ஆயுர்வேதம் காட்டும் ஆரோக்கியப்பாதை

Thursday, June 15, 2017

ஜவ்வு விலகல் 

இன்றைய நவீன உலகில் பலருக்கும் ஏற்படும் பிரச்னை ஜவ்வு விலகல். இதனால் ஏற்படும் வலியும், மனஉளைச்சலும் சொல்லி மாளாது. இதுகுறித்து விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் கெளதமன். 

துரிதமான இன்றைய வாழ்க்கைமுறை, பல பிரச்சினைகளுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. “சமையலறை பக்கம் போனாலே என் மனைவி எரிச்சல் ஆகிடறாங்க” என்று புலம்பித் தள்ளும் கணவன்மார்கள்; அதிகதூரம் அலுவலகத்துக்கு வண்டி ஓட்டிட்டு போறாரு, சாயங்கால வேளையில வீட்டுக்கு வந்ததும், முதுகுவலின்னு துடிச்சுப் போறாரு” என்று இல்லத்தரசிகள் தன் சக தோழிகளிடம்  புலம்புவதை  தற்பொழுது அதிகமாக கேட்க முடிகிறது. வேலைக்குச் செல்லும், மகன் மருமகளுக்கு உதவியாக இருக்கும் பெரியவர்கள், “எப்பொழுதுதான் வேலை முடியுமோ; கொஞ்ச நேரம் கை கால்களை நீட்டி படுத்தால்தான் சற்று ஓய்வாக இருக்கும்” என்று புலம்பும் முதியோர்கள் இல்லாத வீடுகளே இல்லை என்றுதான் சொல்லலாம். 
 
உடலில் உள்ள முக்கியமான பாகங்களைத் தாங்குகின்ற முதுகுத்தண்டானது, சற்று தொய்வடைந்தால், ஏற்படும் புலம்பல்கள்தான் நாம் மேலே கண்டது. இக்குறிகளை நாம் கவனிக்காமல் விட்டோமேயானால், அது மேலும் வளர்ந்து கால் வலி, முதியோர்களால் பத்து நிமிடங்களுக்கு மேல் நடை பயிற்சி மேற்கொள்ள இயலாமை, அதனையும் தாண்டி கால் மரத்துப்போகும் நிலைமை ஏற்படுகின்றது. இங்கே குறிப்பிட்டதையும், கவனிக்காமல் விட்டால்தான் ஜவ்வு விலகல் (Disc Prolapse) என்ற பிரச்சினை ஏற்படுகிறது. 
 
ஜவ்வு விலகும்பொழுது அங்கிருக்கும் நரம்புகளில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும். அந்த அழுத்தம், நமக்கு கடுமையான வலியைக் கொடுக்கும். நூற்றில் தொண்ணூறு  மக்கள், இந்த நிலைமையில்தான், மருத்துவர்களை அணுகுகிறார்கள். எந்த ஒரு உடல் உபாதையையும் உடனே, கவனித்தோமேயானால்  நாம் அதிக வேதனைகளை அனுபவிக்கத் தேவையில்லை.
 
சரி! பிரச்சினை ஏற்பட்டுவிட்டது; என்னதான் தீர்வு இதற்கு என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஏனெனில், சிலர் இயன்முறை (Physiotherapy) சிகிச்சையோ, அறுவை சிகிச்சையோதான் ஜவ்வு விலகலுக்கு நிரந்தரத் தீர்வு என்று உங்களுக்கு பரிந்துரை செய்திருக்கலாம். ஆனால், ஆயுர்வேத மருத்துவ முறையில் அறுவை சிகிச்சை இல்லாமல், எளிய சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த முடியும். 
 
 எப்படி ?

ஆயுர்வேதத்தை பொறுத்தவரை ஒரு இடத்தில் பலவீனம் ஏற்படும் பொழுதுதான் அந்த இடத்தில் நோய் ஏற்பட ஆரம்பிக்கிறது. உதாரணத்துக்கு, நுரையீரல் நலிவடையும்பொழுதுதான் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது. அதே போல பலவீனமடைந்த ஜவ்வுகளில், சிகிச்சைகள் கொடுத்தோமேயானால் இப்பிரச்சினையை எளிதாக குணப்படுத்த முடியும்.
 
சிகிச்சைகள் 

  • தசைகளை வலுவடையச் செய்யும் மருந்துகள், உடற்பயிற்சிகள் அல்லது பஞ்ச கர்ம சிகிச்சைகள் 
  • அப்யங்கம் என்று சொல்லக்கூடிய எண்ணெய் சிகிச்சை.  
  • இலைக்கிழி - தேவையான மூலிகைகளை எடுத்து ஒத்தடம் கொடுப்பது. 
  • சவ்வு விலகல் ஏற்பட்ட இடத்தில் பாலம் போல் செய்து, மருந்தூட்டப்பட்ட எண்ணெய்களை  நிரப்பி செய்யும் சிகிச்சை.

இவைகளைச் செய்யும் பொழுது, பாதிக்கப்பட்ட ஜவ்வு மட்டுமில்லாமல், அதனைச் சுற்றி இருக்கும், தசைகளும் பலம் பெறுகிறது. படிப்படியாக முதுகு வலி குறைவதைக் காணலாம், அறிகுறிகளும், கொஞ்சம் கொஞ்சமாக மறைவதைப் பார்க்க முடிகிறது. ஜவ்வு விலகல் ஏன் வந்தது என்ற காரணத்தை அறிந்து, நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை  எடுத்துக் கொண்டு,  உடற்பயிற்சி மற்றும் மனப்பயிற்சி செய்து வந்தாலே, இந்நோயிலிருந்து விடுபடலாம். நம் உடலுக்கு தேவையான வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்தாலே நாம் பல்லாண்டு காலம் வாழலாம். 

- பவித்ரா
 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles