ஆயுர்வேதம் காட்டும் ஆரோக்கியப் பாதை 8

Wednesday, August 31, 2016

பசியின்மையால் அவதியுறும் குழந்தைகள்..கோடை காலத்தில் பெரும்பாலானவர்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சனை பசியின்மை. குறிப்பாக, குழந்தைகளிடம் இது அதிகம் காணப்படுகிறது. ‘பிடித்தமானதைச் செய்து தந்தாலும் சாப்பிடுவதில்லை’ என்பதே, இன்றைய பெற்றோர்களின் வருத்தமாக இருக்கிறது. குழந்தைகள் மற்றும் பெரியோர்களைப் பாதிக்கும் இந்தப் பசியின்மை, நடுத்தர வயதில் இருப்பவர்களை அதிகம் பாதிப்பதில்லை. காரணம், அவர்களது வேலைப்பளு. 

கோடைகாலத்தில், யாரும் திட உணவுகளை விரும்பிச் சாப்பிடுவது கிடையாது. இளநீர், பதநீர், பழச்சாறு போன்ற திரவ உணவுகளை நாடுவது நமது வழக்கம்.  இயற்கையாகவே நம்மைத் தொற்றும் பசியின்மை சம்பந்தப்பட்ட காரணிகளே, இதற்குக் காரணம். பொதுவாக, பசியின்மையை ஒரு நோய் என்று சொல்லலாம். அதே நேரத்தில், சில நோய்களின் அறிகுறியாகவும் இது வெளிப்படுவதை மறந்திடக்கூடாது. 

 

பசியின்மைக்கான காரணங்கள்

 • காய்ச்சல் தாக்கினால், நம் உடலில் பசியின்மை ஏற்படும். காலை முதல் இரவு வரை பசிக்கவில்லை என்றால், தூங்கும்போது உடலின் வெப்பநிலை கூடுவது இயல்பு. 
 • கல்லீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும்போதோ, உயர்ரத்த அழுத்தம் உருவாகும்போதோ, முதலில் நம்மைத் தொற்றும் பிரச்சனை பசியின்மைதான்.
 • சில மருந்துகளைச் சாப்பிடும்போது அல்லது உட்செலுத்தும்போது, உடலில் பசியின்மை ஏற்படும். 
 • மாதவிலக்கு மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கும்போது, பெண்கள் பசியின்மையை உணர்வார்கள். 
 • டீன் ஏஜில் இருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்குப் பசியின்மை இருக்கும். 
 • 70 வயதைத் தாண்டிய நீரிழிவு நோயாளிகளுக்குப் பெரும்பாலும் பசிக்காது. 
 • அதிக மகிழ்ச்சியோ, துக்கமோ மனதிலிருக்கும்போது பசி இருக்காது. துக்க நிகழ்வுகள் மற்றும் சுபகாரியங்களின்போது, பசியைப் பற்றி மனம் யோசிக்காது.
 • மனதில் பதற்றம் புகும்போதும் பசியின்மை உண்டாகும். உதாரணமாக, மாணவர்களுக்குத் தேர்வு நேரங்களில் பசியில்லாத உணர்வு ஏற்படும். 

பொதுவாக, நம்மில் பலருக்கு பசியின்மைக்கும் அஜீரணத்திற்குமான வித்தியாசம் புரிவதில்லை. ஆனால் இதனைப் பிரித்தறிவது எளிது. கண் முன்னால் நாம் விரும்பும் உணவு இருந்தாலும், சாப்பிடும் விருப்பமே மனதில் இருக்காது. இதற்குப் பெயர்தான் பசியின்மை. நன்றாகப் பசித்து திருப்தியாகச் சாப்பிட்டாலும், வயிறு கல் போன்றிருக்கும். எளிதில் சீரணம் ஆகாது. பசியின்மைக்கும் அஜீரணத்திற்கும் இடையே இருக்கும் பொதுவான வேறுபாடு இதுதான். 

 

பசியின்மையைப் போக்க..

எல்லா சமையலறைகளிலும் கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் இஞ்சி கண்டிப்பாக இருக்கும். கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளுடன், சிறுதுண்டு இஞ்சியைச் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். காலை உணவின்போதோ, மோரில் கலந்தோ, இதனைத் தினமும் ஒருமுறை சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்துவந்தால், வெகுவிரைவில் பசியின்மை குணமாவதைக் காணலாம். இளநீர் பசியின்மையைப் போக்கும் சிறந்த மருந்து. சாப்பிடுவதற்கு மனமில்லாவிட்டாலும், காலையில் இளநீர் குடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்தில், வயிற்றில் பசியுணர்வு ஏற்படுவதைக் காண முடியும். 

அதேபோல பரோட்டா, சிப்ஸ் போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். எளிதில் சீரணமாகும் அன்னாசி, ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால், அடுத்த சில நிமிடங்களில் பசி ஏற்படுவதைப் பார்க்கலாம். அதேபோல, கீரைகள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு செய்யப்பட்ட சூப் சாப்பிட்டு வந்தால், பசியின்மையால் ஏற்பட்ட பலவீனங்கள் சரியாகும். 

 

பசியை வரவழைக்கும் அஷ்டசூரணம்

பசியின்மையைக் குணப்படுத்த, ஆயுர்வேதத்தில் அஷ்டசூரணம் என்றொரு மருந்து இருக்கிறது. இரண்டு வகை சீரகம், மூன்று வகை உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து, இது செய்யப்படுகிறது. எல்லா வீடுகளிலும், அந்தக் காலத்தில் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டது. குழந்தைகள் பசிக்கவில்லை என்று சொன்னால், இந்த அஷ்டசூரணத்தை 1 சிட்டிகை எடுத்து, சிறிது நெய்யில் கலந்து கொடுப்பார்கள். அதன்பின், சில நிமிடங்களில் குழந்தைகளுக்குப் பசிக்கத் தொடங்கும். பெரியவர்களின் பசியின்மையைச் சரிசெய்ய, சுமார் 5 கிராம் அஷ்டசூரணத்தை எடுத்து, அதனை மோர் அல்லது அரிசி வடித்த கஞ்சியில் கலந்து கொடுக்கும் வழக்கமிருந்தது. 

வாழ்வின் ஆதாரங்களில் முக்கியமானது உணவு. பசிக்கும்போது சாப்பிட்டால் மட்டுமே, எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும். காலையில் தாமதமாக எழுந்து, அவசரமாக வேலைக்குச் செல்வோம். அப்போது ஏனோதானோவென்று சாப்பிடுவோம். வேலைப்பளுவுக்கு நடுவே, மதியம் சரியாக 1 மணிக்குச் சாப்பிடச் செல்வோம். இரவு தூங்கச் செல்லும் முன்பும் இதே கதைதான். இவ்வாறு பசிக்காமல் சாப்பிடுவதால், நம் உடலில் பல நோய்கள் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். சமணம் மற்றும் புத்த மதத்தினர், ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே சாப்பிடுவார்கள். குறிப்பாக, பசி இல்லாதபோது அவர்கள் எதுவும் உண்பதில்லை. அதனால்தான், அவர்களது சராசரி ஆயுட்காலம் அதிகமாக இருந்து வருகிறது. பெரும்பாலான இனக்குழுக்களில் இந்த வழக்கம் இல்லை. 

உங்களுக்குப் பசியின்மை தொடர்ந்து இருந்து வருவதாக நினைத்தால், உடனே மருத்துவரைச் சந்தியுங்கள். அவரிடம் தகுந்த ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதன்படி, உங்களது அன்றாட வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள். இதனைச் செய்துவந்தால், உங்கள் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதுவே, நோய் தொற்றும் அபாயத்தையும் குறைக்கும். 

 

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி

பசியின்மையை எவ்வாறு சரிசெய்வது என்ற கவலை, எல்லா பெற்றோரிடமும் உண்டு. அந்தக் கவலையைப் போக்க, சமையலறையில் இருக்கும் சில மூலிகைகளைப் பயன்படுத்தலாம். அவற்றில் முக்கியமானது, இஞ்சி. நாம் ஆரோக்கியமாக வாழ, இஞ்சியின் மருத்துவக் குணங்களை அறிந்துகொள்ள வேண்டும். அதனைத் தினசரி சமையலில் பயன்படுத்த வேண்டும். 

பசியின்மையைப் போக்க இஞ்சியைப் பயன்படுத்தும் வழக்கம், இன்றும் கிராமங்களில் தொடர்ந்து வருகிறது. சுண்டுவிரல் அளவிலான இஞ்சியை எடுத்து அரைத்து, அதன் சாறை எடுத்துக் கொள்வார்கள். அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து, காலை வேளையில் குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். சுமார் 1 மணி நேரத்திற்கு, அந்தக் குழந்தைகளுக்கு எந்த உணவும் கொடுக்க மாட்டார்கள். ‘பசி.. பசி..’ என்று குழந்தைகள் அரற்றும்போது, இட்லியும் சர்க்கரையும் கொடுப்பார்கள். அதன்பின், சுமார் 11 மணியளவில் அந்தக் குழந்தைகள் இரண்டு முறை மலம் கழிப்பார்கள். நாக்குப் பூச்சி உட்பட, குழந்தைகள் உடலில் இருக்கும் கழிவுகள் அந்த மலத்துடன் வெளியேறும். மதிய வேளையில், அந்தக் குழந்தைகளுக்கு மோர் சாதம் தருவார்கள். இரவில், வழக்கமான உணவைக் கொடுப்பார்கள். 

இவ்வாறு இஞ்சியுடன் தேன் கலந்த சாறைக் குடிக்கும்போது, நம் உடலிலுள்ள கல்லீரல், கணையம், பித்தப்பை நன்றாகச் செயல்படத் தொடங்குகின்றன. குழந்தைகளின் பெருங்குடலில் தேங்கியிருக்கிற பூச்சிகள் அகற்றப்படுகின்றன. இதனால் குழந்தைகளுக்குப் பசியுணர்வு ஏற்படுவதுடன், அவர்களது ஆரோக்கியமும் மேம்படுகிறது. 

 

இஞ்சிப்பாலின் மகிமை

இன்று, பெரும்பாலான குழந்தைகளைப் பாதிக்கும் பிரச்சனை வறட்டு இருமல். எத்தனை சிகிச்சைகள் செய்தாலும், இதனைக் குணப்படுத்த முடியவில்லை என்கின்றனர் பல பெற்றோர்கள். இதனைத் தீர்க்க, ஒரு எளிய மருந்து இருக்கிறது. 100 மி.லி. பாலில் 200 மி.லி. தண்ணீர் சேர்த்து, அதனுடன் 5 கிராம் இஞ்சி சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து கொடுத்தால் போதும். காலை மற்றும் இரவு வேளைகளில், குழந்தைகளுக்கு இதனைக் குடிக்கக் கொடுங்கள். மூன்று நாட்களில், வறட்டு இருமல் சரியாவதைக் காணலாம். 

சீரான இடைவெளியில், இதனைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், அவர்களுக்கு சளி மற்றும் இருமல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகளே வராது. படுத்தால் வறட்டு இருமல் வருகிறது என்று சொல்லும் பெரியவர்களும், இதனைத் தாராளமாகக் குடிக்கலாம். 

 

மூட்டுவலிக்கு மருந்து

காலையில் எழுந்திருக்கும்போது, சிலருக்கு மூட்டுகளில் வலி இருக்கும். அதனை மடக்கவோ, நீட்டவோ சிரமப்படுவார்கள். ருமாடாய்ட் ஆர்த்தரிட்டிஸ் (rheumatoid arthritis), கவுட் (gout) என்ற இரண்டு நோய்களுக்குத் தீர்வளிக்கக்கூடியது இஞ்சி. 100 மி.லி. நீருடன் 5 கிராம் இஞ்சி அல்லது சுக்குப் பொடியைச் சேர்த்துக் கொதிக்கவைத்து, 50 மி.லி. ஆக வற்றியபின்பு அதனை வடிகட்டிக் குடிக்க வேண்டும். காலை மற்றும் இரவு வேளைகளில், இதனைக் குடிக்கலாம். சுமார் 10 நாட்கள் இவ்வாறு செய்துவந்தால், மூட்டுகளில் இருக்கும் இறுக்கம் குறையும். இந்த இஞ்சி அல்லது சுக்கு கஷாயம், மூட்டு வலி மற்றும் வீக்கத்தைப் போக்கும்.

 

இனி டயாலிஸிஸ் வேண்டாம், இஞ்சி போதும்!

இன்று, பலர் சிறுநீரகக் கோளாறுகளால் அவதிப்படுகின்றனர். ஆயுர்வேதத்தில் ‘ஆப்தரகஸ்வேதம்’ என்ற சொல் உண்டு. ஆப்தரகம் என்றால் இஞ்சி என்றும், ஸ்வேதம் என்றால் ஒத்தடம் என்றும் அர்த்தம். இஞ்சி ஒத்தடம் என்ற இந்த சிகிச்சைக்காக, 200 கிராம் இஞ்சியை ஒரு துணியில் கட்டி, அதனை ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்றாகக் கொதிக்கும்போது, இஞ்சியில் இருக்கும் நார் தவிர, அனைத்தும் நீரில் கரைந்துவிடும். இளஞ்சூடு இருக்கும் வகையில் அதனை ஆறவைத்து, அதில் ஒரு துணியை நனைக்க வேண்டும். நோயாளியைக் குப்புறப்படுக்க வைத்து, சிறுநீரகம் இருக்கும் பகுதியில் அந்த துணியை விரித்து வைத்துவிட வேண்டும். இதனை 30-40 நாட்கள் தொடர்ந்து செய்துவந்தால், உடலில் நல்ல மாற்றம் ஏற்படும். தற்போது டயாலிஸிஸ் செய்து வருபவர்களும் கூட, இதனை முயன்று பார்க்கலாம். இதன் மூலமாக, வெளிப்புறமாகவும் இஞ்சியைப் பயன்படுத்தலாம் என்பது புரியும்!

 

ஆண்மையை அதிகரிக்கும்!

வேலையில் மன அழுத்தம் ஏற்படுவது, அதிகமாகப் பிரயாணம் செய்வது, நல்ல ஆகாரம் இல்லாமல் இருப்பது போன்றவற்றினால், சில நேரங்களில் ஆண்களின் உடலிலுள்ள டெஸ்டோஸ்டீரான் (testosterone) வேலை செய்வதில்லை. இதனைச் சரிசெய்ய, அவர்கள் பக்கவிளைவை ஏற்படுத்தும் மருந்துகளை நாடுகின்றனர். பல அவதிகளுக்கு ஆளாகின்றனர். இதைக் குறைக்க, இஞ்சிப்பால் ஒரு சிறந்த மருந்து. 

20 கிராம் இஞ்சியை எடுத்து, அதனை 1லிட்டர் நீரில் கலந்து, நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அரை லிட்டராகச் சுண்டியபிறகு, அதனை வடிகட்ட வேண்டும். சுமார் 150 மி.லி. கஷாயத்துடன், 10 மி.லி. தேன் அல்லது பால் கலந்து சாப்பிட வேண்டும். தினமும் மூன்று வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால், சுமார் 40 நாட்களில் மீண்டும் ஆண்மைதன்மை அதிகரிப்பதைக் காணலாம். சந்தேகம் ஏற்பட்டால், டெஸ்டோஸ்டீரான் அளவையும் பரிசோதித்துக் கொள்ளலாம். 

பித்தப்பை கோளாறுகளுக்கு அறுவை சிகிச்சை தீர்வல்ல..

சீரண மண்டலத்தின் மிக முக்கிய உறுப்பான பித்தப்பை, நமது உடலில் ஈரலுக்கு மேலே அமைந்துள்ளது. நாம் சாப்பிடக்கூடிய உணவுகளை, உடல் செரிக்கின்ற அளவிற்கு மாற்றும் என்சைம்களைச் (enzyme) சுரக்கிறது பித்தப்பை. கொழுப்பு, நார்ச்சத்து, ஸ்டார்ச் சம்பந்தப்பட்ட உணவுகளைச் செரிக்க, இது மிகவும் உதவுகிறது. 

சாப்பிட்ட சில நிமிடங்களில், வயிற்றில் இருக்கும் உணவுக்கு ஏற்றவாறு என்சைம்களைச் சுரக்க, மூளை பித்தப்பைக்குச் சில சமிக்ஞைகளை அனுப்பும். இவ்வாறு உருவான என்சைம்கள் ஈரல் வழியாக, வயிற்றில் இருக்கும் உணவின் மீது பரவும். என்சைம்கள் அந்த உணவை உடைத்து, கூழ் போலாக்கிவிடும். அதன்பிறகு, அதில் உள்ள ஊட்டச்சத்துகளை உடல் உறிஞ்சிக்கொள்வதற்கு ஏற்றவகையில் மாற்றுவதே, பித்தப்பையின் முக்கியமான வேலை. இதில் மிஞ்சும் என்சைம்கள் சிறுகுடல், பெருங்குடலினால் உறிஞ்சப்பட்டு, மீண்டும் பித்தப்பைக்கு வந்து சேர்ந்துவிடும். 

 

பித்தப்பையில் கற்கள் 

இன்று, நாம் ஏராளமான கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்கிறோம். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நிலைமை கிடையாது. அப்போதெல்லாம் ஒரு திருமண விருந்திற்குச் சென்றால், அந்த சாப்பாட்டில் அவியல், மசியல், துவையல், பொரியல் இடம்பெற்றிருக்கும். ஒரு வடையோ, அப்பளமோ, அந்த உணவில் கூடுதலாக இருக்கும். இதைத்தவிர, வேறு எந்த உணவும் எண்ணெயில் தயார் செய்ததாக இருக்காது. வேகவைத்த காய்கறி உணவுகளை, நாம் அதிகமாகப் பயன்படுத்தி வந்ததே இதற்குக் காரணம். உணவைத் தாளிக்க வேண்டியிருந்தால் மட்டுமே, எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்படும். இன்றைய நிலைமையோ, தலைகீழாக இருக்கிறது. எண்ணெய் இல்லாமல், நாம் எந்த உணவையும் தயார் செய்வதே இல்லை. இதனால் நாம் சாப்பிடக்கூடிய உணவில், சராசரி கொழுப்பின் அளவு அதிகமாகிறது. 

அதுபோல, நம் முன்னோர்கள் கிழங்குகளை அதிகம் சேர்க்க மாட்டார்கள். சேனைக்கிழங்கு தவிர வேறெதையும் சாப்பிடக்கூடாது என்று, பள்ளிகளில் சொல்லித் தருவார்கள். ஆனால், இன்று எல்லா சமையலறைகளிலும் உருளைக்கிழங்கு தவறாமல் இடம்பிடிக்கிறது. ’குழந்தைங்க இதைத்தான் சாப்பிடுறாங்க’ என்கிறார்கள் பெற்றோர்கள். உண்ணும் உணவில் ஸ்டார்ச்சின் அளவு அதிகமாகிறது. அதே வேளையில், குடிக்கும் தண்ணீரின் அளவு குறைகிறது. இதனால் உடல் பாதிப்புக்கு உள்ளாகிறது. 

உடலுக்குத் தேவையில்லாத உணவுகளைச் சாப்பிடும்போது, முதலில் பாதிக்கப்படுவது பித்தப்பைதான். அப்போது, பித்தப்பையில் கற்கள் உருவாகத் தொடங்குகிறது. பித்தப்பை கற்கள் பெரிதாகும்போது, பிரச்சனையும் பெரிதாகும். சாப்பிட்டபின்பு, நம் நெஞ்சுப்பகுதியில் ஒருவித வலி உண்டாகும். அதன்பிறகு விலாப்பகுதி மற்றும் முதுகில் வலி பரவும். மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேன் செய்து பார்த்தால், பித்தப்பையில் கற்கள் இருப்பது தெரியவரும். பொதுவாகவே, 90 சதவீதம் பேருக்கு பித்தப்பையில் கற்கள் உருவாகும் பிரச்சனை இருக்கும். ஆனால், கொழுப்பு, ஆல்கஹால் அல்லது எளிதில் செரிக்க முடியாத உணவுகளை உட்கொள்ளும்போது, இந்தப் பிரச்சனை தீர்க்க முடியாததாக மாறும். 

 

அறுவைசிகிச்சை நிவாரணமல்ல..

பித்தப்பை பாதிப்புக்குள்ளாகும்போது, அறுவைசிகிச்சையின் மூலமாக அதனை அகற்றிவிடுகின்றனர் சிலர். அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் விளக்குவது இல்லை. 

பித்தப்பை அகற்றப்படுவதால், ஐ.பி.எஸ். பாதிப்பு ஏற்படுவது முதலாவது பிரச்சனை. அதாவது, சாப்பிடக்கூடிய உணவுகள் சீரணம் ஆகாததால், அதனை உடல் ஏற்றுக்கொள்ளாது. இதனால், ஒரு நாளைக்கு எட்டு அல்லது பத்து முறை மலம் கழிக்கும் சூழல் உருவாகும். கொழுப்பில் செய்யக்கூடிய எந்த உணவைச் சாப்பிட்டாலும், உடனே வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உருவாகும். புரதச்சத்து சம்பந்தப்பட்ட எந்த உணவைச் சாப்பிட்டாலும் பலன் இராது. இதனால், பித்தப்பை அறுவைச்சிகிச்சை செய்தவர்களின் உடல் ஒல்லியாகிக் கொண்டே செல்லும். அதனைச் சரிசெய்ய இயலாது. 

 

பித்தப்பை பாதிப்புகளை தவிர்க்கும் வழிகள்:

இரவில் ஒவ்வாத பொருளைச் சாப்பிடும்போது, வயிறு மற்றும் நெஞ்சுவலி ஏற்படும். இதனை சரிசெய்யும் சிறந்த மருந்து சீரகத்தண்ணீர். ஒரு டம்ளர் நீரில் 4 சிட்டிகை சீரகத்தை இட்டு, நன்கு கொதிக்கவைத்து, அதனை வடிகட்டிக் குடித்தால் போதும். சுமார் பத்து நிமிடங்களில், பித்தப்பை பாரம் நீங்கி வலி குறைவதைக் காணலாம். 

 

பித்தப்பையை பாதுகாக்கும் வழிமுறை 

 • ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பவர்களுக்கு, பித்தப்பை பாதிப்பு ஏற்படாது. 
 • அதுபோல, ஒத்துக்கொள்ளாத எந்த உணவையும் சாப்பிடக்கூடாது. 
 • உடற்பயிற்சி நன்றாகச் செய்யும்போது, பித்தப்பையில் இருக்கும் நச்சுப்பொருட்கள் விரைவில் வெளியேறும். 

ஆயுர்வேதத்தில் பித்தப்பையைப் பாதுகாக்கப் பல வழிகள் உண்டு. அதில் ஒன்றை, இப்போது நாம் பார்க்கலாம். ஆலிவ் எண்ணெய் 10 மி.லி., எலுமிச்சை சாறு 3 மி.லி., பூண்டு நசுக்கியது 5 கிராம் எடுத்து, மூன்றையும் ஒன்றாகக் கலக்க வேண்டும். காலையில் மட்டும், இதனை உட்கொள்ள வேண்டும். ஒரு மாதத்தில் 5 நாட்கள் மட்டும், இவ்வாறு செய்தால் போதும். ஆறாவது நாளன்று, காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால், ஏழாவது நாளன்று பச்சை நிறத்தில் மலம் கழியும். பித்தப்பையைச் சுத்தி செய்யும் ஆயுர்வேத சிகிச்சை இது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை, இந்த சிகிச்சையை மேற்கொண்டால் போதும். பித்தப்பை ஆரோக்கியமாகச் செயல்படுவதைக் காண முடியும். 

அதே போல, மாவிலங்கம் என்றொரு மரத்தின் பட்டைக்கு, கொழுப்பு மற்றும் அதனால் ஏற்படும் கற்களை உடைக்கும் சக்தி உண்டு. இதனைப் பயன்படுத்தியும், பித்தப்பையைப் பாதுகாக்கலாம். உதாரணமாக, 200 மி.லி. நீருடன், 10 கிராம் மாவிலங்கப் பட்டையைச் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். சுமார் 100 மி.லி. அளவிற்கு சுண்டியபிறகு, அதனை எடுத்துக் குடிக்க வேண்டும். தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில், இந்த நீரைப் பருகலாம். இவ்வாறு செய்துவந்தால், சுமார் 2 அல்லது 3 மாதத்தில் பித்தப்பையில் இருக்கும் கற்கள் நிரந்தரமாகக் குணமாவதைக் காணலாம்

- தொகுப்பு : உதய் பாடகலிங்கம்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles