ஆயுர்வேதம் -18

Tuesday, January 31, 2017

நம்மைத் தகிக்கவிடும் உடல்சூடு!

பொதுவாக, ஆயுர்வேதத்திற்கும் நவீன மருத்துவத்திற்கும் நடுவே ஒரு இடைவெளி உண்டு. ரத்தப்பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவற்றை சோதித்துப் பார்த்துவிட்டு தான் நோய் பற்றி விளக்கமளிப்பார்கள் அலோபதி மருத்துவர்கள். ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில் உடலில் இருக்கும் விஷயங்களைப் (functional elements) பார்த்து சிகிச்சையளிப்பார்கள். இதனால் தான் இம்மருத்துவ முறைகள் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. அப்படி நம் உடலைப் பாதிக்கும் பிரச்சனைகளில் ஒன்று உடல் சூடு. 

உடல் சூடு என்பது சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம் அல்லது உடலை அதிகமாக வருத்துகிறோம் என்பதனை வெளிக்காட்டும் ஒரு விஷயமாக இருக்கலாம் அல்லது சாப்பிடக்கூடிய உணவு ஒவ்வாமையை வெளிப்படுத்தும் விதமாக அமையலாம். மூன்று காரணிகளை வைத்து, உடல் சூட்டினைத் தெரிந்துகொள்ளலாம். இதில் முதலாவது, உடலைத் தொடும்போது சூடாக இருப்பது. ஆனால், தெர்மாமீட்டர் வைத்துப் பார்த்தால் உடலின் சூடு உயர்ந்திருக்காது. இரண்டாவது, கண்களில் ஒருவித எரிச்சல் ஏற்படுவது. மூன்றாவதாக, மலச்சிக்கல் மற்றும் வெந்நீர் போல சிறுநீர் கழிவது ஆகியன. 

 

உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கும் காரணமாக இருப்பது  உடல் சூடு. தலைமுடி கொட்டும் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள், நீண்ட நாட்களாகத் தலையைத் தொட்டாலே கொதிப்பது போல உணர்ந்ததாகச் சொல்கிறார்கள். அதேபோல, மாதவிடாயினால் பாதிக்கப்பட்ட பெண் அமர்ந்திருக்கும் இடமும் சூடாக இருப்பதற்கும் பின்னணி இதுதான். 

 

பக்கவிளைவுகள்

உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு உடல் சூடு காரணமென்று சொல்கின்றன பாரம்பரிய மருத்துவமுறைகள்.  குறிப்பாக, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு அவைதான் காரணமென்று கண்டறிந்தனர். அதை நவீன மருத்துவம் ஏற்கவில்லை. ஆனால், இப்போது புற்றுநோய் கட்டிகள் உண்டாகும் இடத்திலுள்ள சில செல்களில் வெப்பநிலை அதிகமிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான காரணம் தெரியாவிட்டாலும், அந்த செல்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் கட்டிகள் தோன்றுவதை உறுதிப்படுத்தியிருக்கின்றனர். 

 

காரணங்கள் 

தூக்கமின்மை உடல் சூடு அதிகமாக முக்கியக் காரணம். மொபைல்போனே கதியென்று இருப்பது, டிவி பார்ப்பது போன்றவற்றினால் தூங்குவதற்கான நேரம் குறைந்துவிட்டது. ஓய்வு குறைவதால், உடலின் சூடு அதிகமாகிறது. 

அது போலவே, அசைவ உணவும் உடல் சூட்டை அதிகப்படுத்தும். ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் மட்டுமே அசைவம் உண்ட நாம், இன்று தினசரி இரண்டு வேளை அசைவ உணவுகளை விளாசுகிறோம். கொழுப்பு சம்பந்தப்பட்ட உணவுகளை எரிப்பதற்கே, உடலில் சூடு தேவை. முன்பெல்லாம் அசைவ உணவைச் செரிக்கும் அளவிற்கு சிறந்த சமையல் முறைகளைப் பயன்படுத்தினர் நம் முன்னோர்கள். துரிதமாகச் சமைப்பதாக நினைத்துக்கொண்டு, அவற்றை மறந்துவிட்டோம் நாம். இது தவிர சிகரெட் புகைப்பது, மது அருந்துவது, அதிகமுறை உடலுறவில் ஈடுபடுவது போன்றவையும் உடல் சூட்டை அதிகப்படுத்துகின்றன. 

 

எண்ணெய் தேய்த்துக்குளிப்பது

சனிக்கிழமை வந்தாலே விளக்கெண்ணெயைக் கையிலெடுப்பது, எனது பாட்டனாரின் வழக்கமாக இருந்தது. தலை முதல் கால் வரை எண்ணெய் தேய்த்து, அரைமணி நேரம் ஊறவைத்து, அதன்பின் வெந்நீரில் குளித்துவிட்டு வந்து, பதினைந்து இட்லிகளைச் சாப்பிடுவார் என் தாத்தா. இதையே நாங்களும் பின்பற்றினோம். அப்போதெல்லாம் காய்ச்சல், சளி இருமல் போன்ற தொந்தரவுகள் எங்களைத் தொற்றியதே இல்லை. நடுத்தர வயதிலிருக்கும் பலருக்கும் இது போன்ற அனுபவம் வாய்த்திருக்கும். எப்போது இந்த பழக்கவழக்கங்களை மறந்தோமோ, அப்போது முதலே நம் உடல் சூடு அதிகமாகிவிட்டது. 

ஆயுர்வேதத்தில் அப்யங்கம் என்ற சிகிச்சை உண்டு. தலைக்கு ஒரு எண்ணெய், உடலுக்கு வேறு எண்ணெய் என்று தேய்த்து, அரைமணி நேரம் கழித்து மூலிகைகள் சம்பந்தப்பட்ட நீராவிக்குளியல் எடுத்துக்கொள்ள வேண்டும். சுமார் மூன்று மாத காலம் இதனை மேற்கொண்டால் போதும். உடல் வலி, கண் எரிச்சல், உடல் சோர்வு மற்றும் சிந்தனையில் ஏற்படும் தொய்வில் பெருமாற்றம் ஏற்படுவதைக் காணலாம். 

கேரளாவில் கற்கடகச் சிகிச்சை என்ற ஒன்றை பெரும்பாலானவர்கள் மேற்கொள்வார்கள். மழைக்காலத்திற்கு முன்பு உடலைச் சுத்தப்படுத்தி, உடல் சூட்டைக் குறைக்கும் சிகிச்சை இது. இதனை 3 முதல் 7 நாட்கள் வரை எடுத்துக்கொள்வார்கள் கேரள மக்கள். வீட்டிலேயே எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, சில குறிப்பிட்ட உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்வதே இந்த சிகிச்சை. 

நல்ல உணவுகள், தயிரை ஒதுக்கிவிட்டு மோர் போன்ற நீராகாரம் குடிப்பது, 15 நிமிட உடற்பயிற்சி, மூன்று லிட்டர் தண்ணீர் தினமும் குடிப்பது, நேரம் கிடைக்கும்போது கண் மூடி அமைதியாக இருப்பது, 6-7 மணி நேரத் தூக்கம் போன்றவை கண்டிப்பாக அவசியம். வேண்டிய அளவு மட்டும் அசைவ உணவைச் சாப்பிட வேண்டும். பச்சைக்காய்கறிகளை நிறைய சாப்பிடலாம். 

யாருடைய உடலில் சூடு அதிகமில்லையோ, அவர்கள் அனைவருமே மிக நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வதைக் காணலாம். 

 

அமிலத்தன்மையைக் குறைக்கும் முள்ளங்கி

பெரும்பாலான காய்கறிகளின் மருத்துவக்குணம் அறியாமல்தான், அன்றாட வாழ்வில் அவற்றைப் பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு காய்கறியிலும் இருக்கும் தனித்த மருத்துவக்குணத்தைக் குழந்தைகளுக்கு விளக்கினால் போதும்; அவர்கள், அதனை விலக்கிவைக்காமல் சாப்பிடுவர். அந்த வகையில், முள்ளங்கியின் சிறப்புகளை அறியவேண்டியது மிக அவசியம். 

ஆயுர்வேத மருத்துவமுறை மூலிகைகளைப் பற்றி மட்டுமே சொல்லவில்லை. பருப்புகள், காய்கறிகள், கனிகள், கிழங்குகள் பற்றி நிறைய குறிப்புகள் அதிலிருக்கின்றன. வாழ்க்கைமுறையைப் பற்றி, உணவு முறைகளைப் பற்றி, நிறைய வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது ஆயுர்வேதம். 

சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் விளைகிறது முள்ளங்கி. இரண்டு வகைகளுமே சிறப்புமிக்க மருத்துவக்குணங்கள் வாய்ந்தவை. வயிற்றிலிருக்கும் புண்களை ஆற்றக்கூடிய அருமருந்து முள்ளங்கி. உடலில் அமிலத்தன்மை அதிகமாகும்போது, நோய்கள் தாக்குவதும் அதிகமாகும். அதனால்தான், எல்லா மருத்துவமுறைகளும் அமிலத்தன்மையைக் குறைத்து, உடலில் காரத்தன்மையை அதிகப்படுத்தச் சொல்கின்றன. அதனைச் செய்யக்கூடியது முள்ளங்கி. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை முள்ளங்கியைச் சுவைப்பதன் மூலமாக, உடலில் இருக்கும் அதிகப்படியான அமிலத்தன்மை குறைக்கப்படுகிறது; உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகிறது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து சம்பந்தப்பட்ட குறைபாடுகள் இருந்ததைக் கண்டறிந்தார்கள். இதனைத் தீர்க்க, அரசு சார்பில் முள்ளங்கி கலந்த உணவு கொடுக்கப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்குச் சீரணம் சரியாகி, தேங்கியிருந்த கழிவுகள் உடலிலிருந்து அகற்றப்பட்டு, அவர்களைத் தொற்றியிருந்த சத்துக் குறைபாடுகள் சரி செய்யப்பட்டது. 

 

முள்ளங்கியின் பயன்கள்

  • உடல் எடையைக் குறைக்க, இன்று ஆண்களும் பெண்களும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்குத் தேவையான மிகச்சிறந்த மருந்து முள்ளங்கி. தினமும் காலை வேளையில் 30 மி.லி. முள்ளங்கிச்சாற்றை உண்டுவந்தால் போதும்; மூன்றே மாதத்தில் உங்களது எடையில் மாற்றம் இருப்பதை உணர முடியும். 
  • அதே போல, சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகி அவதிப்படுபவர்களும் முள்ளங்கியை மருந்தாக்கிக் கொள்ளலாம். 
  • மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விடுபட முள்ளங்கி அருமருந்து. 
  • அபான வாயு எனப்படும் இடுப்புக்குக்கீழே ஏற்படும் பலவீனத்தைப் போக்கும் வல்லமை கொண்டது முள்ளங்கி. 
  • நெஞ்சுப்பகுதியில் ஏற்படும் உதான வாயுவையும் தீர்க்கக்கூடியது. 
  • பித்தப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்கக்கூடியது முள்ளங்கி. 

மலச்சிக்கல் பிரச்சனையா?

நீண்டகாலமாகப் பாதித்துவரும் மலச்சிக்கல் பிரச்சனைக்காக, தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வருகின்றனர் பலர். வேறு சிலரோ, மருந்துகள் நிறைய சாப்பிடுவதானாலேயே மலச்சிக்கல் தொந்தரவைச் சந்தித்து வருகின்றனர். 60 வயதிற்கு மேற்பட்ட எவரும் மலச்சிக்கலினால் அவதிப்படுவார்கள். இன்று யோகா பயிற்சியில் சேர்பவர்களுக்கு, தென்னிந்தியாவில் கடுக்காய் பொடி சாப்பிடச் சொல்வது வழக்கமாக உள்ளது. வட இந்தியாவில், இதற்குப் பதிலாக முள்ளங்கிச்சாற்றைத் தருகின்றனர். தினமும் 30 மி.லி. முள்ளங்கிச்சாற்றை காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிடால் போதும்; மலச்சிக்கல் பிரச்சனை முழுதாக நீங்குவதைப் பார்க்கலாம்.

உடலில் இருக்கும் கழிவுகள் முறையாக நீங்கினால் தான், பசி என்கிற விஷயம் நிகழும். ஐரோப்பாவிலிருந்து என்னைச் சந்திக்கவந்த ஒருவர், வாரத்திற்கு ஒருமுறை மலம் கழிப்பதாகச் சொன்னார். அதனைக் கேட்டதும், கழிவுகள் நீங்காத காரணத்தினால் ஏற்படும் பாதிப்புகளை அவரிடம் பட்டியலிட்டேன். அவை அனைத்தும் தனக்கு இருப்பதாகவும், அதற்கு தினமும் மருந்துகள் எடுத்துக்கொள்வதாகவும் சொன்னார். அவரை முள்ளங்கிச்சாறு சாப்பிடச் சொன்னேன். பத்து நாட்கள் கழித்ததும் என்னை வந்து சந்தித்தவர், வாழ்வில் முதன்முறையாகப் பசி என்ற ஒன்றை அனுபவித்ததாகச் சொன்னார். இதற்கு முன்பாக, பசிக்கான மாத்திரை சாப்பிட்டுவிட்டு உணவுண்டு வந்ததாகச் சொன்னார். 

சாப்பிடக்கூடிய சத்துகள் உடலில் சேர்ந்தால்தான், நம்மால் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதற்காகப் பெரிதாக மெனக்கெட வேண்டாம்; முள்ளங்கியை அரைத்து எடுக்கப்படும் சாற்றினை வாரம் இருமுறை அருந்தினால் போதும். முள்ளங்கியைப் பச்சையாகச் சாப்பிடத் தயங்குபவர்கள், அதனைச் சமைத்துச் சாப்பிடலாம். 

மலிவான விலையில் கிடைப்பதால், முள்ளங்கியைத் தரமற்றதாக நினைத்துவிடக்கூடாது. இதனை உணர்ந்து, முள்ளங்கியை மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்திவந்தால் நம்மால் ஆரோக்கியமாகப் பல்லாண்டு காலம் வாழமுடியும்!

 

நரம்பு மண்டல நோய்களுக்கு நிரந்தர தீர்வு உண்டா?

மனித நரம்பு மண்டலம் என்பது மருத்துவத்துறைக்கே சவாலாக இருப்பது. மூளையில் தொடங்கி முதுகுத்தண்டு வழியாக உடலெங்கும் பரவியிருக்கிற நரம்புகள் தான் நம்மை ஆட்டுவிக்கும் சூப்பர் கம்ப்யூட்டர். 

உடலுறுப்புகளின் செயல்பாடு, பார்க்கும் விஷயத்தைப் புரிந்துகொள்வது, பேசுவது, பேசுவதற்கு ஏற்றாற்போல செல்வது, நடக்கும் வழியில் படிக்கட்டுகளில் ஏறுவது மற்றும் இறங்குவது, சந்தோஷப்படுவது, துக்கப்படுவது என்று இவை எல்லாமே நரம்புகளின் செயல்பாடுகள் தான். மூளை என்பது சிறுமூளை மற்றும் முதுகுத்தண்டுடன் இணைகிறது. மூளையின் சமிக்ஞைகள் முதுகுத்தண்டு வழியாக நரம்புகளுக்குக் கொண்டுசெல்லப்படுகிறது; அது போலவே, நரம்புகளின் சமிக்ஞைகளை மூளைக்கு எடுத்துச்செல்கிறது. மூளையின் செயல்பாட்டில் நூற்றில் ஒருபகுதி கூட, இன்னும் மருத்துவத்துறையினால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் மூளைக்கும் முதுகுத்தண்டுக்குமான தொடர்பையும் அங்கிருந்து நரம்புகள் பிரிந்து செல்வதையும் முதன்முதலில் சொன்னது ஆயுர்வேத மருத்துவத்துறை தான். இன்னும் ஒரு படி மேலாக, நரம்பு மண்டலத்துக்கு இடையேயிருக்கும் சக்தி மையமான வர்மங்களையும் மர்மங்களையும் பற்றிச் சொல்லியிருக்கிறது. 

 

வர்மக்கலை

நவீன மருத்துவம் வர்மத்தை நம்புவதில்லை. ஆனால், ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்ட வர்மத்தின் ஒருவகை முன்னேற்றம் தான் அக்குபஞ்சர் (acupuncture) மற்றும் அக்குபிரஷர் (acupressure) மருத்துவமுறைகள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆயுர்வேத மருத்துவம் பற்றி அறிந்தவர்களாக இருந்தனர் புத்த பிட்சுகள். அசோகரின் வழிவந்தவர்கள் ஆண்டபோது, ஒரே நாளில் சுமார் 60 ஆயிரம் பிட்சுகள் கொலை செய்யப்பட்டனர். அப்போது தப்பியவர்கள் சீனா, இந்தோனேஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும்போது ஆயுர்வேத நூல்களையும் கையோடு எடுத்துச்சென்றனர். அங்கே மருத்துவமனைகளை உருவாக்கி, சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். அவர்களால்தான் வர்மக்கலை அந்த நாடுகளில் வேரூன்றியது. 

கழுத்துக்கு மேலே இருக்கும் நரம்புகளைப் பாதிக்கும் வியாதிகள், கழுத்திலிருந்து இடுப்பு வரை உள்ள நரம்புகளைப் பாதிக்கும் வியாதிகள், இடுப்புக்குக்கீழே இருக்கும் நரம்புகளைப் பாதிக்கும் வியாதிகள் என்று மூன்றாகப் பிரித்திருக்கிறது ஆயுர்வேத மருத்துவம். அதற்கு தரும் மருந்துகள் பற்றிய குறிப்புகளையும் சொல்லியிருக்கிறது. 

 

ஆயுர்வேத சிகிச்சைகள் 

புதுப்பித்தல் என்பது ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்பம்சம். நரம்பு பாதிப்புகள் ஏற்பட்டால், பிரபலங்கள் ஆயுர்வேத சிகிச்சையை நாடுவார்கள். இதற்குக் காரணம் இருக்கிறது. ஆயுர்வேத சிகிச்சையினால் ரத்த ஓட்டம் சீராவதைப் பார்க்கலாம். தசைகளில் மாற்றமிருப்பதைக் காணலாம். உடலின் இயக்கத்தில் வித்தியாசம் இருப்பதை உணரலாம். 

ஆயுர்வேத மருத்துவத்தில் நரம்பு மண்டலத்திற்குச் சிகிச்சையளிக்கப்பட்டு, பாதிப்புகள் குணமாக ஓராண்டு கூட ஆகலாம். ஆனால் அந்த காலத்திற்குள் நோயாளியின் தசைகள் பாதிக்கப்படாமல் நோய் சரிசெய்யப்படும். இதற்கு உதவிகரமாக இருப்பது பஞ்சகர்ம சிகிச்சைகள். இலைக்கிள்ளி, பொடிக்கிள்ளி, பிழிச்சல், சிரோவஸ்தி, சிரோதாரை போன்ற சிகிச்சைகள் நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளை முற்றிலுமாகச் சரிசெய்கின்றன. 

 

நிரந்தரத் தீர்வு உண்டா?

நரம்பு மண்டலத்தைப் பொறுத்தவரை, நோயுற்று சிகிச்சைபெறுவதை விட அந்தப் பிரச்சனை வராமல் தடுப்பதே சிறந்தது. அதற்காகச் செய்யப்படுவது கற்கடகம் என்ற ஆயுர்வேத சிகிச்சை. உடலிலுள்ள கழிவுகளை அகற்றுவதனால், அந்தப் பிரச்சனை உடலில் இருந்து மறைவதைப் பார்க்கலாம். நரம்பு மண்டலம் பாதிக்காமல் இருப்பதற்காகவே தினசரியை, ராத்ரிசரியை, ரிதுசரியை போன்றவற்றைத் தந்திருக்கிறது ஆயுர்வேதம். இதனைப் பின்பற்றினால் நோய் வராமல் தடுக்க முடியும்; அதையும் மீறி பருவநிலை மாறுபாட்டினால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தவும் முடியும். 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles