மிகினும் குறையினும் - நீர் விதை நோய் - Hydrocele

Thursday, June 15, 2017

நோய் விளக்கம் :
 
ஆண்களின் விதைப் பையில் நீர் சேர்ந்து வீக்கத்துடன் காணப்படும் நிலையை நீர் விதை நோய் (Hydrocele ) என்கிறோம்.
 
 

வாத நாடியும், கப நாடியும் தன்னியல்பிலிருந்து மாறுபாடு அடைவதால் இந்நோய் ஏற்படுகிறது என்கிறது சித்தர் இலக்கியம்.
 
பெரும்பாலும் இளைஞர் பருவத்தில் இந்நோய் ஏற்படும் என்றாலும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் கூட ஏற்படலாம். வீக்கம் தானாக சிலருக்கு சரியாகும் நிலையும் உண்டு. சிலருக்கு வீக்கம் பெரிதாகி அப்படியே நிலைத்து விடுவதுமுண்டு. வேறு ஏதேனும் குறிகுணம் தோன்றுவதில்லை. வலி இல்லாதிருப்பதால் பலர் இதனைக் குணப்படுத்த யோசிக்காமல் விட்டுவிடுவதுமுண்டு. வீக்கம் அதிகமான நிலையில் சிறிது கனத்தையும், சில சங்கடத்தையும் தருவதுமுண்டு. உடல் ரீதியாக வேறு கோளாறுகளை ஏற்படுத்துவதில்லை.
 
உணவே மருந்து :
 

  • வாதத்தை அதிகரிக்கக் கூடிய கிழங்கு வகைகள் எண்ணெய்ப் பலகாரங்கள், குளிர்ச்சியான உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். 
  • கழற்சி இலையை பச்சரிசி மாவுடன் சேர்த்து அரைத்து அடைபோல தட்டி விளக்கெண்ணெய் சிறிது விட்டு எடுத்து காலை உணவாக வாரம் இருமுறை உண்டு வரலாம். நீர் விதை நோயிலுள்ள வீக்கம் படிப்படியாகக் குறையும்.

 
சித்த மருத்துவம் :
 
வெளி மருந்துகள் :

 

  • நாட்டு மருந்துக் கடைகளில் கழற்சி விதை கிடைக்கும். அதனை வாங்கி உடைக்க கழற்சிப் பருப்பு கிடைக்கும். அதனை பொடித்து, கோழி முட்டை வெண்கருவுடன் சேர்த்து அரைத்து விதையில் பூசி வரவும். தொடர்ந்து பூசி வர நீர்விதை நோய் குணமாகும். 
  • கழற்சி பருப்பு போலவே கல்லுப்பையும், கோழி முட்டை வெண்கருவையும் அரைத்துப் பூசலாம். இது ஆரம்ப நிலை விதை வீக்கத்தைக் குறைக்கும். 
  • கழற்சி இலை, தேங்காய் திருகல், ஆமணக்கு இலை, சிற்றாமணக்கு பருப்பு இவற்றை விளக்கெண்ணெய் விட்டு வதக்கித் தாங்கக் கூடிய சூட்டில் நீர்விதை நோய்க்கு ஒற்றமிடலாம். இதனையே வைத்துக் கட்டலாம்.

 
மேற்கண்ட வெளிமருந்துகள் நீர்விதை நோயை குணமாக்க வல்லவை. இவற்றை பயன்படுத்தியும் வீக்கம் இருப்பின் அருகிலுள்ள சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். நீர்விதை நோயைக் குணப்படுத்தக் கூடிய உள் மருந்துகள் பல உள்ளன, என்பதை நினைவில் கொள்ளவும்.
 
அடுத்த இதழில் ‘மலச்சிக்கல்’.
 
 - டாக்டர் அருண்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles