னாரு. அதான் இங்க வந்தேன்."

"உடம்புல வேற எங்கேயும் இல்ல சார். உதட்டுல தான் வெளுப்பா இருக்கு. ஆரம்பத்துல இரத்தக் குறைவுன்னு நெனச்சு கவனிக்காம விட்டுட்டேன். இப்ப அதிகமான மாதிரி தோணுது."

"பேக்டரில ஒரு ஃபயர் ஆக்சிடண்ட் சார். கைல எனக்கு தீக்காயம் பட்ருச்சு. காயம் ஆறிடுச்சு. ஆனா இந்த இடம் மட்டும் வெளுப்பா இருக்கு"

"டாக்டர் இது பரம்பரை நோயா. இது வந்தபிறகு என் வீட்டுக்காரரு ஒதுக்கி வைச்சுட்டாரு. என் பிள்ளைகளுக்கும் வருமா. ஏதாவது தடுப்பு மருந்து இருக்குமா?" 

கட்டுரை எழுத அமர்ந்த உடனே காதில் ஒலிக்கத் தொடங்கிவிடுகின்றன குரல்கள்.

நோய் விளக்கம் :

உடல் முழுவதுமான அல்லது கை, கால், முகம், இன உறுப்பு, ஆசனவாய் போன்ற இடங்களிலோ தோலின் இயல்பான நிறம் மறைந்து வெளுத்துக் காணப்படும் நோயை வெண்படை என்கிறோம்.

உடல்திறன் எனப்படும் நோய் எதிர்ப்புத் திறனில் ஏற்படும் கோளாறு, வெண்படை நோய்க்கு காரணமாக அமைவதுண்டு. சிலருக்கு விபத்து, தீக்காயம் இவற்றினால் ஏற்படும் நாட்பட்ட காயங்கள் ஆறினும் வெளுப்பாக தோல் மாறிவிடுவதுண்டு. தோலுக்கு நிறத்தை வழங்கும் நிறமி செல்கள் பாதிக்கப்படுவதா£ல் மேற்கண்ட காரணங்களில் வெண்படை ஏற்படலாம். சிலருக்கு பரம்பரையாக இந்நோய் வருவதுண்டு. 

பிற தோல் நோய்கள் போன்று அரிப்போ, நீர்க் கசிவோ, இரத்தக் கசிவோ இந்நோயில் ஏற்படுவதில்லை. மேலும் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது. தோலின் நிறத்தை இழப்பதால் அழகு சார்ந்த பிரச்னையாகவே கருதப்படுகிறது. இந்நோய் பலருக்கு தாழ்வு மனப்பான்மையையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. கவனிக்க வேண்டிய செய்தி என்னவெனில் வெண்படை உள்ளவர்களுக்கு உள்ள மன அழுத்தமே இந்நோய் உடலில் பரவுவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது. 

சித்த மருத்துவம்:

உணவே மருந்து:

 • புளிப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
 • உடல்திறனை வளர்க்கும் பொருட்டு கீரைகள், காய்கறிகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 
 • முளைக்க வைத்த பாசிப்பயறு அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மருந்துகள்:

உள்மருந்துகள்: வெளி மருந்துகள்:

கடுகு / நுணா எண்ணெய், நுணா இலை

 • நுணா எனப்படும் மஞ்சணத்தி மரம் தமிழகம் முழுவதும் காணப்படும் தாவர வகையாகும். இதன் இலைகளை அரைத்து எலுமிச்சம் பழ அளவு எடுத்து 100 மி.லி. நல்லெண்ணெயுடன் கலந்து அடுப்பேற்றி சிறு தீயாக எரிக்க வேண்டும். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால், அரைத்த இலைகந்தம் எண்ணெயில் பொரிந்து கடுகு போல மிதக்க ஆரம்பிக்கும் தருவாயில் இறக்கி, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
 • வடிகட்டியில் இருப்பது நுணா, கடுகு கிடைத்த எண்ணெய் நுணா தைலம்.
 • நுணா கடுகை பட்டாணி அளவு காலை மாலை உணவிற்கு முன் உண்டு வர வெண்படை மாறும்.
 • நுணா தைலத்தை வெண்படை உள்ள இடங்களில் பூசி மாலை வெயிலில் காட்டி வர வெண்படை மாறும். தொடர்ந்து பயன்படுத்தவும்.

கார்போகரிசி பொடி

 • நாட்டு மருந்துக் கடைகளில் கார்போகரிசி கிடைக்கும். இதனை ஒரு மண் அகலில் பரப்பி, அது மூழ்கும் வரை நாட்டுப்பசு சிறுநீரை ஊற்றவும். பின் அதனை வெயிலில் வைக்கவும். இது போன்று மூன்று நாட்கள் செய்யவும். ஒவ்வொரு நாளும் பசுவின் சிறுநீரை மாற்றவும். பின்னர் உலர்ந்த கார்போகரிசியை உரலிலிட்டு இடித்தோ அல்லது மிக்சியில் அரைத்தோப் பொடியாக்கி, சலித்து எடுத்துக் கொள்ள கார்போகரிசிப் பொடி தயாராகிவிடும்.
 • அளவு: 1 தேக்கரண்டி காலை, மாலை தேனுடன்
 • வெளிமருந்தாகவும் கார்போகரிசி பொடியைப் பயன்படுத்தலாம். கார்போகரிசிப் பொடியுடன் புளித்த தயிரைக் கலந்து வெண்படை உள்ள, இடத்தில் பூசி மாலை வெயிலில் காட்டலாம்.

பூவரசம் பட்டைக் குடிநீர் உதட்டில் வரும் வெண் படைக்கு கொப்பளிக்கும் மருந்தாக:

 • நாட்பட்ட மரமாக இருக்கும் பூவரசம் மரத்தின் பட்டை உதட்டில் வரும் வெண்படை நோயைக் குணமாக்க வல்லது. நூறாண்டு கடந்த பூவரசம்பட்டை 50 கிராம் அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு சூடேற்றி சிறுதீயாக எரித்துக் கொதிக்க விடவும். 200 மி.லி. அளவு வற்றியவுடன் அதனை வடிக்கட்ட பூவரசம் பட்டைக் குடிநீர் தயாராகி விடும். இக்குடிநீரை உதட்டில் வரும் வெண்படை நோய் குணமாக, கொப்பளிக்கும் நீராகப் பயன்படுத்தவும். தொடர்ச்சியாக பயன்படுத்த பலன் தரும்.
 • வெண்படை நோய் குணமாக ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் வரை ஆகலாம். ஆகையால் பொறுமையாக மருந்து எடுத்துக் கொள்ளல் இன்றியமையாதது. மேலும் மேற்கூறிய மருந்துகள் அடிப்படையான சித்த மருந்துகள். உயர்வகை சித்த மருந்துகள் என பற்பங்கள், செந்தூரங்கள் சில நோயருக்கு தேவைப்படலாம். அத்தகையோர் சித்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்பு, செம்பு, தங்கம் போன்ற உலோகங்களும் முறையாக மருந்தாக்கப்பட்டு வெண்படை நோய்க்கு மருந்தாகின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. 

அடுத்த இதழில் 'காது வலி".

- டாக்டர் அருண்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles