ஆயுர்வேதம் 19 

Thursday, February 16, 2017

இதய வடிவிலிருக்கும் இதயத்தைக் காக்கும் மாதுளை!

நாம் விரும்பிச் சாப்பிடும் மாதுளம் பழம், நம் உடலுக்கு ஏராளமான பலன்களைத் தருகிறது. இதய நோய் வராமல் நம்மைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பித்தத்தைக் குறைக்கும் இயல்புடைய இது, துவர்ப்புச்சுவை கொண்டது. 

மாதுளையை நெட்டுக்குறுக்காக வெட்டினால், இதயத்தின் நான்கு அறைகளைப் போன்று தோற்றம் தரும். உடலுறுப்புகளை ஒத்திருக்கும் காய் மற்றும் கனிகளை உண்டுவந்தால், சம்பந்தப்பட்ட உறுப்புகள் வலுப்பெறும் என்று நம்பினர் நம் முன்னோர்கள். உதாரணமாக, சிறுநீரகம் போன்றிருக்கும் காராமணி என்று சொல்லப்படும் பவழ மொச்சை. அதேபோல, அக்ரூட் பழங்கள் பார்ப்பதற்கு நமது மூளையை ஒத்திருக்கும். இவை சம்பந்தப்பட்ட உறுப்புகளை வலுவாக்க உதவும். உடலை ஒத்திருக்கும் காய்களும் கனிகளும் உடலை வலுப்படுத்துகின்றன என்பதனை உறுதி செய்திருக்கிறது நவீன மருத்துவத்தின் ஒரு ஆய்வு. அந்த வகையில், இதயத்தையும் அதிலுள்ள வால்வுகளையும் வலுப்படுத்துகிறது மாதுளை. 

 

உடலைக் காக்கும்!

மாதுளம்பழத்தை தினமும் ஒரு கப் சாப்பிட்டு வந்தால், எந்தவகை இதய நோயும் வராமல் தடுக்க வாய்ப்புண்டு. பெற்றோர் மற்றும் மூதாதையருக்கு இதய பாதிப்புகள் இருந்தால், உங்களையும் அது தொடர்ந்துவரும் என்று பயம் இருந்தால், நீங்கள் ஏதாவது ஒரு வகையில் உணவில் மாதுளையைத் தொடர்ந்து சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை இதய பாதிப்பு ஏற்பட்டாலும் கூட, அதனை தள்ளிப்போடுவதற்கு இந்த வழக்கம் உதவும். 

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர, மாதுளை உதவி செய்யும். வயிற்றுப்போக்கு மற்றும் பேதியைக் குணமாக்கும் அருமருந்து மாதுளம் பழத்தின் தோல். சுமார் 100 மி.லி. நீரில் 5 கிராம் மாதுளம்பழத் தோலை இட்டு கொதிக்க வைத்து, அதனைக் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இவ்வாறு குடித்தாலே, செரிமான மண்டலப் பிரச்சனைகள் தீரும். 

சிலருக்கு மலம் கழிக்கும்போது ரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை ரத்த மூலம் என்று சொல்லுவர். ஒரு வாரம் இது தொடர்ந்தால், ஒருவரின் உடலிலுள்ள ஹீமோகுளோபின் அளவு 4-5க்குள் குறையக்கூடும். இந்தக்குறைபாடு உடையவர்கள் மாதுளம்பழத்தின் தோல், கனி, விதை என்று அனைத்தையும் சேர்த்து சாறு பிழிந்து, தினமும் சுமார் 200 மி.லி. குடித்து வந்தால் போதும்; இரண்டு நாட்களில், அவர்களது பிரச்சனை சீராவதைப் பார்க்கலாம். மாதுளம்பழத்தின் விதைகளைச் சேர்த்துச் சாப்பிடும்போது, ரத்த சிகப்பணுக்கள் உயரும்; இதனால் அனீமியா சம்பந்தப்பட்ட, ஹீமோகுளோபின் சார்ந்த நோய்கள் குணமாகும். 

பெண்களின் இனப்பெருக்க மண்டலம் சார்ந்த பிரச்சனைகளையும் போக்கவல்லது மாதுளை. கருப்பை நீர்க்கட்டிகள், கருமுட்டைப்பை நீர்க்கட்டிகள், அதிக உதிரப்போக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சுமார் 150-200 கிராம் மாதுளம் பழத்தைச் சாப்பிடலாம். இவ்வாறு செய்துவந்தால், அவர்களது உடலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். 

சர்க்கரை மற்றும் இதய நோயாளிகளுக்கு, மாலை வேளைகளில் கால் வீங்கும் குறைபாடு உண்டு. காலையில் எழும்போது சீராக இருக்கும் கால்கள், இரவில் படுக்கச்செல்லும்போது வீங்கியிருக்கும். எந்த மருந்தை உண்டாலும், இது சரியாகாது. அப்படிப்பட்டவர்கள் தினமும் 100 கிராம் மாதுளம்பழத்தை தினமும் உண்ண வேண்டும்; இவ்வாறு செய்தால், கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் வெரிகோஸ் வெய்ன் போன்ற குறைபாடுகள் சரியாகும். 

குழந்தைகள் மற்றும் பெண்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கும், சிறுநீர்குழாய் தொற்றுகளை (Urinary Tract Infections) குணப்படுத்துவதற்கும் மாதுளம் பழம் பயன்படுகிறது. 

 

மாதுளை இலைகளின் மாயம்!

மாதுளம் பழத்தின் இலைகள் வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், வயிற்றிலிருக்கும் வாயுவை அகற்றவும் உதவும் சிறந்த மருந்து. வெறுமனே அந்த இலைகளைச் சுவைத்துத் துப்பினால் மட்டும் போதும். மேற்கண்ட நல்மாற்றங்கள் விரைவில் உங்களைத் தேடிவரும்! 

 

மாதுளை தீங்கு செய்யுமா? 

சைனசிட்டிஸ் பிரச்சனை உள்ளவர்களில் சிலர், மாதுளை சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஏதேனும் ஒரு கடையில் ஜூஸ் சாப்பிடும்போது, இது நேரலாம். அந்த ஜூஸில் சேர்க்கப்பட்ட ஐஸ்துண்டு, தண்ணீர் மற்றும் அதனைத் தயாரித்த விதமே அதற்குக் காரணமாக இருக்கும்; மாறாக, அந்த மாதுளம் பழத்தினால் உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டிருக்காது என்பதே உண்மை. 

விதை இருக்கக்கூடிய பழங்களே, மனிதர்களுக்கு நன்மை பயக்கும். வணிகரீதியாக நிறைய உற்பத்தி செய்வதற்காக, இன்று மரபணு மாற்றப்பட்ட பழங்கள் பயன்பாட்டில் கலந்திருக்கின்றன. இதனால் அவற்றின் மருத்துவக்குணம் குறைவதை, யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அதனால், அளவில் பெரிதாக இருக்கும் மாதுளம்பழத்தை யாரும் நாட வேண்டாம். நாட்டு மாதுளம் பழங்களுக்கே, மேற்கண்ட மருத்துவக்குணங்கள் பொருந்தும். 

 

தினசரி உணவில் மாதுளை

சர்க்கரை, இதயநோய், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட, யாராக இருந்தாலும் மாதுளம்பழத்தை உண்ணலாம். இதனால் மலச்சிக்கல் குறையும். சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். ஈரல், வயிற்றுப்புண், குடல்புண் மற்றும் அல்சரேட்டிவ் டெர்மடைட்டிஸ் (ulcerative dermatitis) எனும் தோல் நோய் தீர உதவும். எனவே, தினமும் மாதுளம்பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழுங்கள்!

 

சுத்தமாக இருந்தால், சிரங்கு வராது!

தோலில் ஏற்படும் பாதிப்புகள் எல்லா காலத்திலும் எல்லா தரப்பு மக்களையும் வாட்டும் பிரச்சனையாகும். குறிப்பாக, சில பாதிப்புகள் குழந்தைகளையே அதிகம் குறிவைக்கும். அவற்றுள் ஒன்று சொறி மற்றும் சிரங்கு. 

இது குழந்தைகளின் கை, கால் மற்றும் மூட்டுகளில் வியர்க்குரு போன்று சிறிய வீக்கங்களாகத் தோன்றும். அதனை குழந்தைகள் சொறியும்போது, வட்டவடிமான காயமாக மாறும்; கூடவே, உடல் முழுவதும் பரவும். இதற்கு சிரங்கு என்று பெயர். இது இரண்டு வகைப்படும். 

அரித்துக்கொண்டே இருக்கும் இடத்திலிருந்து தோல் வறண்டுபோய், செதில் போன்று உதிரும். இரண்டாவது வகை சிரங்கு வரும்போது, அந்த இடத்தை லேசாக சொறிந்தாலே நீர் வடியும். எந்த வகை சிரங்காக இருந்தாலும், அது குழந்தைகளுக்குக் கடுமையான பாதிப்பை உண்டாக்கும். 

அந்தக் காலத்தில் பள்ளிகளில் விளையாட்டுக்கென்று தனி நேரம் ஒதுக்கப்பட்டது. அதனால், மைதானங்களில் விழுந்து புரள்வார்கள் அப்போதைய குழந்தைகள். அதன் விளைவாக, அவர்களது கால்களில் சிரங்கு அதிகமாக உண்டாகும். கால் மூட்டுகளில் தொடங்கி பாதம் வரை இந்த நிலை தொடரும். சில குழந்தைகளுக்கு உள்ளங்கை மற்றும் உள்ளங்கையின் பின்பகுதியில் பாதிப்பிருக்கும். இன்றும் அதுபோன்றிருக்கும் குழந்தைகளிடம், இந்த நிலை தொடர்வதைக் காணமுடியும். 

 

காரணம்

நகரங்களை விட, கிராமங்களில் வாழும் குழந்தைகளை சிரங்கு தொற்றுவது அதிகம். இதற்குக் காரணம் சுகாதாரமின்மை தான். மணல் அல்லது மண்ணில் விளையாடும் குழந்தைகள் தங்கள் கை மற்றும் கால்களைச் சுத்தம் செய்வதில்லை. இதனால் அவர்களை சிரங்கு தொற்றுகிறது. 

மிக எளிதில் மற்றவரையும் தொற்றக்கூடியது சிரங்கு. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படுக்கை, துண்டு போன்றவற்றைப் பகிரும்போது, மற்றவரையும் இது தொற்றிக்கொள்ளும் வாய்ப்புண்டு. மன அழுத்தத்திற்கும் சிரங்கிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. சிலருக்கு மன அழுத்தம் அதிகமாகும்போது, சிரங்கு அதிகமாவதைக் காணலாம். 

 

சத்துக் குறைபாடு

வைட்டமின் பி12 குறையும்போது குழந்தைகளுக்கு சிரங்கு வரலாம் என்கிறது நவீன மருத்துவம். சுத்தமாக உடலைப் பேணினால் கூட இது நேரும்  என்கிறது. கீரை, பால், முட்டையின் வெள்ளைக்கரு, மீனில் இருக்கும் வைட்டமின் பி12 முறையாக உடலில் சேரவில்லை எனில், சிரங்கு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் வரக்கூடும். 

 

சிரங்கு வராமல் இருக்க..

உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்வது தான், இதற்கான முதல் சிகிச்சை. பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகள் வெந்நீரில் உடலைக் கழுவ அல்லது குளிக்க வேண்டும். இரண்டாவதாக, குழந்தைகளின் உணவில் கீரை அதிகம் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்லும் இப்போதைய சூழலில், உணவில் கீரைக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். முயன்றவரை, அவ்வப்போது கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

அது தவிர, குழந்தைகளுக்கு சில விஷயங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். சிரங்கு தொற்றினால், என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? எவற்றைத் தவிர்க்க வேண்டும்? உடலை எவ்வாறு சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்? தண்ணீர் எவ்வாறு அருந்த வேண்டும்? காலைக்கடன்களை அடக்காமல் இருப்பதனால், சிரங்கு பாதிப்புகளை எவ்வாறு தவிர்க்க முடியும்? என்பது பற்றித் தெளிவாக அவர்களுக்கு விளக்கிச்சொல்ல வேண்டும். இதனைச் செய்தால், சிரங்கு குழந்தைகளை அண்டாது. 

 

சிரங்கைப் போக்கும் ஆயுர்வேதம்

ஆயுர்வேத மருத்துவத்தில் தித்தகம் என்றொரு கஷாயம் உண்டு. மிகவும் கசப்பான சுவை கொண்டது. ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, அதிலுள்ள கழிவுகளை அகற்றி, சிரங்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் அருமருந்து தித்தகம் கஷாயம். இப்போது, இது மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது. தித்தக கிருதம் எனப்படும் நெய்யை வெளிப்புறமாகப் பூசுவதனால், காயங்கள் குணமாவதைக் காணலாம். செவ்வல்லிக் கொடி என்றொரு மூலிகை உண்டு. அதனைத் தண்ணீரில் இட்டு கொதிக்கவைத்து, சிரங்கின் மீது இளஞ்சூடாக ஊற்றும்போது, அது சரியாவதைக் காண முடியும். அதேபோல மஞ்சிஷ்டாதி கஷாயம், ஸ்வேத மல்ஹர் போன்றவற்றை வெளிப்புறமாகப் பூசும்போதும், சிரங்கு முற்றிலுமாகச் சரியாகும்.

சிரங்கு தொற்றும்போது, இன்று நம்மில் பலர் வேதியியல் மருந்துகளை நாடுகின்றனர். அவ்வாறு இதனைக் கட்டுக்குள் வைப்பதை விட, கசப்பான மருந்துகள் மற்றும் உணவுகளை எடுத்துக்கொள்வதின் மூலமாக சிரங்குகள் வராமல் நிரந்தரமாகத் தடுப்பது சாலச்சிறந்தது.  

 

குமுறவைக்கும் குடல்வால் வீக்கம்..

நம் குடல்பகுதியின் இறுதியில் இருக்கும் சிறிய உறுப்பு அப்பெண்டிக்ஸ் (appendix) என்று சொல்லப்படும் குடல்வால். மருத்துவரீதியாகப் பார்த்தால், உடல் செயல்பாட்டில் குடல்வாலுக்கு எந்தவிதமான தேவையும் இல்லையென்று சொல்லலாம். பரிணாம வளர்ச்சியின்போது, மனிதனின் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. அதில் ஒன்றாகவே, மனித உடலில் குடல்வால் இருப்பதும் பார்க்கப்படுகிறது. செரிமானத்திலோ, உடல் ஆரோக்கியத்திலோ, இதனால் பெரிதாகப் பயன் ஏதும் இல்லை. ஆனால், இதில் பிரச்சனை ஏற்பட்டால் அதன் விளைவுகள் விபரீதமானதாக இருக்கும்.

இரவில் சிலருக்குக் கடுமையான வயிற்றுவலி உண்டாகும். அடிவயிறைத் தொடவே இயலாத நிலை ஏற்படும். அதோடு, வாந்தியெடுக்கும் உணர்வும் இருக்கும். அவர்களை மருத்துவமனையில் உடனடியாகச் சேர்த்தால், சம்பந்தப்பட்ட நபருக்குக் குடல்வால் வீங்கியிருப்பது தெரியவரும். இதற்குத் தீர்வு அறுவைசிகிச்சை தான் என்று சொல்வார்கள் மருத்துவர்கள். 

 

குடல்வால் ஏன் வீங்குகிறது?

நமது தினசரி பழக்கவழக்கங்கள் மற்றும் உணவுப்பழக்கங்கள், உடலில் பல நல்ல மற்றும் மோசமான தாக்கங்களை உண்டாக்குகின்றன. அதிகமான அசைவ உணவுகள், உப்பு, எண்ணெய் மற்றும் காரம் மிகுந்த உணவுகள், சுத்தமில்லாத முறையில் சமைக்கப்படும் உணவுகள் போன்றவற்றைச் சாப்பிடும் வழக்கம் மெல்லமெல்ல குடல்வாலில் பாதிப்பை ஏற்படுத்தும். மேற்கண்ட உணவுகள் அனைத்துமே உடலில் சூட்டை அதிகமாக்கும்; வீக்கத்தை உண்டாக்கும். முதலில் வயிற்றுப்புண்ணை உண்டாக்கும் இந்த உணவுகள், நாளடைவில் அப்பெண்டிசைடிஸ் (appendicitis) என்ற நோயைப் பரிசளிக்கின்றன. 

சைவ மற்றும் அசைவ உணவுகள் சாப்பிடுபவரிடையே, குடல்வால் பாதிப்பு சம அளவில் ஏற்படுகிறது. இந்த குடல்வால் பாதிப்பைச் சரியாகக் கவனிக்காவிட்டால், அந்த வீக்கம் வெடித்து பெரிடோனைட்டிஸ் (peritonitis) என்ற நோயை உருவாக்கும். அதாவது, குடல் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். அந்தப் பிரச்சனை ஏற்பட்டால், உயிரைக் காப்பாற்றுவதே சிரமம் என்றாகும்; அதிலிருந்து விடுவித்துக்கொள்ள, மிகப்பெரிய அறுவைசிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதனால், அப்பெண்டிசைடிஸ் வராமல் பார்த்துக்கொள்வது மிகவும் நல்லது. 

ஊறுகாய் சாப்பிடக்கூடாதா?

இதுவரை ஊறுகாய் சாப்பிடும் வழக்கம் இருந்தால், இன்றோடு அதனை நிறுத்திக்கொள்ளுங்கள். ஊறுகாய் சாப்பிடும்போது ரத்த அழுத்தம் மட்டும் அதிகமாவதில்லை. அதோடு சேர்ந்து நிறைய பிரச்சனைகள் உண்டாகிறது. மாதத்தில் என்றாவது ஒருநாள் ஊறுகாய் சாப்பிடும் வழக்கம் முன்னர் இருந்தது. இன்று, ஒரு குடும்பத்தின் டைனிங்டேபிளில் விதவிதமான ஊறுகாய் பாட்டில்கள் அடுக்கிவைத்திருக்கும் நிலைமை இருக்கிறது. காய்கறிகள் இல்லாதபோது, இதனை வைத்து சமாளிப்பதாகச் சொல்கின்றனர் பலர். அவர்களது குழந்தைகளிடம் ஊறுகாய் பழக்கம் தொற்றும்போது, அது மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும். 

 

மலச்சிக்கல் என்ன செய்யும்?

’இன்னிக்கு மலம் கழிக்கலியா, விடு நாளைக்கு பார்த்துக்கலாம்’ என்ற போக்கு இன்றைய தலைமுறையிடம் அதிகமாக உள்ளது. இதனால் குடலில் கழிவுகள் தேங்குகிறது. அப்படிப்பட்டவர்கள் சூடான உணவை உண்ணுகையில், அது வயிற்றினுள் இருக்கும் பாக்டீரியாக்களை அதிகப்படுத்தும். தினமும் மலம் கழிப்பவர்களுக்கு இந்தப்பிரச்சனை இல்லை. 

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் மது மற்றும் சிகரெட் பழக்கங்களை கைவிடாதபோது, இந்தப் பிரச்சனை இன்னும் அதிகமாகும். இதன் எதிர்வினையாக, அதிக பாதுகாப்பில்லாத குடல்வால் பாதிக்கப்படும். உடலின் நோய் எதிர்ப்புசக்தி தன் வேலையைக் காட்டினாலும், தொடர்ந்துவரும் இந்த பாதிப்புகள் குடல்வாலில் வீக்கத்தை ஏற்படுத்தும். உடனடியாக, அந்த வலி நம்மை துடிதுடிக்க வைக்கும். 

 

உணவுக்கட்டுப்பாடு பலனளிக்குமா?

காய்கறிகள், பழங்கள் தினமும் சாப்பிட வேண்டும். இளநீர், கரும்புச்சாறு பருகும் பழக்கம் வேண்டும். மாதுளை, கொய்யா, சப்போட்டா பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அப்பெண்டிசைட்டிஸ் பிரச்சனையைத் தவிர்க்க முடியும். 

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருப்பதாகக் கண்டறிந்தால், உடனடியாக அதற்கான மருந்துகளைக் கொடுக்க வேண்டும். அது தொடராதவாறு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளுடன் பேசும்போது, ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 3-5 வயதில் இதனைச் செய்தால், 20 வயதில் அவர்கள் ஆரோக்கியமானவர்களாகத் திகழ்வார்கள். 

 

வாழ்வியல் மாற்றம் அவசியம்!

பள்ளியில் நன்றாகப் பயிற்றுவிக்கிறார்களா என்று நாம் காட்டும் கவனத்தை, அங்கு நல்ல கழிப்பறைகள் மற்றும் குழந்தைகள் இருக்கக்கூடிய சூழல் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதில் காட்டுவதில்லை. இதனால், பெரும்பாலான பெண்குழந்தைகள் ஒழுங்காகத் தண்ணீர் குடிப்பதில்லை. கழிப்பறைகள் மோசமாக இருப்பதனால், வீட்டுக்கு வந்தபிறகே தண்ணீர் குடிக்கிறார்கள். இது அவர்களுக்கு உடல்சூட்டை ஏற்படுத்துகிறது; குடல்வாலில் வீக்கத்தை உண்டாக்குகிறது. வேலைக்குப் போகும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கூட, இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. 

இதனைத் தவிர்ப்பதற்கு, தினசரி வாழ்க்கையில் சில மாற்றங்கள் அவசியம். காலையில் எழுந்ததும் அரை அல்லது ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். அது போலவே உணவு இடைவேளையின்போது தண்ணீர் குடித்தால், எந்தப் பிரச்சனையும் வராது. ஒருநாள் முழுவதும் குறைந்தபட்சமாக மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்கும் வழக்கத்தைத் தொடர்ச்சியாகப் பின்பற்ற வேண்டும். இதனைச் செய்வதன் மூலமாக, அப்பெண்டிசைட்டிஸ் பிரச்சனை வராமல் நம்மால் பார்த்துக்கொள்ள முடியும்.

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles