ஆட்டிசம் (மனவளர்ச்சித்தடை நோய்) - 5

Friday, July 29, 2016

மனவளர்ச்சித்தடை நோய்க்குறிகளை அளந்து அறிய (Assessment) வேண்டிய தேவை என்ன? 

மனவளர்ச்சித்தடை நோயை ஆட்டிசம் என்று ஒரு சொல்லில் குறிப்பிட்டாலும், அது பல நோய்க்குறிகளின் தொகுப்பு (Spectrum Disease) நோய் என்பதை முன்னரே பார்த்தோம். கீழ்கண்ட சில காரணங்களால் பல்வேறு நோய்குறிகளின் அளவு மற்றும் தன்மை பற்றி அளந்து அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம்.

 

 • நோய் இருப்பதை மிகச்சிறிய வயதிலேயே உறுதி செய்துகொள்ள (To Confirm presence of ASD)
 • நோய் தொகுப்பில் குறிப்பிட்ட, எந்த சிக்கல்கள் தாக்கியுள்ளன என்பதை அறிய (Asperger's Syndrome, HFA, etc.)
 • பல்வேறு சிக்கல்களின் அளவைத் தெரிந்துகொள்ள (Levels of Infliction)
 • வெளிப்படையாகத் தெரியாத சில அறிகுறிகளை (Symptoms not normally visible) அறிந்துகொள்ள
 • சரியான பயிற்சிகளைக் கொடுக்க
 • பயிற்சிகளுக்குப் பின் அதன் பலன்களை அறிந்துகொள்ள (To evaluate the results of training/ therapy)
 • சரியான மருந்துகளைக் கொடுக்க
 • அறிவுத்திறனை அறிந்துகொள்ள

பல்வேறு அளந்து அறியும் முறைகளைப் (Assessment Methods) பயன்படுத்தி ஒருவருக்கு ஆஸ்பர்ஜர் நோய் (Asperger's Syndrome) உள்ளதா அல்லது அறிவு மீச்செயல்பாட்டு (High Functioning Autism) மனவளர்ச்சித் தடை உள்ளதா போன்றவற்றைக் குறிப்பிட்டு தெரிந்து கொள்ளலாம்.
 
மனவளர்ச்சித்தடை நோய்க்குறிகளை அளந்து அறியும் (Assessment Methods) முறைகள் யாவை?

பெரும்பாலும் கேள்விகள் (Meaningful Questions) மூலமும், குழந்தையை பல சூழல்களில் (Observation under various environments) கூர்ந்து கவனித்தல் மூலமும், நோயின் தாக்கம் பற்றிய முடிவுகளுக்கு வருகிறார்கள் இந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற வல்லுநர்கள் (Experts). குழந்தையின் நோய்ச் சிக்கலை அளந்து அறியும் நோக்கில் கேட்கப்படும் மிக எளிய கேள்விக்குக்கூட, மிக ஆழ்ந்த அர்த்தம் இருக்கலாம். 

நோயைப்பற்றி சில அனுமானங்களை (Assumptions/ Findings) உறுதி செய்ய, சில  மருத்துவப் பரிசோதனைகளை செய்யச்சொல்வார்கள். எடுத்துக்காட்டாக, பேச்சு வராத ஒரு குழந்தையின் காதை, காது மூக்கு தொண்டை நிபுணர்களோ (ENT Specialists), ஒலியியல் நிபுணர்களோ (Audiologist)  பரிசோதனை செய்ய வாய்ப்பு உள்ளது. அது போலவே, சில குழந்தைகளுக்குப் பலவிதமான ஒவ்வாமைக்கான (Allergy) ரத்தப்பரிசோதனை செய்யவும் வாய்ப்பு உள்ளது.
 

கேட்டு, பார்த்து, கவனித்து (Observation) அளந்தறியும் முறைகள்:

 • குழந்தையைப்பற்றி  பெற்றோரிடம் பல கேள்விகளைக் கேட்டு அறிதல்
 • எத்தனை வயதில் அறிகுறிகளை கவனிக்கத் தொடங்கினீர்கள்?
 • எந்த அறிகுறியை வைத்து மருத்துவரிடம் வந்துள்ளீர்கள்?
 • நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொண்டீர்களா?
 • ஏதாவது நோய் வந்த பின் இந்த சிக்கல் தென்பட்டதா?
 • சரியான வயதில் குழந்தை கவிழ்ந்ததா, நடக்கத் தொடங்கியதா அல்லது பேசியதா?  … என்பது போன்ற கேள்விகள்

 
பதில் சொல்லும் வயதுடைய குழந்தையிடம் ,நேரடியான கேள்விகளை கேட்டல்...

 • உன் பெயர் என்ன?
 • அதை எடுத்துக்கொடு..
 • பெற்றோர் பெயர் என்ன?
 • இவர் யார்?
 • என்ன சாப்பிட்டாய்?  … என்பது போன்ற கேள்விகள்
 • சில வகையான விளையாட்டுகளை  விளையாடச்செய்து கவனித்தல்... 
 • இதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட விளையாட்டுகளில் குழந்தையை ஈடுபடுத்தி கவனித்தல்
 • விளையாட்டில் ஆர்வம் உள்ளதா?
 • பிறருடன் சேர்ந்து விளையாடத் தெரிகின்றதா?  … என்பது போன்றவற்றிற்கான விடை அறிதல்

 

பொதுவாக , குழந்தையின் அனைத்து  நடவடிக்கைகளையும்  கூர்ந்து கவனித்தல். சில சூழல்களை ஏற்படுத்தி கவனித்தல்; குழந்தையின் நடவடிக்கைகள்  குழந்தையின் வயதைப் பொறுத்தும் நோய் தாக்கத்தின் அடிப்படையிலும் அமையும்...

 

 • பெயரைக் கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கின்றதா?
 • புதிய சப்தம் கேட்டால் திரும்பிப் பார்க்கின்றதா?
 • கூப்பிட்டவரின் முகத்தைப் பார்க்கின்றதா?
 • ஒரே பொருளின் மீது கவனம் காட்டுகின்றதா?
 • மீச்செயல்பாடு
 • பேச்சுத் திறன் 
 • மொழித்திறமை
 • அறிவுத்திறன்
 • எழுத்தறிவு...போன்றவை

மேற்சொன்ன அவ்வளவு செய்திகளும் மேலைநாட்டு வல்லுனர்களால் பல காலங்களாக முறைப்படுத்தப்பட்டு, நிரப்பக்கூடிய படிவம் (Forms) வடிவில் கிடைக்கின்றன. பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் படிவங்களையும், நோயறியும் முறைகளையுமே நமது நாட்டிலும் பின்பற்றுகிறார்கள். அரசாங்கங்கள் அறிவிக்கும் நெறிமுறைகள் (Example: DSM-5 in US) அடிப்படையிலும், ஆராய்ச்சி அனுபவ அடிப்படையிலும், பல படிவங்கள் நடைமுறையில் வந்துவிட்டதால், மருத்துவ உலகத்திலேயே ஒருமித்த ஒரு கருத்து இல்லை என்பது தெரிகிறது. அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும்போது, பெருத்த சர்ச்சைகளும்  ஏற்படுகின்றன. 

 

பரவலாகப் பல படிவங்கள் இருப்பினும் அவற்றில் சில கீழே தரப்பட்டுள்ளன.

Childhood Autism Rating Scale (CARS)  சிறார் ஆட்டிச நோய் தரம் அறியும் படிவம்

பொதுவாக சிறு வயது குழந்தைகளுக்கு ஆட்டிசம் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவும் படிவம். பதினைந்து கேள்விகள் கொண்ட இந்த படிவம், ஆட்டிசம் நோய் தாக்கத்தின் அளவைக் கணக்கிட (Calculate) உதவும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒன்றிலிருந்து நான்கு வரை தர மதிப்பெண்கள் (1 to 4 Ratings) வழங்குவதன் மூலம்  நோயின் தாக்கத்தைக் கணக்கிடலாம்.

CARS2-ST என்ற படிவத்தை 6 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்குப் பயன்படுத்தலாம். ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, அறிவுத்திறன் (Estimated IQ) 79க்கு கீழ் இருந்தால், இதனைப் பயன்படுத்தலாம். 

CARS2-HF என்ற படிவத்தை 6 வயதுக்கு மேல் நன்றாக பேசக்கூடிய, 80க்கு மேல் அறிவுத்திறன் (Estimated IQ) உள்ள குழந்தைகளுக்குப் பயன்படுத்தலாம்.
பொதுவாக CARS2-QPC என்ற படிவத்தைப் பெற்றோர்களை வைத்து பூர்த்தி செய்தபிறகு, வல்லுநர்கள் (குழந்தையை தம் பங்கிற்கு பலவிதமாக சோதித்து) CARS2-ST படிவத்தையோ அல்லது CARS2-HF படிவத்தையோ நிரப்புவார்கள். 
 

Gilliam Autism Rating Scale (GARS) கில்லியம் ஆட்டிச நோய் தரம் அறியும் படிவம்

 • பொதுவாக 3 வயதிலிருந்து 22 வயது வரையிலும் பயன்படுத்தக்கூடிய படிவம்
 • 42 தலைப்புக்களில் கேள்விகளை உடையது
 • ஒரே விதமான செயல்பாடுகள் (Stereotyped Actions) , பேசும்/ உரையாடும் திறன் (Communication Skills) , பழகும் திறன் (Socializing Skills) போன்றவற்றைக் கணிக்கும் படிவம்

 
Autism Behaviour Checklist (ABC) ஆட்டிசம் நடத்தை சோதனைப் பட்டியல்

 • 57 கேள்விகள் கொண்ட பட்டியல்
 • நுகர் திறன் (Sensory), பழகு திறன் (Socializing), உடல்/ கருவி (Body/ Tools Usage) பயன்பாட்டு திறன், பேச்சு/ மொழித்திறன் (Speech/ Language) , சுய பராமரிப்புத் திறன் (Self Care) போன்ற தலைப்புக்களில் கேள்விகள் இருக்கும் 

மேற்கண்ட படிவங்களில் உள்ள கேள்விகளுக்கு, குழந்தையிடம் நெருங்கிப் பழகி மட்டுமே விடை தேட முடியும். தவிர, கேள்விகளின் உள் அர்த்தம் புரிந்து பதில் சொல்ல வேண்டும். இந்த நிலையில் பெற்றோரும் துறை வல்லுநர்களும் மிகவும் கவனத்துடனும் பொறுமையுடனும் செயல்பட்டால் மட்டுமே, நோயின் உண்மை நிலையை அறிய முடியும்.
 
ஆட்டிசம் என்று முடிவாகிவிட்ட நிலையில் கீழ்கண்ட சோதனைகளையும் செய்து வேறு பல குறைபாடுகளைக் கண்டறியவும் வாய்ப்பு உள்ளது. 

 

General Physical Assessment

 • பொதுவான உடல் பரிசோதனை

 

Sensory Integration and Praxis Test 

 • நுகர் உணர்வு ஒருங்கிணைப்பு (Integration) மற்றும் ஒத்திசைவு (Coordination) பரிசோதனை
 • ஆட்டிசம் கண்ட குழந்தைகளில் பார்வை, செவித்திறன், தொடு உணர்வு போன்ற நுகர் உணர்வுகள் (Senses) ஒன்றாக இயங்கும்போது,  ஒரு வகையான "போக்குவரத்து நெரிசலில்" சிக்கிக்கொள்ளும். தனி இயக்கங்கள் ஒத்து இயங்காதபோது, கையில் உணவை எடுத்து வாயில் போட்டுக்கொள்வது கூட சிக்கலாகி விடும்.

 

Gross Motor & Fine Motor Assessment 

 • தசைகள் பேரியக்கம் (Gross Motor) மற்றும் நுண்ணியக்கத் (Fine Motor) திறன் அளத்தல்
 • பேரியக்கம் என்றால் நடத்தல், ஓடுதல், ஏறுதல், இழுத்தல் போன்றவை
 • நுண்ணியக்கம் என்றால் எழுதுதல், ஊசியில் நூல் கோற்றல், வரைதல், பொம்மைகளைக் கழற்றி மாட்டுதல் போன்றவை

 

Functional Independence Measure 

 • தன்னிறைவு (independent Self) சோதனை
 • சுய பராமரிப்பு (Self Care) சோதனை

 

மனவளர்ச்சித்தடை  நோய்குறிகள் உள்ளவர்களுக்கு  உணவில் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்?

பல உணவுப் பொருட்கள் ஆட்டிசம் நோய்குறிகளை அதிகப்படுத்துவதாக் கண்டறிந்து உள்ளார்கள். குடலில் சரியாகச் செரிக்காத உணவினால் உண்டாகும் விஷங்களால்தான் ஆட்டிசம் உண்டாவதாக சொல்லுகிறர்கள் சில வல்லுநர்கள்.

பொதுவாகவே, ஆட்டிசம் கண்ட குழந்தைகள் பலருக்கு உணவை செரிக்கும் திறன் குறைவாக இருக்கும். குறிப்பாக, செரிமானத்தைக் கொடுக்கும் பலவிதமான நொதிப்பொருட்கள் (Enzymes) குறைவாகச் சுரப்பதால், அவர்களால் பலவிதமான புரதங்களைச் (Proteins) செரிக்க முடியாது. செரியாத இந்த புரதங்கள் (Undigested Proteins) மூளைக்கு நேரடியாகச் செல்வதால், மூளை சரிவர செயல்பட முடியாமல் போவதாகக் கருதுகிறார்கள்.

கீழ்கண்ட சில உணவுகளைத் தவிர்த்தல் மூலம் மீச்செயல்பாடு (Hyperactivity) போன்ற பல நோய்க்குறிகள் குறைவதாகப் பலரும் உணர்ந்துள்ளனர்.
 
குளூட்டன் (Gluten) மற்றும் கேசீன் (Casein)

 • குளூட்டன் என்னும் புரதம் கோதுமை, ஓட்ஸ், பார்லி போன்ற பெரும்பாலான தானியங்களில் உள்ளது. கேசீன் என்னும் புரதம், பால் மற்றும் பால் பொருட்களில் உள்ளது. 

 
தவிர்க்கப்படவேண்டிய உணவுகள்: 

பூரி, சப்பாத்தி, ரொட்டி (Breads),  பிஸ்கட் (Biscuits), நூடுல்ஸ் (Noodles) , பீட்சா (Pizza), கேக் (Pastries & Cakes), ஐஸ்கிரீம் (Ice cream/ Milk cream), சோயா சாஸ் (Soya Sauce), சோயா (Soya), சாக்லேட் (Chocolate), பால் (Milk), தயிர் (Curd), ஈஸ்ட் (Yeast), சீஸ் (Cheese), பனீர் (Paneer), செயற்கை உணவு வண்ணங்கள் (Artificial Food Colours), எஸென்ஸ் (Food Essence), குளிர்பானங்கள் (Carbonated Drinks), பால் பொருட்கள் கலந்த ஆரோக்கிய பானங்கள் (Malt/ Milk based Health Drinks), பல வகையான மிட்டாய்கள், காபி, தேநீர், அதிக எண்ணெயில் பொரித்த உணவுகள் (Deep fried Foods) மற்றும் சர்க்கரையை முழுவதுமாகத் தவிர்க்கலாம். மாற்றாக, தேன், பனை வெல்லம், பனங் கற்கண்டு பயன்படுத்தலாம். 

 

மேலே சொல்லியுள்ள சில உணவுகளில் குளூட்டனோ, கேசினோ இல்லையென்றாலும் வேறு வகைகளில் அவை ஆட்டிசம் குழந்தைகளுக்கு தொல்லை தருகின்றன.

இயல்பாக, குளூட்டன் இல்லாத பல வகையான உணவுப்பொருட்களில் குளூட்டனை தனியாக சேர்த்தோ அல்லது குளூட்டன் உள்ள பொருட்களுடன் சேர்த்தோ, விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக, பெருங்காயத்தில் மைதா சேர்க்கப்படுகிறது. ஓட்ஸில் நேரடியாக குளூட்டன் இல்லையென்றாலும், அது பதப்படுத்தப்படும்போது குளூட்டன் சேர்ந்ததாகி விடுகிறது.

அரிசி, தினைகள், காய்கறிகள், உருளை, தேங்காய், மீன், பழங்கள், கோழி இறைச்சி போன்றவற்றில குளூட்டன் இல்லை. ஆனாலும், பிராய்லர் கோழி இறைச்சி/ முட்டை  போன்றவற்றைத் தவிர்த்தல் நலம். கோழி இறைச்சி ஒத்துக்கொள்ளும் என்றால், நாட்டுக்கோழி உண்ணலாம். எச்சரிக்கை: தற்போது வண்ண இறக்கைகள் கொண்ட ப்ராய்லர் கோழிகள் நாட்டுக்கோழி என்ற பெயரில் விற்கப்படுகின்றன.
 
வரும் இதழ்களில்…

 • நோய்க்குறிகளை மட்டுப்படுத்த அவர்கள் வாழ்வில் வேறு என்ன மாற்றங்கள் செய்யலாம்?
 • ஆட்டிசம் தொகுப்பு நோய்கள் வராமல் இருக்க, ஏதாவது முன்னெச்சரிக்கைகள் உள்ளனவா? 
 • ஆட்டிசம் நோயால் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன?
 • மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
 • ஆட்டிசம் நோய் கண்ட சில குழந்தைகள் மிகையறிவு உள்ளவர்களாக இருப்பதை எப்படி கண்டறிவது? 
 • அவர்களின் திறனை சிறப்பாகப் பயன்படுத்தச் செய்யும் வழிகள் என்ன? ...போன்ற கேள்விகளைப் பார்க்கலாம்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles