எண்ணம்  நோய்களை உருவாக்கும்.. நோய்களைக் குணப்படுத்தும்.. - டாக்டர்.கண்ணன் புகழேந்தி

Wednesday, August 31, 2016

நோய்வாய்ப்பட்டால் மருத்துவரிடம் செல்வதென்பது, இயற்கையான ஒரு விஷயம். அப்படி ஒரு மருத்துவரைச் சந்திக்கும்போது, ‘உங்களுக்கு ஒண்ணும் இல்லை. இரண்டு நாட்களில் சரியாகி விடும்’ என்று கூறினால், நம்மில் நிறையபேர் அந்த மருத்துவரை நம்ப மறுக்கிறோம். வேறொரு மருத்துவரை அணுகுகிறோம். அவர் மருந்துச் சீட்டு எழுதிக் கொடுத்து, சில மருத்துவச் சோதனைகளுக்குப் பரிந்துரைத்தால் மட்டுமே, நாம் நம்புகிறோம்.

’எதன் மீது நம்பிக்கை வைப்பது’ என்ற புரிதல் குறைந்துபோய்க் கொண்டிருக்கும் சூழலில், 'அறுவை சிகிச்சை இல்லாமலே வாழ்வியல் நோய்களை குணப்படுத்தலாம்’ என்கிறார் விளையாட்டு மருத்துவத்துறை வல்லுநரான டாக்டர்.கண்ணன் புகழேந்தி. சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கிவரும் ‘ஸ்பார்க்’ நிறுவனத்தில், அவரைச் சந்தித்தோம்.  

 

“பள்ளியில் இருக்கும்போதே, விளையாட்டு மேல ரொம்ப ஆர்வம் உண்டு. ஒலிம்பிக்ல பங்கெடுக்கணும்னு, ரொம்ப ஆர்வம் இருந்துச்சு. அதுக்கப்புறம், நான் மெடிசின் படிக்கப் போய்ட்டேன். கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது, ஒய்.எம்.சி.ஏ மைதானத்துக்கு ’கோச்சிங்’ எடுக்கப் போவேன். அப்போ, அங்கே இருக்கிற வீரர்களுக்கு ஏற்படுற காயங்களைப் பார்ப்பேன். நடைமுறையில், அவங்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கிறதை உணர்ந்தேன். அப்போதான், எனக்கு ஸ்போர்ட்ஸ் மெடிசின் பேர்ல ஆர்வம் வந்துச்சு” என்கிறார் கண்ணன் புகழேந்தி. தனது ஆர்வத்தைச் செயல்படுத்தும் பொருட்டு, வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். 

 

“இப்போ இருக்கிற சூழல்ல, மனதளவுலதான் நாம வேலைகள் செய்றோம். பிஸிக்கல் ஆக்டிவிட்டி எதுவும் கிடையாது. அதாவது, ஒரே இடத்துல உட்கார்ந்து வேலை பார்க்குறோம். அதனால வரக்கூடிய நோய்கள் அதிகம். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற லைப்ஸ்டைல் வியாதிகள்தான், இன்னிக்கு நிறைய இருக்கு. அந்த மாதிரி நோய்கள்னால பாதிக்கப்பட்டவங்களை, எப்படி மீட்டுக் கொண்டு வர்றதுன்னு தெரிஞ்சுகிட்டேன். அதாவது, யார் யாருக்கு, என்னென்ன பயிற்சிகள் கொடுக்குறதுன்னு பார்த்து, கொடுக்க ஆரம்பிச்சேன். ஸ்போர்ட்ஸ் மெடிசின்கறது இதுதான். ஆரோக்கியமான மக்களை, ஆரோக்கியமாக பார்த்துகிறதுதான். விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மட்டுமல்லாது, சாதாரண மக்களுக்கும் பயிற்சி அவசியம். இதைத்தான். நாங்க ‘ஸ்பார்க்’ மூலமாக  வலியுறுத்துறோம்” என்று சொல்லும் இவர், விளையாட்டு மருத்துவத்திற்கென தனி அமைப்பை உருவாக்கியதன் அவசியத்தைச் சொல்கிறார்.

 

” ‘ஸ்பார்க்’ நிறுவனம்கிறது ஒரு பொறிதான். அதாவது, நாங்க கொடுக்கிற ட்ரீட்மெண்ட் என்ற பொறியை, நம்பிக்கை என்ற தீயை பரவவிட்டு, நோயாளிகள் சீக்கிரம் நோய்களிலிருந்து விடுபட வேண்டும். விளையாட்டு வீரர்களோ, நாட்டியத்துறையில இருக்கிறவங்களோ அல்லது சாதாரண மக்களோ, யாராக இருந்தாலும் பயிற்சிகளின் மூலமாக நோய்களிலிருந்து குணமாக உதவுகிறது எங்க ஸ்தாபனம். உதாரணமாக, அதிகமா மூட்டு வலி இருந்தால், கொஞ்சம் கொஞ்சமாக சிகிச்சை கொடுத்து, அவங்களை இயல்புக்குத் திரும்பக் கொண்டு வந்துடறோம். சர்க்கரை நோயால் பாதிக்கபட்டவர்கள், இருதய அறுவை சிகிச்சை செய்தவர்களுக்குக் கூட, நாங்க பயிற்சி கொடுக்கிறோம். 

 

‘ஸ்பார்க்’ ஸ்தாபனத்தோட தனிச்சிறப்பே, சர்ஜரி இன்றி நோயாளிகளைக் குணப்படுத்துறதுதான். ஒரு மனிதர் எவ்வளவுக்கு மருந்துகளைக் குறைத்து எடுத்துக் கொள்கிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர் உடம்புக்கு நல்லது. இயல்பாகவே,  ஒவ்வொரு மனிதருக்குள்ளும் healing capacity (நோயை குணப்படுத்தும் தன்மை) இருக்கும். மருத்தவரான நாங்கள், அதை நோயாளிகளிடம் பேசிப் புரியவைக்க வேண்டும். புரிதல் அவர்களுக்குள் வந்துவிட்டாலே, நம்பிக்கை என்பது தானாக வந்துவிடும். அதனால, அவங்களும் சுலபமாகச் சமாதானம் ஆகிடுவாங்க. அதோட, நாங்க அவங்களுக்குள்ள இருக்குற குணமாகுற தன்மையைத்தான் தூண்டுகிறோம். மருத்துவர் மற்றும் நோயாளிகளின் கூட்டு முயற்சியால் மட்டுமே, ஒரு நோயைக் குணப்படுத்த முடியும். இதுதான் எங்களோட தாரக மந்திரம். நோயாளிகளின், ஆழ்மனதில் தோன்றும் பயத்தை போக்கினால் போதும். அவர்களால், இயல்பு நிலைக்கு எளிதில் திரும்பிவர முடியும்.

 

முன்காலத்துல எல்லாம், பெண்களின் நிலையே வேறு. அவர்களை வீட்டைவிட்டு வெளியே வர அனுமதிக்க மாட்டார்கள். இப்பொழுதெல்லாம், வெளியே இறங்கிவந்து வேலை பார்க்க ஆரம்பித்து விட்டனர்  பெண்கள். அவர்களுக்கு வேலைப்பளு, மனஅழுத்தம் போன்ற பிரச்சினைகள் அதிகமாகி விட்டது. ’நீ பெண்தானே’ என்கிற அலட்சிய போக்கை, அவர்கள் அலுவலகத்தில் எதிர்கொள்கிறார்கள். வீட்டுக்குத் திரும்பினால், குடும்பச் சுமை வேறு. இவையெல்லாம் சேர்ந்து, அவர்களுக்கு உடல் மற்றும் மன அழுத்தம் தருகிறது. மகப்பேறு காலத்தில் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமையாததால், குறைபாடுகளோடு குழந்தைகள் பிறக்கின்றனர். இதனால், அவர்களைக் குற்றம் சொல்லி எந்தப் பிரயோஜனமும் இல்லை. சுற்றி இருப்பவர்கள், அவர்களுடைய பிரச்சனைகளைக் கேட்டு மேலும் பாதிப்புகளுக்கு ஆளாக்காமல், அவர்களை அரவணைத்துக்கொள்ள வேண்டும். எங்கள் நிறுவனத்தில், ஆட்டிஸம் மற்றும் ஏடிஎச்டி போன்றவைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கூட சிகிச்சை அளிக்கிறோம்.

 

நாகரிக வளர்ச்சி அடைந்த இந்தக் காலத்தில், பெண்கள் தங்கள் அழகை மெருகேத்துறதுல ரொம்ப மெனக்கெடறாங்க. ஊடகங்கள்ல வர்ற விளம்பரங்களை பார்த்து நிறையா ஏமாந்துடறாங்க. இன்னிக்கி இருக்குற வியாபாரத்தனமான உலகத்துல, நிறையா லாபம் பார்க்குறது காஸ்மெட்டிக் உலகம்தான். நான் பெண்களுக்கு வைக்குற வேண்டுகோள் என்னன்னா, இதையெல்லாம் நம்பாதீங்க. இயல்பாகவே, நீங்க அழகாகத்தான் இருக்கீங்க. அழகை கூட்டறேன்னு, ஏன் வம்பை விலை கொடுத்து வாங்குறீங்க. 

 

ஸ்பார்க்ல  மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொடுக்கிறோம். இது தசைகளுக்குப் பயிற்சி கொடுத்து, உங்க அழகை இயல்பாக வைக்குது. வயசாகுறதை யாராலும் தடுக்க முடியாது. இப்போ இருக்குற நிறைய பசங்க, ஸ்கூல் முடிச்சதும் வயசாகிட்ட மாதிரி உணர்றாங்க. அவங்களுக்கு,  வயதானவர்கள் செய்யும் உடற்பயிற்சிகள், களரி பயட்டு காணொளிகளைக் காண்பித்து ஊக்குவிக்கிறோம். ஏற்கனவே சொன்ன மாதிரி, நமது எண்ணங்கள் தான் எந்த ஒரு நோயையும் குணப்படுத்தும்” என்கிறார் கண்ணன் புகழேந்தி. 

 

எண்ணங்கள் தான், ஒருவருக்கு நோய்கள் வரக் காரணம். அதே நோய்கள் குணமாகவும், எண்ணங்கள் தான் காரணம். ’நல்ல எண்ணங்களின் மூலமாக, நாம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும்’ என்பதை அழுத்தமாக உணர்த்துகிறது மருத்துவர் கண்ணன் புகழேந்தியின் வார்த்தைகள். 

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles