ஆயுர்வேதம் 21

Wednesday, March 15, 2017

கெடுதல் இல்லா காரம் தரும் திப்பிலி!

துன்பமில்லாமல் வாழ்வது எப்படி என்று சொன்ன செய்யுள் தொகுப்பு திரிகடுகம். அதைப் போல, மனிதனை எந்த உபாதைகளும் வாட்டாமல் பாதுகாப்பது சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி. இவை மூன்றையும் திரிகடுகம் என்று போற்றினர் நம் முன்னோர்கள். 

கொடி வகை தாவரத்தைச் சார்ந்தது திப்பிலி. அதில் பூக்கும் மொட்டுகளைத் தான் நாம் பயன்படுத்துகிறோம். இது அரிசி திப்பிலி, யானை திப்பிலி என்று இரண்டு வகையாகக் கிடைக்கிறது. பெயருக்கேற்றாற் போலவே, யானை திப்பிலி அளவில் பெரியதாக இருக்கும். மிகவும் வீரியமான பொருள் என்பதால், பெரும்பாலும் யானை திப்பிலியை மருந்தாகப் பயன்படுத்துவது கிடையாது. அரிசி திப்பிலி கூட, நீண்ட காலமாக நம் சமையலறையில் பயன்படுத்தப்பட்டு வந்த பொருள் என்பது நிச்சயம் ஆச்சர்யளிக்கும் தகவல் தான். 

தஞ்சை சரஸ்வதி நூலகத்திலுள்ள சரபேந்திர பாக சாஸ்திரம் என்ற நூலில் மிளகாய் பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லை. அதற்குப் பதிலாக சுக்கு, மிளகு, திப்பிலி, பூண்டு, வெங்காயம் போன்றவை பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன. அந்தக் காலத்தில் காரத்திற்காக மிளகையும் திப்பிலியையும் அதிகளவில் பயன்படுத்தி இருக்கின்றனர் என்பது இதன்மூலமாகத் தெரியவருகிறது. முன்னோர்களின் சமையல் முறையில் முக்கியத்துவத்துடன் திகழ்ந்த திப்பிலியை, இன்று நாம் மறந்துவிட்டோம் என்பதே உண்மை. 

 

திப்பிலியின் மருத்துவக்குணங்கள்

பசியைத் தூண்டக்கூடியது. வயிற்றிலிருந்து வாயுவை வெளியேற்றக்கூடியது. மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடியது. எளிதாக சிறுநீரை வெளியேற்ற உதவுவது. தேவையற்ற கொழுப்பை எளிதில் செரிக்கக்கூடியது. 

கொழுப்பை நீக்குவதில் திப்பிலியின் பயன்பாடு பற்றி ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன். அரபுநாடுகளில் நடைபெறும் விழாக்களில், ஒட்டகம் அல்லது வேறு மிருகங்களின் இறைச்சியைச் சமைக்கும்போது அப்படியே நெருப்பில் வாட்டுவது அங்கிருக்கும் வழக்கம். அதைச் செய்வதற்கு முன்பு சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் போன்ற பொருட்களை அரைத்து, ஆலிவ் எண்ணெய் கலந்து, அதனை இறைச்சியின் மீது தடவுவார்கள். அதன்பிறகே சமைக்கப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு செய்வதால், அதனைச் சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோயோ அல்லது இதய பாதிப்போ ஏற்படாது. இதுபோன்ற பயன்பாடுகளை சரபேந்திர பாக சாஸ்திரமும் வலியுறுத்தியிருக்கிறது. 

 

குழந்தைகள் நலம் காக்கும்

ஞாபகமறதியால் அவதிப்படும் குழந்தைகளைக் காக்க திப்பிலி உதவும். 200 கிராம் திப்பிலியை எடுத்து, அதனை வாணலியில் நன்கு வதக்க வேண்டும். அதிலிருக்கும் நீர் வற்றியபிறகு, சுமார் 200 கிராம் தேனில் ஊறவைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து அதனை எடுத்து, தினமும் ஒரு திப்பிலி என்று தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். சுமார் 2 மாதம் இவ்வாறு செய்துவந்தால், குழந்தைகளின் திறனில் பெரிய மாற்றம் இருப்பதைக் காணமுடியும். 

 

திப்பிலி ரசாயனம்

நன்றாகச் சாப்பிட்டும் ஒருவரது உடல்நலம் நாளுக்கு நாள் பலவீனமாகி வரும். நவீன மருத்துவம் அதனை ஒருவித புற்றுநோயாகப் பார்க்கும். அந்த மாதிரியான மனிதர்களுக்கு, திப்பிலி ரசாயனத்தைப் பரிந்துரைக்கிறது ஆயுர்வேதம். முதல்நாள் ஒரு திப்பிலியை எடுத்து, சிறிதளவு நெய்யில் அரைத்துக் கொடுக்க வேண்டும். இரண்டாவது நாள் இரண்டு திப்பிலி, மூன்றாம் நாள் நான்கு, நான்காம் நாள் எட்டு என்று அந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தி 21 நாள் வரை கொடுக்க வேண்டும். அதன்பின், அந்த எண்ணிக்கையை அப்படியே படிப்படியாகக் குறைத்து 42 நாள் வரை இந்தச்செய்முறையைத் தொடர வேண்டும். இதற்கு திப்பிலி ரசாயனம் என்று பெயர். 

திப்பிலி ரசாயனத்தை மேற்கொள்பவர், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் கூட முழுமையாகக் குணமடைய முடியும். கீமோதெரபி கொடுப்பதை விட, திப்பிலி ரசாயனத்தைப் பின்பற்றும்போது சிறப்பான முன்னேற்றம் இருப்பதாக அறிவித்திருக்கிறது ஸ்வீடனைச் சேர்ந்த ஒரு மருத்துவமனை. குறிப்பாக நுரையீரல், எலும்பு, மூளை, தொண்டை, உணவுக்குழல் சம்பந்தப்பட்ட புற்றுநோயில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது திப்பிலி. 

 

தினசரி வாழ்வில் திப்பிலி

செரிமானப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு திப்பிலி எடுத்துக்கொள்ளலாம். தினசரி சமையலில், மிளகாய்க்குப் பதிலாக திப்பிலியைப் பயன்படுத்தலாம். 

சட்டினி அரைக்கும்போதோ அல்லது அதனை வதக்கும்போதோ இரண்டு திப்பிலிகளைச் சேர்த்துக் கொள்ளலாம். காரத்தை அதிகம் உண்டால் ஏற்படும் பிரச்சனைகளை திப்பிலி உண்டாக்காது. இவ்வாறு செய்தால், மதிய வேளையில் பசி உங்களை ஆட்டிப்படைக்கும். உணவு உண்ணும் வேட்கையை உண்டுபண்ணும். சில குடும்பங்களில் இன்றும் திப்பிலி ரசம் வைத்துச் சாப்பிடுகிறார்கள்; ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். சர்க்கரை குறைபாடு உடையவர்கள் தினமும் ஒரு திப்பிலி சாப்பிட்டால் போதும். செரிமானம் சரியாகி, நீங்கள் சாப்பிடும் மருந்துகள் உடலில் சேரும். தகுந்த மருத்துவ ஆலோசனையோடு, மருந்தாக அல்லாமல் உணவாகத் திப்பிலியைப் பயன்படுத்தினாலே போதும்; நம்மாலும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ முடியும். 

 

ஊ.. ஆ.. அவுச்..!
வேதனைப்பட வைக்கும் தசைப்பிடிப்பு பிரச்சனை!

நமது உடலில் ஏற்படும் சில உபாதைகள் சிறிது நேரமே இருந்தாலும், அவை நம் உடலில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிட்டுச் செல்லும். வாய்வுப் பிடிப்பு அல்லது தசைப்பிடிப்பு இந்த வகையைச் சார்ந்தது. இரவில் படுத்துறங்கும்போது, திடீரென்று காலில் வலி ஏற்படும்; காலைப் பிடித்து இழுப்பது போன்றிருக்கும். இது ஒருவகை தசைப்பிடிப்பு. உயரமான இடத்தில் இருக்கும் பாத்திரத்தை எடுக்க முயற்சிக்கும்போதோ, கீழே இருக்கும் பொருளைக் குனிந்து எடுக்கும்போதோ, தொடர்ச்சியாக சமோசா போன்ற உணவுகளைச் சாப்பிடும்போதோ நமக்கு வெவ்வேறு வகை தசைப்பிடிப்பு ஏற்படும். 

 

தசைப்பிடிப்பு என்பது என்ன?

ஒரு எலும்புக்கும் இன்னொரு எலும்புக்கும் இடையே ரப்பர்பேண்ட் போன்ற நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கக்கூடிய ஒன்று தசை. கொழுப்பு, புரதம் மற்றும் தண்ணீர் சேர்ந்து உருவானது. குனிவது, உட்கார்வது, நடப்பது உள்ளிட்ட தினசரி நடவடிக்கையின் போது எலும்பு பாதிக்கப்படாமல் இலகுவாக அந்தச் செயல்களைச் செய்ய உதவுவது இந்தத் தசை தான். நீண்டகாலமாக தசைகளுக்கு சில பயிற்சிகளைத் தராதபோது, அதன் இலகுத்தன்மை பாதிக்கப்படும். உடலில் இருக்கும் சோடியம், பொட்டாசியம் உப்புகளின் சமநிலையைப் பொறுத்தே, நமது நலம் அமையும். இந்த சமநிலை குறையும்போது, தசைகளில் வறட்சி ஏற்படும். அதன் சுருங்கிவிரியும் தன்மை பாதிக்கப்படும். இதனால் உடனடியாக வலி ஏற்படும். இதுபோன்று மார்புக்கூட்டினுள் உண்டாகும்போது, மூச்சு விடுவதே சிரமமாக மாறும். இது ஒருவகை தசைப்பிடிப்பு. 

மார்பையும் வயிற்றையும் பிரிப்பது டயாப்ரம் (diaphragm) என்ற தசை. அதுவும் சுருங்கிவிரியக்கூடியது. வாயு நிறைந்த பொருட்களைச் சாப்பிடும்போது, அதிகமாகச் சாப்பிடும்போது, மலம் கழிக்காதபோது அல்லது தூங்காதபோது டயாப்ரம் உப்பி மேல்நோக்கிப் போகும்; கீழே இறங்காது. அந்த மாதிரிச் சூழலில், நம்மால் மூச்சுவிட முடியாது. வயிறு, இடுப்புப் பகுதிகளில் வலி ஏற்படும். 

மார்புக்கூட்டினில் சில இடங்களில் இடைவெளி உண்டு. அங்கு தசையின் அடர்த்தி குறைவாக இருக்கிறது. அதனால், அந்தப்பகுதியில் இதயத்துடிப்பினை நன்கு கேட்க முடியும். இந்தக் காரணத்தினால் தான், மருத்துவர் ஸ்டெதஸ்கோப்பினால் நமது மார்பில் வைத்து சோதித்துப் பார்க்கிறார். முதுகுப்பகுதியிலும் இதுபோன்ற இடைவெளி உண்டு. நமது உடலிலுள்ள வாயு அங்கு நிரம்பும்போது, மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்படும். நள்ளிரவில் இவ்வாறு ஒருவர் திணறும்போது, இதயபாதிப்பு என்று பதைபதைத்துப் போவார்கள் சம்பந்தப்பட்டவரின் உறவினர்கள். வாயுப் பிரச்சனைக்கான மருந்துகள் கொடுக்கும்போது, நிலைமை சரியாகும். தசைகள் சுருங்கிவிரிவதில் ஏற்படும் பிரச்சனைகளால் இது ஏற்படுகிறது. 

 

தசைப்பிடிப்புக்கான காரணம்

தண்ணீர் குடிக்காமல் இருக்கும்போது, இது ஏற்படுகிறது. காரணம், தசையில் 35 சதவீதம் வரை நிறைந்திருக்கும் நீர் தான் நெகிழ்வுத்தன்மையை உண்டாக்கும். உடற்பயிற்சி செய்யாதபோது, பெரிதாக உடலியக்கம் இல்லாதபோது தசைகளின் தன்மை மாறிப்போகும். இதனால் சிறிது வேலை செய்தாலும், ஏதாவது ஒருவகையில் தசைப்பிடிப்பு ஏற்படும். அதிகமாக வியர்க்கும் குறைபாடு உடையவர்களையும்  இது பாதிக்கும். சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் சமநிலை மாறுவதால், இது உண்டாகும். சில நேரங்களில் நாம் சாப்பிடக்கூடிய சில மருந்துகள் கூட, தசைப்பிடிப்பை ஏற்படுத்தும். சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், மனநோய் கட்டுப்படுத்தும் மருந்துகள் இதில் அடங்கும். 

 

தசைப்பிடிப்பு சரியாக..

தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதோடு சேர்த்து, சூரியநமஸ்காரத்தை 10 முறையாவது செய்து பழகவேண்டும். உடலியக்கத்திற்குத் தேவையான நீர் (குறைந்தபட்சம் 3 லிட்டர்) அருந்தவேண்டும். முடிந்த அளவு பாரம்பரிய பழக்கவழக்கங்களைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக குனிந்து பெரியவர்களை வணங்குவது, கோலம் போடுவது, தரையில் அமர்ந்து சாப்பிடுவது, மெத்தை மற்றும் கட்டில் இல்லாமல் தூங்குவது போன்றவற்றைச் செய்யும்போது தசைகள் இலகுவாக இருக்கும். 

சிகிச்சைகள்

  • தசைப்பிடிப்பு ஏற்பட்ட இடத்தில் சிறிதாக அழுத்தம் கொடுத்து ‘மசாஜ்’ செய்ய வேண்டும். 
  • சுமார் 100 மி.லி. தண்ணீரில் 2 சிட்டிகை சீரகம் சேர்த்து, அதனைக் கொதிக்கவைத்து குடித்தால், தசைப்பிடிப்பு உடனடியாகச் சரியாகும். 
  • பச்சைக்காய்கறிகள் (முள்ளங்கி, கோவைக்காய்), கீரைகள், கொண்டகடலை, பெருங்காயம் சம்பந்தப்பட்ட உணவுகளை வாரத்திற்கு ஒருமுறை எடுத்துக்கொண்டால், இதனை எளிதாகக் குணப்படுத்த முடியும். 
  • தசைப்பிடிப்பு ஏற்பட்ட இடத்தில் நல்லெண்ணெய் தேய்த்து, சூடான வெந்நீரால் ஒற்றடம் கொடுத்தால் தசைப்பிடிப்பு சில நிமிடங்களில் சரியாகும். 
  • நல்ல தூக்கம், வாழ்க்கைமுறை, உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, அவ்வப்போது ஏற்படும் தசைப்பிடிப்பினைத் தடுக்கமுடியும்; மீறி பாதிப்பு ஏற்பட்டாலும், எளிதாகச் சரிசெய்ய முடியும். 

நா காக்க.. நலம் காக்க..

யாகவராயினும் நாகாக்க என்றிருக்கிறார் திருவள்ளுவர். நாக்கில் இருக்கக்கூடிய சுவைக்கு அடிமையானாலும் சரி, பேசக்கூடிய வார்த்தைகள் தவறாக இருந்தாலும் சரி, அதன் விளைவாக வாழ்க்கை திசைமாறிப்போகும் என்பது இதன் அர்த்தம். ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை, செரிமானத்திற்கான முக்கியமான உறுப்பு நாக்கு. 

உமிழ்நீர் ஊறுகிறது, சுவையரும்புகள் இருக்கிறது என்று நவீன மருத்துவம் நாக்கை வரையறுக்கிறது. ஆயுர்வேதம் இதற்கு நேரெதிர் திசையில் இருக்கிறது. ஆயுர்வேதத்தில் ரசம் என்ற சொல்லுக்கு ஒரு பொருளின் சுவை என்ன என்று பொருள். வயிற்றிலுள்ள அமிலங்களோடு சேரும்போது அதன் சுவை எவ்வாறு மாறுகிறது என்பதைச் சொல்வது விபாகம். பிரபாவம் என்பது ஒரு பொருள் எவ்வளவு வித்தியாசமாக வேலை செய்கிறது என்பதைச் சொல்லும். அதாவது, அதன் வீரியத்தைச் சொல்லும். மேற்சொன்னவற்றைத் தரவல்லது நாக்கு எனும் உறுப்பு.

 

சுவையறிதல் எனும் அனுபவம்

காரமான உணவைச் சாப்பிடும்போது, நாக்கு மூளைக்கு சில சமிக்ஞைகளை அனுப்பும். அதற்கேற்றவாறு, வயிறு சில கொழுப்புப் பொருட்களைச் சுரக்கத் தொடங்கும். அதன் விளைவாக, காரமான உணவினால் வயிறு பாதிக்கப்படாது. அதேபோன்று இனிப்பான பொருட்களைச் சாப்பிடும்போது, மூளையானது கணையத்தைச் செயல்படவைக்கும். ஒவ்வொரு உணவும் நாக்கில் படும்போது தான், வயிற்றில் சுரக்க வேண்டிய பொருட்களின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. இன்று ஆர்ட்டிபிஷியல் ஸ்வீட்னர் (artificial sweetener) என்பது சுக்ரோஸை அடிப்படையாகக் கொண்ட மாத்திரை. இதனைச் சாப்பிடும்போது கணைய புற்றுநோய் வருவதாகச் சொல்லப்படுகிறது. 

இனிப்பான ஒரு பொருளைச் சாப்பிடும்போது, நாக்கின் மூலமாக மூளையிலிருந்து கணையத்திற்கு ஒரு சமிக்ஞை செல்கிறது. ஆனால், அந்த உணவுப்பொருளில் இனிப்பு சம்பந்தப்பட்ட எந்தக் காரணியும் இல்லை. இதனால் ஒரு குழப்பம் உண்டாகிறது. இது பல நாட்களாகத் தொடரும்போது, புற்றுநோய் ஏற்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்த விஷயத்தை ஒரு கருத்தரங்கில் தெரிவித்தேன். செயற்கை இனிப்புகள் வேண்டாம், இயற்கையான இனிப்புகளே போதும்; இல்லையெனில், இனிப்பைத் தவிர்ப்பது நல்லது என்று சொன்னேன். அப்போது, கணைய அறுவைசிகிச்சை நிபுணர்களாக இருந்துவரும் எனது நண்பர்களில் சிலர் சிரித்தார்கள். நான் சொன்னதை, அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், ஒரு மருத்துவர் மட்டும் நான் சொன்னதை ஏற்றுக்கொண்டார். 

தற்போது சிகாகோ மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இருந்துவரும் அவர் அதனை ஆராய்ச்சி செய்து, உலக சர்க்கரை கட்டுப்பாட்டு நிறுவனத்தின் பத்திரிகையில் (world diabetic association) ஒரு அறிக்கையாக வெளியிட்டார். ’சுவை பற்றிய விளக்கம் மற்றும் சர்க்கரை நோயின் மீதான அதன் தாக்கம்’ என்ற தலைப்பில் அவரது ஆராய்ச்சி அமைந்தது. ஒவ்வொரு சுவையையும் நாம் எடுத்துக்கொள்ளும்போது, உடலில் இன்சுலின் சுரப்பதில் என்ன மாறுபாடு நிகழ்கிறது? அதனால் செரிமானத்தில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பிறந்த மருத்துவர்கள் கூட, இந்தியாவிலுள்ள பாரம்பரிய மருத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை ஏற்றுக்கொள்வது கிடையாது. அதனால் தான், நிறைய வியாதிகளைக் குணப்படுத்த முடியாத சூழல் நவீன மருத்துவத்தில் இருக்கிறது. 

 

பிரச்சனைகள்

  • சுவையின்மை, வெள்ளைப்படலம் படிதல், புண்கள் மற்றும் கொப்புளங்கள் போன்ற பிரச்சனைகள் நாக்கைப் பாதிக்கின்றன. 

 

ஆயுர்வேத சிகிச்சைகள்

கவளம் மற்றும் கண்டூசம் என்ற இரண்டு சிகிச்சைகள் நாக்கைப் பாதுகாக்க உதவுகின்றன. வாய் முழுவதும் நல்லெண்ணெயை நிரப்பி, சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்து துப்புவதே கவளம் என்ற சிகிச்சை. இதைத்தான் ஆயில் புல்லிங் (oil pulling) என்று நம்மில் பலர் இன்று செய்துவருகிறார்கள். கண்டூசம் என்பது வாய் முழுவதும் குறிப்பிட்ட திரவத்தை நிரப்பிக் கொப்பளிப்பது. இதனைத் தொடர்ச்சியாகச் செய்துவந்தால், சாப்பாட்டில் இருக்கும் சுவை எத்தனை வயதானாலும் தெரியவரும். 

 

அறிகுறி சொல்லும் நாக்கு

உடலின் செயல்பாட்டை வெளிப்படுத்தும் உறுப்பாக இருக்கிறது நாக்கு. அது வறட்சியாக இருந்தால் வாதம் மிகுந்திருக்கிறது என்று அர்த்தம். நாக்கில் சிவப்பு திட்டுகள் தெரிகிறது என்றால் பித்தம் அதிகமாகிவிட்டது; வெள்ளைப்படலம் அதிகமானால் கபம் அதிகமிருக்கிறது; பள்ளமும் மேடும் இருக்கிறது என்றால் மலச்சிக்கல் இருக்கிறது என்றும், அந்த இடம் வீங்கியிருந்தால் உடலில் அழற்சி ஏற்பட்டிருக்கிறது என்றும் அர்த்தம். அதனால் தான், மருத்துவர்கள் நோயாளிகளின் நாக்கை முதலில் பரிசோதிக்கிறார்கள். 

 

எய்ட்ஸை வெளிக்காட்டும்

நாக்கில் திடீரென்று கறுப்பான திட்டுகள் ஏற்படுவதை, தாம்பரம் டங் (tambaram tung) என்று சொல்வோம். சென்னை தாம்பரத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கண்டுபிடித்ததால், இதற்கு இப்படியொரு பெயர் சூட்டப்பட்டது. பிறக்கும்போதே இருக்கும் கறுப்புப் புள்ளிகள் இதில் சேராது. ஹெச்ஐவி பாதிப்பு இருப்பவர்களுக்கு, மேற்சொன்ன திட்டுகள் வரும். இந்தக் கண்டுபிடிப்பிற்குப் பிறகு நாக்கில் கறுப்புப்புள்ளிகள் இருந்தவர்களைச் சோதித்துப் பார்த்தபோது, அவர்களுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியவந்தது. 

 

நா காக்க..

சர்க்கரை நோயினால் சுவை தெரியவில்லை, நாக்கில் புண் வருகிறது, வறண்டு விடுகிறது என்று பல பிரச்சனைகள் சொல்லப்படுகிறது. குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு மேற்கண்ட பிரச்சனைகள் அதிகமிருக்கும். குடிப்பதனால் கல்லீரல் செயல்பாடுகள் குறைந்து, நாக்கில் சுவையின்மை ஏற்படுகிறது. இதிலிருந்து தப்பிக்க அதிக காரம் நிறைந்த உணவுகளை உண்ணும்போது, வயிறு பாதிக்கப்படுகிறது. எனவே, நாக்கைக் காப்பது உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்றும்; சுவையறிதலைத் தக்கவைக்கும். இதனை உணர்ந்துகொண்டால், நாம் ஆரோக்கியமாக வாழ நாக்கின் நலம் காப்பதன் அவசியம் புரியும்!

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles