ஆயுர்வேதம் - 15 

Friday, December 16, 2016

நின்னுகிட்டே பார்க்குற வேலையா?
உஷாரா இருங்க..! 

’வெரிகோஸ் வெய்ன்’ (varicose vein) என்று சொல்லப்படும் நரம்புகளில் ஏற்படும் முடிச்சு நோய், இன்று நூற்றில் 99 பேரைப் பாதித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆண் - பெண் பாகுபாடு இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உங்கள் கால் எப்படியிருக்கிறது என்பதைச் சோதித்துப் பார்க்க வேண்டிய அவசியத்தையும் பதற்றத்தையும் உண்டாக்குகிறது. ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளே, இதற்கு முக்கியக் காரணம். 

இயற்கையாகவே, பெண்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படுவதைக் காணலாம். கர்ப்பகாலத்தின் போதும், அதற்குப் பின்பும் சில பெண்களின் தொடைப்பகுதிகளில் நரம்பு முடிச்சுகள் ஏற்படும். உடல் எடை அதிகமாகும்போது, அந்த இடத்தில் நரம்புகள் நீண்டு வளரும். அரை மணி நேரம் நின்றால்கூட, கால்களில் ஒருவித வலி ஏற்படும். சில நேரங்களில் நிறம் மாறுவதைக் காணலாம்; அரிப்பும், அதனைத் தொடர்ந்து காயங்கள் ஏற்படுவதையும் காணலாம். இது எல்லாமே, வெரிகோஸ் வெய்ன் ஏற்படுவதன் அறிகுறிகள்.

 

நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்களை, வெரிகோஸ் வெய்ன் பாதிக்கும் அபாயம் அதிகம். கால்களைத் தொங்கவிட்டுக்கொண்டு சேரில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களையும் கூட, இது பாதிக்கிறது. விபத்தினால் கால் பாதிக்கப்பட்டு முறையான சிகிச்சை எடுக்காவிடில், அந்த நபரையும் இந்த நோய் பாதிக்கும் வாய்ப்பு உண்டு. 

 

முதலில், கெட்ட ரத்தத்தைச் சுமந்துவரும் தமனிகளில் தொய்வு ஏற்படும். இதனால், கெட்ட ரத்தம் போகும் அளவு லட்சத்தில் ஒரு பங்கு குறையும். இது அதிகமாகும்போது, அந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் தொய்வு ஏற்படும். கடைசியில், அந்த ரத்தக்குழாய் நீண்டு வெளியில் தொங்கும். இதற்கு ‘வெரிகோஸ் வெய்ன்’ என்று பெயர். காலில் ஏற்பட்டால், இதன் பெயர் வெரிகோஸ் வெய்ன். இதுவே மலப்புழையில் ஏற்பட்டால், அதன் பெயர்தான் ‘பைல்ஸ்’ (piles). 

 

விளைவுகள்

அரைமணி நேரம் நடந்தாலே, கால்கள் இழுத்துப் பிடித்தது போன்ற உணர்வு ஏற்படும். இரவில் தூங்குவதற்கு முன்பு, கால்களில் சொல்ல முடியாத உளைச்சல் இருப்பதைக் காணலாம். கால்களை யாராவது பிடித்துவிட்டால், அது சரியாகிவிடும். அது போலவே, கால்களில் அரிச்சல் உண்டாகும். அந்த இடத்தில் சொறிந்தால், ரத்தம் வெளியேறும் அபாயமும் உண்டாகும். 

 

வெரிகோஸ் வெய்ன் பாதிப்புக்கு உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளாவிடில், அது வெரிகோஸ் அல்சராக (varicose ulcer) மாறும். அதனைக் குணப்படுத்த, பல ஆண்டுகள் கூட ஆகலாம். வெரிகோஸ் வெய்ன் பாதிப்பின் தொடக்கத்திலேயே, எந்த ஒரு நோயாளியும் ஆயுர்வேத மருத்துவத்தை நாடுவதில்லை. அது வெரிகோஸ் அல்சராக மாறி, அறுவைசிகிச்சை செய்து, அதன்பிறகும் எந்தப் பலனும் ஏற்படாதபோதுதான் ஆயுர்வேதத்தை நாடிவருகிறார்கள். அப்படிப்பட்டவர்களையும் முழுதாகக் குணப்படுத்துகிறது ஆயுர்வேதம். 

 

வெரிகோஸ் வெயினை குணப்படுத்த, நிறைய ஆயுர்வேத மருந்துகள் இருக்கின்றன. குறிப்பாகச் சொல்வதென்றால், சகஜ்ஜரத்தைக் குறிப்பிடலாம். ரத்தக்குழாய்களில் இருக்கும் நெகிழ்வுத்தன்மையை அதிகப்படுத்துவது இதன் மருத்துவக்குணம். சகஜ்ஜரத்தில் இருந்து எடுக்கப்படும் கஷாயத்தை சாப்பிடலாம். அதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை வெளிப்புறமாகப் பயன்படுத்தலாம். இந்த சகஜ்ஜரத்தின் உதவியுடன் அப்யங்கம், பிழிச்சல், நவரைக்கிள்ளி போன்ற ஆயுர்வேத சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

 

வெரிகோஸ் அல்சர் குணமாக..

இதனைக் குணப்படுத்த, தோல் நோய்களுக்கான சிகிச்சை முறைகள் பெரும்பாலும் பின்பற்றப்படும். வெரிகோஸ் அல்சரால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்குமிடத்தில் ஒருவித துர்நாற்றம் இருக்கும். அதனைத் தீர்க்க, ஒரு எளிய வழி இருக்கிறது. 

 

சுமார் 200 மி.லி. வெந்நீரில் சுத்தி செய்யப்பட்ட மயில் துத்தம் 100 கிராம் அளவு சேர்க்கவேண்டும். இளஞ்சூடாக இருக்கும் அந்த நீரைக் கொண்டு, வெரிகோஸ் அல்சரால் பாதிக்கப்பட்ட பகுதியைச் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு வாரகாலம் இதனை மேற்கொண்டாலே, அந்த இடம் உலர்ந்துபோவதைக் காணலாம். புதிய தோல் உண்டாவதைப் பார்க்கலாம். அதன்பிறகு, வெரிகோஸ் அல்சர் வேகமாகக் குணமாகும். 

 

தவிர்க்கும் வழிகள்

நமது முன்னோர்கள் உணவு சமைப்பதோ, பாத்திரம் துலக்குவதோ உட்கார்ந்த நிலையில் தான் செய்வார்கள். ‘மாடர்ன் கிச்சன்’ என்ற பெயரில், இன்று நமது பெண்கள் நின்றுகொண்டே பெரும்பாலான வேலைகளைச் செய்கிறார்கள். ஒருநாளில் சுமார் ஆறு மணி நேரம் நிற்கவேண்டிய தேவை இன்றிருக்கிறது. பெரும்பாலும் இதனைத் தவிர்க்க முடியாது என்ற போதும், சில வேலைகளை நின்றுகொண்டே செய்வதைத் தவிர்க்கலாம். முதலில் நாம் தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அதுபோல, உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். இதுவும் வெரிகோஸ் வெய்ன் ஏற்படக் காரணமாகிறது. மாமிச உணவுகளை அதிகமான அளவில் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கலாம். மரபு சார்ந்த பழக்கவழக்கங்களைத் தேடிப்பிடித்து, அவற்றில் நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துப் பின்பற்றலாம். இதனால், புதிய நோய்கள் வராமல் முற்றிலும் தவிர்க்கலாம்!

வல்லாரையின் சேவை 

நம் குழந்தைகளுக்குத் தேவை!

ஒருகாலத்தில் நமது வீடுகளின் பின்புறமிருந்த தென்னை மற்றும் வாழை மரங்களின் அடியில் சிறு செடி முளைவிடும். வீட்டிலிருக்கும் பெரியோர்கள் அதனைப் பறித்து துவையலாகவோ, கீரைக்கூட்டாகவோ குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். இன்றும், கேரள மக்களில் பலர் அந்தச் செடியின் இலைகளைப் பிழிந்து சாறெடுத்து, அதனுடன் தேன் கலந்து குழந்தைகளுக்கு ஊட்டுகிறார்கள். இப்படிப்பட்ட சிறப்புகளுக்குச் சொந்தமானது வல்லாரை. 

 

புத்திக்கூர்மை, ஞாபகசக்தி, மனதை ஒருமுகப்படுத்துதல் போன்றவற்றைப் பெறுவதற்கான அற்புதமான மருந்து வல்லாரை. அதனால்தான் வல்லாரை மாத்திரைகளும் பொடிகளும் மருந்துச்சந்தையில் கூவிக்கூவி விற்கப்படுகின்றன.  

 

நிணநீர் சுரப்பிகளைக் காக்க..

உடலில் இருக்கும் பெரிய உறுப்புகளைப் பாதுகாக்க, இயற்கை நிணநீர் சுரப்பிகளைத் தந்திருக்கிறது. இதன் முக்கியமான வேலை, சம்பந்தப்பட்ட உறுப்புகளைச் சீராக்குவது. இன்று, நாம் அதிகளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்கிறோம் அல்லது ஆன்டிபயாடிக் அதிகளவில் செலுத்தப்பட்ட கோழிகளைச் சாப்பிடுகிறோம். இதனால், எந்த மருந்தும் நமது உடலில் ஒழுங்காக வேலை செய்வதில்லை. இதன் விளைவாக, நெறிகட்டும் பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாக கை மற்றும் கால் இடுக்குகள், பிட்டத்தின் மேல்பகுதி, கழுத்துப்பகுதி வீங்க ஆரம்பிக்கும். இதற்கு ‘லிம்போடென்டிஸ்’ (lymphadenitis) என்று பெயர். 

 

லிம்போடெண்டிஸ் தாக்கப்பட்டால், இன்று அது புற்றுநோயின் அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. எந்த நோயின் பாதிப்பு இல்லாத போதும், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பதை வெளிக்காட்டும்விதமாகவும் இது ஏற்படுகிறது. இதனைத் தீர்க்கும் வல்லமை கொண்டது வல்லாரை. இந்தக்கீரையின் சாறு 20 மி.லி. எடுத்து, அதனுடன் தேன் கலந்து, தினமும் காலை - மாலை இருவேளையும் உணவுக்கு முன்பாகச் சாப்பிட்டால் போதும். இந்தக்குறைபாடு தீரும். 

 

யானைக்கால் வியாதி நீங்க..

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் கொசுக்களின் எண்ணிக்கை அதிகமானதால் யானைக்கால் வியாதி பரவியது. அப்போது ஒரு ஆங்கிலேய மருத்துவர், ’வல்லாரையின் சாற்றை எடுத்து யானைக்கால் வியாதிக்கு மருந்து தயாரிக்கலாமே’ என்று யோசித்தார். வல்லாரையின் தாவரவியல் பெயரை அடிப்படையாகக் கொண்டு, அவர் தயாரித்த மருந்தின் பெயர் ‘ஹைட்ரோகொடைல்’ (hydrocotyle). இந்த மருந்துதான், இன்றும் உலகம் முழுக்க லிம்போடினைட்டிஸ் மற்றும் யானைக்கால் நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மருத்துவரால் விரிவாக்கப்பட்ட மருத்துவ முறைதான் ‘ஹோமியோபதி’.

 

ஆட்டிசம் சரியாகுமா?

செரிப்ரல் பால்ஸி, ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் குணப்படுத்த, இன்று பலரும் முயற்சித்து வருகிறார்கள். ஒழுங்காகச் சாப்பிடுவது, தூங்குவது, கவலைப்படாமல் இருப்பது, ஏதேனும் ஒரு எளிய வேலையைச் செய்வது போன்றவற்றையே, அந்தக் குழந்தைகளின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றித் தருகிறது ஆயுர்வேத மருந்தான ‘சரஸ்பிரம்மி’. வல்லாரைச் சாற்றுடன் வெல்லப்பாகு கலந்து, அதனைப் பூமிக்கடியில் புதைத்து, சிலகாலம் கழித்து இதனைப் பயன்படுத்துவது வழக்கம். இந்த மருந்தை, தினமும் 10 மி.லி. அளவு அந்தக்குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால் போதும். ஆறுமாதம் கழித்தபிறகு, அந்தக் குழந்தைகளிடம் அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படுவதைக் காணலாம். 

 

பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பேசாமல் இருப்பதாகக் கவலைப்படுவதைக் காண்கிறோம். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு, தினமும் 10 மி.லி. அளவு வல்லாரைச்சாற்றினை தேனுடன் கலந்து கொடுத்துவந்தால் போதும். சுமார் 3 மாத காலத்திலேயே, அந்தக் குழந்தைகள் பேசுவதைக் காணலாம். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கூட, கோர்வையாகப் பேச முடியாமல் அவதிப்படுவார்கள். அவர்களது குறையையும் தீர்க்கக்கூடியது வல்லாரை. 

 

அறிவு சார்ந்த பிரச்சனைகள் மட்டுமல்ல, எந்தப்பாதிப்பையும் தீர்க்கும் வல்லமை கொண்டது வல்லாரை. வாரத்திற்கு ஒருமுறையாவது, நமது உணவாக இதனைப் பயன்படுத்தலாம். அது, குழந்தைகளிடம் மருந்து சாப்பிடும் உணர்வை ஏற்படுத்தாது. வல்லாரை கலந்த நெய், ‘சரஸ்பிரம்மி கிருதம்’ என்ற பெயரில் இன்று விற்கப்படுகிறது. அதனைச் சாப்பிட்டுவந்தால் போதும்; உடல் மற்றும் மன அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய எல்லா தொந்தரவுகளும் நம்மை விட்டு அகலும். 

 

பற்கள் பராமரிப்பில் ஆயுர்வேதத்தின் பங்கு!

உணவு சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, நாம் பேசுவதற்கும் தேவையானவை பற்கள். இவை இல்லையெனில், நமது முக அமைப்பு மட்டுமல்லாமல் உடலமைப்பே மாறிவிடும். நமது வாயில் 32 பற்கள் உள்ளன. முன்பற்கள், நடுப்பற்கள், பின்பற்கள், கடவாய்ப்பற்கள் என்று இதனைப் பிரித்துச் சொல்வார்கள். இவற்றின் செயல்திறன் என்னவென்பதை விரிவாகச் சொன்ன மருத்துவமுறை ஆயுர்வேதம். பற்களைப் பிடுங்குவது எப்படி, தங்கப்பல் கட்டுவது எவ்வாறு என்பதைப் பற்றியெல்லாம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டிருக்கிறது. 

 

ஆயுர்வேத மருத்துவத்தில் ‘சாலக்கிய தந்திரம்’ என்ற பிரிவு உண்டு. இதில் வாய், பற்கள், ஈறுகள், அதன் பின்னிருக்கும் நரம்புகள் பற்றியும் அவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் பல குறிப்புகள் இருக்கின்றன. 

 

முன்பெல்லாம், வெகு அரிதாகவே பல் மருத்துவமனைக்குச் செல்வார்கள் நம்மவர்கள். கீழே விழுந்து அடிபட்டாலோ, 50 வயதிற்கு மேல் பற்களைப் பிடுங்க வேண்டியிருந்தாலோ, பல் மருத்துவரை நாடும் வழக்கமிருந்தது. இன்று, அந்த நிலைமை தலைகீழாகிவிட்டது. பல் மருத்துவமனைகளில் குழந்தைகள், பெரியவர்கள் என்று வித்தியாசமில்லாமல் அனைத்து வயதினரும் வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். பல் பராமரிப்பைச் சரியாகச் செய்யாததன் விளைவு இது. 

 

காலையில் எழுந்தவுடன் பல் துலக்கவேண்டும் என்று முதலில் சொன்னது இந்திய மருத்துவமுறைதான். மற்ற எந்த நாட்டுக் கலாசாரத்திலும், பல் துலக்குவது பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லை. உப்பு, லவங்கம், ஆலம் விழுது, வேப்பங்குச்சி மற்றும் காட்டுவேல மரத்தின் பட்டைகளை வைத்து பல் துலக்கி வந்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். அடுப்புக்கரியை வைத்தும்கூட, அவர்கள் பற்களைச் சுத்தப்படுத்தியிருப்பது ஆச்சர்யமான ஒன்று.  

 

பற்களில் பாதிப்பா?

கறுப்பான பொடியை ஒரு வெள்ளைத்தாளின் மீது பரப்பி, ‘இதை வைத்தா நீங்கள் பல் துலக்குகிறீர்கள்? இதோ எங்களது வெண்மையான பற்பொடி’ என்று சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு விளம்பரம் செய்தது ஒரு நிறுவனம். இன்று, அதே நிறுவனத்தின் பற்பசை ‘எங்கள் தயாரிப்பில் கார்பன் இருக்கிறது’ என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. ‘எங்களது பற்பசையில் உப்பு இருக்கிறது’ என்கிறது வேறொரு நிறுவனம். ’இந்தக் குழந்தைக்கு லவங்க எண்ணெயை வைத்து பல் துலக்க வேண்டும்’ என்கிறது இன்னுமொரு விளம்பரம். மரபார்ந்த பல் பராமரிப்பு முறைகளை விடுத்து, வேதிப்பொருட்களின் பின்னால் சென்றதன் விளைவு இது. 

 

பழைய முறைகளில் இருந்து விலகி, பற்களை உறுதி செய்யக்கூடிய பொருட்களைப் பயன்படுத்துவதில்லை நாம். இதனாலேயே, இன்று பலருக்கும் பற்களில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்போதாவது நாம் விழித்துக்கொள்ள வேண்டும். 

 

பற்களைப் பாதுகாக்கணுமா?

ஆயுர்வேத மருத்துவத்தில் கவளம், கண்டூசம் என்று இரண்டு சிகிச்சை முறைகள் இருக்கின்றன. வாயினுள் ஏதாவது ஒரு எண்ணெய் அல்லது கஷாயத்தை நிரப்பிக் கொப்பளிக்கும் முறைக்கு கவளம் என்று பெயர். வாயினுள் அந்த திரவத்தை நிரப்பி அசையாமல் இருப்பதற்குப் பெயர் கண்டூசம். இவை இரண்டுமே தினசரி நாம் மேற்கொள்ள வேண்டியவை. இதையே ‘ஆயில் புல்லிங்’ என்கின்றனர் சிலர். இவ்வாறு செய்தபிறகு, வெந்நீர் வைத்துக் கொப்பளிக்கிறார்கள். இதைச் செய்யும்போது பல் கூச்சம், பல்வலி, ஈறு வலி, ஈறுகளில் ரத்தக்கசிவு, வாயில் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் சரியாகின்றன. 

 

ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டுமென்பதை, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ஆயுர்வேத மருத்துவம்தான். பற்களில் ஓட்டை விழுதல், பல்லிடுக்கில் உணவுப்பொருள் சிக்கிக்கொள்ளுதல் போன்ற பாதிப்புகள் முற்றிலும் இல்லாமல் வாழ்வதற்கு, பாரம்பரிய மருத்துவத்தில் பல குறிப்புகள் இருக்கின்றன. அதனைப் பின்பற்ற முன்வந்தாலே, பல் பராமரிப்பில் பெரிதாகக் குறை எதுவும் இருக்காது. 

 

வேதிப்பொருட்களை ஒதுக்கிவிட்டு, பாரம்பரிய மருத்துவ முறைகளில் சொல்லப்பட்டிருக்கிற பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்தால் போதும். பல் மற்றும் வாய் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும். 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles