மிகினும் குறையினும் - உங்களை ஒருவழியாக்கும் கழிச்சல் குணமாகணுமா?!

Friday, December 16, 2016

இயல்புக்கு மாறாய், ஒன்றிக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து மலம் கழிவதையே கழிச்சல் என்கிறோம்.

காரணங்கள்

 • எளிதில் செரிக்காத உணவுகளை உண்ணுதல் (மாமிச உணவு, மாவுப் பண்டங்கள், எண்ணெய் மிகுந்த உணவுகள்)
 • கெட்டுப்போன உணவுகளை உண்ணுதல்.
 • மிகுதியான காரம், புளிப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுதல் போன்றவை பெரும்பாலும் கழிச்சல் ஏற்படக் காரணங்களாக அமைந்துவிடுகின்றன.

சித்த மருத்துவ தத்துவ விளக்கம்

உணவினால், செயலினால் பாதிக்கப்படும் பித்த நாடியும் வாத நாடியும், சில நேரங்களில் கப நாடியும் கழிச்சல் ஏற்படக் காரணமாகின்றன. 

குறிகுணங்கள்

 • வாய் குமட்டல்
 • வாயில் நீருறல்
 • ஏப்பம்
 • வயிறு உப்புதல்
 • குடல் இரைதல்
 • வயிற்று வலி
 • அடி வயிறு இழுத்தது போன்று இருத்தல்
 • புளித்த ஏப்பம்
 • உணவு சீரணமாகாமல் வயிற்றிலேயே இருப்பது போன்ற உணர்வு 

 

வகைகள்

 • செரியாக் கழிச்சல்
 • மிகு சூட்டுக் கழிச்சல்
 • நிணக் கழிச்சல்
 • சீதக் கழிச்சல்
 • பயக் கழிச்சல்

செரியாக் கழிச்சல்

"நேற்று ஒரு பார்ட்டி போயிருந்தேன். பசி இல்லை, ஆனாலும் ஒரு பிடி பிடிச்சுட்டேன். பிரியாணி, சிக்கன், மட்டன், மீன், முட்டை அப்புறம் கீரைக்கூட்டு, குலோப்ஜாமூன், பாஸந்தி, ஐஸ்கிரீம்னு எல்லாத்தையும் கலந்து கட்டி அடிச்சுட்டேன். நைட்டு படுக்கும்போதே வயிறு திம்முன்னு இருந்துச்சு. மூணு மணி இருக்கும். முதல்ல நார்மலாதான் மோஷன் ஆச்சு. அப்புறம் பாருங்க, விடியறவரை வயிற அலசி துவைச்சு போட்ட மாதிரி ஆயிடுச்சு. விடியும் வரை காத்திரு மாதிரி, உக்கார்ந்தே இருந்து உங்ககிட்ட ஓடி வர்றேன். நல்ல மருந்தா கொடுத்து நிப்பாட்டுங்க டாக்டர்"ன்னு கதறிய சேகருக்கு வந்தது செரியாக் கழிச்சல்.

 

சூட்டுக் கழிச்சல்

"நம்ம வேலையே அலையுறதுதான் டாக்டர். மார்க்கெட்டிங்கல இருக்கேன், வெளிச் சாப்பாடுதான். முடிஞ்சவரைக்கும் நேரத்துக்கு சாப்பிட்ருவேன். இளநீர் குடிப்பேன். நமக்கு ஏற்கனவே சூட்டுடம்பு. மாசத்துல மூணு நாளு தொடர்ச்சியா வெளியூர் போகவேண்டி இருக்கும். ஒவ்வொரு மாசமும் அப்படி போய்ட்டுவந்தா, இரண்டு நாளைக்கு வயிறு பிரட்டி பிரட்டி நாலைஞ்சு தடவை போயிடுது. நம்ம வேலைக்கு டாய்லெட்டை தேடி ஓட முடியல. இதை நிறுத்தணும்னா என்ன செய்யலாம்" என்று கேட்ட முத்துக்கிருஷ்ணனுக்கு சூட்டுக் கழிச்சல். 

 

நிணக் கழிச்சல்

"சின்ன வயசிலிருந்தே எனக்கு வயிற்றுக் கோளாறு உண்டுன்னு அம்மா சொல்லுவாங்க. பாத்து பாத்து தான் சாப்பிடுறேன், ஆனாலும் அப்பப்ப வயிறு கோளாறாயிடுது. எண்டோஸ்கோப், கொலோனோஸ்கோப் எல்லாம் எடுத்துப் பாத்தாச்சு. குடற் புண்ணு இருக்குங்கிறாங்க, சீரணம் சரியா இல்லை. மோஷன் போகும்போது கடுமையான நாத்தம். பல கலர்ல போகுது, சில சமயம் தண்ணியா, சில சமயம் கம்மியா.. உடம்பு தேறவே மாட்டேங்குது. எங்க பாட்டி இது கிராணிங்கிறாங்க. சரி பண்ணிரலாமா" எனக் கவலையோடு கேட்ட சௌந்தர்யாவிற்கு வந்திருந்தது நிணக் கழிச்சல்.

 

சீதக் கழிச்சல்

"டாக்டர் வயிறு கடுத்துக் கடுத்துப் போகுது. கொஞ்சமாதான் போகுது. சளி மாதிரி ஏதோ வர்ற மாதிரி இருக்கு. இரண்டு மூணு தடவை போன பிறகு வயிற்றுக் கடுப்பு அதிகமாயிடுச்சு. சில நேரம் வலி தாங்க முடியாம அழுதுர்றேன். சில சமயம் இரத்தமும் சலமும் போகிற மாதிரி அடிக்கடி போகுது. ஒரு நாளைக்கு 30-40 தடவை போற மாதிரி இருக்கு. 35 கிலோதான் இருக்கேன். இப்போ சரி பண்ணிரலாமா. மூணு மாசத்துல எனக்கு கல்யாணம் வேற" என புலம்பிய நளினிக்கு வந்திருந்தது சீதக் கழிச்சல்.

 

பயக் கழிச்சல்

"சின்ன வயசுல 5வதுல இருந்து 6வதுக்கு வேற ஸ்கூல் மாத்துனாங்க. புது ஸ்கூல்ல கணக்கு டீச்சர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். நான் நல்லாதான் படிப்பேன். இருந்தாலும், அவங்கள பாத்து ஒரே பயம். கரெக்டா காலையில 6 மணிக்கு மோஷன் போக ஆரம்பிக்கும். 9 மணிக்குள்ள ஆறேழு தடவை போகும். அப்புறம் நின்னுடும், நார்மலாயிடும். ஒரு மாசம் இப்படி இருந்துச்சு. அலோபதி, ஹோமியோபதி, சித்தா எல்லாம் பாத்தாங்க. யாரும் கண்டுக்கவே முடியல. யூரின், மோஷன் டெஸ்ட் எல்லாமே நார்மல். கடைசியா, ஒரு நாட்டு வைத்தியருக்கிட்ட கூட்டிட்டு போனாங்க. அவர்தான் எங்க கதைய கேட்டுட்டு ’பிள்ள பயந்துருக்கு’ன்னு கண்டுபிடிச்சு சொன்னாரு. அப்புறம் தன்னாலே நானே சரி ஆயிட்டேன். இப்பவும் பாருங்க, கல்யாணம் ஆகி இரண்டு பிள்ளைங்க இருக்கு. பிள்ளைகளுக்கு ஏதும் உடம்பு முடியாம போனாலோ, அவர் ஆபிசில இருந்து வர நேரம் ஆயிட்டாலோ, வயித்தக் கலக்கி தண்ணி தண்ணியா மூணு நாலு தடவை போயிடுது. இந்த பயத்த நிறுத்த ஏதாவது மருந்து இருக்கா"ன்னு சிரித்தபடியே நோயைக் கணித்துச் சொன்ன மனோன்மணிக்கு இருந்தது பயக் கழிச்சல்தான்!

 

உணவே மருந்து

கழிச்சல் இருக்கும்போது வயிற்றுக்கு ஓய்வு கொடுத்தலே நல்லது. திட உணவுகளைத் தவிர்த்து, திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். உடலின் நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும் இது உதவி செய்யும். 

நீர்மோர் அருந்துதல் மிகவும் நல்லது. மோர் பேதியைக் கட்டுப்படுத்துவதோடு குடலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் தக்க வைக்கும். எலுமிச்சைச் சாறு அருந்தலாம். தேநீருடன் கலந்த எலுமிச்சை சாறு (லெமன் டீ) பேதியைக் கட்டுப்படுத்தும். மாதுளைச் சாறு அருந்தலாம். மாதுளையின் துவர்ப்புச் சுவை பேதியை நிறுத்த வல்லது. காயவைத்த மாதுளை ஓடுகளை நீரில் இட்டுக் கொதிக்கவைத்துக் கசாயமாக்கிக் குடித்தாலும் பேதி கட்டுப்படும். ஓமத்தை வறுத்து பொன்னிறமாக்கி, அதனுடன் நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டி அருந்த செரியாக் கழிச்சல் கட்டுப்படும். கூகை நீறு (ஆரோரூட் மாவு) கஞ்சி கழிச்சலைக் கட்டுப்படுத்தும். 

 

சித்த மருந்துகள் :

சுண்டை வற்றல் சூரணம் : காலை, மதியம், இரவு உணவிற்கு முன் மோருடன் கலந்து 

பெரியவர்கள் - ஐந்து விரல் கொள்ளும் அளவு
சிறியவர்கள் - 1/2 - 1 தேக்கரண்டி

 

தயிர்ச்சுண்டி சூரணம் : காலை, மதியம், இரவு உணவிற்கு முன் மோருடன் கலந்து 

பெரியவர்கள் - மூன்று விரல் கொள்ளும் அளவு
சிறியவர்கள் - 1/2 - 1 தேக்கரண்டி

 

ஓமத்தீநீர் (ஓமவாட்டர்) 

பெரியவர்கள் - 5-10 மி.லி. உணவிற்குப் பின்
சிறியவர்கள் - 5 மி.லி. உணவிற்குப் பின் காலை, மாலை நீருடன் 
குழந்தைகள் - 2-3 மி.லி. 

சித்த மருந்தகங்களில் கிடைக்கும் ஓமத்தீநீர் மருந்தை வாங்கிப் பயன்படுத்தும்போது கழிச்சல் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். சில கடைகளில், கற்பூரத்தோடு நீர் கலந்து ஓமவாட்டர் என்ற பெயரில் விற்பதாகத் தகவல்கள் வருகின்றன. அவற்றைத் தவிர்க்கவும். 

மேற்கூறிய மாற்றங்களைச் செய்வதன் மூலமாக, கழிச்சல் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். அதனையும் மீறி தொடர்ந்து கழிச்சல் இருப்பின், அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி உயர்வகை சித்த மருந்துகள் எடுப்பதன் மூலம் முழுமையான குணம் பெறலாம். 

அடுத்த இதழில் இரத்த சோகை பற்றிப் பார்க்கலாம்..

- டாக்டர் அருண் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles