மிகினும் குறையினும்! - மூட்டுவலியைப் போக்கும் சித்தமருத்துவம்!    

Monday, October 31, 2016

மூட்டு என்ற சொல்லுக்கு சந்தி என்ற பெயர் உண்டு. இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடம் ’மூட்டு’ என்றழைக்கப்படும். மூட்டு வலி என்பது உடலிலுள்ள அனைத்து சந்திகளையும் குறிக்கும். எனினும், பொதுவாக மூட்டு வலி என்பது முழங்கால் மூட்டு வலியைக் குறிப்பிடுவதால், இனி அதனைப் பற்றியே பேசலாம். மூட்டு வலி இல்லாத வீடில்லை எனும்படியாக, வீட்டிற்கு ஒருவர் மூட்டு வலியினால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலைக் காணமுடிகிறது.

மூட்டு வலிக்கான மருந்துகளும் அதிகமாக வணிகப்படுத்தப்படுவதையும் காண்கிறோம். பொதுவாக, நாற்பது வயதைத் தொடுகையில் ஆரம்பிக்கும் மூட்டுவலி பலரை நகரவிடாமல் ஓரிடத்தில் கட்டிப்போட்டு விடுகிறது. நடுத்தர வயதைத் தாண்டிய பலர் அலுவலகத்திற்கு விடுமுறை எடுப்பதும் மூட்டு வலியினால்தான்!

மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்

"வளி (வாதம்) வந்துதானே வலி பிறக்கும்" என வேடிக்கையாகக் குறிப்பிடுவதுண்டு. வளி (வாதம்) நாடியில் ஏற்படும் கோளாறினாலும் ஐயநாடியில் (கப நாடியில்) ஏற்படும் மாறுபாட்டினாலும் மூட்டு வலி ஏற்படலாம். 

வளி (வாதம்), உடலின் இயக்கத்திற்கு காரணமான நாடியாகும். எலும்பு, நரம்பு, தசை இவற்றில் ஏற்படும் நோய்களுக்கு வளிநாடி பாதிப்பே காரணமாக அமையும். உணவு, செயல் இவற்றில் ஏற்படும் மாறுபாட்டினால் வளி (வாதம்) பாதிப்படையலாம்.

உணவினால் வாத நாடி பாதிப்படையும் விதம்

  • புளிப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளல்
  • புளி, மாங்காய் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்தல்
  • புளிப்பை ஏற்படுத்தும் மாவுப் பொருட்கள், கிழங்கு வகைகள், பட்டாணி போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்தல்

செயலினால் வாத நாடி பாதிப்படையும் விதம்

 

  • பசியில்லாமல் உணவு உண்ணுதல், பசித்தபோது உண்ணாமலிருப்பது போன்ற காரணங்களினால் வாயு உண்டாகி, வாத நாடி பாதிப்படையும்
  • மலச்சிக்கல் - மலத்தை ஒழுங்காக வெளியேற்றாமலிருந்தால் வாத நாடி பாதிப்படையும்
  • பகல் தூக்கம் - பகலில் தூங்குவதினால் வாத நாடி பாதிப்படையும் ஐயநாடியும் (கபநாடி) உணவு, செயலினால் பாதிப்படைந்து மூட்டு வலியை உருவாக்கலாம்

 

உணவினால் ஐயநாடி பாதிப்படையும் விதம்

 

  • குளிர்ச்சி பொருந்திய உணவுகளை உண்ணல்
  • குளிர்ந்த நீரை அருந்துதல்

 

செயலினால் ஐயநாடி பாதிப்படையும் விதம்

  • குளிர்ந்த காற்றில் இருத்தல்
  • குளிர்ச்சியான தரையில் படுத்துத் தூங்குதல்

குறிகுணங்கள்

மூட்டுவலியின் முதன்மையான குறிகுணம் வலி. மூட்டுக்களை அசைக்க முடியாமை, கால்களை நீட்டி மடக்க முடியாமை போன்ற பொதுவான குறிகுணங்களும் எல்லோருக்கும் காணப்படலாம். இவையன்றி மூட்டு வீக்கம், மூட்டு சிவந்து காணப்படுதல், சுரம், காலை எழுந்த உடன் மூட்டை அசைக்க முடியாமல் கடுமையான வலி, பிறகு சிறிது நேரம் கழித்து வலி குறைதல் போன்ற குறிகுணங்கள் ஆளுக்கு ஆள் வேறுபடலாம்.

 

உணவே மருந்து:

புளிப்பு, துவர்ப்பு போன்ற சுவையுள்ள பொருட்கள் வாத நாடியை அதிகப்படுத்தி மூட்டு வலிக்குக் காரணமாக அமையலாம். எனவே புளிப்பு, துவர்ப்பு சுவையுள்ள பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, சமையலுக்கு நாம் பயன்படுத்தும் புளி மூட்டு வலியை வெகுவாக அதிகரிக்கவல்லது. எனவே, அதனை முற்றிலுமாக நீக்குவது மூட்டு வலியை மேலும் அதிகரிக்காமல், நோயின் தன்மையைக் குறிக்கும் புளிக்குப் பதிலாக, மரபாக நாம் பயன்படுத்திய  கோடம் புளியை சமையலுக்குப் பயன்படுத்தலாம். எலுமிச்சை புளிப்பும் உடலுக்கு நன்மை  பயப்பதுதான். அதனையும் புளிக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். 

செரிமானத்தைக் கடினப்படுத்தும் கிழங்கு வகைகள், எண்ணெய்ப் பலகாரங்கள் போன்றவை வாயுவை ஏற்படுத்தவல்லவை. எனவே, மூட்டு வலி உள்ளவர்கள் இவற்றை தவிர்த்தல் நல்லது.

தட்டைப் பயறு, மொச்சை, பட்டாணி போன்ற பயறு வகைகளும் வாயுவை ஏற்படுத்தி மூட்டுவலியை அதிகரிக்கவல்லவை. எனவே, இவற்றைப் பயன்படுத்தாமல் தவிர்த்தல் நலம் பயக்கும்.

சூடாக உணவுகளையும் குடிநீரையும் எடுத்துக்கொண்டால், நோயின் தீவிரம் குறையும்.

அன்றாட உணவில் இஞ்சி, மிளகு, சீரகம், பெருங்காயம், பூண்டு, மஞ்சள், ஏலக்காய், வெந்தயம் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வதின் மூலம் சீரணத்தைச் சரிசெய்து கொள்ளலாம். அதன்மூலம் நாடிகளையும் சீராக வைத்துக்கொள்ள இயலும். 

மூட்டுவலியைக் குறைக்கும் முடக்கறுத்தான், பிரண்டை போன்ற மூலிகைகளை வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

எலும்புக்கு உறுதி தரும் முருங்கைக் கீரை, பொன்னாங்கன்னி, அரைக்கீரை, பருப்புக் கீரை போன்ற கீரை வகைகளை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் மதியம் சுக்கு நீர் அருந்துவது நல்லது.

மலச்சிக்கல் இல்லாமலிருக்க தினமும் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளையும் பழங்களையும் மிகுதியாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்திப்பழம், உலர் திராட்சை போன்ற உலர் பழங்கள், கொய்யாப் பழம், பப்பாளி, மாதுளை போன்ற பழங்களும் மலச்சிக்கலை நீக்க வல்லவை. விளக்கெண்ணையை இரவில் தூங்குவதற்கு முன் 10-20 மி.லி. அளவில் நீருடன் கலந்து உண்டாலும் மலச்சிக்கல் நீங்கும். மலச்சிக்கல் இருப்பின் மூட்டு வலி குறையாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். 

வெளி மருந்துகள்

காயத்திரு மேனி தைலம்
பிண்ட தைலம்
வாத கேசரி தைலம்
மயன தைலம்

போன்ற தைலங்கள் மூட்டு வலிக்கு நன்மை தருபவை. ஏதேனும் ஒரு தைலத்தை மூட்டுகளில் நன்கு பூசி, மேலிருந்து கீழாக மெதுவாகத் தேய்த்து அரை மணி நேரம் கழித்து கல் உப்பைத் துணியில் முடிந்து, சுடுநீரில் அழுத்தி ஏற்றமிட மூட்டு வலி குறையும். 

மூட்டில் வீக்கமும் சிவந்தும் காணப்பட்டால் தேய்த்துவிடவோ, ஏற்றமிடுதலோ செய்ய வேண்டாம். தைலத்தை ஒரு சுத்தமான துணியில் தோய்த்து முட்டியில் சுற்றிவைத்து விட்டாலே போதுமானது. 

ஒற்றடம்

முடக்கறுத்தான்
நொச்சியிலை
ஆமணக்கு கொழுந்து
நுணா(அ) மஞ்சிட்டி இலை
பழுத்த எருக்கு இலை

ஆகியவற்றை ஒற்றடமிடப் பயன்படுத்தலாம். 

மேற்கண்ட இலைகளை சிறிதாக அரிந்து, விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, இளஞ்சூட்டுடன் வலியுள்ள மூட்டில் வைத்துக் கட்ட மூட்டு வலி குறையும். 

இலைகளை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, அந்த நீரில் துணியைத் தோய்த்து பொறுக்கின்ற சூட்டில் மூட்டில் ஒற்றடமிடலாம்.

பற்று

மூசாம்பர பற்று என நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதனை வீக்கமுள்ள மூட்டில் பற்றிட வீக்கம் குறையும்.

பச்சரிசி மாவுடன் கடுகை நீர்விட்டு அரைத்ததைக் கலந்து மூட்டு வீக்கத்திற்கு பற்றிடலாம். 

முடக்கறுத்தான் இலையை அரைத்துப் பூசிப் பற்றிடலாம். 

தொக்கணம் (மசாஜ்)

தைலங்களைப் பூசி தொக்கணம் (மசாஜ்) செய்ய மூட்டு வலி குறையும். முறையாக தொக்கணம் கற்றவர்களிடமோ, சித்த மருத்துவரிடமோ தொக்கணம் செய்து கொள்வது இன்றியமையாததது.

உள்மருந்துகள்

1.முடக்கறுத்தான் பொடி
முடக்கறுத்தான் இலைகளை நிழல் உலர்த்தலாக உலர்த்திப் பொடித்துச் சலித்து வைத்துக் கொள்ளவும். கடைகளில் கிடைப்பது கலப்படம் மிக்கது என்பது நாமே செய்து கொள்கையில் புரியும்.

அளவு - மூன்று விரல் கொள்ளும் அளவு காலை, இரவு உணவிற்கு முன் சுடுநீருடன் சாப்பிட வேண்டும்.

2.அமுக்கரா சூரணம் 
அளவு - காலை, இரவு வேளைகளில் ஒன்று - இரண்டு தேக்கரண்டி அளவு தேனுடன் சாப்பிடலாம்.

3.கீல்வாயு சூரணம்
அளவு - மூன்று விரல் கொள்ளும் அளவு தேனுடன் காலை, இரவு.

அடிப்படையான சில உள்மருந்துகளே இங்கு கூறப்பட்டிருக்கிறது. உயர்வகை சித்த மருந்துகள், மூட்டுவலியின் தீவிர நிலையில் எடுக்க வேண்டியிருக்கலாம். சித்த மருத்துவரின் முறையான வழிகாட்டுதலின்படி அத்தகைய உயர்வகை  சித்த மருந்துகளை எடுப்பதின் மூலம் மூட்டுவலியிலிருந்து விடுபட முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். அடுத்த இதழில் 'மூலம்' பற்றிப் பார்க்கலாம்!           

சித்த மருத்துவர் அருண்  

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles