மிகினும் குறையினும்  - மலச்சிக்கல்

Friday, June 30, 2017

“காலைல பாத்ரூம் போனாருன்னா வெளிய வர முக்கால் மணி நேரம் ஆகுது டாக்டர், அப்பவும் ஒழுங்கா போறாரான்னு தெரியல”

“சாதாரணமா தினமும் போயிடுவேன். என்ன காலைல எப்பவாச்சும் தான் வரும். ஏதாவது ஒரு நேரம் வந்துரும். எங்கேயாவது ஊருக்கு போனா, உடம்பு சூடாயிருச்சுனா கஷ்டமாயிருது. மறுநாள் வர்றதே இல்லை அடுத்த நாள் போகும்போது வலிக்குது”
 
 

“நானும் சாப்பிடாத பைபர் இல்லை டாக்டர். காய்கறி, கீரை, பழங்கள் எல்லாம் சாப்பிடுறேன். ஆனாலும் வரமாட்டேங்குது. ஒரு நாளாவது வந்துரும். வருது வருது விலகு விலகு ன்னு பாடலாம்ன்னு பாத்தா முடியவே மாட்டேங்குது. ஏதாவது ஸ்டராங்கான்ன மருந்தா கொடுங்க. நம்ம வயிறு கல்லு வயிறு.”
 
“பாத்ரூமுக்குள்ள போய் இவரு முக்குற சத்தம் எக்கோ மாதிரி வெளிய கேக்குது டாக்டர். முக்காதீங்க. வந்தா போய்க்கலாம். முக்குற முக்குல குடல் கிடல் வெளிய வந்துறப் போகுதுன்னு சொன்னா எங்க கேக்குறார்”
 
“காலைல காபியக் குடிச்சா போதும் வயித்தக் கலக்கிடும். நேரா போயிருவேன். இப்ப கொஞ்சநாளா சுடுதண்ணி, காபி எல்லாம் குடிச்சும் போகவே மாட்டேங்குது. வெளிய போகாம எப்படி சாப்டுறது?”
 
“எனக்கு மூணு வருசமா சுகர் இருக்கு டாக்டர். மருந்து சாப்டுறேன். பரவால்ல, ஆனா இப்ப ஒரு ஆறு மாசமா வெளிய ஒழுங்கா போக மாட்டேங்குது. சுகர் இருந்தா இந்தப் பிரச்னைலாம் கூடவா வரும் டாக்டர்?”
 
பல சிக்கல்களை உருவாக்கும் மலச்சிக்கல்காரர்களின் குரல்கள் இவை.
 
மலச்சிக்கல் - சித்த மருத்துவ விளக்கம்
 
வாத நாடியும், பித்த நாடியும் பாதிப்படையும்போது மலச்சிக்கல் ஏற்படும். மலச்சிக்கல் என்பது நோயல்ல; ஒரு குறிகுணம். ஆனால் பல நோய்களுக்கு அடிப்படைக் காரணமாக மலச்சிக்கல் அமைந்து விடுகின்றது. முறையற்ற உணவுப் பழக்கத்தினாலும், செயல்களினாலும் வாத, பித்த நாடிகள் பாதிப்படைந்து மலச்சிக்கலை ஏற்படுத்தி விடும். 
 
உணவினால் ஏற்படும் பாதிப்பு:
 
மாவுப் பண்டங்கள், கிழங்கு வகைகள், எண்ணெய் பலகாரங்கள், மிகுதியான மாமிச உணவு ஆகியவை வாத, பித்த நாடிகளை பாதிப்படையச் செய்யும்.
 
செயலினால் ஏற்படும் பாதிப்பு
 
வாரம் இருமுறை எண்ணெய் முழுக்கு செய்யாமை, குறைவான குடிநீர் அருந்துதல், பசியின்றி உண்ணுதல், மலத்தை அடக்குதல், இரவு கண்விழித்தல் போன்ற செயல்கள் வாத, பித்த நாடிகளை பாதிப்படையச் செய்யும். 
 
மலச்சிக்கலினால் வரும் பிற நோய்கள்
 

 • வயிறு வலி
 • செரியாமை
 • வயிறு கனத்தல்
 • புளிச்ச ஏப்பம்
 • வாயு பிரிதல்
 • வாய் துர்நாற்றம்
 • தலைவலி
 • உடம்பில் ஆங்காங்கே குத்தல், குடைச்சல்
 • மூட்டு வலி
 • மூலம்
 • ஆசனவாய் வெடிப்பு
 • நெஞ்சுவலி, முகப்பரு

 
போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு. 
 
சித்த மருத்துவம் :
 
உணவே மருந்து
 

 • தேவையான அளவு நீரருந்துதல், நார்ச்த்து மிகுந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள் அன்றாடம் சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவை மலச்சிக்கலை வராமல் தடுக்கும்.
 • பருப்பு சமைக்கும்போது விளக்கெண்ணெய் இரண்டு மூன்று சொட்டுக்கள் சேர்த்து சமைக்கலாம். விளக்கெண்ணெய்க்கு மூலத்தை இலகுவாக்கும் தன்மை உண்டு. அதேபோல தோசை சுடுகையில் எண்ணெயாக விளக்கெண்ணெயை பயன்படுத்தலாம்.
 • சரக்கொன்றை பூ இதழ்களை தேனில் ஊற வைத்து உண்ணலாம்.
 • அத்திப்பழம் மலச்சிக்கலைக் குணமாக்கும்.
 • கொய்யாபழம் மலச்சிக்கலுக்கு மிகுந்த நன்மையைத் தரும். 
 • வாழைப்பழம், சப்போட்டா, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற கனி வகைகளும் உடற்சூட்டைக் குறைத்து மலச்சிக்கலை குணமாக்க வல்லவை.
 • சமையலுக்கு கோடம்புளி, இந்துப்பை பயன்படுத்தலாம். 

சித்த மருந்துகள்:
 
விளக்கெண்ணெய் சிறந்த மலமிளக்கி. பெரியவர்கள் இரவில் தூங்குவதற்கு முன் இதனை சுடுநீருடன் கலந்து உண்ணலாம். 5 மி.லி. அளவில் ஆரம்பித்து 20 மி.லி. வரை எடுத்துக் கொள்ளலாம். எந்த அளவில் உண்டால் மலம் இளகிச் செல்கிறதோ அந்த அளவையே தொடர்ந்து பயன்படுத்தலாம்.
 
மூலக் குடாரத் தைலம் :
 

 • விளக்கெண்ணெயும் கடுக்காய் பிஞ்சும் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்து. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். 
 • அளவு 5 - 20 மி.லி. இரவு சுடுநீருடன்.
 • கடுக்காய்ப் பிஞ்சுக் குடிநீர்
 • 15 கிராம் கடுக்காய்ப் பிஞ்சுடன் 400 மி.லி. நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து 100 மி.லி.யாக வற்ற வைத்து வடிகட்டிக் குடிக்கவும். மாலை ஒரு வேளை மட்டும்.
 • கடுக்காய் பொடி - மூன்று விரல் கொள்ளும் அளவு - இரவில்.
 • சுகபேதி இளகம் - இரவு - ஒரு நெல்லிக்காய் அளவு.

மலச்சிக்கலை மருந்துகளில்லாமல் உணவு, செயல் இவற்றை முறைப்படுத்துவதன் மூலமே குணப்படுத்தி விட முடியும். அங்ஙணம் இருந்தும் குணமாகவில்லையெனில் மேற்கண்ட அடிப்படையான சித்த மருந்துகளை பயன்படுத்தி குணமடையலாம். மருந்துகள் மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட காலத்திற்கு மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்.
 
அடுத்த இதழில் ‘முகப்பரு’

- டாக்டர் அருண்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles