ஆயுர்வேதம் காட்டும் ஆரோக்கியப்பாதை!

Friday, June 30, 2017

மூட்டு வலி - டாக்டர் கௌதமன்

நவீன தொழில்நுட்பங்களால் வாழ்க்கை தரம் ஒருபக்கம் உயர்ந்தாலும், மறுபக்கம் அவற்றினால் விளைந்த உடல் நலக் கோளாறுகளும் அதிகம். நீண்ட நேரம் ஒரு இடத்தில் அமர்ந்து கணினியில் வேலைப் பார்ப்பவர்கள் முதல் முதியோர்கள் வரை சந்திக்கும் பிரச்னைகளில் முக்கியமானது மூட்டு வலி. இதுகுறித்து விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் கௌதமன். 
 
 

“மனிதர்களே பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக மாறி, ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய யுகத்தில், நோய் என்பது வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டது. தலை முதல் கால் வரை தினந்தோறும் புதுப்புது நோய்களால் மனிதர்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். எழுபது வயது முதியவருக்கு வரவேண்டிய நோய்க் குறிகள் இன்று பதினேழு வயது இளைஞர்கள் மத்தியில் காண்பது சாதாரணமாகிவிட்டது.
 
எந்தவொரு வலி வந்தாலும், பொறுத்துக் கொள்ளும் பக்குவம் என்பது வெகுவாக குறைந்து விட்டது. வலி வந்த அடுத்த நிமிடம் மருத்துவரிடம் சென்று, அவர் கொடுக்கும் மருந்துகளில் உடனடி தீர்வு கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் மனதுதான் அதிகம். 
 
மெனோபாஸ் அடைந்த பெண்கள் மட்டுமல்லாமல், எல்லா தரப்பினரிடமும் இன்று அதிகமாக காணப்படும் நோய் ‘மூட்டு வலி’. உடல் பருமன், கால்சியம் குறைபாடு, சரியான உணவு பழக்கமின்மை, உடற் பயிற்சி செய்யாதது, மன உளைச்சல் போன்ற பல இடர்பாடுகளால் மூட்டு வலி வருகிறது. இதற்கு நாள்பட்ட மருந்து உட்கொள்ளுதலோ, அறுவை சிகிச்சையோ நிரந்தரத் தீர்வு கிடையாது. 
 
மூட்டு வலியிலிருந்து எளிதில் நிவாரணம் பெற, நம் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் பல தீர்வுகளை நமக்கு கோடிட்டு காட்டுகிறது. 
 
ஆயுர்வேத சிகிச்சை முறைகள் 
 
ஜானுவஸ்தி சிகிச்சை 
 

  • இடுப்பு முதல் கால் வரை எண்ணெய் விட்டு, இலை வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
  • மூட்டிற்கு மேல் பாலம் போல் அமைத்து, மருந்தூட்டப்பட்ட  எண்ணெய்களை இட்டு இறுக்கிக் கட்ட வேண்டும். 
  • ஒரு மணிநேரத்திற்கு பின், சில மூலிகைகளான, முருங்கை கீரை,  ஊமத்தை இலை, தேங்காய், எலுமிச்சை ஆகியவற்றை நன்றாக வதக்கி அரைத்துக் கொள்ள வேண்டும். 
  • வலி இருக்கும் இடத்தில் அரைத்து வைத்த மூலிகை பற்றைத் தடவி அதன் மேல், துணி வைத்து கட்ட வேண்டும். இது ஒரு விதமான சிகிச்சை.

 
பலன்கள் 
 

  • மூட்டு வலிகள் படிப்படியாக குறையும். 
  • வளைந்து காணப் படக் கூடிய மூட்டுகள் கூட சிறிது சிறிதாக சீரடையும்.

 
நமது பண்டைய மருத்துவமுறையான ஆயுர்வேத மருத்துவம் கூறுவது என்னவென்றால், மூட்டு வலிகளை வர விடாமல் கூட தடுக்கலாம். அதற்கான தீர்வு என்பது நம்மிடையே இருக்கிறது. சித்தரத்தை, சுக்கு, சீந்தில் கொடி, விளக்கெண்ணெய்  போன்றவைகளை வழக்கமாக உபயோகித்தால்,  மூட்டுவலி வராமல் எளிமையாக தவிர்க்கலாம். 
 
வெறும் மருந்துகளை உட்கொள்வது மட்டுமே மூட்டு வலிகளுக்கான தீர்வு கிடையாது. பஞ்சகர்ம மற்றும் ரசாயன சிகிச்சையுடன், உடற் பயிற்சி, மனப் பயிற்சி மற்றும் சரியான உணவு உட்கொள்ளும் பழக்க வழக்கமே மூட்டு வலிகளுக்கான நிரந்தரத் தீர்வைத்த தரும் என்பதில் ஐயமில்லை!. 

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles