ஆயுர்வேதம் 20

Wednesday, March 1, 2017

வாயுத்தொல்லை தீர்க்கும் கோவைக்காய்!
ஏழைகளின் உணவு என்று ஒருகாலத்தில் பலரால் தவிர்க்கப்பட்ட ஒன்று கோவைக்காய். கோவக்காய் அல்லது கோவைக்காய் என்று சொல்லப்படும் இது, வேலிகளில் படர்ந்திருக்கும் கொடியில் தொங்கிக்கொண்டிருக்கும். கனிந்த நிலையில் இருக்கும் இதனைச் சாப்பிடுவது, ஒருகாலத்தில் சிறுகுழந்தைகளின் விளையாட்டுகளில் ஒன்றாக இருந்தது. இதன் மகத்துவம் அறிந்தவர்கள், வாரத்திற்கு ஒருமுறை இதனைப் பறித்துவந்து பொறியல் செய்து சாப்பிடுவார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னால், நகரங்களில் கோவைக்காயைப் பார்க்கவே முடியாது. ஆனால், தொலைக்காட்சி, இணையத்தின் வழியாக கோவைக்காயின் பலன் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. இதனால், இன்று எல்லோரது உணவிலும் கோவைக்காய் முக்கியமானதாக இருப்பதைக் காணமுடிகிறது. 

 

மருத்துவக்குணங்கள்

வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை, குடல்புண்களை, மூலநோயைக் குணப்படுத்தும் சக்தி கோவைக்காய்க்கு உண்டு. வாயுத்தொல்லை என்பது சிலரை வாட்டும்; எத்தனை முறை மருந்து சாப்பிட்டாலும், தீவிர உணவுக்கட்டுப்பாடுகளை மேற்கொண்டாலும் அது தீராது. அப்படியொரு வாயுத்தொல்லைக்கு ஆளானவர்கள், வாரத்திற்கு இருமுறை கோவைக்காய் சாப்பிட்டால் போதும். அவர்களது வயிறு தட்டையானதாக மாறும்; வாயுத்தொல்லை இல்லாமல் போகும். 

சாப்பிட்டவுடன் வயிற்றில் வலி, எரிச்சல் ஏற்படுவது போன்றவற்றிற்குக் காரணம் உடலில் அமிலத்தன்மை அதிகமாவது தான். இந்த பிரச்சனை உடையவர்கள், கோவைக்காயைச் சாப்பிட்டால் போதும்; அரைமணி நேரத்தில் அந்தப் பிரச்சனைகள் மறைந்து போகும். அதோடு, உடல் எடையைக் குறைப்பதற்கான மிகச்சிறந்த மருந்து கோவைக்காய் என்பது பலரும் அறியாதது. 

 

வாயுத்தொல்லை தீர்க்கும்

தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் கோவைக்காயை தினமும் உண்பது கட்டாயமாக இருக்கிறது. நாம் அப்பளம் சாப்பிடுவது போல, நெருப்பில் சுட்ட கோவைக்காயுடன் உப்பும் மிளகும் சேர்த்து, சோற்றுடன் பிசைந்து சாப்பிடுவதை அந்நாட்டவர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். பெரிய ஹோட்டல்களில் கூட, வறுக்கப்பட்ட கோவைக்காய் கிடைக்கிறது. ஸ்டார்ச் அதிகமுள்ள உணவைச் சாப்பிடும்போது, வாயுத்தொல்லை வர வாய்ப்புகள் அதிகம். அதனைத் தடுக்க கோவைக்காய் உதவுகிறது என்பதே, இதற்குப் பின்னிருக்கும் காரணம். 

 

சர்க்கரை குறைபாடு சரியாகுமா?

கோவைக்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளதால், சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். செரிப்பதற்கு நேரம் ஆகும் என்பதால், உடனடியாகப் பசிக்காது. உண்ணும் உணவில் அரிசி குறையும்போது, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை குறையும். அதுபோல, கோவைக்காயில் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைய உண்டு. சர்க்கரை நோயினால் நரம்பு சம்பந்தப்பட்ட, ரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட, கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம். இதனைத் தடுக்க, சர்க்கரை குறைபாடு உடையவர்கள் ஆன்டி ஆக்சிடென்ட் நிரம்பிய மாத்திரைகளையும் உணவுகளையும் எடுத்துக்கொள்கிறார்கள். அதற்குப் பதிலாக, அவர்கள் கோவைக்காய் உணவுகளை எடுத்துக்கொண்டால் போதுமானது. 

 

வயிற்றுப்பிரச்சனைகள் தீரும்!

குடல் புழுக்கள் என்பது, இன்று பெரியோர்களையும் சிறியவர்களையும் அதிகமாகப் பாதிக்கிறது. அதிகளவில் அசைவ உணவு, சுத்தமில்லாத தண்ணீர், அதிகமான இனிப்புகள் போன்றவை குடல் புழுக்களை அதிகமாக்குகிறது. இதனைத் தடுக்க, நவீன மருத்துவத்தின் அறிவுரைப்படி மருந்து சாப்பிடுகிறோம். அந்த மருந்தானது, நல்லது மற்றும் கெட்டதைச் செய்யும் நுண்ணுயிரிகள் அனைத்தையும் வயிற்றிலிருந்து துடைத்தெடுத்துவிடுகிறது. ஆயுர்வேதத்தில் இப்படியொரு நிலை இல்லை. குடல்புழுக்களை அழிக்கக்கூடிய மருந்துகளை உணவிலேயே கலந்து கொடுக்கலாம். அதனால் உடலுக்கு நல்லது செய்யும் பாக்டீரியாக்களுக்கு எந்த பாதிப்பும் இராது. அதனைச் செய்யவல்லது கோவைக்காய் துவையல். 

கோவைக்காய் துவையலைச் செய்வது வெகு சுலபம். எண்ணெயில் வதக்கிய கோவைக்காயைக் கொண்டு, துவையல் செய்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அதனைச் சோற்றுடன் சேர்த்துப் பிசைந்து குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். மாதத்திற்கு ஒருமுறையோ, இருமுறையோ இதுமாதிரிச் செய்வார்கள். இவ்வாறு சாப்பிடச்செய்தால், அடுத்தநாள் குழந்தைகள் மலம் கழிக்கும்போது வயிற்றிலுள்ள புழுக்கள், நாக்குப்பூச்சிகள் போன்றவை தானாகவே வெளியேறும். பெரியவர்கள் இவ்வாறு செய்யும்போது, அதிக அமிலத்தன்மையை உருவாக்கும் பாக்டீரியாக்கள் காணாமல் போகும்.  

அதேபோல, பித்தப்பை கற்களுக்கு கோவைக்காய் மிகச்சிறந்த மருந்து. கோவைக்காயை வாரத்திற்கு இருமுறை சாப்பிட்டுவந்தால், மூன்றே மாதங்களில் சிறந்த முன்னேற்றம் இருப்பதைக் காண முடியும். காரத்தன்மை அதிகமிருந்தால் நோய் உடலை அண்டாது. அந்த வகையில், காரத்தன்மை அதிகமாக இருக்கும் கோவைக்காயை உண்டால், காரத்தன்மை உடலில் சீராக இருக்கும். 

 

தலைமுடியைக் காக்கும் கோவைக்காய்

பேன், பொடுகு போன்ற தொல்லைகளால், இன்று பலர் பாதிக்கப்படுகிறார்கள். இதிலிருந்து விடுபட, கோவைக்காயை அரைத்துத் தலையில் பூசி, சுமார் 10 நிமிடம் ஊறவைத்து, அதன்பின் குளித்தால் போதும். தலைமுடி அரிப்பு, உடைதல், ஒல்லியாதல் போன்ற பிரச்சனைகளும் தீரும். 

விலை மலிவானதாக இருப்பதால், கோவைக்காயை மதிப்பற்றதாக நினைக்கக்கூடாது. ஒருநாள் கோவைக்காய் சாப்பிடுவதென்பது, பத்து நாள் கேரட் சாப்பிடுவதற்குச் சமமானது. அதனால் வாரத்திற்கு ஒருமுறை நாம் கோவைக்காயை உணவாக உட்கொண்டலே, ஆரோக்கியமாகப் பல்லாண்டு காலம் வாழமுடியும்!

 

உடலைக் காக்கும் மூலக்கூறு திசுக்களை அழித்தால் என்னவாகும்?!

சோரியாசிஸ் பயங்கரம்!

ஒருகாலத்தில் தோல் பிரச்சனைகள் எல்லோரையும் பாதிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தது. ஆனால், இன்றைய நிலைமை அப்படியில்லை. பொதுவாக, உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பையும் காப்பதற்கென்று ஒரு காரணி உண்டு. அந்த வகையில், ஆல்பா27 என்று சொல்லக்கூடிய வெள்ளையணுக்களின் வேலை, தோல் சம்பந்தப்பட்ட எந்த பாதிப்பும் வராமல் பாதுகாப்பது. 

ஏழு நாட்களுக்கு ஒருமுறை, நமது தோலிலுள்ள அழிந்த திசுக்கள் வெளியேறும். மெத்தை மற்றும் துணியைத் தட்டும்போது வெளியேறும் தூசுகள் இவைதான். உடலைக் காக்கும் ஆல்பா 27, சோரியாசிஸ் நோய் (psoriasis) ஏற்படும்போது உடலிலுள்ள திசுக்களை எதிரிகளாகப் பாவித்து வேகமாக அழிக்கத் தொடங்கும். அதனால் தான், சோரியாசிஸ் நோயாளிகளின் உடலில் இருந்து செதில் போல தோல் உதிரும். உடலைக் காப்பாற்ற வேண்டிய நோய் எதிர்ப்புச்சக்தி மூலக்கூறு, உடலுக்கு எதிராக வேலை செய்து சில திசுக்களை அழிப்பது தான் சோரியாசிஸ் எனும் நோய். 

சோரியாசிஸ் பல வகைப்படும். தலை, தோல் மற்றும் நகங்களைப் பாதிக்கிறது சோரியாசிஸ். இவற்றின் பக்கவிளைவாக, மூட்டுகளைப் பாதிக்கும் சோரியாட்டிக் ஆர்த்தரைட்டிஸ் (psoriatic arthritis) ஏற்படுகிறது. சோரியாசிஸ் உடல் சம்பந்தப்பட்ட நோயல்ல; மனதைப் பாதிக்கக்கூடிய காரணிகளால் உண்டாகும் நோயே என்று, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரம்பரிய மருத்துவ முறைகள் விளக்கம் தந்திருக்கின்றன. 

 

காரணம்

குளிர்ந்த உணவும் சூடான உணவும் சேர்த்துச் சாப்பிடுவது, வறண்ட உணவும் உடலில் ஈரப்பதத்தை உண்டாக்கும் உணவையும் சேர்த்துச் சாப்பிடுவது போன்றவை விருத்த ஆகாரம் என்று சொல்லப்படும். இது உடலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக, தேனும் நெய்யும் சரியான அளவில் சாப்பிடுவது. அது போலவே, மீன் சாப்பிட்டபிறகு தயிர் உள்ளிட்ட பால் பொருட்களைச் சேர்த்துச் சாப்பிடும் வழக்கம் நம்மிடையே இல்லை. இதனால் தோலில் பாதிப்புகள் ஏற்படும் என்பதை அறிந்து வைத்திருந்தனர் நம் முன்னோர்கள்.

சுற்றியிருக்கும் தவறுகளைப் பார்த்து மனம் கொதித்து, அந்த உணர்வுகளை அடக்குபவருக்கும் சோரியாசிஸ் பாதிப்பு ஏற்படும். பொதுமக்களைத் தினமும் சந்திக்கும், அவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தீர்க்கும் துறையில் உள்ளவர்கள் இதனை அதிகம் எதிர்கொள்கிறார்கள். 

தினமும் அதிகளவில் அசைவம் சாப்பிடுபவர்களையும் சோரியாசிஸ் பாதிக்கிறது. 

சில மருந்துகளின் பக்கவிளைவுகளாலும் இந்த நோய் உண்டாகிறது. கவுட் (gout) என்று சொல்லப்படும் ஆர்த்தரைட்டிஸ் நோய் குணமாகக் கொடுக்கப்படும் சில மருந்துகள் சோரியாசிஸை உருவாக்குகின்றன. மூலநோய்க்குக் கொடுக்கப்படும் நவீன மருந்துகளும் இதே போன்ற விளைவைத் தருகின்றன. 

அறுவைசிகிச்சைகளுக்குப் பின்பும் சோரியாசிஸ் பாதிக்க வாய்ப்புகள் உண்டு. உதாரணமாக, மூல நோய்க்கான அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களை சோரியாசிஸ் பாதித்திருப்பதைக் காண முடிகிறது. கருப்பை அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களையும் இது பாதிக்கிறது. 

மன அழுத்தம் தான், சோரியாசிஸ் பாதிக்க முக்கியக் காரணம். மனதை மட்டுமல்லாமல் சிறுநீர், மலம், தும்மல், விக்கல் போன்றவற்றை தொடர்ந்து அடக்குபவர்களுக்கும், இந்த பாதிப்பு ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. 

 

அறிகுறிகள்

உடலின் எந்தப் பகுதியையும் சோரியாசிஸ் பாதிக்கும். கறுப்பாக சிறு புள்ளி போன்று இருக்கும் ஒருவகை அரிப்புடன் இது தொடங்கும். அந்த இடத்திலிருந்து, பொடி போல தோல் உதிரும். அதன்பிறகு, உடல் முழுவதும் அரிப்பு பரவும். சிலருக்கு நகங்கள் முதலில் சொத்தையாகும். சிலருக்கு, தலையில் பொடுகு சம்பந்தப்பட்ட பிரச்சனை வருடக்கணக்கில் இருக்கும்; அதன்பின், சோரியாசிஸ் ஏற்படும்.  

 

சோரியாசிஸை குணப்படுத்த..

ஆயுர்வேத முறையில் சோரியாசிஸை குணப்படுத்த, உடலுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கும் சேர்த்தே சிகிச்சையளிக்கப்படுகிறது. டீடாக்சிபிகேஷன் (detoxification) எனப்படும் பஞ்சகர்ம சிகிச்சைகள், சோரியாசிஸை குணப்படுத்த முதலில் அளிக்கப்படும். குறிப்பாக, வாந்தி மற்றும் பேதிக்கான மருந்துகள் தரப்படும். 

முதல் நாள் அன்று, தித்தகம் எனப்படும் மருந்தூட்டப்பட்ட நெய் சுமார் 20 மி.லி. நோயாளிக்குக் கொடுக்கப்படும். இரண்டாம் நாள் 40மி.லி., மூன்றாம் நாள் 80 மி.லி., நான்காம் நாள் 160 மி.லி., ஐந்தாம் நாள் 320 மி.லி., ஆறாம் நாள் 640 மி.லி. என்று கொடுக்கப்படும் நெய்யின் அளவு அதிகமாக்கப்படும். காலையில் வெறும் வயிற்றில் இந்த நெய்யை குடித்தபிறகு, பசி வரும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். முதல் நான்கு நாட்களில், எளிதாகப் பசி ஏற்படும். ஐந்து மற்றும் ஆறாம் நாளன்று, பெரும்பாலும் பசி வராது. மலம் கழிக்கும்போது, அந்த நெய் மட்டும் வெளியேறும் நிலை ஏற்படும். இந்த நிலை ஏற்பட்டபிறகு, அடுத்தநாளன்று அதிமதுரம், மறுகாரைக்காய் என்ற மூலிகை அல்லது வசம்பை எடுத்து, ஒரு லிட்டர் நீர் மற்றும் பாலுடன் சேர்த்து காய்ச்சி, அதிகாலை 5 மணியளவில் நோயாளிக்குக் குடிக்கக் கொடுக்கலாம். அதன்பிறகு சுமார் பதினைந்து நிமிடம் கழித்து, அந்த நபர் வாந்தியெடுப்பார். அப்போது சோரியாசிஸை உருவாக்கும் கிருமிகள் உடலிலிருந்து வெளியேறும்; முடிவில், மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் வாந்தியெடுப்பதுடன் அது முடிவுக்கு வரும். இதன் மூலமாக, நோயாளியின் உடல் சுத்தமானதை உணரலாம். 

உடலைச் சுத்தம் செய்தபிறகு, சில உணவுக்கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். முதல் நாள் வேகவைத்த கஞ்சியில் இருக்கும் நீரை அருந்த வேண்டும். அடுத்தநாள், கஞ்சியில் இருக்கும் அரிசியையும் சேர்த்து உண்ணலாம். அதற்கடுத்த நாள், அரிசிக்கஞ்சியுடன் பச்சைப்பயிறு சேர்த்துச் சாப்பிடலாம். நான்காம் நாள், அந்த உணவுடன் கீரை சேர்க்கலாம். ஐந்தாவது நாள், ஏற்கனவே சொல்லப்பட்ட உணவுடன் காய்கறி சேர்த்துக்கொள்ளலாம். ஆறாவது நாள், ரசம் சேர்த்த உணவு தரலாம். 7வது நாள் அசைவ உணவு கொடுக்கலாம். அதன்பிறகு, அந்த நபருக்கு வழக்கமான மருந்துகளைத் தருவது வழக்கம். 

நோய் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் வரும் ஒரு நோயாளி வாந்தி அல்லது பேதி மருந்துகளைச் சாப்பிட்ட பின்பு, அவரது உடலில் இருந்த பாதிப்புகள் அப்படியே மறைவதைக் காணலாம். மருந்துகள் கொடுத்தபின்பு, இந்த நோய் முழுமையாகக் கட்டுக்குள் வரும். 

 

நிரந்தரமாகக் குணப்படுத்த முடியாதா?

மனநலம் சார்ந்த நோயாக இருப்பதனால், சோரியாசிஸை ஒருமுறை சிகிச்சையளிப்பதன் மூலம் நிறுத்த முடியாது. சில விஷயங்களைப் பின்பற்றுவதன் மூலமாக, அதனைச் செயல்படுத்த முடியும். 

காலையில் எழும் வழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சூரிய நமஸ்காரம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். சூரியஒளியில் இருக்கும் வைட்டமின் டி தோலை பளபளப்பானதாக மாற்றும். ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். கூடுமானவரை, அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதேபோன்ற விளைவுகளைத் தரும் எண்ணெயில் பொறித்த பண்டங்களையும் தவிர்க்க வேண்டும். உடலுக்குத் தரும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பங்காவது மனதிற்குத் தரவேண்டும். மனதைக் காக்க, குறைந்தபட்சம் தினமும் அரைமணி நேரம் அமைதியாக இருக்கப் பழகவேண்டும். அந்தவகையில், தியானம் மிகவும் முக்கியமானது. அதனைச் செய்யும்போது, நோயாளிகளின் வாழ்க்கையே நேர்மறையானதாக மாறும். 

உடலைச் சுத்தப்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்குமான சிகிச்சைகளோடு, மனநலத்தைக் காக்கும் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்தால் போதும்; சோரியாசிஸ் எந்த நிலையில் இருந்தாலும் குணப்படுத்த முடியும். 

எலும்புகளே உடலின் அடிப்படை!

ஒரு கட்டிடத்திற்கு தூண்கள் அவசியம் என்பது போல, மனிதனுக்கு எலும்புகள் தேவை. எலும்புகளின் வளர்ச்சிதான், நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. ஆயுர்வேத மருத்துவம் பற்களையும் எலும்புகளின் வரிசையில் சேர்க்கிறது. நாம் சாப்பிடும் உணவு செரிமானத்திற்கு உட்படும்போது கிடைக்கும் முதல் பகுதி ரசதாது எனப்படுகிறது. ரசதாது சில மாற்றங்களுக்குட்பட்டு ரக்த அல்லது ரத்த தாதுவாக மாறுகிறது. ரக்த தாது மாமிசம் எனப்படும் தசைகளாகிறது. தசைகள் பின்பு மேதஸ் எனப்படும் கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருளாக மாறுகிறது. இந்த கொழுப்பு மாற்றத்திற்கு உள்ளாகும்போது அஸ்தி எனப்படும் எலும்பாக மாறுகிறது. அதன்பிறகு எலும்பு மஜ்ஜை மற்றும் சுக்லமாக மாறுவதாகச் சொல்கிறது ஆயுர்வேதம். 

இனப்பெருக்கத்திற்குக் காரணமான உயிரணுவை ஆண்களிலும் பெண்களிலும் உற்பத்தி செய்ய மூலக்காரணமாக இருப்பது எலும்புகள் தான் என்று ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறது ஆயுர்வேதம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, நவீன மருத்துவம் இதனை ஒத்துக்கொள்ளவே இல்லை. சுமார் 15 ஆண்டுகள் நிகழ்ந்த ஆய்வொன்று, நவீன மருத்துவத்தின் வாதங்களை பின்னுக்குத் தள்ளியது. எலும்பில் இருந்து உருவாகும் ஆஸ்டியோபின் எனும் வேதிப்பொருள் தான், எலும்பு மஜ்ஜையை உருவாக்குகிறது; அதன்பின், அது ஆண்களின் உயிரணுக்களாக மாறுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

 

எலும்பு மண்டல நோய்கள்

அஸ்திவிருத்தி மற்றும் அஸ்திக்சயம் என்று இரண்டு வகையான நோய்கள் எலும்பு மண்டலத்தைப் பாதிக்கின்றன. தேவையில்லாமல் எலும்பு தாது அதிகமாவது அஸ்திவிருத்தி எனப்படும். சயம் என்பது எலும்பின் தேய்மானம். விருத்தி ஏற்படும்போது, உடல் எடை தேவையில்லாமல் அதிகரிக்கும்; உடல் பலவீனம் அதிகமாகும். எலும்பு அதிகமாக உடையும். எலும்பு தேய்மானமாகும்போது, உடல் பலவீனமடையும். தேவையற்ற பதட்டம், கோபம், மன அழுத்தம், தூக்கமின்மை, இரவுநேரத்தில் எலும்புகளில் வலி அதிகமாவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். 

 

மோரும் நெய்யும்

ஆயுர்வேதத்தில் தரப்படும் மோரும் நெய்யும் எலும்புகளைப் பலப்படுத்தும் சக்தி கொண்டவை. இன்று நாம் கடையில் வாங்கும் நெய்யும் மோரும் இதற்கு தகுதியானதல்ல. பாலில் இருந்து தயாராகும் நெய்க்கும், தயிரில் இருந்து எடுக்கப்பட்ட வெண்ணெயை உருக்கி நெய்யாக மாற்றுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் உண்டு. 

வெண்ணெயை வாங்கி நெய்யாக மாற்றி, உடனடியாகச் சாப்பிடுவார்கள் சிலர். அந்த வழக்கத்தை மேற்கொள்பவர்களுக்கு இதயநோயோ, கல்லீரல் பாதிப்போ, கொழுப்பு பிரச்சனைகளோ இருக்காது. இயற்கை முறையில் நெய் தயாரிக்கப்படாத காரணத்தினாலேயே, அதனை ஒதுக்கும் வழக்கம் அதிகமாகியுள்ளது. அதுவே எலும்புப் பிரச்சனைகள் பெருகுவதற்கும் காரணமாகிறது. இதனைத் தடுக்க மோரும் நெய்யும் நம் உணவில் இருப்பது மிக அவசியம். இன்றும் கிராமங்களில் பானமாக மோர் மட்டுமே தரப்படுவதைக் கவனிக்க முடியும். இவை இரண்டையும் உட்கொண்டபிறகு, எலும்பின் அடர்த்தி அதிகமாகியிருப்பதைச் சோதித்து உணரலாம். 

 

ஆயுர்வேத சிகிச்சைகள்

பிழிச்சல் என்ற சிகிச்சை எலும்பை வலுப்படுத்தும். உபநாகஸ்வேதம் என்றொரு சிகிச்சையும் எலும்பைக் காக்கும். இதன்படி நிறைய மருந்துகளை எடுத்து, அதனை நன்கு அரைத்து, சுடவைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி, துணி அல்லது பிளாஸ்டிக் கவர் வைத்து மூடிவிட வேண்டும். இதனால் அந்தப்பகுதியில் அதிகமாக வியர்க்கும்; ரத்த ஓட்டம் அதிகமாகும். இதன் வழியாக, எலும்புகளுக்குத் தேவையான பலம் உருவாகும். 

அவதாகஸ்வேதம் என்பது நிறைய மூலிகைகள் இடப்பட்டு கொதிக்கவைத்த நீர் நிரம்பிய தொட்டியில் நோயாளியை உட்கார வைப்பது. கழுத்தளவு நீர் மூழ்கிய நிலையில் இருக்கும் இந்த சிகிச்சையை சுமார் 40 நாட்கள் எடுத்துக்கொண்டால் போதும். எலும்புகளின் திறன் மேம்பட்டிருப்பதைக் காண முடியும். 

 

எலும்புகளை வலுவாக்கும் வழக்கங்கள்!

உடற்பயிற்சியும் உணவும் கூட, எலும்பு ஆரோக்கியத்தில் முக்கியமான ஒன்று. சூரிய நமஸ்காரம் என்பது பிரதானமான உடற்பயிற்சி. இதனைச் செய்வதற்காக, காலையில் 6 மணிக்கு எழவேண்டும். சூரியஒளி படுமாறு நிற்க வேண்டும்; இதனால் வைட்டமின் டி உடலுக்குக் கிடைக்கும்; எலும்புகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். 

குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீரை, தினமும் அருந்தவேண்டும். சாப்பிடக்கூடிய சத்துகளை மிக நுண்ணிய அளவில் உடலெங்கும் கொண்டுபோய்ச் சேர்க்க, தண்ணீர் உதவும். 

பிராணாயாமம் செய்யும்போது, ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும்; உடல் செல்களிலுள்ள ஆக்சிஜன் தேவை குறையும். இதனால் உடலில் இருக்கும் எலும்புகளும் தசைகளும் பலமடையும். 

கால்சியம் மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் அனைவரும், தங்களது வழக்கத்தை ஆறு மாத காலம் நிறுத்தி வையுங்கள். மேற்கண்ட வழக்கங்களைச் செய்து பழகுங்கள். நல்ல உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுங்கள். அதன்பின், உங்கள் உடலிலுள்ள எலும்புகள் மேம்பட்டிருப்பதைக் காணமுடியும். 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles