மிகினும் குறையினும் வாய்ப்புண்ணைக் குணமாக்கும் சித்த மருத்துவம்!

Thursday, February 16, 2017

"வருசத்துக்கு 5,6 தடவ வாய்ப்புண் வந்துருது டாக்டர். வந்துச்சுன்னா ஒரு வாரம் பத்து நாளுக்கு என்ன சாப்பிட்டாலும் வலி, எரிச்சல். நானும் சத்து மாத்திரை, வலி மாத்திரைலாம் சாப்பிட்டு பார்த்துட்டேன். ஆனா, வாய்ப்புண் சரியாகுற மாதிரி தெரியல. இத குணப்படுத்தவே முடியாதா டாக்டர்?"

"அது என்ன மாயமோ தெரியல சார். எக்ஸாம் இருக்கிறப்பலாம் எனக்கு வாய்ப்புண் வந்துருது. ஒரு மாதிரியா எரிச்சலும், வலியும் இருக்கு. நிம்மதியா படிக்க முடியல. ஏதாவது மருந்து கொடுங்க சார். அடுத்த வாரம் எனக்கு செமஸ்டர் ஆரம்பமாகுது"

"வயிறுவலி அப்பப்ப வரும்; வாய்ப்புண் அடிக்கடி வருது. வயிறு வலிக்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்கா சார்"

"அம்மாக்கு வாய்ப்புண் அடிக்கடி வரும். அதே மாதிரி எனக்கும் வர ஆரம்பிச்சிருக்கு. இதெல்லாம் கூடவா பரம்பரையா வரும் டாக்டர்"

"ஓவரா யோசிச்சா, தூங்காம இருந்தா வாய்ப்புண் வருது. வெப்சைட்ல ஸ்ட்ரெஸ்னால வாய்ப்புண் வரும்ங்கறதை படிச்சிருக்கேன். அதுக்கும் சித்தால மருந்து உண்டா டாக்டர்"

"ஏற்கனவே எனக்கு எதிர்ப்பு சக்தி கம்மிதான். அடிக்கடி உடம்புக்கு ஏதாவது வந்துட்டே இருக்கும். இப்போ புதுசா வாய்ப்புண்ணும் வர ஆரம்பிச்சிருக்கு. சாப்பிட முடியாம, ஆறு மாசத்துல மூணு கிலோ குறைஞ்சுட்டேன்" என வாய்ப்புண் உள்ளவர்களின் வரலாறு பலவிதம்.

 

நோய் விளக்கம்

உடற்சூட்டில் ஏற்படும் மாறுபாடு காரணமாக, பித்த நாடி பாதிப்படைவதால் வாய்ப்புண் ஏற்படும்.

 

வாய்ப்புண் ஏற்படக் காரணங்கள்

 • சத்துக்குறைவு
 • வயிற்று வலி, குடல் நோய்கள்
 • நோய் எதிர்ப்புத்திறன் குறைவு, கோளாறு
 • மனஅழுத்தம்
 • மரபுக்கோளாறுகள்

 

உணவே மருந்து

 • துவர்ப்புச்சுவைக்கு வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும் தன்மை உண்டு. நெல்லிக்காய், வாழைப்பூ, அத்திப்பிஞ்சு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 
 • மணத்தக்காளிக் கீரையைப் பச்சையாக மென்று தின்ன வாய்ப்புண் குணமாகும்.
 • பிரண்டையைத் துவையல் செய்து உண்ண வயிற்றுவலி, வாய்ப்புண் குணமாகும்.
 • திராட்சைப் பழங்களை கைகளினால் பிழிந்து எடுத்த சாறை அருந்த, வாய்ப்புண் வருவது குறையும்.
 • மாதுளம் பழத்தை உள்ளிருக்கும் வெண்ணிறத்தோலோடு சேர்த்து உண்டுவர வாய்ப்புண் குணமாகும்.
 • பருப்புக் கீரையை சமைத்து உண்ண, உடற்சூடு குறைந்து வாய்ப்புண் வருவது குறையும்.
 • இளம் கோவைக்காயை மென்று, அதன் சாரம் வாய்ப்புண் உள்ள பகுதியில் படுமாறு செய்து, சக்கையைத் துப்பிவிடவும். இவ்வாறு செய்துவர வாய்ப்புண், நாக்கில் வரும் புண் ஆகியவை குணமாகும்.
 • தேங்காய்ப் பாலை உண்டு வர, வாய்ப்புண் குணமாகும். வாய்ப்புண்ணிற்கு மேற்பூச்சாக, தேங்காய்ப்பாலை போட்டு வரலாம்.
 • பசு வெண்ணெய் உண்டு வந்தாலும், வெளிப்பூச்சாகப் பயன்படுத்தினாலும் வாய்ப்புண் குணமாகும். 
 • விளாம்பழத்தை உண்டு வர வாய்ப்புண் வருவது குறையும். 

 

சாப்பிடவேண்டிய மருந்துகள்:

திரிபலா சூரணம்

 • வாய்ப்புண் உள்ள இடங்களில் திரிபலா சூரணத்தை அப்பி வைக்கலாம். 5 கிராம் திரிபலா சூரணத்தை, 200 மி.லி. சூடான நீரிலிட்டு கலக்கவும். சூடு சிறிது ஆறியபிறகு, இளஞ்சூடான பருவத்தில் அந்நீரைக் கொப்புளிக்கப் பயன்படுத்தினால் வாய்ப்புண் குணமாகும். 

 

மாசிக்காய் குடிநீர்

 • 15 கிராம் மாசிக்காயை ஒன்றிரண்டாகச் சிதைத்து 400 மி.லி. நீர்விட்டு கொதிக்க வைத்து 50 மி.லி.யாக வற்றவைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதனை கொப்புளித்து வர வாய்ப்புண் குணமாகும்.

 

கருவேலம் பட்டை ஊறல் நீர்

 • 10 கிராம் கருவேலம்பட்டையைச் சூடான 200 மி.லி. நீரில் ஊறவைத்து, இளஞ்சூடாக இருக்கையில் அந்நீரைக் கொப்புளித்து வர வாய்ப்புண் குணமாகும்.

 

சீரக சூரணம்

 • இதனை காலை, மாலை இருவேளையும் வெண்ணெய் கலந்து உண்ண வேண்டும். அளவு - ஒரு தேக்கரண்டி

 

அதிமதுர சூரணம்

காலை, மாலை, இருவேளை பாலுடன் உண்ண வேண்டும். அளவு - ஒரு தேக்கரண்டி

 

நெல்லிக்காய் இளகம்

 • காலை, மாலை இரு வேளையும் நெல்லிக்காய் அளவு உண்டால் போதும். 

 

பொன்னாங்கன்னி நெய்

 • காலை, மாலை இரு வேளையும் ஒரு தேக்கரண்டி உண்ண வேண்டும். 
 • வாய்ப்புண்ணிற்குச் சொல்லப்பட்ட உணவுகளையும், அடிப்படையான சித்த மருந்துகளையும் பயன்படுத்தியும் குணமடையத் தாமதமானால் அருகிலுள்ள சித்த மருவத்துவரை அணுகி உயர்வகை சித்த மருந்துகளை எடுத்துக்கொண்டு குணம் பெறலாம் என்பதை நினைவில் கொள்ளவும். 

அடுத்த இதழில் ‘புழுவெட்டு’..

- டாக்டர் அருண் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles