மிகினும் குறையினும்!  -தேமல் 

Friday, March 31, 2017

“முதல்ல ஒரு புள்ளி மாதிரிதான் வந்துச்சு சார், அப்புறம் 3 மாசத்துக்குள்ள இவ்வளவு பெருசா பரவிருச்சு, முதுகு பூரா ஏதோ மேப் மாதிரி இருக்கு. நானும் விளம்பரங்கள பாத்துட்டு எல்லா மூலிகை சோப்பையும் போட்டு பாத்துட்டேன். ஒண்ணும் சரியாகக் காணோம். உண்மையிலேயே மூலிகைலாம் சோப்புல சேர்ப்பாங்களா சார்"

“ஹாஸ்டல்ல இருக்கிறப்ப அக்குளுக்குக் கீழே வந்துச்சு டாக்டர். ஒண்ணும் செய்யலங்கறதால அப்படியே கவனிக்காம விட்டுட்டேன். இப்ப பாருங்க கழுத்திலெல்லாம் வந்துருச்சு, மெடிக்கல்ல கேட்டு க்ரீம்லாம் போட்டுப் பாத்தேன், போட்ட கொஞ்சநாள் மறைஞ்ச மாதிரி இருக்கு, பிறகு திரும்ப வந்துருது"

“டாக்டர் கொசுக் கடிச்சா தேமல் வருமா? டாக்டர், யாரோ வாட்சப்ல அனுப்பியிருந்தாங்க . எனக்கென்னவோ பூஞ்சைத் தொற்றுன்னு படித்த ஞாபகம்.

“இவங்க அப்பாக்கு முதுகுல எல்லாம் இருக்கு, இப்ப இவனுக்கு நெஞ்சுல வந்துருக்கு பாருங்க; தேமல் பரவுமா சார்"

“முதல்ல லேசா பொட்டுப்போல கைல வந்துச்சு சரி அழகு தேமல்ன்னு சில பேரு  சொன்னாங்கன்னு விட்டுட்டேன், இப்ப பாருங்க பெருசாகி பரவ ஆரம்பிச்சுருது".

“வெயில் காலம் வந்தா தேமல் அதிகமாகுற மாதிரி இருக்கு டாக்டர், வியர்க்கிறதால பரவுமோ என்னமோ"

தேமல் நோயர்கள் குரல்கள் ஒலிக்கக் கட்டுரை எழுத அமர்ந்தேன்.

நோய் விளக்கம் 

தோலில் பூஞ்சைத் தொற்றின் காரணமாக ஏற்படும் அரிப்பற்ற நிறமாற்றத்தை தேமல் என்கிறோம். தேமல் வெளுத்தோ, இளஞ்சிவப்பு நிறத்துடனோ, கருமை நிறத்துடனோ காணப்படலாம். ஒருவரது உடம்பிலும் பிறருக்கும் பரவக் கூடியது. பொதுவாக கோடை காலத்தில் இதன் தாக்கம் அதிகமிருக்கும். ஆரம்ப நிலையில் தேமலைக் குணப்படுத்துதல் எளிது. வெளிமருந்துகள் மூலமே கட்டுப்படுத்தி விடலாம். நாட்பட்டு கவனிக்காமல் விடின் உள்மருந்துகள் தேவைப்படும்.

மருத்துவம் 

உணவே மருந்து 

நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கும் பழங்களையும், காய்கறிகள், கீரைகளையும் உணவிலோ அன்றாடம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கத்தரிக்காய், பாகற்காய், சேனை, செம்பு, மீன், கருவாடு, வாழைக்காய், மாங்காய் போன்றவை தோல் நோயர்கள் தவிர்க்கும் பொருட்களாதலால் இவற்றை தவிர்க்க வேண்டும்.

மருத்துவம் 

வெளிமருந்துகள் 

குளியல் பொடி - நலுங்குமா 

 • பாசிப்பயறு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், கார்போகரிசி, கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு, சந்தனசிராய் இவை சமஅளவு எடுத்து அரைத்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே நலுங்குமா எனப்படும் மூலிகைக் குளியல் பொடி . இதனை தேய்த்துக் குளித்து வர தேமல் குணமாகும். தோல் நோய்கள் வராமல் காக்கும்.
 • சீமை அகத்தி இலைச் சாறுடன், எலுமிச்சை சாறு கலந்து தேமல் உள்ள இடத்தில் பூசி வர குணம் கிடைக்கும்.
 • குப்பைமேனி இலை, மஞ்சள், சோற்றுப்பு இவற்றை அரைத்துப் பூசிக் குளிக்க தேமல் குணமாகும்.
 • ஊசித்த கீரை இலையை, எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்துப் பூசலாம்.
 • கஸ்தூரி மஞ்சள் அரைத்துப் பூசிக்க குளிக்க தேமல் குணமாகும்.
 • பிரம தண்டு தைலம் பூசி வர தேமல் குணமாகும்.
 • அருகன் தைலம் பூசி வர தேமல் குணமாகும்.
 • சீமை அகத்திக் களிம்பு பூசி வர தேமல் குணமாகும்.
 • சிரட்டைத் தைலம் பூசி வர தேமல் குணமாகும்.

உள்மருந்துகள் 

 • திப்பிலியைப் பொடித்து மூன்று விரல் அளவு எடுத்து தேனுடன் கலந்து உண்டு வர தேமல் குணமாகும் என தேரையர் சித்தர் கூறுகிறார்.
 • பறங்கிப்பட்டை சூரணம் ஐந்து விறல் அளவு பாலுடன் கலந்து காலை, மாலை உண்டு வர தேமல் குணமாகும்.
 • கருஞ்சீரகச் சூரணம் - ஐந்து விரல் அளவு - சுடுநீருடன் கலந்து காலை, மாலை உண்டு வர தேமல் குணமாகும்.
 • பறங்கிப்பட்டைக் குடிநீர் 100 மிலி அளவு காலை, மாலை  உணவிற்கு முன் அருந்தி வர தேமல் குணமாகும்.
 • தேமல் ஆரம்பித்து உடனே மருந்துகள் உள்ளுக்கும், வெளியேயும் பயன்படுத்தினால் விரைவான குணம் கிடைக்கும் மேற்கண்ட உள், வெளி மருந்துகள் பயன்படுத்தியும் குணமில்லையெனில், அருகிலுள்ள சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி உயர்வகை சித்த மருந்துகள் எடுத்து முழுமையான குணமடையலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

(அடுத்த இதழில் “கல்லடைப்பு நோய்”)

- டாக்டர் அருண் 

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles