ஆயுர்வேதம் 17

Friday, January 13, 2017

உப்பு கூடினால் உயரும் ரத்த அழுத்தம்..!

இன்று மனித வர்க்கத்தையே அச்சுறுத்தும் பெரும்பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது உயர் ரத்த அழுத்தம் (high blood pressure). மனிதனைப் பலவீனமாக்கி உணர்ச்சியற்றுப் போகவைக்கும் சில நோய்கள் ஏற்பட, இது காரணமாக இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும். வயது வித்தியாசமில்லாமல், இது அனைவரையும் பீடிக்கும். 

பொதுவாக, நமது உடலில் சிஸ்டாலிக் (systolic pressure), டயஸ்டாலிக் (diastolic pressure) என்ற இரண்டு வகை அழுத்தங்கள் உண்டு. இதயத்திலிருந்து உடலின் பாகங்களுக்குச் செல்லும் நல்ல ரத்தத்தின் அளவையும், உடலின் வெவ்வேறு பாகங்களிலிருந்து இதயத்திற்குச் செல்லும் அசுத்த ரத்தத்தின் அளவையும் கொண்டு, ரத்த அழுத்தமானது 120 / 80 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

 

சிலருக்கு இந்த ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும். குறிப்பாக, பெண்களுக்கு இந்த நிலை ஏற்படும். சரியாகச் சாப்பிடாதது, மாதவிலக்கின்போது உதிரப்போக்கு அதிகமிருப்பது, விபத்துகளில் சிக்குவது, உப்பு சம்பந்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது போன்ற நேரங்களில் ரத்த அழுத்தம் இயற்கையாகவே குறைந்துவிடும். மற்ற நேரங்களில், ரத்த அழுத்தம் சராசரியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், இதற்கு நேர்மாறான நிலையே இன்றைய தலைமுறையிடம் காணப்படுகிறது.

 

முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள், சுமார் 6 மாதங்களுக்கு ஒருமுறை உடலை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் அதனை ஒரு செலவாகவே நினைக்கின்றனர். நோய் வருமுன் உணர்ந்து காத்திடுவதற்கான வழிமுறையாக நினைப்பதில்லை. இதனால் ஏற்படும் விளைவுகள் மிக அதிகம். திடீரென்று காலையில் எழுந்ததும் தலை சுற்றுவது போலிருக்கும்; மருத்துவரிடம் சென்று பார்த்தால் உயர் ரத்த அழுத்தம் என்று சொல்லுவார். ரத்த அழுத்தம் சீரற்றுப்போனால் தூக்கத்தில் பக்கவாதம் வருவதும், சிறுநீரகம் செயலிழந்து போவதும் நிகழக்கூடிய அபாயமுண்டு. கண்களில் சில பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் உயர் ரத்த அழுத்தமே காரணமாக இருக்கிறது. 

 

ஏன் ரத்த அழுத்தம் உயர்கிறது?

உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பின் அளவு, இந்த நிலைக்கான முதல் காரணமாகிறது. சமைக்காத உணவைச் சாப்பிடாதவர்களுக்கு, ரத்த அழுத்தம் உயர்வதில்லை. கால்நடைகளும் கூட, இந்தப் பாதிப்பினால் அவதிப்படுவதில்லை. சாப்பிடும் உணவுப்பொருட்களில், இயற்கையாகவே இருக்கின்ற உப்பு நம் உடலுக்குப் போதுமானது. சமைக்கும் உணவில் கூடுதலாக உப்பைச் சேர்ப்பதுதான், நமது ரத்த அழுத்தத்தை எகிற வைக்கிறது. 

 

இரண்டாவது காரணம், உடற்பயிற்சியின்மை. இன்றைய இளைஞர்கள் சம்பாதிப்பதில் காட்டும் ஆர்வத்தை, சந்தோஷமாக வாழ்வதில் காட்டுவதில்லை. எதைக் கேட்டாலும், ‘டைம் இல்ல’ என்கிறார்கள். இதன் விளைவு, முப்பதைக் கடந்ததுமே சீரற்ற ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு போன்றவை வரிசைகட்டி நிற்கின்றன. 

 

மூன்றாவதாக இருப்பது மனப்பயிற்சி. கூட்டுக்குடும்பமாக வாழ்ந்துவந்தபோது, பிரச்சனைகளின் போது ஆலோசனை சொல்வதற்கும் வழிகாட்டுவதற்கும் பெரியோர்கள் இருந்தனர். இன்று, எல்லோருமே தனியாக வசிக்க ஆரம்பிக்கத் தொடங்கிவிட்டோம். கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்ல, குழந்தைகள் படிக்கச் செல்கின்றனர். தங்களது கவலைகளையும் மனவருத்தங்களையும் பகிர்ந்துகொள்ள, அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. இது மன அழுத்தத்தை உண்டாக்கி, அதன் தொடர்ச்சியாக ரத்த அழுத்தம் அதிகமாவதற்குக் காரணமாகிறது. 

 

ரத்தக்கொதிப்பு பரம்பரையாக வருமென்பதை, ஆயுர்வேதம் ஒத்துக்கொள்வதில்லை. உணவில் உப்பு அதிகமாகச் சேர்த்துக்கொள்வதை, மூன்று தலைமுறையாகத் தொடர்ந்துவந்தால் அந்த நிலை ஏற்படத்தான் செய்யும். இதனைத் தவிர்த்து, உடற்பயிற்சி மற்றும் உளம் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலமாக, அதே குடும்பத்தைச் சேர்ந்த நபர் ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக்கொள்ள முடியும். 

 

தியானமும் ரத்த அழுத்தமும்..

ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் ஓரிடத்தில் அமைதியாக உட்காருங்கள்; கண்களை மூடுங்கள்; மனதை ஒருமுகப்படுத்துங்கள். இதயத்துடிப்பைச் சீராக வைத்திருங்கள் அல்லது ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபியுங்கள். சுமார் 30 நாட்களில், ரத்த அழுத்தத்தில் அற்புதமான மாற்றம் ஏற்படுவதைக் காணலாம். 

 

உணவுமுறை உண்டாக்கும் மாற்றம்!

இயற்கையாகவே, ரத்த அழுத்தத்தைச் சரிசெய்யும் பல மருந்துகள் நம்மிடையே உண்டு. தண்ணீரில் சீரகத்தைக் கொதிக்க வைத்துக் குடிப்பது, ரத்த அழுத்தத்தைச் சீராக்குவதற்கான மிகச்சிறந்த மருந்து. முருங்கைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டால், இதே பலன் கிடைக்கும். அதே போல, நாட்டுத்தக்காளியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் போதும்; ரத்த அழுத்தம் கட்டுபாட்டுக்குள் இருக்கும். அன்றைய நாள் முழுவதும், அது தொடரும். உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் எடுத்துக்கொள்வோர் கூட, இதனைச் செய்து பார்த்துப் பலன் இருப்பதை உணரலாம். 

 

இவை அனைத்தையும் செய்தபிறகும் ரத்த அழுத்தம் உயர்ந்தால், ஆடாதோடை மூலிகையைப் பயன்படுத்தலாம். 100 மி.லி. தண்ணீரில் 1 தேக்கரண்டி ஆடாதோடை சூரணத்தைச் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டி, அதனுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் 2 அல்லது 3 வேளை குடித்துவந்தால் போதும். மூலிகைத் தேநீர் அருந்துவது போல, இதனைச் செய்துவந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதைக் காணமுடியும். 

 

ரத்த அழுத்தம் வராமல் இருக்க / தடுக்க, உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொறித்த உணவுகளைத் தவிர்க்கவும். தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பருகவும். அரை மணி நேரமாவது, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளவும். 15ல் இருந்து 45 நிமிடங்கள் வரை தியானம் செய்யவும். மனதில் இருக்கும் பிரச்சனைகளைப் பகிர்ந்துகொள்ளவும். இதனைச் சரியான முறையில் மேற்கொண்டுவந்தால், மருந்துகள் இல்லாமலேயே சீரான ரத்த அழுத்தத்துடன் வாழ முடியும். 

 

ஏலக்காய் (வாழ்க்கை) சுகந்தத்திற்கு..!

வெளிர்பச்சை நிறமும் சுகந்த மணமும் கொண்டது ஏலக்காய். ஆயுர்வேதம், சித்த, யுனானி என்று பாரம்பரிய மருத்துவமுறைகள் அனைத்திலும், பல நூறு ஆண்டுகளாக ஏலக்காய் பயன்படுத்தப்பட்டுள்ளது. பட்டை, கிராம்பு, ஏலக்காய் மூன்றையும் திரிஜாதகம் என்று கூறுவர். சீரண மண்டலம் சம்பந்தப்பட்ட, கொழுப்பு சம்பந்தப்பட்ட, இளமை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மருந்தாக ஏலக்காய் பயன்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்கின்றன ஆயுர்வேதக் குறிப்புகள். 

 

மருத்துவக் குணங்கள்

நாம் வீட்டில் சிறிய ரக ஏலக்காயைப் பயன்படுத்துகிறோம். அதைவிட மூன்று மடங்கு பெரியதாக இருக்கும் காட்டு ஏலக்காயும் புழக்கத்தில் இருக்கிறது. இரண்டுவகையின் மருத்துவக்குணமும் ஏறக்குறைய ஒன்றுதான். சீரண மண்டலத்தைத் தூண்டுவது ஏலக்காயின் குணங்களில் பிரதானமானது. அதனால்தான், நம்மால் எளிதில் சீரணிக்கமுடியாத உணவுகளில் ஏலக்காய் சேர்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். 

 

ஆயிரமாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ’சரபேந்திர பாக சாஸ்திரம்’ (Sarabendra Paka Sastra) என்ற புத்தகத்தில், வாசனைப்பொருட்களைப் பயன்படுத்தி உணவுகள் தயாரிப்பது எப்படி என்பது பற்றிய பல குறிப்புகள் இருக்கின்றன. குறிப்பாக, கொழுப்பு அதிகமுள்ள அசைவ உணவுகளைச் சமைக்கும்போது ஏலக்காயைப் பயன்படுத்துவது பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. இதன்படி, ஏலக்காயை நன்றாக அரைத்து, அதனை ஆட்டிறைச்சி முழுவதும் பூசி, அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு வெந்நீரால் அதனைக் கழுவி, மற்ற மசாலாப்பொருட்கள் சேர்த்துச் சமைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைச் செய்தால், பல நல்ல பலன்கள் கிடைப்பதை உணர முடியும். 

 

இறைச்சியை உண்ட உணர்வே ஏற்படாதது, இதனால் கிடைக்கும் முக்கியமான பலன். இறைச்சியைச் சமைக்கும்போது உண்டாகும் மணமும், ஏலக்காய் சேர்த்துச் சமைக்கும்போது ஏற்படாது. இந்த இறைச்சியைச் சாப்பிட்ட மறுநாள், புத்துணர்ச்சி அதிகமாவதை உணரலாம். இது தவிர, இறைச்சியைச் சாப்பிட்டபிறகு வயிற்றுப்பகுதி கடினமாக இருப்பதைப் போன்ற உணர்வு வழக்கமாக ஏற்படும்; அடுத்த நாள் காலையில் மலம் கழிப்பது சிக்கலாக இருக்கும். சரபேந்திர பாக சாஸ்திரம் சொல்லும் முறையில் ஏலக்காய் சேர்த்து இறைச்சியைச் சமைக்கும்போது, அந்தச் சிக்கலே வராது. 

 

அந்த மாதிரி பிரச்சனையா?!

ஆண்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகள் இரண்டு. முதலாவது, விரைப்புத்தன்மை போதுமான அளவு இல்லாதது. இரண்டாவது, உடலுறவுக்கு முன்பே விந்து வெளியாவது. சமீபத்திய ஆய்வொன்றில், டெஸ்டோஸ்டீரான் (testosterone) குறைவதால் நூற்றுக்கு 70 ஆண்கள் இம்மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்வதாகத் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தீர்க்கும் அருமருந்து ஏலக்காய். 

 

ஏலக்காயினுள் இருக்கும் விதையை 1 கிராம் அளவு எடுத்து, அதனை 1 டம்ளர் பாலில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும்; நாற்பது நாட்கள் இதனைத் தொடர்ந்து மேற்கொண்டால், உடலுறவில் எழுச்சி உண்டாவதைக் காணலாம். 

உலகத்திலேயே வடிகட்டும் முறைகளை முதன்முறையாக விவரித்துச் சொன்னது அர்க்க சாஸ்திரம் (arka shastra). ராவணர் எழுதியது. இந்த முறையில் ஏலக்காயில் இருந்து வடிகட்டப்பட்டு அர்க்கம் தயாரிக்கப்படுகிறது. அந்தக் காலத்தில் அரசர்கள் பெண்களுடன் கூடுவதென்பது தினமும் நடைபெறாது. அதற்கென்று நாள், நட்சத்திரம் பார்த்து கூடுவார்கள். அந்த சமயங்களில் அவர்களுக்குத் தேவையான மகிழ்ச்சியைத் தருவதற்கு, இந்த அர்க்கம் சேர்க்கப்பட்ட இனிப்பை உண்பது வழக்கமாக இருந்திருக்கிறது. அர்க்கம் சேர்த்த இனிப்பைச் சாப்பிடுவதனால், ஒரு இரவில் பத்து பெண்களைக் கூட உடல் களைப்படையாமல் திருப்திப்படுத்த முடியும் என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு, ஏலக்காயில் இருந்து எடுக்கப்படும் வடிகட்டப்பட்ட நீர் சக்தி வாய்ந்தது. 

 

பெண்களின் வேதனையைப் போக்கும்!

மாதவிலக்கு நேரத்தில் பெண்களுக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்படும். அந்த நேரத்தில், ஏலக்காய் சூரணத்தை 1 கிராம் எடுத்து பால் அல்லது வெந்நீரில் கலந்து குடித்தால் போதும்; பத்து நிமிடத்தில் வயிற்று வலி தீரும். 

குழந்தைகளின் நலம் காக்கவும் ஏலக்காய் பயன்படுகிறது. சளி மற்றும் இருமல், பசியின்மை பிரச்சனையால் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஏலக்காய் கலந்த பால் கொடுத்தால் போதும்; அவர்களிடம் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவதைக் காணலாம். குழந்தைகள் நன்றாகச் சாப்பிடுவதையும், எளிதாக மலம் கழிப்பதையும், வாயுத்தொல்லை தீர்வதையும், திடமாக இருப்பதையும் காணலாம். அதோடு, அவர்களின் உணரும் திறன் மேம்படும். அதனால் தான், முற்காலத்தில் வீட்டில் செய்யக்கூடிய இனிப்புகளில் திரிஜாதகம் என்று சொல்லப்படும் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயைச் சேர்த்திருக்கின்றனர். 

 

தினசரி உணவில் ஏலக்காய்!

வெறும் வாசனைக்கு உபயோகிக்கும் பொருளாக மட்டுமே, ஏலக்காயை நினைக்கக்கூடாது. உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்ற, உடலுறுப்புகளின் செயல்பட்டைச் சீராக்க, ரத்தக்குழாய்களில் இருக்கும் அடைப்புகளைச் சரிசெய்ய, ஆண்களின் பாலியல் பிரச்சனைகளைத் தீர்க்க, பெண்களின் மாதவிலக்குப் பிரச்சனைகளைப் போக்க ஏலக்காய் உதவும். பால், காபி, டீ போன்ற திரவங்களில் ஏலக்காயைச் சேர்ப்பதன் மூலமாக, வெகு சுலபமாக இந்தப் பலன்களைப் பெற முடியும்!

 

ஆண்களைப் பாதிக்கும் புரோஸ்டேட் வீக்கம்!

நமது உடலில் சிறுநீர்ப்பைக்குக் கீழே இருக்கக்கூடிய ஒரு உறுப்பு புரோஸ்டேட் சுரப்பி (prostate gland). விதைப்பையில் இருந்து உயிரணுக்கள் வெளிவரத் தேவையான திரவத்தைச் சுரப்பது இதன் வேலை. 

 

இன்று புரோஸ்டேட் புற்றுநோய் (prostate cancer) அதிகளவில் பாதித்து வருவதைக் கேள்விப்படுகிறோம். இதற்குக் காரணம், ஆண்கள் 60 வயதைத் தாண்டும்போது அவர்களது உடலிலுள்ள புரோஸ்டேட் சுரப்பி இயல்பை தொலைத்து, ஒரு ரப்பர் போன்று வீங்க ஆரம்பிக்கும். இதற்கு புரோஸ்டேட் பெரிதாதல் (prostate enlargement) என்று பெயர். சிறுநீர்ப்பைக்குக் கீழிருக்கும் புரோஸ்டேட் சுரப்பி வீங்குவதால், ஒரு அழுத்தம் உண்டாகும். இதனால், அரை மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்படும். அதே நேரத்தில், சிறுநீர் கழிப்பது எளிதில் நிகழாது. இந்த அறிகுறிகள் மூலமாக, புரோஸ்டேட் வீக்கத்தை உணரமுடியும். 

 

அமெரிக்காவில் புற்றுநோயினால் அவதிப்படும் ஆண்களில் 65 சதவிகிதம் பேர் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்கிறது ஓர் ஆய்வு. இந்தியாவிலும் புரோஸ்டேட் வீக்கம் பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இல்லை என்றே சொல்லலாம். 

 

ஆண்மைத்தன்மை சம்பந்தப்பட்ட ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும் ஒரு உறுப்பு புரோஸ்டேட் சுரப்பி. பெண்களுக்கு மெனோபாஸ் (menopause) ஏற்படுவதைப் போல, ஆண்களுக்கு ஆண்ட்ரோபாஸ் (andropause) உண்டாகும்; அவர்களுடைய இனப்பெருக்க உறுப்புகள் ஓய்வை எடுத்துக்கொள்ளும் நேரம் வரும். அப்போது புரோஸ்டேட் சுரப்பி இயற்கையான சூழலை இழந்து வீங்க ஆரம்பிக்கும். இன்று, அறுவை சிகிச்சையின் மூலமாக புரோஸ்டேட் சுரப்பியை நீக்கிவிடுகிறார்கள். ஆனால், அதன்பிறகும் பாதிப்புகள் சரியாவதில்லை என்பதே பலர் அனுபவித்த உண்மை. 

 

இதனைக் கண்டறிவது எப்படி?

தினமும் கீரை உண்ணுவது, நீர் அருந்துவது என்றிருக்கும் சிலர், தொடர்ந்து மலச்சிக்கல் பிரச்சனையை எதிர்கொள்வார்கள். இது நீடித்தால், புரோஸ்டேட் சுரப்பி பெரிதாகியிருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, புரோஸ்டேட் வீக்கம் வரலாம். இந்த வீக்கத்தினால் சிறுநீர் வெளியேறக்கூடிய வேகம் குறையத் தொடங்கும். இரவு நேரத்தில் அரைமணிக்கொரு முறை சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும்; ஆனால், போதிய அளவு சிறுநீர் வெளியேறாது. அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (ultrasound scan) எடுத்துப் பார்க்கும்போது, சிறுநீர் கழித்தபிறகும் சிறுநீர்ப்பையில் அதிகமாகத் தேங்கியிருப்பதைக் காணலாம். கூடவே, புரோஸ்டேட் பெரிதாக இருப்பதையும் உணரலாம். 

 

ஆயுர்வேதம் சொல்லும் தீர்வு

புரோஸ்டேட் வீக்கத்தை ஆரம்பநிலையில் கண்டறிந்தால், மிக எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். இந்த பாதிப்பு ஏற்படும்போது, பி.எஸ்.ஏ (prostate stimulating antigen) என்றொரு ஆய்வை மேற்கொள்வது வழக்கம். இந்த அளவு சுமார் 4 க்குள் இருந்தால் பயப்படத் தேவையில்லை. 4க்கு மேலிருந்தால், புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதைச் சரிசெய்யும் சக்தி மாவிலங்க மரப்பட்டைக்கு உண்டு. 

 

இதிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர், உலகம் முழுவதுமுள்ள புரோஸ்டேட் வீக்கத்திற்கான சிகிச்சைகளில் கட்டாயம் கொடுக்கப்படும் முதல் மருந்தாக உள்ளது. 200 மி.லி. நீரில் 1 டேபிள் ஸ்பூன் மாவிலங்க மரப்பட்டை சூரணத்தை இட்டுக் கொதிக்கவைத்து, அதனை சுமார் 50 மி.லி. ஆக வற்றவைத்து வடிகட்டி எடுக்கப்படும் தேநீரை, காலை மற்றும் இரவு உணவிற்கு முன்பு சாப்பிட வேண்டும். இதனால் நாள்பட்ட புரோஸ்டேட் பாதிப்பு கூட குணமாவதைக் காணலாம். 

 

அதேபோல, ஆடாதோடை மூலிகையில் இருந்து எடுக்கப்படும் சாறு புரோஸ்டேட் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் மிகச்சிறந்த மருந்து. ஆயுர்வேதத்தில் கசாய வஸ்தி, தைல வஸ்தி என்ற சிகிச்சைகள் உண்டு. இந்த முறையில், மாவிலங்க மரப்பட்டை கஷாயத்தை உள்ளுக்குள் செலுத்தும்போதும் நல்ல மாற்றம் ஏற்படும். 

 

நிரந்தரமாகக் குணப்படுத்த முடியுமா?

இயற்கையாகவே ஏற்படும் மாற்றம் என்பதால், புரோஸ்டேட் வீக்கத்தை நிரந்தரமாகக் குணப்படுத்த இயலாது. ஆனால், புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். பால் மற்றும் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது, மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, மாவிலங்கம், ஆடாதோடை, மந்தாரை மரப்பட்டை கஷாயத்தை உண்பது மூலமாக, இதனைச் செயல்படுத்தலாம். 

 

எல்லா ஆண்களுக்கும் வயது மாற்றத்தின் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று புரோஸ்டேட் வீக்கம். இதனால் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. சரியான உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, கழிவுநீக்க சிகிச்சைகள் எடுத்துக்கொள்வதனால் இதனைச் சரிசெய்ய முடியும். ஆண் இனப்பெருக்க மண்டலம் சம்பந்தமான முக்கியமான உறுப்பு புரோஸ்டேட் சுரப்பி. இது இல்லையெனில், உயிரணுக்கள் நீண்ட நேரம் உயிரோடு இருக்கமுடியாது. 

 

எனவே, புரோஸ்டேட் சுரப்பியினைக் காக்க அதிகளவில் கீரைகள் சாப்பிட வேண்டும். நிறைய நீர் அருந்த வேண்டும். சிறுநீரை அடக்கக்கூடாது. மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதையெல்லாம் கவனித்துக்கொண்டால், புரோஸ்டேட் சம்பந்தப்பட்ட நோய்கள் அண்டாது. 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles