ஆயுர்வேதம் காட்டும் ஆரோக்கிய பாதை

Friday, July 14, 2017

ஆஸ்துமா  - டாக்டர் கெளதமன் 

இன்றைய சூழலில் மனிதர்களிடம் அதிகமாக காணப்படும் நோய்களில் ஆஸ்துமாவே முன்னணியில் நிற்கிறது. அதன் அறிகுறிகளும், அந்நோயை தீர்க்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் கௌதமன்

நாம் ஒவ்வொருவரும், எப்பாடு பட்டாவது தேவைக்கு அதிகமாக பணம் சேர்த்துக் கொள்வதை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொள்கிறோம். எவ்வளவு பணம் சேர்த்து வைத்தாலும், நம்மால் இயற்கையை மீறி ஒன்றுமே செய்ய முடியாது. பணம் சேர்த்தவன், வீட்டிற்குள் சைக்கிள் மிதிப்பதும், பணம் சேர்க்க வேண்டியவன், வீட்டுக்கு வெளியே சைக்கிள் மிதித்துக் கொண்டிருப்பது போன்ற கேலிச் சித்திரங்களை சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

சமீபத்தில், அண்டார்டிகாவில், மிகப்பெரிய பனிப்பாறை  உருக தொடங்கிவிட்டது என்கிற செய்தி, நம்மை அச்சுறுத்தவே செய்கிறது. தொழில்நுட்பத்தின், ஹிமாலய வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், சுற்றுப்புறசூழல் பாதிப்பும் அதிகம் இருக்கத்தான் செய்கிறது. மரங்களை அழித்து, ஏர் கண்டிஷனர் குளிரை அனுபவிக்கிறோம். நீர் மூலம் கிடைக்கும் உடலுக்கு தேவையான உலோகங்களை வடிகட்டிவிட்டு , வெறும் சத்தில்லா நீரைப்  பருகிக் கொண்டிருக்கிறோம்.

இப்படி நாமே இயற்கைக்கு மாறாக, இன்று செய்து கொண்டிருக்கும் செயல்கள் நாளைய தலைமுறையை பாதிக்கும் அவர்களின் ஆரோக்கியத்தையும் சிதைக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. வாழை இலைகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் தட்டு, வந்தது இல்லாமல், அது இன்று, பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் இட்லி வரை உயிர்களை கொல்லும் எமனாக உருவெடுத்திருக்கிறது.

விளைவு, இன்று பிறந்த குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை பெயர் தெரியாத நோய்களால் பாதிப்பு. சில குழந்தைகள் பிறக்கும் பொழுதே நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு பிறக்கிறார்கள் என்கிற செய்தி சாதாரணமாகிவிட்டது. ஒரு மருத்துவமனையில், குறைந்தது நூறு பேர்களாவது ஆஸ்துமா என்று சொல்லக்கூடிய நுரையீரல் நோயினால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். நாற்பது வருடங்களுக்கு முன்பு கூட, நுரையீரல் நோய் என்றால் காச நோயால்  பாதிக்கப் பட்டவர்களைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். அதுவே எண்பதுகளில், குழந்தைகளுக்கு  ஏற்படக் கூடிய நுரையீரல் செயல் குறைவு(Primary complex) அதிகம் காணப் பட்டது. அதுவே நாளடைவில், Bronchitis asthma என்று சொல்லக்கூடிய ஆஸ்துமா நோயாக கணிக்கப் பட்டு  அதற்கான  சிகிச்சைகளை மாடர்ன் மெடிசினில் கொடுக்கிறார்கள். 

ஆஸ்துமா என்ற நுரையீரல் அழற்சி நோய்க்கு ஆயுர்வேதம் மற்றும், சித்த மருத்துவம் கொடுக்கும் பொருள் சுவாச நோய்.  நுரையீரலின் வேலையே, நல்ல காற்றை சுவாசித்து, கெட்ட காற்றான, கரியமிலக் காற்றினை வெளியேற்றுவது. ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களுடைய நுரையீரல்களால்  ஆக்சிஜனை கிரகிக்கக் கூடிய தன்மை குறைந்து விடுகிறது. அவர்கள், மூக்கின் வழியாக, மூச்சை விடுவதை விடுத்து, வாயின் வழியாக விடுவார்கள்.

ஆஸ்துமா நோய் என்பது நுரையீரல் சம்பந்தப்பட்டது என்பதைச் சொல்வதை விட, வயிறு சம்பந்தப் பட்டது என்று ஆயுர்வேத முறை கூறுகிறது. ஆஸ்துமா நோயினால் பாதிக்கப் பட்டவர்களைக் கேட்டால், அவர்களுக்கு எந்தக் காரணிகளால், சுவாசக் கோளாறு ஏற்பட்டது என்று சில குறி குணங்களைக் கூறுவார்கள்; அதாவது,

  • அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்ளுதல்.
  • அதிகமாக, பழச்சாறு அருந்துதல்.
  • இனிப்பு வகைகளை மிகுதியாக சாப்பிடுதல்.
  • மலம் கழிக்காமல் இருத்தல்.

ஆஸ்துமா நோயைத்  தடுக்கும் முறைகள்

ஆயுர்வேத முறைப்படி ஆஸ்துமாவை தவிர்க்க, நாங்கள் அறிவுறுத்துவது அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு வயிற்றுக்கு இடம். இது போன்ற உணவு முறையை  தொடர்ந்தால், மூன்று மாதங்களில், கட்டாயமாக ஆஸ்துமாவின் தாக்கத்தை குறைக்க முடியும்.

ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் முறைகள்

வயிற்றை சுத்தப்படுத்தும் சிகிச்சை - மருந்தூட்டப் பட்ட நெய்யை நோயாளிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக 6 நாட்கள் கொடுப்போம். அதோடு அவர்கள் நாங்கள் கூறும் பத்திய உணவைத்தான் உட்கொள்ள வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை, மருக்காரன் காய் அல்லது  அதிமதுரமோ பாலில்  சேர்த்து அவர்களை குடிக்க வைத்தால், உடனடியாக வாந்தி வரும். இதில், வயிற்றுக் கழிவு மட்டுமல்லாமல், நுரையீரலில் தங்கிய கழிவுகளும் வெளியேறும். 

இதன் தொடர்ச்சியாக நுரையீரலை பலப்படுத்தக் கூடிய ரசாயன மருந்துகளை எடுத்துக் கொள்ளவேண்டும். எனவே, அதிகமான வெளி உணவுகளைத் தவிருங்கள். ஒரே வேளையில் அதிகமாக உண்ணாமல் உணவை பிரித்து உண்ணுங்கள். வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மற்றும் வேப்பிலையை அரைத்து மஞ்சளோடு உட்கொள்ள பழகுங்கள். இப்படி கட்டுப்பாடுடன் வாழப் பழகினால் நோயிலிருந்து எளிதாக வெளி வரலாம்தானே.

- பவித்ரா

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles