மிகினும் குறையினும் - முகப்பரு

Friday, July 14, 2017

“டாக்டர் எனக்கு சின்ன வயசுல முகப்பரு உண்டு. இப்ப பாருங்க அதே மாதிரி இவளுக்கும் அள்ளிப் போட்டுருக்கு. ஏதாவது வெளில போடுற மாதிரி மருந்து கொடுங்களேன்”

“அது எப்படித்தான் கரெக்டா வருதுன்னே தெரியல டாக்டர். எங்காயவது வெளியில போக வேண்டிய நாள்ன்னு பார்த்து வந்துருது. இவ்வளவுக்கும் நைட் தூங்குறதுக்கு முன்னாடி கண்ணாடில நல்லா முகத்தைப் பார்த்துட்டுதான் தூங்கப் போவேன். நைட் க்ளியரா இருக்கிற முகத்துல காலைல பார்த்தா வந்துருக்கும் எனக்கு. அப்படியே கோவம் கோவமா வரும். என்ன மருந்து வேணும்னாலும் கொடுங்க, நா சாப்டுக்குவேன்”

“பீரியட்ஸ் டைம்ல எப்படியாவது பரு வந்துடுது டாக்டர். நானும் முகத்துல பத்து பதினைஞ்சு தடவையாவது கழுவுறேன். ஆனாலும் வந்துடுது”

“டாக்டர் 2 வருசம் முன்னாடி இந்த இடத்துலதான் பெருசா வந்துச்சு, வலிச்சது. இப்பவும் அதே இடத்துல 3 நாளா இருக்கு. லைட்டா வலியும், அரிப்பும் இருக்கு”

“நான் ஒரு பரு வந்தாலும் பிதுக்கி எடுத்துருவேன் டாக்டர். அதுக்கப்புறந்தான் தெரிஞ்சது, இந்த மாதிரி பிதுக்கக் கூடாது, கரும்புள்ளியாயிடும்னு. இதைப் போக்கிரலாமா டாக்டர். வீட்டுல வேற பொண்ணு பாக்காங்க”

“முகத்துல மட்டுமில்லை டாக்டர். முதுகுலயும் சின்னது சின்னதா இருக்கு. லேசா அரிக்கும், அப்பப்ப, எப்படியாவது சரி பண்ணிருங்க டாக்டர். பிரெண்ட்ஸ்லாம் கிண்டல் பண்றாங்க”

“காலைல கற்றாழைச் சோறை முகத்துல பூசிக்கிறேன். வாரம் ஒருக்கா பப்பாளி ஃபேஷியல், கேரட் ஜுஸ் கலந்த முல்தாணி மெட்டி பேக் ஒருநாள் விட்டு ஒருநாள் இவ்வளவும் செஞ்சும் பரு வர்றது குறையல டாக்டர். எனக்கு இர்ரெகுலர் பீரியட்ஸும் இருக்கு. இப்படி இருந்தா பரு வரும்னு ஆபிஸ்ல ஒருத்தங்க சொன்னாங்க. உண்மையா டாக்டர்”

முகப்பருக்காரர்களின் குரலில் படபடப்பும் வேதனையும் நிறைந்து ஒலிக்கும்.

முகப்பரு - சித்த மருத்துவ விளக்கம்

 • பித்த நாடியும், வாத நாடியும் பாதிப்படைகையில் முகப்பரு உருவாகலாம்.
 • உடற்சூட்டை அதிகரிக்கும் உணவுகள், செயல்கள் இவற்றால் பித்த நாடி பாதிப்படையும். உடற்கழிவுகளை முறையாக வெளியேற்றாமல் இருக்கும் செயலினாலும், வாயுப் பொருட்களை உண்ணுவதாலும் வாதநாடி பாதிப்படையும். 

சித்த மருத்துவம்

உணவே மருந்து

 • எண்ணெய்ப் பலகாரங்கள், குளிர்பானங்கள், கோழி, கருவாடு, கிழங்கு வகைகள் போன்றவற்றை முகப்பரு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
 • மலச்சிக்கலினால் முகப்பரு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே மலச்சிக்கல் இல்லாமலிருக்க நார்ச்த்து வாய்ந்த காய்கறிகளையும், பழவகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு கீரை சேர்த்துக் கொள்வதும் நன்மை பயக்கும்.
 • உடல் வன்மையை அதிகரிக்கும் நெல்லிக்காயை அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • இஞ்சி, சீரகம், ஏலக்காய், மஞ்சள், பெருங்காயம், பூண்டு, வெந்தயம் அன்றாட உணவில் இருக்க வேண்டும்.

சித்த மருந்துகள்

பசலைக் கீரையை அரைத்துப் பூசலாம்.

 • சந்தனத்தை இழைத்துப் பூசலாம்.
 • திருநீற்றுப் பச்சிலையை அரைத்துப் பூசலாம்.
 • கருஞ்சீரகத்தைப் பொடித்து நீருடன் கலந்து பற்றிடலாம்.
 • பறங்கிப் பட்டைப் பொடியை பாலுடன் கலந்து பூசலாம்.
 • சங்கு பற்பம் என்ற மருந்தை நீருடன் கலந்து பூசலாம்.
 • முகப்பரு உள்ளவர்கள் கண்டிப்பாகச் செய்ய வேண்டியவை:
 • வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல்.
 • முகத்தை நீர் கொண்டு கழுவி சுத்தமாக வைத்திருத்தல்.
 • தலையில் பொடுகு வராமல் தலைமுடியைப் பராமரித்தல்.
 • மாதவிலக்கு கோளாறுகள் இருப்பின் அதனை சரிப்படுத்த மருந்துகள் எடுத்துக் கொள்ளுதல்.
 • உடல் ஆரோக்கியத்தைப் பராமரித்தல்.
 • முகப்பருவைக் கைகொண்டு தொடுதலோ, கிள்ளுதலோ செய்யாமலிருத்தல்.

மேற்கண்ட வெளிமருந்துகளையும், உணவு அறிவுரைகளைப் பின்பற்றினாலே முகப்பருவைக் குணப்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு பின்பற்றியும் முகப்பரு நீடித்தால் அருகிலிருக்கும் சித்த மருத்துவரை சந்தித்து அவரது ஆலோசனைப்படி உள் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். 

அடுத்த இதழில் ‘மன அழுத்தம்’

- டாக்டர் அருண்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles