மிகினும் குறையினும்! - கல்லடைப்பு நோய்

Thursday, April 13, 2017

"வருசத்துக்கு ரெண்டு தடவ பிரசவம் மாதிரி கல் வெளியேறுது டாக்டர். கல் வராம தடுக்க ஏதாவது தடுப்பு மருந்து இருக்கா டாக்டர்...""சார், ஜவுளிக்கடைல வேலை பாக்கேன். காலைல 9 மணிக்கு போனா 3 மணிக்கு சாப்பிட வரும்போதுதான் பாத்ரூம் போக முடியும். கடைல பாத்ரூம்லாம் இல்லை. தண்ணி குறைவா தான் குடிக்கேன். இப்ப நாலு நாளா குறுக்கு வலிக்கு, நீர் சொட்டுச் சொட்டா கலங்கலா போகுது. ஒரு தடவ இரத்தமா போன மாதிரி கூட போச்சு.

கல்லடைப்புங்காக, ஆப்ரேசன் பண்ற அளவுக்கெல்லாம் நம்மகிட்ட வசதி கிடையாது. வேலைக்கு போனாத்தான் சம்பளம். சித்தால கல்லு கரைஞ்சு வெளியேறும்னாங்க. அதான் வந்தேன்"

"ரெண்டு நாளா யூரின் போற இடத்துல கடுமையான வலி டாக்டர். ஸ்கேன் பண்ணிப் பார்க்கச் சொன்னாரு பேமிலி டாக்டர். கிட்னில ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு கல்லு இருக்குன்னு ரிப்போர்ட் வந்துருக்கு. எனக்கு சித்த மருத்துவத்துல ஆர்வமுண்டு. அதான் வந்துருக்கேன்"

"ஒரே குமட்டல், வயிற்று வலி, படியேறி, இறங்குனா வலி கூடுது. நீரும் கம்மியாதான் போகுது. குறுக்கு வலியும் இருக்கு டாக்டர்"

"அஞ்சாறு வருசமா கல்லடைப்பு இருக்கு டாக்டர். கல் வரப்போகுதுன்கறது தெரியும். வலி வந்த உடனே வாழைத்தண்டு, முள்ளங்கி எல்லாம் ஜுஸ் எடுத்துக் குடிக்க ஆரம்பிச்சிருவேன். இரண்டு மூணு நாள்ல வலி குறைஞ்சிரும். சில சமயம் சின்ன சைஸ்ல கல்லு தெறிச்சு பத்து நாளா வாழைத்தண்டு, முள்ளங்கி ஜுஸ் குடிக்கிறேன். வலி குறையவே இல்லை. உடம்பு சோர்வா இருக்கு. கைகால் எல்லாம் அசதியா இருக்கு. சித்தால ஏதோ கசாயம் இருக்காமே. அதான் வாங்க வந்தேன்"

'கட்டுரையை விரைவாக அனுப்புங்க டாக்டர்' என மனம் அலுவலகத்திலிருந்து தகவல் வந்ததிலிருந்து எனது காதிற்கும் நோயர்களின் குரல்கள் ஒலிக்கத் தொடங்கி விட்டன.

நோய் விளக்கம் 

  • சிறுநீரகத்திலேயோ, சிறுநீர்ப் பையிலோ, சிறுநீர் வெளியேறும் பாதையிலோ கற்கள் உருவாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமத்தை ஏற்படுத்தி, இடுப்பு, அடி வயிறு, இன உறுப்பு ஆகியவற்றில் வலியையும், சிறுநீர் வெளியேறுவதில் சிரமத்தையும், சில நேரங்களில் குருதி கலந்த சிறுநீரையும் வெளியேற்றும் இயல்புடைய நோயைக் கல்லடைப்பு நோய் என்கிறோம்.

சித்த மருத்துவத் தத்துவ விளக்கம்

  • பித்த நாடியின் பாதிப்பால் கல்லடைப்பு நோய் ஏற்படும் சில நிலைகளில் வாத நாடியும் பித்த நாடியோடு சேர்ந்து பாதிக்கப்பட்டிருக்கும்.
  • சூட்டைத் தரும் உணவுகள், குறைவான நீர் எடுத்துக் கொள்ளல். எண்ணெய் முழுக்கத்தைத் தவிர்த்தல் போன்றவை பித்தம் மிகுந்து உடலில் உள்ள நீரைச் சுண்டச் செய்து, சிறுநீர் வற்றி, சிறுநீரின் உப்பை உரையச் செய்து, கல்லடைப்பு நோயை உண்டாக்கும்.

மருத்துவம் 

உணவே மருந்து 

  • உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவுகளை உண்டு அதிகரித்த பித்தத்தை இயல்பிற்கு கொண்டு வருதல் வேண்டும்.
  • பசலைக் கீரை, சிறுகீரை போன்ற கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அவரை, வெண்டை போன்ற காய்கறிகள் உடல்சூட்டைக் குறைக்க வல்லவை. 
  • மணக்கத்தை அரிசிச் சோறு, பார்லி அரிசிக் கஞ்சி சேர்த்துக் கொள்ளலாம். 
  • வாழைத்தண்டு சாறு, முள்ளங்கி சாறு கற்களை வெளியேற்றும் தன்மை வாய்ந்தவை. உடலில் உள்ள நீரை அதிகமாக வெளியேற்றும் தன்மை இவற்றுக்கு உண்டு. ஆதலால் தொடர்ச்சியாக பயன்படுத்துகையில் உடலில் உப்புச் சத்து குறைந்து கைகால் அசதியை ஏற்படுத்தும். எனவே தொடர்ச்சியாக எடுக்காமல் வாரத்தில் ஓரிருமுறை எடுத்துக் கொள்ளலாம்.
  • தக்காளி, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், பால்பொருட்கள், அசைவம் போன்றவற்றை கல்லடைப்பு நோயர்கள் தவிர்க்க வேண்டும். துரித உணவு வகைகளையும், குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும்.

சித்த மருந்துகள்:

  • நீர்முள்ளி, நெருஞ்சில், சிறுபீளை, வெள்ளரி என சிறுநீரைப் பெருக்கக் கூடிய கற்களை உடைத்து வெளியேற்றக் கூடிய மூலிகைகள் கிட்டத்தட்ட 130க்கு மேலான எண்ணிக்கையில் உள்ளன. விரைந்து செயலாற்றும் வகையில் குடிநீர் (கசாயம்) வடிவில் அவற்றை எடுத்து வர கல்லடைப்பு நோய் குணமாகும். ஒரு செ.மீ. அளவு வரை உள்ள கற்களை சித்த மருந்துகளின் மூலம் உடைத்து வெளியேற்ற இயலும். கற்களின் அளவு அதற்கு மேல் இருப்பின் சித்த மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

நீர் முள்ளிக் குடிநீர் :

  • சித்த மருந்து கடைகளில் நீர்முள்ளிக் குடிநீர்ச்சூரணம் கிடைக்கிறது. 10 கிராம் நீர்முள்ளிக் குடிநீர்ச் சூரணத்துடன் 400 மி.லி. நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, 50 மி.லி. அளவாக வற்ற வைத்து வடிக்கட்டிக் குடித்து வரவும். காலை, மாலை உணவிற்கு முன் நீர்முள்ளிக் குடிநீர் அருந்தி வரவும். கல் இருக்கும் இடத்தைப் பொறுத்தும், கல்லின் வடிவத்தைப் பொறுத்து வெளியேறும் காலம் மாறுபடலாம். சிறுநீர்ப் பாதையிலோ, சிறுநீர்ப் புழையிலோ சிக்கி இருக்கும் கல் அளவில் சிறியதாக இருப்பின் ஓரிரு நாட்களில் வெளியாகி விடும். சிறுநீர்ப் பையிலும், சிறுநீரகத்திலும் இருக்கும் கற்கள் வெளியேற சிறிது காலம் ஆகலாம். கல்லடைப்பு நோயில் இருக்கும் சிறுநீர் சரியாக வெளியாகாமை, வலி, குமட்டல் ஆகியவை நீர்முள்ளிக் குடிநீர் குடித்த ஓரிரு நாட்களிலேயே சரியாகி விடக் கூடும். கல் வெளியாகி விட்டதா என்பதை யு.எஸ்.ஜி. ஸ்கேன் ஆய்வின் மூலம் கண்டறிந்து பின்பே நீர்முள்ளிக் குடிநீர் அருந்துவதை நிறுத்தவும்.

மாவிலிங்கக் குடிநீர், சிறுபீளைக் குடிநீர் போன்ற குடிநீர் வகைகளும் நீர்முள்ளிக் குடிநீரைப் போல கல்லடைப்பு நோயைக் குணமாக்க வல்லவை. 

மேலும் கல்லடைப்பு நோயைக் குணமாக்க வல்ல உயர்வகை பற்பங்கள் ஏராளமாக சித்த மருத்துவத்தில் உள்ளன. அவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனைப் படி உண்ணலாம் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

அடுத்த இதழில் "வெண் படை நோய்"

- டாக்டர் அருண்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles