மிகினும் குறையினும் பக்கவிளைவு ஏதுமில்லாமல் புழுவெட்டைக் குணமாக்கும் சித்தமருத்துவம்!

Wednesday, March 1, 2017

"ஒரு பொட்டு மாதிரிதான் இருந்தது டாக்டர். அப்புறம் அப்படியே பெருசாகி, முடி உதிர்ந்துச்சு. இப்போ தலைல அங்கங்கே ரவுண்ட் ரவுண்டா முடி கொட்டுது. ஆறு மாசத்துல கல்யாணம். அதுக்குள்ள முடி வளர்ந்துடுமா டாக்டர்"

"பின் மண்டைல ரவுண்டா முடி இல்லைன்னு சலூன்லதான் சொன்னாங்க.. என்ன காரணத்தால இது வருது"

"ரவுண்டா தாடைல தான் ஆரம்பிச்சுது டாக்டர். அப்புறம் மீசை முடியெல்லாம் கொட்டிப்போச்சு. நான் கடைல கூட ஷேவ் பண்றதில்ல, ஏன் டாக்டர் இப்படி?"

"தலைக்கு எண்ணெயே வைக்கமாட்டா. காலேஜ் போனபிறகுதான் முடி உதிர ஆரம்பிச்சது. தற்செயலா முடிய பிரிச்சுப் பாக்குறேன். ரவுண்டா ஒரு இடத்துல மட்டும் முடியக் காணோம். எங்கம்மா தான், இது புழுவெட்டுன்னு சொன்னாங்க. இது வந்ததுன்னா, முடியெல்லாம் கொட்டிப் போயிருமாமே. பொம்பளப்புள்ளைக்கு இப்படி வந்தா என்னாகுறதுங்கற பயத்துல ஓடிவந்தேன்"

"முதல்ல தலைல லேசா இருந்துச்சு. டிவில விளம்பரம் பண்றாங்களே, அவங்ககிட்ட தான் போனேன். லோஷன்லாம் தடவினேன். ஒண்ணும் சரியாகல, இப்ப புருவத்துல கூட ரவுண்டா முடி கொட்டிருச்சு. சரி பண்ணிரலாம்தானே டாக்டர்"

என புழுவெட்டு பாதித்தவர்களின் புலம்பல்கள் பெருகிக் கிடக்கின்றன.

 

நோய் விளக்கம்

  • புழுவெட்டு என்பது பூஞ்சைத்தொற்றினால் ஏற்படும் நோயாகும். பொட்டு வடிவில் முடி உதிர ஆரம்பித்து, பின் விரிவடைந்து, பெரிய நாணய வடிவில் முடி உதிர்ந்து பரவும். உடலில் உள்ள முடி முழுவதையும் உதிரச்செய்யும். முடி உதிர்ந்த இடம் வழுவழுப்பாகி சொட்டையாகி விடும். ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றும் தன்மை வாய்ந்தது இது. உடல்திறன் குன்றியவர்க்கு எளிதில் பரவும்.

 

உணவே மருந்து

  • நோய் எதிர்ப்புத்திறனைத் தூண்டும் கீரை வகைகள், காய்கள், பழங்களை உணவில் தொடர்ச்சியாக சேர்த்துக்கொள்ள வேண்டும். முடி வளர்ச்சிக்கு உதவும் நெல்லிக்காயைத் தினமும் உண்டுவரலாம்.

வெளிப்புற மருந்துகள்

சின்ன வெங்காயப் பூச்சு

  • சிறிய வெங்காயம் இரண்டை எடுத்துக்கொண்டு, மூன்று மிளகை வைத்து, அதனுடன் கல் உப்பு 1/2 தேக்கரண்டி சேர்க்க வேண்டும். இம்மூன்றையும் அம்மியில் இட்டு அரைத்துப் பசை போல செய்து, புழுவெட்டு பாதித்த பகுதியில் பூசி வர வேண்டும். இரண்டு நாட்கள் பூசி வருகையில், இம்மருந்தின் வேகத்தால் பாதித்த வழுவழுப்பான பகுதியில் வேர்க்குரு போன்று சிவந்துவரும். அப்போது மட்டும் வெங்காயப் பூச்சு பூசுவதை நிறுத்திவிட்டு, அந்த இடத்தில் சுத்தமான தேங்காய் எண்ணெயைத் தடவவேண்டும். அதன்பின், மீண்டும் வெங்காயப் பூச்சைத் தொடரலாம். 
  • வெங்காயப்பூச்சு பூசிய இடத்தில், சில நாட்கள் கழித்து பூனை முடி போன்று ரோமம் முளைக்கத் தொடங்கும். தொடர்ந்து இதனைப் பூசி வர, இயல்பான முடி வளர்ச்சி ஓரிரு மாதங்களில் கிடைக்கும். ஆரம்பநிலையில் இந்தப் பூச்சு மிகச்சிறந்த பலனளிக்கும்.

குமட்டிக்காய் பூச்சு

  • குமட்டிக்காயை இரண்டாக வெட்டி, புழுவெட்டு பாதித்த பகுதியில் பூசி வர முடி முளைக்கும்.

 

கலிங்காதி தைலம்

  • சித்த மருந்தகங்களில் கிடைக்கும் கலிங்காதி தைலத்தைப் புழுவெட்டு பாதித்த பகுதியில் பூசி வர முடி வளரத்தொடங்கும்.

உட்கொள்ளும் மருந்துகள்

  • தினமும் காலை, மாலை உணவிற்கு முன்பு, ஐந்து விரல் அளவு கரிசலாங்கண்ணிப் பொடியை எடுத்துத் தேனுடன் கலந்து உண்ணலாம்.
  • தினமும் காலை, மாலை உணவிற்கு பின்பு, நெல்லிக்காய் இளகம் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிடலாம். 
  • தினமும் காலை, மாலை உணவிற்கு பின்பு, சீந்தில் சூரணம் மூன்று விரல் அளவு எடுத்து, தேனுடன் கலந்து உட்கொள்ளலாம். 

மேற்கண்ட உள், வெளி மருந்துகள் அனைத்தும் ஆரம்பநிலையில் பலனளிக்க வல்லவை. நோய் ஏற்பட்டு பல வருடம் ஆகியிருந்தாலோ, உடல் முழுக்க பாதிப்பு இருந்தாலோ, சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி பூஞ்சைத்தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தும் உயர்வகை சித்த மருந்துகளை எடுத்துக்கொண்டால், புழுவெட்டிலிருந்து முழுமையான குணம் பெற முடியும்!

அடுத்த இதழில 'பவுத்திரம்'.. 

- டாக்டர் அருண் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles