ஆட்டிசம் - 6

Saturday, July 30, 2016

ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிகிச்சைகள், பயிற்சிகள் பற்றிப் பார்த்தோம்.  அவர்களுக்கான வாழ்க்கைமுறைப் பயிற்சிகள் பற்றி இந்த இதழில் பேசுவோம். நோய்க்குறிகளை மட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வில் வேறு  என்ன மாற்றங்கள் செய்யலாம்?  பேச்சு வராத குழந்தைகளுக்கு, 

 

எளிய சொற்களின் மூலமும் எளிய வாக்கியங்களின் மூலமும் அவர்களிடம் பேசுங்கள். அவர்களுக்கு பேச்சு புரியாது என்பதாக எடுத்துக்கொண்டு, அவர்களுடன் பேசாமல் காரியங்களைச் செய்யாதீர்கள். எடுத்துக்காட்டாக, அவர்களுக்கு சட்டையைப் போட்டுவிடும்போது, ‘கையைத் தூக்கு’, ‘பட்டனைப் போடு’, ‘இந்தச் சட்டை என்ன நிறம்? சிவப்பு நிறம்!’ போன்ற தொடர்புடைய எளிய  வாக்கியங்களை, அவர்களுக்குத் தெளிவாக கேட்கும்படி அமைதியாகச் சொல்லுங்கள்.

பொருட்களை தெளிவாகச் சுட்டிக் காண்பித்து அவற்றின் பெயரை தெளிவாகச் சொல்லுங்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள். செய்ததுதவறானால் மீண்டும் செய்யச் சொல்லுங்கள். சரியாகச் செய்தால் புரியும்படி பாராட்டுங்கள். விமர்சனம் செய்துகொண்டோ, நீண்ட வாக்கியங்களில் விளக்கம் கொடுத்துக்கொண்டோ இருக்காதீர்கள்.

 

நீங்கள் சொல்வதை அவர்கள் மூளை உள்வாங்குவதற்கு அதிக நேரம் ஆகும். உங்களுக்கு அவசரம் என்பதால், அவர்களும் உடனே புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் சொல்வதை அவர்கள் கண்டுகொள்ளாதபோது, அவர்களைப் பதட்டப்படுத்தக்கூடாது. அப்படிச் செய்தால், நீங்கள் விரும்பியதற்கு மாறாக, மேலும் மந்தமாக நடந்து கொள்வார்கள்.

 

அவர்கள் எதிரில், மற்றவர்களுடன் அமைதியாகப் பேசுங்கள். உரக்க, வேகமாகப் பேசினால் குழந்தைக்குப் பலன் கிடையாது.

 

பேச்சு வராத குழந்தைகளுக்கு, உணவை நன்கு குழைத்து ஊட்டும் பழக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்தக்கூடாது. உணவை மெல்லுதல், பேச்சு வர உதவும்.  மின்பற்குச்சியை (Electric Toothbrush) வைத்து, வாய் ஓரங்களில் பேச்சு தசைகளுக்கு மசாஜ் கொடுக்கலாம்.

 

 சில வருடங்கள் கழித்தும் பேசாத குழந்தை, பல நேரங்களில் நீங்கள் என்ன பேசுகிறீர்கள்(Comprehend) என்பதைப் புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. ஆனால், உங்களிடம் தன் மனதில் உள்ளதை சொல்லத் தெரியாது. அதுபோலவே,  ஒரு கத்தி மேசையிலிருந்து கீழே விழும் நிலையில் உள்ளது என்பதைத் தெரிந்துகொண்ட குழந்தை, அதை சீர்செய்ய முயற்சி செய்யலாம். இதை கவனிக்காத  நீங்கள், ‘கத்தியை ஏன் எடுத்தாய்?’ என்று கோபப்பட வாய்ப்பு உள்ளது. பதில் சொல்லத் தெரியாத நிலையில், அந்தக் குழந்தை மிகவும் குழம்பிப்போகும். இந்த மாதிரி  சூழல்களில், அமைதியாகக் கவனியுங்கள். பேச்சு தெரியாத குழந்தையா? அல்லது  பேசத்தெரியாத குழந்தையா? என்பதை அவ்வப்போது தெரிந்துகொள்ளுதல் மிகவும்  முக்கியம். 

 

உணவு

மன வளர்ச்சித் தடை நோய் கண்ட குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாது என்று  சொல்லப்படுகிற எந்த உணவையும் அவர்களுக்கு உண்ணக் கொடுக்காதீர்கள். அதிக காரம், அதிக உப்பு, அதிக இனிப்பு ஆகியவற்றை நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும். இவற்றில் சில, வயிற்றையும், உடம்பையும், மனநிலையையும்பாதிக்கும்.

 

 ஒத்துக்கொள்ளக்கூடிய உணவுகளையும், சரியான சுவையிலும் பதத்திலும் கொடுக்க வேண்டும். நல்ல உணவைக் கூட சுவையற்ற பதத்தில் கொடுத்து, ஒருமுறை அவர்கள் தவிர்த்துவிட்டால், பிறகு அதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். அதேபோல, குழகுழப்பான தொடுபதத்தில் (Viscous Texture) உள்ள உணவுகள் அவர்களுக்குப் பிடிக்காது.

 

உணவைச் சிறிய அளவில், மிகவும் குழைக்காமல் கொடுத்து, மென்று தின்ன பழக்க வேண்டும். உணவை மெல்லுதல் (Chewing/ Mastication)  வாயையும் மூளையையும் சாந்தப்படுத்தும்(Pacify). கண்ட பொருட்களை வாயில் போடுவதை (Pica) தவிர்க்கும். 

 

உணவை நன்கு குழைத்துக் வாயில் திணித்து வேலையை முடிப்பது எளிதாகத் தெரிந்தாலும், பிறகு பழக்கத்தை மாற்ற பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். அவர்களாக உண்ணவும் மாட்டார்கள். மென்று தின்னத் தெரியாததால், பல உணவுகளைத் தவிர்ப்பார்கள்.பழங்கள் நிறைய சாப்பிடக் கொடுக்கலாம். பழரசம் அதிகம் கொடுத்துப் பழக்கக்கூடாது.

 

உடைகள்

சில வகை உடைகள் அவர்களுக்கு ஒவ்வாமையை(Allergy) கொடுக்கும்.  கம்பளி மற்றும் செயற்கை இழை உடைகள் (Synthetic) சில குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாது அல்லது போட்டுக்கொள்ள பிடிக்காது. அந்த
நேரங்களில் வலிந்து அணியச் சொல்லாதீர்கள். உடை அவர்கள் உடலுக்கோ மனதுக்கோ  தொந்தரவு செய்வதனால், அவர்கள் வேறு மாதிரியோ, முரட்டுதனத்துடனோ  நடந்துகொள்ள வாய்ப்பு உள்ளது.

 

பொதுவாக, உடை இல்லாமல் இருக்கப் பழக்காதீர்கள். அதேபோல், உங்களுக்குப்  பிடிக்கிறது என்பதனால் எதிர்பாலரின் உடைகளை உடுத்தி (Cross Dressing) அழகு பார்க்காதீர்கள். எடுத்துக்காட்டாக, ஆணுக்கு பெண் உடையை மாட்டி அழகு பார்க்காதீர்கள். இது ஒருவேளை அவர்களுக்குப்  பிடித்துப்போனால், நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.

 

நல்ல பழக்கமும் தீய பழக்கமும்

நோய் கண்ட பல குழந்தைகள் ஒன்றைப் பிடித்துக்கொண்டு (Obsessive)  அதிலேயே கிடப்பார்கள். எதிலும் மாற்றம் ஏற்படுத்தினால், அவர்களுக்குப் பிடிக்காது. இந்த பண்பை முடிந்தவரை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  எழுந்ததும் படுக்கையை அவர்கள் உதவியுடன் சுருட்டி வைப்பது, உடனே பல் துலக்கச் செய்வது, அவ்வப்போது தலையணை உறைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை மாற்றுவது, உணவைத் தானாக உண்பது போன்று எதை வேண்டுமானாலும் பழக்கமாக மாற்றிவிடலாம்.

 

தூக்கம்

குழந்தைகள் தூங்க வேண்டிய நேரத்தில் அவர்கள் மீது கவனம் வைத்து இசையையோ, பிற உபாயங்களையோ பயன்படுத்தி முதலில் அவர்களைத் தூங்கச் செய்ய வேண்டும். நமக்கு வேலை முடிந்து ஓய்ந்துபோய் படுக்கும் நேரம் வந்துவிட்டால், அவர்கள் தூங்கும் முன்னே நாம் தூங்க நேரிடும். பெரும்பாலான குழந்தைகள் நீண்ட நேரம் தூங்காமல் கிடப்பார்கள். சிலர் அதிகாலை வரை கூட தூங்க  மாட்டார்கள். அகால வேளைகளில் தூங்கிக்கொண்டு, உணவு வேளைகள் மாறிப்போய், இது பெரும் தொந்தரவாக மாறிவிடும். ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் விழித்திருக்கும்போது, மீச்செயல்பாட்டுக்கு ஆளாகி மிகவும் அவதிப்படுவார்கள். மற்றவர்களுக்கும் பெரும் அவதி ஆகிவிடும். 

 

இத்தகைய குழந்தைகளுக்குச் செரிமான சிக்கல் பெரும்பாலும் இருக்கும் என்று முன்னரே பார்த்தோம். அகாலத்தில் உணவு கொடுப்பது, அதிக எண்ணெயில் பொரித்த பண்டங்களைக் கொடுப்பது, சர்க்கரை/எசென்ஸ் உள்ள பண்டங்களைக் கொடுப்பது, அதிக உணவைக் கொடுப்பது, கடையில் வாங்கிய உணவுகளைக் கொடுப்பது போன்றவற்றால் செரிமானம் கெடும். இதனால், குழந்தைகள் தூக்கத்தை இழக்கும். தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பே, உணவு கொடுத்து முடித்திருக்க வேண்டும். பொதுவாக, பகல் இரண்டு மணிக்கு மேல் கடின உணவுகள் எதையும் கொடுக்கக்கூடாது.

 

விளையாட்டு

சுத்தமான மண்ணில் விளையாடுவது நல்லது. களிமண்ணையோ, பிணைந்த கோதுமை மாவையோ, விஷம் இல்லாத வண்ணக் களிமண்ணையோ(Play Doh) விளையாடக்கொடுப்பது மிகவும் நல்லது. இசைப்பயிற்சி, வரைதல் போன்று பலவிதமான நடவடிக்கைகளிலும், விளையாட்டுக்களிலும் ஈடுபடுத்தலாம். அப்போது, ஒன்றில் இல்லையென்றால் ஒன்றில் அவர்களுக்கு ஆர்வம் வர வாய்ப்பு உள்ளது.பிற குழந்தைகள் விளையாடும் இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல் மிகவும் நல்லது. 

 

அதே சமயம், மிகவும் சத்தமான சூழலையோ (Noisy), பிற குழந்தைகள் அட்டகாசம் செய்யும் சூழலையோ, இந்தக் குழந்தைகள் விரும்பமாட்டார்கள். அமைதியாகப் பேசக்கூடிய, விளையாட்டில் ஈடுபடுத்தக்கூடிய குழந்தைகளுடன்  அவர்களை அதிகம் ஈடுபடுத்தலாம்.

 

 ஆட்டிசக் குழந்தையின் அக்கா, தங்கை, அண்ணன், தம்பிகளிடம்(Siblings) இந்தக் குழந்தையின் சிக்கல்களை எடுத்துச் சொல்லிப் பழக்க வேண்டும். நன்கு பழக்கப்பட்ட சகோதர சகோதரிகளினால் , ஆட்டிசம் கண்ட குழந்தைகள் பெரிய பலன் அடைவதை ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

 

குழந்தைகளிடம் பழகுமுறை

இது ஒரு நோய் என்பதை எந்தக் கட்டத்திலும் மறக்காதீர்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் குழந்தைக்கு காது நன்றாக உள்ளது என்று மருத்துவர் பரிசோதித்து சொல்லியிருப்பார். ஆனால் நீங்கள் 10 முறை  கூப்பிட்டாலும், திரும்பிப் பார்க்க மாட்டார்கள். வேறொரு நேரத்தில், நீங்கள் ஒருமுறை கூப்பிட்டாலே திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள்  குழம்பிப் போவீர்கள். இந்த நடத்தைக்காக, உங்களுக்கு கோபம்கூட வரலாம். நோய்க்குறிகள் அவ்வப்போது மாறிக்கொண்டேயிருக்கும் மனநோயில் சிக்கிக் கொண்டதனால்தான் குழந்தைகள் கண்டபடி நடக்கிறார்கள் என்பது, எப்போதும்  நினைவில் இருக்க வேண்டும்.

 

பொறுமை இழந்து நீங்கள் திட்டுவதையோ, அடிப்பதையோ(Punishment) இந்தக் குழந்தைகள் புரிந்துகொள்ள மாட்டார்கள். நீங்கள் விரும்பாத செயலை, மீண்டும் மீண்டும் செய்வார்கள். அவர்கள் அப்படிச் செய்யாமல் இருக்க என்ன தேவையோ, அதை நீங்கள் கற்றுக்கொண்டு செய்ய வேண்டுமே தவிர, எந்தக் கட்டத்திலும் பொறுமை இழக்கக்கூடாது. 

 

நீங்கள் அடித்தால், நிறைய குழந்தைகள் வலியைச் சரியாக உணர மாட்டார்கள். அவர்களுக்கு வலிக்கவில்லை என்ற கோபத்தில், நீங்கள் தண்டனையை அதிகப்படுத்த வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு வலித்தால்கூட, அந்த வலி மனதை சென்றடையாது. பிறர் அடித்தால், அதை  உங்களிடம் வந்து சொல்லக்கூடத் தெரியாதவர்கள் இந்தக் குழந்தைகள் என்பதை  மறக்காதீர்கள். அந்த தண்டனையால் என்ன பயன் என்று யோசியுங்கள்.

 

நீங்கள் விரும்பாத செயல்களை அவர்கள் செய்யும்போது, அது உங்களுக்குப் பிடிக்கவில்லை(Disapproval) என்பதைக் காட்ட, ஏதாவது குறியீடு வைத்திருங்கள். (அவர்கள் கண்களை நேரே பார்த்து, ‘தப்பு’ என்று சொல்வதுகூட போதும்) அதேபோல், அவர்கள் சரியானதைச் செய்யும்போது, அதை  நீங்கள் பாராட்டுவதை (Appreciation) காட்ட, ஒரு குறியீடு வைத்திருங்கள். இந்த இரண்டு குறியீடுகளையும் மாற்றாமல்  பயன்படுத்தினால், நாளடைவில் அவர்கள் அதைப் புரிந்துகொள்வார்கள். விரும்பாத செயல்களைக் குறைப்பார்கள். குறிப்பாக உரத்த குரலில் கத்துவது (Scolding), நொந்து போவது (Deppression), அடிப்பது (Thrashing / Beating), பெரியவர்களுக்குள் சண்டையிடுவது (Quarrel) போன்றவை, எந்த விதத்திலும் பயன் தராது.  மாறாக, எதிர் விளைவுகளை (Counter Productive)  ஏற்படுத்தும்.

மாற்றம் (Change from routines), ஆட்டிசம் குழந்தைகளுக்குப் பிடிக்காத ஒன்று. வழக்கமாகச் செய்வதை மாற்றி எது  செய்தாலும் அவர்கள் ஒத்துழைக்கப் போவதில்லை.புதிய மாற்றங்களை ஏற்படுத்தும்போது,  சிறுக சிறுகத்தான் (Gradual)  அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். அதற்கே பல  உபாயங்களை (Techniques) நாம் கடைபிடிக்க வேண்டியிருக்கும் என்பதை மனதில் கொண்டு அவர்களை அணுகினால், நமக்கு மன உளைச்சல் குறையும்.

 

தானாக விளையாடத் தெரியாததனாலும், பேசத் தெரியாததனாலும், நீண்ட நேரம் எதுவும் செய்யாத நிலையில் (Lack of Activity) இருக்கும் குழந்தைகள் (குறிப்பாக மிகையறிவு ஆட்டிசக் குழந்தைகள் - High Functioning Autism), மிகவும் எரிச்சலான நிலைக்குத் (Irritation/ Ferustration) தள்ளப்படுவார்கள். அவர்கள் தரையிலோ, சுவறிலோ, நோட்டுப்புத்தகத்திலோ அர்த்தமில்லாமல் கிறுக்குவார்கள். இங்கும் அங்கும் ஓடுவார்கள். சுவரில் கையை அறைவார்கள். பெற்றோர் கவனத்தை ஈர்க்க, ஏதாவது விரும்பத்தகாததைச் செய்வார்கள். குறிப்பாக, தன் தாய் ஓய்வெடுக்க முற்படும்போது ஏதாவது செய்து வைப்பார்கள்.

 

இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்கான தீர்வு, பலவிதமான பயிற்சிகளை அவர்களுக்கு அளிப்பது. அவர்கள் மேல் விளையாட்டாக தலையணையைப் போட்டு அமுக்குவது போன்ற விளையாட்டுகள், இசைக்கருவிகள், ஊஞ்சலாட்டம், யோகப்பயிற்சி போன்று நாமே  வலிந்து அவர்களுக்கு வேலை கொடுப்பது. இதில் வேறொரு பக்க பலனும் (byproduct) உண்டு. நாள் முழுவதும் வேலை செய்து சோர்ந்து போகும்போது, அவர்கள் வீரியமாக மாறுவதை, இந்தத் திட்டமிட்ட செயல்பாடுகள் குறைக்கும். இருவரும் அயர்ந்து தூங்கி, மறுநாள் புத்துணர்ச்சியோடு எழுந்துகொள்ள இது உதவும்.

 

ஆட்டிசம் கண்ட குழந்தைளைப் பயிற்சியின் மூலம் மாற்ற முயற்சிக்கும் பெற்றோர்களும் மற்றோர்களும், முதலில் தாம் மாற வேண்டும். தாம் எந்த வகையில் மாற வேண்டும் என்பதை வல்லுனர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மனதில் அன்பும், நடைமுறையில் பொறுமையும், அறிவையும் பயன்படுத்தினால்  மட்டுமே முன்னேற்றம் காண முடியும்.

 

கூர்ந்து கவனித்தல்/ பதிவு செய்தல்

அன்றாடம் குழந்தைகள் உண்னும் உணவு, குழந்தையின் நடவடிக்கைகள் அனைத்தையும் கூர்ந்து கவனித்து, ஒரு குறிப்பேட்டில் (Diary) பதிந்து வர வேண்டும். குழந்தைக்கு நோய் அறிகுறிகள் கூடவோ, குறையவோ செய்யும்போது, ஓரளவுக்காவது காரணங்களை ஊகித்து மாற்றங்கள் செய்ய இது வழிவகுக்கும். தேவைப்பட்டால் புகைப்படம் எடுத்தல், வீடியோ எடுத்தல் மூலமாகவும்  நடவடிக்கைகளைப் பதியலாம். இது மருத்துவரிடம் பகிர்ந்துகொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.

 

ஆட்டிசம் தொகுப்பு நோய்கள் வராமல் இருக்க ஏதாவது முன் எச்சரிக்கைகள் உள்ளனவா?

 • தென்னிந்தியாவில் அதிக நடைமுறையில் இருக்கும், நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்யும் வழக்கத்தை அறவே விட்டொழிக்க வேண்டும்.
 • பொதுவாக, 40 வயதைத் தாண்டிய ஆணுக்கும் 35 வயதைத் தாண்டிய பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஆட்டிசம் நோய் அதிகம் தாக்குகிறது என்பதை க் கருத்தில் கொள்ளவேண்டும்.
 • கர்ப்ப காலங்களில் உடல் உறவு கொள்வதை, அறவே தவிர்க்கலாம். பெண்ணின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்க வாய்ப்புண்டு. 
 • கர்ப்ப காலங்களில், நிறைய மருந்துகள் உட்கொள்ளுவதைப் பெண்கள் தவிர்க்க வேண்டும். அமைதியான மனநிலையுடன் இருக்க வேண்டும்.
 • கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு, தொற்று நோய்கள் எதுவும் அண்டாதவாறு  பார்த்துக்கொள்ள வேண்டும்.
 • கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு தைராய்டு (Thyroid Deficiency) போன்ற ஹார்மோன் குறைபாடுகள், வைட்டமின்  குறைபாடுகள் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். தைராய்டு குறைபாடுள்ள தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டக் கூடாது. பொதுவாக நல்ல உணவின் மூலம் வைட்டமின் குறைபாடுகளைப் போக்கிக் கொள்ளலாம். முதல் குழந்தைக்கு மனவளர்ச்சி தொகுப்பு நோய் இருந்தால், அடுத்த  குழந்தைக்கும் வரும் வாய்ப்புகள் அதிகம். 
 • பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கு நோய் வரும் வாய்ப்புகள் ஐந்து மடங்கு அதிகம்.

 

ஆட்டிசம் நோயால் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

 

பொதுவாக, கீழ்க்கண்ட பல பாதிப்புகள் குடும்பத்தில் உருவாகின்றன.

 • கணவன் - மனைவி, இருவரும் ஒருவருக்கொருவர் குறை கண்டுபிடித்தல்
 • குடும்பங்களுக்கு இடையே மனத்தாங்கல், பகை
 • தினமும் இது தொடர்பான சண்டை சச்சரவுகள்
 • மருத்துவரிடம் காண்பித்து நோயை உறுதி செய்வதற்கு கருத்து உடன்பாடு (Consent) இல்லாதது
 • பெற்றோரில் ஒருவர் தானாக சரியாகிவிடும் என்று நினைத்து மருத்துவரிடம்  செல்ல வேண்டாம் என்று சொல்வது
 • நோய் வெளியில் தெரிய வேண்டாம் என்று மறைக்க முயல்வது, அதனால் ஏற்படும் சிக்கல்கள்
 • குழந்தையைப் பற்றி பிறர் பேசுவதைக் கேட்டு, மனம் நொந்துபோவது
 • வாழ்க்கையே முடிந்துபோய் விட்டதாக நினைப்பது
 • பெற்றோருக்கு ஏற்படும் மனச்சிக்கல்கள் (Deppression, Etc..)
 • குழந்தையைக் கவனிக்கும் அளவுக்கு பொருளாதாரம் இல்லாதது
 • பெரும் பணத்தை செலவிட வேண்டியிருப்பது (Expensive)
 • இருவரும் வேலைக்குச் செல்கிறவர்கள் எனில், குழந்தையைக் கவனிக்கும் அளவுக்கு இருவருக்கும் நேரம் இல்லாமல் இருப்பது
 • ஒருவரின் பொறுமை இன்மையினால், தினமும் ஒரு மருத்துவரிடம் தூக்கிக்கொண்டு ஓடுவது
 • எப்படியாவது மருத்துவர்கள் தன் குழந்தையை உடனடியாகச் சரிசெய்து விடுவார்கள் என்று நம்புவது 
 • பிறர் சொல்கிறார்கள் என்று ஆளுக்கொரு திசையில் அலைபாய்வது 
 • நோயைப்பற்றி தெரிந்து கொள்ளாமல், பகுத்தறிவற்ற செயல்களில் ஈடுபடுவது
 • இவ்வளவு வயது ஆனபின், குழந்தைக்கு ஏன் அறிவு வரவில்லை என்று கோபப்படுவது, குழந்தையைத் தண்டிப்பது 
 • பகலில் தூங்க வாய்ப்பில்லாத தாயோ, தந்தையோ, இரவிலும் விழித்து குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருப்பது 
 • குழந்தைக்காக குடும்பத்தின் உணவு போன்ற வழக்கங்களை மாற்ற வேண்டியிருப்பது 
 • ஆட்டிசம் கண்ட குழந்தையின் முழு பாரத்தையும் ஒரு பெற்றோரே (பெரும்பாலும் தாய்) தாங்க வேண்டியிருப்பது
 • குழந்தையைத் தொடர்ந்து பராமரிப்பவரின் வலியை, பிறர் உணராமல் இருப்பது 
 • இரண்டு குழந்தைகள் இருப்பின், ஆட்டிசக் குழந்தையினால் மற்ற குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகள்
 • குழந்தை சரியாக நடந்துகொள்ளாததால், வெளியே எங்கும் செல்ல முடியாத சூழல்
 • சத்தமான இடங்களுக்குச் சென்றால் குழந்தையைப் பாதிக்கிறது என்பதால் , திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்ல முடியாமை

 

வரும் இதழ்களில்...

 • ஆட்டிசம் நோயால் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வுகள் என்ன?
 • ஆட்டிசம் நோய் கண்ட சில குழந்தைகள் மிகையறிவு உள்ளவர்களாக இருப்பதை எப்படிக் கண்டறிவது?
 • அவர்களின் திறனை சிறப்பாகப் பயன்படுத்தச் செய்யும் வழிகள் என்ன?
 • நோயால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?...போன்ற கேள்விகளைப் பார்க்கலாம்

இரா. கோவர்தன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles