மிகினும் குறையினும்  - கோடையை சுகமாக்க!

Friday, April 28, 2017

கேள்வி : டாக்டர் கோடைக் காலம் ஆரம்பிச்சாச்சு, இந்த பருவமாற்றம் உடலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

பதில்: ஆமாங்க "அண்டத்தில் உள்ளதே பிண்டம். பிண்டத்தில் உள்ளதே அண்டம்" என்பது சித்தர் பாடல் மூலம் பருவ மாற்றம் உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்ங்கறத புரிஞ்சிக்கலாம். நம்முடைய உடல் சூடு அதிகமாகும். அதனை இயல்பிற்கு கொண்டு வர வியர்வை அதிகமாக வெளியாகும். உடலிலுள்ள கழிவு நீர் வியர்வையாக வெளிவருவதால் சிறு நீர் வெளியேறும் அளவு குறையும். நீர் குறைவாக அருந்துபவர்களாக இருந்தால் சிறுநீர் எரிச்சல் ஏற்படலாம்!

கேள்வி: ஆமாம் டாக்டர். பெரும்பாலும் எல்லோருக்குமே சிறுநீர் எரிச்சல் இருக்குன்னு சொல்லலாம். அதற்கு ஏதாவது உடனடி நிவாரணம் உண்டா? இளநீர், நுங்கு, பதநீர் சாப்பிடுவது தவிர வேறு ஏதேனும் வழி இருக்குதா டாக்டர்?

பதில்: இருக்கு. நன்னாரி மணப்பாகு என்ற மருந்து சித்த மருந்தகங்களில் கிடைக்கும். அதனை 10 மி.லி. அளவு, தண்ணீரில் கலந்து பருகலாம். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை அருந்தலாம். சிறுநீர் எரிச்சல், நீர்க் கடுப்பு உடனடியாக குணமாக நல்ல மருந்து இது. அப்புறம் பழச்சாறுகள் அருந்தலாம். சீரக நீர் அருந்தலாம். இவை உடல் வெப்பத்தை இயல்பாக வைக்க உதவும்.

 

கேள்வி: நல்லது டாக்டர். வெயில் காலத்தில் வரக் கூடிய தோல் நோய்கள் பற்றிச் சொல்லுங்க?

பதில்: வியர்க்குரு, வேனல்கட்டி, அக்கி, பூஞ்சைத் தொற்றுகள், தோல் அரிப்பு போன்றவை கோடை காலத்தில் அதிகமாக நம்மைத் தாக்கும் நோய்கள். பொதுவாக தோல் நோய்கள் வராமல் தடுக்க மூலிகைக் குளியல் பொடியான 'நலுங்கு மா' வைக் கோடை காலத்தில் குளிப்பதற்கு பயன்படுத்தலாம். ஏற்கனவே நலுங்கு மா தயாரிப்பை பற்றி மனம் இதழில் எழுதியிருக்கிறேன். படித்து பயன்பெறுங்கள்!

வியர்க்குரு

 • நுங்கு நீரைப் பூசலாம்
 • இளநீர் விட்டு அரைத்த சீரகத்தைப் பூசலாம்
 • சுத்தமான சந்தனத்தை இழைத்துப் பூசலாம்

வேனல் கட்டி     

 •  சங்கை பன்னீரில் உரைத்துப் பூசலாம்.

அக்கி              

 • காவி மண்ணை நீரில் குழைத்துப் பூசலாம்.

பூஞ்சைத் தொற்றுக்கள்

 •  சீமை அகத்தி இலைச்சாறைப் பூசலாம்.
 • குப்பை மேனி இலையை மஞ்சளுடன் அரைத்துப் பூசலாம்.

தோல் அரிப்பு

 • அருகன் தைலத்தை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) பூசலாம்.
 • பிரம தண்டு தைலத்தைப் பூசலாம்.

 

கேள்வி:  டாக்டர், கோடை காலத்துல கண்ணில் வரக் கூடிய பாதிப்பு என்ன? கை மருத்துவம் ஏதாவது?

பதில் : கோடையில் கண்ணில் இமைக் கட்டி வரலாம். வைரஸ் தாக்குதலினால் கண்ணில் வெளி விழியில் பாதிப்பு ஏற்பட்டு சிவந்து காணப்படலாம். கண் எரிச்சல் சாதாரணமாக வெயிலில் வேலை செய்பவர்களுக்கே வரும் பிரச்சினைதான்!

இமைக் கட்டி - படிகார நீர் என்ற மருந்து சித்த மருந்தகங்களில் கிடைக்கும். இது கண்ணில் இடும் சொட்டு மருந்து. இதனை 2-3 சொட்டு கண்ணில் இடலாம். காலை, இரவு என இருவேளை பயன்படுத்தலாம்.

கண் சிவப்பு 

 • நந்தியாவட்டைப் பூச்சாறை கண்ணில் 2-3 சொட்டு விடலாம்.

கண் எரிச்சல்

 • இரவு தூங்கும் முன் கால் பாதத்தைச் சுத்தமாகக் கழுவி பசு வெண்ணையைப் பூசி வரலாம். வாரம் இருமுறை நல்லெண்ணெய்க் குளியல் செய்யலாம்.

 

கேள்வி: டாக்டர் எண்ணெய்க் குளியல் பற்றிக் கொஞ்சம் விளக்குங்களேன்.

பதில் :  நீங்க சொல்ற மாதிரி இப்ப நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கு. பலரும் எண்ணெய்க் குளியல் செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. அதே நேரத்தில் எண்ணெய்க் குளியலுக்கு சில வழிமுறைகள் இருக்கு. அதைப் பின்பற்றினால்தான் முழுப் பலனை அடைய முடியும். அதைப்பற்றி சொல்றேன்.

எண்ணெய்க் குளியல் செய்றதுக்கு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். நோயுற்றவர்கள் சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தைலங்களைப் பயன்படுத்தணும். எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம் என்பது மூத்தோர் சொல். எனவே எண்ணெய்க் குளியல் அன்று குளிப்பதற்கு இளஞ்சூடான நீரே சிறந்தது. சூரிய உதய காலம் எண்ணெய்க் குளியல் செய்ய ஏற்ற காலம். பெரும்பாலும் காலை 7 மணிக்குள் எண்ணெய் தேய்க்க வேண்டும்.  எண்ணெய்க் குளியல் அன்று பகல் தூக்கம், அசைவ உணவு, வெயிலில் அலைதல், குளிர்பானங்கள் அருந்துதல், உடலுறவு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

 

கேள்வி: அடேயப்பா இவ்வளவு இருக்கா டாக்டர்?

பதில் : ஆமா... ஆமா...

 

கேள்வி: கோடையில் பெண்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் பற்றியும், கை மருத்துவம் பற்றியும் ஏதாவது?

பதில்: பெண்களுக்க 'வெள்ளைப் படுதல்' ஏற்படலாம். ஏற்கனவே வெள்ளைப் படுதல் பிரச்சினை இருக்கிறவங்களுக்கு அதிரித்த சூட்டினால் அதிகமாகலாம். வெள்ளைப் படுதலுக்கு கற்றாழையைப் பயன்படுத்தலாம். கற்றாழையில் உள்ளிருக்கும் சோற்றை நன்கு நீரில் ஏழெட்டு முறை கழுவினால் கசப்பு நீங்கி, ஜெல்லி போல இருக்கும். அதனுடன் வேகவைத்த பூண்டுப் பல் ஒன்றையும், சிறிது பனங் கருப்பட்டியும் சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் உண்ணலாம். திரிபலா சூரணத்தை இளஞ்சூடான நீரில் கலந்து வடிகட்டி, சிறுநீர்ப் பாதையைக் கழுவி வரலாம். இதனால் வெள்ளைப்படுதல் நீங்கும்.

 

கேள்வி: கோடையில் உணவுக் கட்டுப்பாடு ஏதாவது இருக்குதா டாக்டர்?

பதில்: ஆமாங்க. பொதுவா கோடையில் பசி குறைவாகத்தான் இருக்கும். அதனால் பசிக்கு ஏற்ப அளவா உணவு உண்பது நல்லது. நீரிழப்பு அதிகமாக இருக்குறதால உடற்சூட்டை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கலாம். கோழி, எண்ணெய்ப் பலகாரங்கள் தவிர்ப்பது நல்லது. நீர்த்துவமான உணவுகளான கூழ், கஞ்சி இவற்றை எடுத்துக் கொள்ளலாம். மோர் அவசியம் சேர்க்கணும். உருக்கிய நெய்யை மதிய உணவில் சேர்த்துக்கணும். புடலங்காய், வெண்டைக்காய், கத்திரிப் பிஞ்சு, அவரைப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, வெள்ளரி போன்ற காய்கறிகள் நன்மை பயப்பவை. கனி வகைகளும் எடுத்துக் கொள்ளலாம். வாரத்திற்கு மூன்று நாட்கள் கீரை சேர்த்துக் கொள்வதின் மூலம் கோடை வெப்பத்தால் ஏற்படும் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும். 

 

கேள்வி: அதே மாதிரி உடை, படுக்கை இதில் ஏதாவது மாற்றம் தேவையா டாக்டர்?

பதில் : கண்டிப்பாக. காற்றோட்டமான, வெப்பத்தைத் தணிக்கக் கூடிய பருத்தி உடைகளை அணிவது நல்லது. அதிலும் வெண்ணிற ஆடை மிகச் சிறந்தது. படுக்கையில், இலவம் பிஞ்சு மெத்தை உடற்சூட்டை குறைக்கக் கூடியது. செயற்கை இழை மெத்தைகள் உடற்சூட்டை அதிகரிக்கக் கூடியது. கோரைப் பாய் பித்தத்தைத் தணிக்கக் கூடியது. தென்றல் வரக் கூடிய மொட்டை மாடி இருப்பின் ஏ.சி. யைத் தவிர்த்து அதில் உறங்குவது மிகுந்த நன்மை தரக் கூடியது!

(சம்மர் ஸ்பெஷல் காரணமாக, இந்த இதழில் இடம்பெற இருந்த வெண்படை நோய் அடுத்த இதழில் இடம்பெறும்!)

- டாக்டர் அருண்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles