மிகினும் குறையினும் - காது வலி 

Wednesday, May 31, 2017

“இவனுக்கு எப்ப சளி பிடிச்சாலும் காது வலி வந்துருது டாக்டர். வயசு இந்த ஆகஸ்ட் வந்தா பதினொன்னு ஆயிரும். எப்பதான் இந்த மாதிரி வராம இருக்கும்”.
 
“திடீர்னு நைட்டு காது வலிக்க ஆரம்பிச்சுரும் டாக்டர். அம்மா மிளகாய் வற்றல்ல விதையெல்லாம் எடுத்துட்டு கொஞ்சம் நல்லெண்ணெய் ஊத்தி விளக்குல காட்டி லேசா சூடாக்கி 2-3 சொட்டு காதுல விடுவாங்க சரியாயிரும். இப்ப வேலைக்காக இங்க தனியா இருக்கேன். ஏதாவது டிராப்ஸ் இருக்கா டாக்டர்”
 
 

“டாக்டர் எனக்கு சைனஸ் இருக்கு பல வருசமா. அப்பப்ப காதுவலி வரும். மெடிக்கல்ஸ்ல கேட்டு சொட்டு மருந்து வாங்கிப் போடுவேன் சரியாயிரும். இப்ப கொஞ்சநாளா அதுவும் கேக்க மாட்டேங்கு. ஏதாவது மருந்து இருந்தா கொடுங்களேன். பத்தியமெல்லாம் ஒண்ணுமில்லையே”
 
“கிரிக்கெட் விளையாடும்போது பால் காதுக்கு கீழே பட்டுருச்சு டாக்டர். வலி சரியாகவே இல்லை”
 
“ஊட்டிக்கு போய்ட்டு வந்தேன் டாக்டர். மலை ஏறும் போதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லை. இறங்கும்போதுதான் காது வலிக்க ஆரம்பிச்சது. இன்னும் சரியாகலை. ஃபிளைட்டுல போகும்போதும் இதே மாதிரிதான். இறங்கும்போது  கடுமையாக வலிக்கும். என் வீட்டுக்காரரு நீ பயப்படுற அதனாலதான்னு கிண்டல் பண்றாரு. பயத்துல கூடவா காது வலிக்கும் டாக்டர்” 
 
காது வலிக்காரர்களின் வேதனைக் குரல்கள் எனக் காதோரம் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன என்றால் கட்டுரையை எழுத முற்படுகிறேன் என்பது ‘மனம்' அறிந்தது தானே!
 
‘பாவல ருரைத்தரார் காதிற் பற்றிய வியாதி நூறே’ என்னும் பரராசகேசரம் - சிரரோக நிதானம் நூல் பாடல் வரி, காதில் தோன்றும் நோய்களின் எண்ணிக்கை நூறு என்கிறது! நூறு வகையான காது நோய்கள் பலவற்றில் முதன்மையான குறிகுணமாக காதுவலி உள்ளது. காதுவலி ஏற்படக் காரணங்கள் பல உண்டு. காதினுள் ஏற்படும் பிரச்சினையால் வரும் வலி எனவும், காதுடன் தொடர்புடைய மூக்கு, தொண்டை, வாய் இவற்றில் ஏற்படும் பிரச்னையால் ஏற்படும் வலி எனவும் வகைப்படுத்தலாம். 

சித்த மருத்துவ தத்துவ விளக்கம்
 
வாத நாடியில் ஏற்படும் பாதிப்பு, பிற நாடிகளான பித்த நாடி, கபநாடி ஆகியவற்றையும் பாதித்து காதுவலியை ஏற்படுத்தி விடும்.
 
சித்த மருத்துவம்:
 
உணவே மருந்து:

 

 • சூடான உணவு வகைகளையே எடுத்துக் கொள்ள வேண்டும்.
 •  மிளகு, சுக்கு, பூண்டு, சீரகம் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
 • மந்தத்தை ஏற்படுத்தும் கிழங்கு வகைகள், எண்ணெய் பலகாரங்களைத் தவிர்க்க வேண்டும்.
 •  உடல் வன்மையை அதிகரிக்கும் கீரை வகைகள். காய்கறிகள், மாமிச சூப்புகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 
சித்த மருந்துகள்:
 

 • சளி, சைனஸ், தொண்டைப் புண் இவற்றால் ஏற்படும் காதுவலி நீங்க!
 •  பூண்டைச் சாறெடுத்து ஓரிரு துளி காதில் விடலாம்.
 •  சுக்கைத் தட்டி சிறுதுணியில் முடிந்து காதில் அடைத்து வைக்கலாம்.
 •  மருள் செடியை வெதுப்பிப் பிழைந்த சாறை ஓரிரு துளிகள் காதில் விடலாம்.
 •  திருநீற்றுப் பூச்சிலைச் சாறை ஓரிரு துளிகள் விடலாம்.
 •  கல்யாண முருங்கிலைச் சாறை ஓரிரு துளிகள் விடலாம்.
 •  காதில் ஏற்படும் பிரச்சினையால் ஏற்படும் வலி நீங்க!
 •  எள் இலையை அரைத்து வீக்கத்துடன் ஏற்படும் காது வலி நீங்க பற்றிடலாம்.
 •  முடக்கற்றான் இலைச் சாறை காதில் வேதனையுடன் சீழ் இருக்கையில் விடலாம்.
 •  காதில் அதிகமாகச் சீழ் இருக்கையில் நாய்வேளைச் சாற்றைக் காதில் விடலாம். தனியாக நாய்வேளைச் சாற்றைக் காதில் விடுகையில் சிலருக்கு எரிச்சல் உண்டாகலாம். ஆகையால் சாறுடன் நீர் கலந்து கொள்வது நல்லது.
 •  எருக்கிலை பழுத்ததை எடுத்து நெய் தடவி¢ அனலில் வாட்டி சாறெடுத்து காதில் விட வீக்கத்துடன் கூடிய காதுவலி குணமாகும்.
 •  விஷ மூங்கிலைச் சாறுடன் சிறிது உப்பு சேர்த்துக் காதில் விட வலி குறையும்.
 •  காதில் இரைச்சலுடன் கூடிய வலி இருப்பின் முசுமுசுக்கை சாறும், பூண்டுச்சாறும் சேர்த்துக் காதில் விடலாம்.

 
மேற்கூறிய மருத்துவ வழக்கு முறைகள் மருத்துவர் உத்தமராயன் எச்.பி.ஐ.எம். அவர்கள் எழுதிய சித்தர் அறுவை மருத்துவம் என்னும் சித்த மருத்துவப் பாடநூலில் இருந்து பெறப்பட்டவை.
 
தயாரிப்பு மருந்துகள்:
 
1. காயத்திருமேனி தைலம்: அனைத்து விதமான காது வலிக்கும் 2-3 சொட்டுகள் பயன்படுத்தலாம். வாரம் இருமுறை எண்ணெய்க் குளியலுக்கும் பயன்படுத்தலாம்.
 
2. சுக்கு தைலம்:  சளி, சைனஸ், தொண்டைப் புண் இவற்றினால் வரும் காதுவலி நீங்க காதில் 1-2 துளிகள் சொட்டு விடலாம். வாரம் இருமுறை எண்ணெய்க் குளியலுக்கும் பயன்படுத்தலாம்.
 
3. நொச்சி தைலம் (அ) பீநிச தைலம்: சுக்கு தைலம் போன்று பயன்படுத்தலாம்.
 
4. மத்தன் தைலம்: காதில் புண் இருந்து வலித்தால் 2-3 துளிகள் விடலாம். 
 
மேற்கண்ட மருந்துகள் பயன்படுத்தியும் வலி தொடர்ந்தால் அருகில் இருக்கும் சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உள்மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
 
வர்மக் காயங்களினால் ஏற்படும் காது வலிக்கு வர்ம சிகிச்சையும் தேவைப்படும் நிலையில் சித்த மருத்துவரே வர்மப் புள்ளிகளைத் தூண்டி குணமாக்குவார் என்பதையும் அறியவும்.
 
அடுத்த இதழில் “நீர்விதை நோய் (ஹைட்ரோசீல் - Hydrocele)

- டாக்டர் அருண்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles