மிகினும் குறையினும்! - பௌத்திரத்தை முழுமையாகக் குணப்படுத்தும் சித்தமருத்துவம்!

Wednesday, March 15, 2017

"ஆறு வருசமா பௌத்திரம் இருக்கு, வேட்டியெல்லாம் நனைஞ்சுருது. ஒரு இடத்துக்கு போக முடியல, வர முடியல. சரி பண்ணிரலாம்ல சார்வாள்" 

"இரண்டு வருசத்துக்கு முன்னாடி லேசர் சிகிச்சை செஞ்சுக்கிட்டேன். அப்புறம் ஒண்ணும் பிரச்சினை இல்லாமத்தான் போச்சு. இப்ப 3 வாரமா ஒரு டிராப் மாதிரி  வருது டாக்டர்"

"ஆசனவாய்ப் பக்கம் அடிக்கடி கட்டி வரும். ஒரு வாரம் இருக்கும். அப்புறம் பழுத்து, அதுவாவே உடைஞ்சு சரியாயிரும். இப்ப அந்த இடத்துல ஒரு துவாரம் மாதிரி இருக்கு. அது வழியா தண்ணி போல பிசுபிசுப்பா வருது. இதுதான் பௌத்திரமா?"

"நாள் பூரா கல்லால உட்கார்ந்திருக்கேன் சார். மூணு மாசமா பௌத்திரம் வந்து பாடாபடுத்துது. வலி, சலம்னு சொல்லி முடியல, எப்படியாவது சரி பண்ணி விட்ருங்க"

"டாக்டர் நா சமையல் வேலை செய்றவன், வருசம் பூரா அடுப்புல தான் நமக்கு வேலை. இது வேற 3 வருசமாக இருக்கு. போஸ்டர பாத்து வங்காளத்துல இருந்து வந்திருக்கவுங்கள பாத்தேன். ஏதோ கயிறு கட்டுனாங்க. நமக்கு சரி ஆகல. சித்தால சரியாயிடும்னு சொன்னாங்க. அதாம் வந்தேன்"

பௌத்திர நோயாளிகளின் துயரக்குரல் காதுகளில் ஒலிக்கக் கட்டுரை எழுத அமர்ந்தேன்.

 

நோய் விளக்கம்

ஆசனவாயின் அருகிலோ, ஆசனவாய்க்கும் இன உறுப்பிற்கும் நடுவிலோ சிறு சிறு கட்டிகள் தோன்றி பழுத்து உடைந்து ஆறிவரும். நாட்பட கட்டி தோன்றிய இடத்தில் துவாரம் ஏற்பட்டு, துவாரம் வழியே சலம், நீர், சில நேரங்களில் மலம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் நோய் பௌத்திரம் எனப்படும். பௌத்திரம் என்ற சொல்லுக்கே துவாரம் என்றே பொருள்.

 

சித்த மருத்துவ விளக்கம்

பித்த நாடியும், வாத நாடியும் பாதிக்கப்படும்போது பௌத்திரம் ஏற்படும். அகத்தியர் கன்ம நோய்களுள் ஒன்றாக பௌத்திரத்தைக் குறிப்பிடுகிறார். நோய் குணமாகும் காலம் அதிகமாகலாம். பௌத்திரத்தின் வடிவத்தைப் பொறுத்தும், பல வகைகளாக சித்த மருத்துவத்தில் வகைப்படுத்தியுள்ளனர்.

உணவே மருந்து

  • மிகுதியான காரம், புளிப்பு சார்ந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
  • சாதாரணமாகப் பயன்படுத்தும் புளிக்கு பதிலாக கோடம்புளியை சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். கோடம்புளிக்கு மூன்று நாடிகளையும் இயல்பாக வைத்திருக்கும் தன்மை உண்டு. சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பாக இந்துப்பை (Rock Salt) பயன்படுத்த வேண்டும்.
  • உடற்சூட்டைக் குறைக்கும் பொன்னாங்கண்ணி, சிறுகீரை போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டும்.
  • மாதுளை, நெல்லிக்காய் போன்றவற்றையும் அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

உள்மருந்துகள்

  • பொடுதலைக் கீரையை அரைத்து, சாறெடுத்து, 15 மி.லி. அளவு காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர பௌத்திர நோயில் வரும் சலம் குறையும்.
  • தோற்றான் இளகம் 5 கிராம் அளவு எடுத்து, காலை மற்றும் இரவு உணவிற்கு பின் சாப்பிட்டால் குணமாகும்.

 

வெளி மருந்துகள்

திரிபலா சூரணம்

50 கிராம் அளவு திரிபலா சூரணத்தை அகலமான பாத்திரத்தில் எடுத்து, இளஞ்சூடான நீரில் கலந்து அதில் அமரவும். பௌத்திர நோயில் வெளியாகும் நீர், சலம் குறையும். இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வர குணமாகும். இதேபோன்று திரிபலா சூரணத்திற்குப் பதிலாக கருவேலம் பட்டைப் பொடி, மாசிக்காய் பொடி ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

 

குளிர்தாமரை தைலம்

  • எண்ணெய்க் குளியலுக்கு குளிர்தாமரை தைலத்தைப் பயன்படுத்த வேண்டும். வாரம் இருமுறை உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து, 10-15 நிமிடங்கள் ஊறவைத்து, காலை 6.30-7க்குள் குளித்துவிட வேண்டும். குளிப்பதற்கு இளஞ்சூடான நீரையே பயன்படுத்தவும். எண்ணெய்க் குளியல் அன்று பகலுறக்கம், வெயிலில் திரிதல், குளிர்பானங்கள் அருந்துதல், உடலுறவு, அசைவ உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
  • கீழாநெல்லி தைலத்தையும் குளிர்தாமரை தைலம் போன்றே எண்ணெய்க் குளியலுக்குப் பயன்படுத்தலாம். 

 

புகை 

சாம்பிராணி 5 கிராம், வெள்ளைக் குங்கிலியம், பட்டுத்துணி சிறியது மூன்றையும் கரிநெருப்பில் இட்டு, வரும் புகையை பௌத்திரம் உள்ள இடத்தில் படும்படி காட்ட, பௌத்திர நோயில் வரும் சலம் குறையும். இதனைத் தொடர்ந்து பயன்படுத்தவும்.

இவ்வாறு செய்தும் பலன் முழுமையாகக் கிட்டாவிட்டால், பெருமருந்துகள் பயன்படுத்தி பௌத்திர நோயை குணப்படுத்த இயலும். அருகிலுள்ள சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி பெருமருந்துகள் எடுத்து பௌத்திர நோயிலிருந்து விடுபடலாம்!

அடுத்த இதழில் தேமல்..

- டாக்டர் அருண் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles