காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிங்க!

Thursday, October 6, 2016

கவுண்டமணி பாணியில் யாராவது ‘கவுண்டர்’ கொடுக்கும்போது, நாம் பதில் சொல்ல முடியாமல் திணற வேண்டியிருக்கும். அப்போதெல்லாம், ‘தண்ணிய குடி.. தண்ணிய குடி..’ என்பதாகவே, பெரும்பாலானவர்களின் மைண்ட்வாய்ஸ் இருக்கும். அதாகப்பட்டது, தண்ணீரைக் குடிப்பதன் வழியாக நமது திணறல்கள் சரிசெய்யப்படும். விரக்தி, கோபம், ஆற்றாமை தணியும். திரைப்படங்களில் கூட, இது அவ்வப்போது நமது பார்வைக்கு வைக்கப்படும்.

அதாவது, மிகப்பெரிய துக்கம் ஏற்படும்போதோ, அப்படியொரு விஷயத்தைக் கேள்விப்படும்போதோ, அதைத் தாங்கமுடியாமல் தவிக்கும்போதோ, நமது மனதை ஆற்றுவது நீர்தான். மிகவும் மோசமான விளிம்புக்குச் செல்லும்போது கடைபிடிக்கும் இந்த வழக்கத்தை, அவ்வப்போது மேற்கொண்டால் என்னவாகும்? நமது உடலும் மனமும் மிக அழகாகும். என்ன நம்ப முடியவில்லையா?

உணவு, உடை, உறைவிடம் என்பவை நமது அடிப்படைத் தேவையாக இருக்கலாம். ஆனால், உயிரைப் பாதுகாக்கவென்று சில தேவைகள் உண்டு. சுவாசம், உடல் வெப்பம், தண்ணீர் போன்றவை அந்த லிஸ்டில் முதலில் இருக்கும். இதில் மூன்றாவதாக இருக்கும் தண்ணீரின் முக்கியத்துவம் பற்றி, இன்று யாரும் பெரிதாகக் கவலைப்படுவது இல்லை. 

தாகம் ஏற்படும் வேளைகளில் கூட, ஏதேனும் ஒரு செயற்கைப் பழச்சாறு அல்லது வாயுவேற்றப்பட்ட திரவத்தைப் பருகுகின்றனர் இளைய தலைமுறையினர். உணவு உண்ணும்போது மட்டும், ’கேன் வாட்டர்’ என்ற பெயரில் அடைக்கப்பட்டிருக்கும் நீரைப் பருகத் தயாராக இருக்கின்றனர் நம்மில் பலர். ஆனால், மற்ற நேரங்களில் நாம் தண்ணீர் குடிக்கத் தயாராக இல்லை. அப்படியொரு விருப்பம் இருந்தாலும், அதற்கான சூழல் பலருக்கு வாய்ப்பதில்லை. இதனால் உடலின் மெட்டாபாலிசம் மாறுகிறது; பல நோய்கள் குடிகொள்ள அது வாய்ப்பாக அமைகிறது. 

உடலைச் சீராக இயங்க வைக்க, நீரின் தேவை மிகவும் அவசியம். ஒரு நாள் முழுவதும் சீராகத் தண்ணீர் குடிக்க, எல்லோராலும் முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள், ‘வாட்டர் தெரபி’யை பாலோ பண்ணலாம். அதற்கு விருப்பமில்லாதவர்கள், காலையில் எழுந்ததும் கொஞ்சமாகத் தண்ணீர் குடிக்கலாம். இதனை மேற்கொள்வதற்கு, எந்த நிபந்தனைகளும் தேவையில்லை. காலையில் எழுந்ததும், வாய் கொப்பளித்துவிட்டு இதனை மேற்கொள்ளலாம். ஆனால், இதனைப் பல் தேய்ப்பதற்கு முன்பே செய்ய வேண்டும். ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க முடியவில்லை என்று கவலைப்பட வேண்டாம். உங்களால் எவ்வளவு குடிக்க முடிகிறதோ, அவ்வளவு நீர் அருந்தினால் போதும். 

இவ்வாறு செய்வதால், நிறைய பலன்கள் கிடைக்கும். மிக எளிதாகக் காலைக்கடன் கழிப்பது, அதில் முக்கியமானது. உடல் சூடு தணிவது, ரத்த அழுத்தம் குறைவது, ரத்த ஓட்டம் சீராவது, புத்துணர்ச்சியுடன் இருப்பது என்று இதனால் கிடைக்கும் நன்மைகள் மிக அதிகம். அது மட்டுமல்ல, உடலில் நச்சுத்தன்மையுள்ள கழிவுகளின் தாக்கமும் தண்ணீர் குடிப்பதனால் சரியாகும். முக்கியமாக, உடல் எடையைக் குறைக்க இது ஓரளவு உதவும். 

காலையில் மட்டுமல்ல, தாகம் எடுக்கும்போதெல்லாம் தண்ணீர் குடிப்பது சாலச் சிறந்தது. நாள் முழுவதும் அதனைப் பின்பற்ற இயலாதவர்கள், முடிந்தபோதெல்லாம் தண்ணீர் அருந்தலாம். அதையும் சரிவர செய்ய இயலாதவர்கள், காலையில் தண்ணீர் குடிக்கும் வழக்கத்தை விடாமல் பின்பற்ற வேண்டும். இதனால் பல சிறப்பான பலன்களைப் பெறலாம்!

-ஜென்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles