ஆட்டிசம் (மனவளர்ச்சித்தடை நோய்) என்றால் என்ன? - இறுதிப்பகுதி

Saturday, August 13, 2016

ஆட்டிசம் நோயால் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புக்களுக்கு தீர்வுகள் என்ன?

மனப்பான்மை (Attitude) : 

குழந்தைக்கு நோய் தாக்கி உள்ளது என்று தெரிந்ததும், பல குடும்பங்களில் ஒருவரை ஒருவர் குறை சொல்லும் படலம் தொடங்கிவிடும். ஆண் தரப்பு பெண் தரப்பையும் பெண்தரப்பு ஆண்தரப்பையும் குறை சொல்லத் தொடங்கும்.

மருத்துவர்களாலேயே ஆட்டிசம் எதனால் வருகின்றது என்பதைத் துல்லியமாகக் கணித்துச் சொல்ல முடியாத நிலையில், இது தேவையற்ற ஒரு விவாதம். நோய் வந்துவிட்ட நிலையில், இந்த மாதிரி கண்டுபிடிப்புகளினால் யாதொரு பயனும் இல்லை. இந்த சிக்கல் தன்னால் இல்லை என்பதை நிரூபிப்பதற்காகத் தொடங்கும் இந்த பேச்சுக்கள், பிறகு பெரிய சச்சரவுகளாக  மாறிவிடும். இதனை கணவன், மனைவி இருவரும் புரிந்துகொள்ள வேண்டும். 

இக்காலங்களில், பெரும்பாலான வீடுகளில் மிகவும் செல்லமாகவும் எந்த பொறுப்பும் தெரியாமலும் (irresponsible) பிள்ளைகளை வளர்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். இத்தகைய பிள்ளைகளுக்கு எதிர்ப்புக்களோ, தோல்விகளோ (Failures), விமர்சனங்களோ (Criticism) சற்றும் பிடிக்காது. எடுத்ததற்கெல்லாம் சண்டை செய்யும் அத்தகைய பக்குவமற்ற (Immature) தம்பதியினருக்கு, ஆட்டிசம் நோய் கண்ட குழந்தை ஒரு பெரிய இடியாக வந்து சேருகிறது. தன்னையே இன்னும் சரியாக பராமரித்துக் (Self Care) கொள்ளத் தெரியாத ஒருவர், எப்படி நோய் கண்ட குழந்தையைத் தொடர்ந்து கவனிக்க முடியும்? இந்த மனப்பான்மையே, இத்தகைய இளம் பெற்றோர்களைச் சுயபரிதாபத்துக்கும் (Self Pity) பெரிய மன அழுத்தத்துக்கும் (Anxiety & Depression) தள்ளுகிறது. 

 

கணவன் மனைவியின் நல்உறவை மையப்படுத்தியே, குடும்பம் என்பது உருவாகிறது. கூட்டுக் குடும்ப அமைப்புக்கள் பெரும்பாலும் நொறுங்கி விட்ட நிலையில், கணவன், மனைவி, குழந்தை(கள்) என்ற அமைப்பே (Nuclear Family) குடும்பமாக உள்ளது. இந்த நிலையில், ஆட்டிசம் போன்ற வியாதிகள் கணவன் - மனைவி உறவைப் பாதித்து விடாதபடி பார்த்துக்கொள்ளுதல் மிக அவசியம். இது இருவருக்கும் ஏற்பட்டுள்ள சிக்கல் (Collective Responsibility) என்பதை இருவரும் புரிந்து, ஒருவரை ஒருவர் ஆதரவுடன் அணுகி சிக்கல்களை எதிர் கொள்வதே மிகச்சரியான வழி.

 

குழந்தைக்கு இப்படி ஆகி விட்டதே என்று, தன்னையும் தன் வாழ்க்கை துணையையும் கவனிக்காமல் இருப்பது அறிவீனம். உடற்பயிற்சி, நல்ல உணவு, ஓய்வு, மனப்பயிற்சி போன்றவற்றின் மூலம், தன்னை நன்கு பராமரித்துக்கொள்ளுதல் பெற்றோர்களுக்கு மிக அவசியம். அதே போல, சோர்ந்து போகும் வாழ்க்கைத்துணையை  உற்சாகமும் நம்பிக்கையும் கொடுத்து மீட்டுக் கொண்டுவருதலும் (To provide emotional support) முக்கியமான ஒன்று. செலவில்லாத சிறு சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யுங்கள். அடிக்கடி வெளியில் செல்லுங்கள். ஆட்டிசத்தை பிரச்சினையாகப் பார்க்காமல், ஒரு சவாலாகப் பாருங்கள்.

 

நோய் பற்றிய சரியான அறிவை புத்தகங்கள், பத்திரிகை, இண்டர்நெட், தொலைக்காட்சி போன்றவற்றின் மூலம் இருவரும் அறிந்து கொள்ளுதல் மிக அவசியம். இணைய தளங்களில் தெரிந்தும் தெரியாமலும், வியாபார நோக்கிலும் எழுதப்படும் பல செய்திகள் உங்களை குழப்பும்... ஆதலால் எச்சரிக்கை தேவை. மனவளர்ச்சி தடையுள்ள குழந்தைகளின் பெற்றோர் பங்கு கொள்ளும் பழகுதளங்கள் (Social sites, Blogs) பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, ஆட்டிசம் நோயுள்ள வளர்ந்த குழந்தைகளை உடையபெற்றோர்களின் அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

 

பயிற்சி:

நோய் உள்ளதை கண்டுபிடிக்கவே, பல குடும்பங்களில் பல காலம் ஆகின்றது. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட  பின்னும், அதை உறுதி செய்து (Assessment & confirmation) பயிற்சி அளிப்பதை விட்டு விட்டு, சில குடும்பங்கள் காலத்தை வீணடிப்பார்கள். நோய் உறுதிப்படுத்தப்பட்டால், அதை மனதளவில் ஏற்றுக்கொள்ளுதல் மிகவும் அவசியம். 

ஆட்டிசம் கண்ட குழந்தைக்கு, வல்லுனர்களே தொடர்ந்து 24 மணி நேரமும் பயிற்சியளிக்க முடியாது. அதே போல, குழந்தை வீட்டில்  நடந்து கொள்ளும் விதமாக ஒருவேளை வெளியில் நடந்துகொள்ளாது. இந்தச்சூழலில், பெற்றோரை விட குழந்தைக்குத் தொடர் பயிற்சி அளிக்கக் கூடியவர் வேறு யாரும் இருக்க முடியாது. இதைப் பெரிய பாரமாக உணராமல், மகிழ்ச்சியான கடமையாக ஏற்றுக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். நம் நாட்டில் நன்கு பயிற்சியடைந்த நேர்மையான பயிற்சியாளர்கள் மிக குறைவு. இந்நிலையில், பெற்றோர் தொடர்ந்து அளிக்கும் பயிற்சி மிகவும் அவசியமான ஒன்று. 

 

புறச்சூழல் (Environment):

தேவைப்படும்போது, புதிய சூழல்களில் பிறரிடம் குழந்தைக்கு மனவளர்ச்சி தடை நோய்  உள்ளதைத் தெரிவிப்பது நலம். பலரும் புருவத்தை உயர்த்தாமல் உதவிகரமாக இருப்பதற்கு, இது உதவி செய்யும். பயணம் செய்யும்போது, சில மீச்செயல்பாட்டு (Hyperactive) குழந்தைகள் செய்யும் செயல்கள் பிறருக்குத் தொந்தரவாகத் தெரியும். இது ஒரு நோய் என்று புரிந்து கொள்ளும் மக்கள், பெரும்பாலும் உதவிகரமாகவே இருப்பார்கள். 

கட்டுப்படுத்தமுடியாத சூழல்களுக்கு, உங்கள் குழந்தைகளைக் கூட்டிச் செல்லாதீர்கள். அதனால் நீங்களும் அவதிப்பட்டு குழந்தையும் அவதிப்படும்.  சிலர் வீடுகளுக்குச் செல்லும்போது, உணவு பற்றிய எச்சரிக்கைகளை (Food restrictions) (கோதுமை பொருட்கள், பிஸ்கட், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவை) முன்பே சொல்லிவிட்டுச் செல்லுதல் நலம். அதைப் புரிந்து கொள்ளாமல் மீறுவோர் வீட்டுக்கு, உங்கள் குழந்தையுடன் செல்லாதீர்கள்.

இந்த தொந்தரவுகள் இருக்கிறது என்ற காரணத்துக்காக, எங்கும் வெளியில் செல்லாமல் இருக்காதீர்கள். குழந்தையையும் கூட்டிச்செல்லாமல் இருக்காதீர்கள். குழந்தையைத் துன்புறுத்தாத புதுப்புது சூழல்கள், அதன் முன்னேற்றத்துக்கு உதவும்.

ஆட்டிசம் கண்ட குழந்தைகள் உள்ள பிற குடும்பங்களிடம், மனம் விட்டு பேசுங்கள். அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

 

இந்த பகிர்வுகள் கீழ்க்கண்ட சில தீர்வுகளையும் கொடுக்கலாம்:

  • ஒவ்வொரு ஆட்டிசம் நோய் கண்ட குழந்தையும், பிற ஆட்டிசம்  நோய் கண்ட குழந்தையிடம் இருந்து எப்படி மாறுபட்டு உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள உதவும்
  • ஒன்றாக குழந்தைகளை விளையாட விடலாம்
  • சுற்றுலா அழைத்து செல்லலாம்
  • அவர்களைப் பாதிக்காத உணவுகளுக்கான சமையல் குறிப்புக்களை (recipes) பகிர்ந்து கொள்ளலாம்
  • சிறப்பு பயிற்சியாளர்களை வைத்து, பல குழந்தைகளுக்கு ஒன்றாகப் பயிற்சியளிக்க முடியும்.
  • தான் மட்டும் தனியாக இல்லை என்ற செய்தி, மன இறுக்கத்தை குறைக்கும்.
  • பலர் ஒன்றாக சேரும்போது பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கள் ஏற்படுத்த முடியும் 

 

செலவுகள்:

பல விதமான பயிற்சிகள் தர வேண்டியுள்ளதால், பணச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அந்த செலவையும் மனதில் கொண்டு, மாத மற்றும் வருட செலவுகளை திட்டமிடுதல் (Budget) நல்லது. செலவு செய்ய மிகவும் முடியாதவர்கள், அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள பயிற்சிக்கூடங்கள்  மற்றும் சேவை நோக்கில் குறைந்த அளவு பணம் வாங்கும் வெகு சில பயிற்சிக் கூடங்களை அணுகலாம்.  

குறிப்பிட்ட  பயிற்சி தேவைதானா என்பதை நன்கு புரிந்துகொண்டு, கணவன் மனைவி ஒருவரோடு ஒருவர் கலந்து ஆலோசித்த பிறகு முடிவுகளை எடுங்கள். ஒவ்வொரு வருட முடிவிலும் என்ன செய்தோம்? என்ன பலன் கிடைத்தது? என்பதை மனதில் சீர்தூக்கிப் பார்த்து, மேற்கொண்டு முடிவுகளை மாற்றிக் கொள்ளலாம். 

கண்டிப்பாக, ஆட்டிசம் குழந்தையை மனதில் வைத்து அவர்கள் பெயரில் ஒரு தொகையைச் சேமிப்பதும் நல்லது. வளர்ந்த பருவத்தில் கடை போன்ற ஏதாவது சிறு தொழில் தொடங்க, இது உதவலாம். 

 

அரசாங்க உதவி:

அரசாங்கங்கள் இதை ஒரு மன ஊனமாக அங்கீகரித்து உள்ளன. அதன் அடிப்படையில், ஆட்டிசம் கண்ட குழந்தை என்று ஒரு அடையாள அட்டையை அரசாங்கத்திலிருந்து பெற முடியும். இந்த அட்டையைப் பயன்படுத்தி, சில சலுகைகளை (Concessions) குழந்தைக்குப் பெறலாம். எடுத்துக்காட்டாக, தேர்வு எழுதும் சமயங்களில் எழுத முடியாத அளவுக்கு சிக்கல்கள் உள்ள குழந்தைகள், எழுத்து உதவிக்கு (Scribe) ஒரு நபரை துணைக்கு வைத்துக் கொள்ளலாம்.

ஆட்டிசம் கண்ட குழந்தைகளுக்கான மருத்துவ, பயிற்சி செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூபாய் 75000 வரை மத்திய அரசு வரி விலக்கு (Tax Exemption) அளித்துள்ளது. உரிய ரசீதுகளை (receipts) கொடுத்து 1,25,000/- வரை வரி விலக்கும் பெறலாம். மேற்சொன்ன விஷயங்களுக்கு , உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஆட்டிசம் குழந்தைகளுக்கு என மருத்துவ காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு (இன்ஷூரன்ஸ் - Insurance) போன்ற வகைகளிலும் அரசாங்க சலுகைகள் உள்ளன. 

 

ஆட்டிசத்தில் மிகையறிவு (Savant) என்றால் என்ன?

பொதுவாக அவதானிகள் (அஷ்டாவதானி, சதாவதானி போன்றவர்கள்) என்று வடமொழியிலும் கவனகர்கள் (எண்கவனகர், பதின்கவனகர் போன்றவர்கள்) என்று தமிழிலும் சொல்லப்படும் மிகை நினைவாற்றல் கொண்டவர்கள், ஆட்டிசம் கண்டவர்களுள் அதிகமாக இருப்பார்கள். சாதாரண மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் மட்டும் மிகை நினைவாற்றல் / மிகையறிவு கொண்டவர்களாக இருக்கும்போது, ஆட்டிசம் நோய் கண்டவர்களுக்குள்  பத்து சதவீதம் பேர் மிகையறிவு மற்றும் மிகை நினைவாற்றல் கொண்டவர்களாக இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது பத்து ஆட்டிசம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு மிகையறிவு  / நினைவாற்றல் இருக்கும் வாய்ப்பு உள்ளது.

கணிதம் (Maths/ Calendar), இசை, பிற கலைகள் (Art) போன்றவற்றில் மிகப்பெரிய நினைவாற்றலையோ, அறிவையோ இவர்கள் வெளிப்படுத்த வாய்ப்பு உள்ளது.   எடுத்துக்காட்டாக ஒரு நாட்காட்டியை அவர்கள் உள்வாங்கிக் கொண்டதாக வைத்துக் கொள்வோம். ஜூன் 9ஆம் தேதி 1966 அன்று என்ன கிழமை என்று கேட்டால், சரியாகச் சொல்லி விடுவார்கள். சிலர் திருக்குறளில் பொளந்து கட்டுவார்கள். சிலர் பெரிய இசைமேதையாகவும், ஓவியராகவும் சிறந்து விளங்கும் வாய்ப்புகள் உண்டு. அபூர்வமாக, சிலர் பல மொழிகளில் வல்லமை காட்டுவார்கள். 

அவர்களின் கூர்ந்து கவனிக்கும் திறனே (Concentration), இப்படிப்பட்ட மிகையறிவு ஆற்றலை ஏற்படுத்துவதாகச் சில அறிஞர்கள் சொல்கின்றனர். ஆனாலும், உண்மையான காரணம் தெரியவில்லை. இடது பக்க மூளையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை ச் சரிக்கட்ட, வலது பக்க மூளை அதிகத் திறனை அடைந்து இந்த நிலை ஏற்படுவதாகச் சில மூளையியல் நிபுணர்கள் நம்புகிறார்கள். 

 

ஆட்டிசம் நோய் கண்ட சில குழந்தைகள் மிகையறிவு உள்ளவர்களாக இருப்பதை எப்படி கண்டறிவது? 

பொதுவாக இசை, வரைகலைகள், கணக்கு, நாட்காட்டி , இடம் / அடையாளம் போன்ற விஷயங்களில் அதீத நினைவுத்திறனையோ, அறிவுத்திறனையோ, தொடர்ந்து ஒரு குழந்தை வெளிப்படுத்தினாலே, நாம் மிகையறிவு அறிகுறிகள் இருப்பதாகக் கொள்ளலாம்.  

ஆட்டிசம் உள்ள எல்லா மிகையறிவு குழந்தைகளும், ஒரே மாதிரி திறமைகளை வெளிப்படுத்த மாட்டார்கள். ஒரு சில குழந்தைகள், மிகச்சிறிய விஷயத்தில் மட்டும் அதீத நினைவாற்றலை வெளிப்படுத்த வாய்ப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக, (நாட்காட்டியில் பயிற்சியடைந்த குழந்தை) 20 வருடத்துக்கு முன் உள்ள தேதியை குறிப்பிட்டால், அன்று என்ன கிழமை என்று சொல்ல வாய்ப்பு உள்ளது. இரண்டாவது வகை குழந்தைகள், கடினமான கணக்குகளுக்கு  கூட மிகக்குறைந்த நேரத்தில் விடை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது. மூன்றாவது வகையில் உள்ள மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ள குழந்தைகளே, உலக அளவில் வியக்கத்தக்க ஆக்கப்பூர்வமான திறமைகளைச் செயல்படுத்திக் காண்பிக்க வாய்ப்பு உள்ளது. இந்த மூன்றாவது வகை குழந்தைகளுக்கு, மிகுந்த நினைவாற்றலுடன் அறிவுத்திறனும் இருக்க வாய்ப்பு உள்ளது. 

பொதுவாக, ஒருவருக்கு எவ்வளவு அறிவுத்திறன் இருக்கின்றது என்று வல்லுனர்கள் கணக்கிட்டுச் சொல்லுகிறர்கள். இதில் 70க்கும் கீழே உள்ளவர்களை,  தன் வாழ்க்கையை தானாக நடத்திக்கொள்ளும் அளவுக்கு அறிவுத்திறன் இல்லாதவர் என்று கருதுகிறர்கள். ஆனால் மிகை நினைவுத்திறன், அறிவு ஆற்றலை வெளிப்படுத்தும் ஆட்டிசம் குழந்தைகள் பலரும் எழுபதுக்கும் கீழ் அறிவுத்திறன் கொண்டவர்களாக இருப்பது கண்டு வல்லுனர்கள் குழம்புகிறார்கள். இதன் மூலம், பயன்பாடு இல்லாத நினைவாற்றல் உள்ளவர்களாக பல ஆட்டிசம் கண்ட குழந்தைகள் எடை போடப்படுகிறர்கள். ஆனாலும், அறிவியல்பூர்வமாக ஒரு ஆட்டிசம் கண்ட குழந்தையின் அறிவுத்திறனையோ, நினைவாற்றலையோ அளக்கும் செயல்முறைகள் இன்னும் உருவாகவில்லை. குறிப்பாக, பேச்சுத்திறன் இல்லாத ஆட்டிசம் கண்ட குழந்தைகளின் அறிவாற்றலை அறிதல் மிகவும் கடினம். 

நடைமுறையில் அவர்கள் வெளிப்படுத்தும் ஆற்றலை வைத்தே, இப்போது நாம் மிகையறிவு உள்ள குழந்தைகளைக் கண்டுகொள்கிறோம். 

 

அவர்களின் திறனை சிறப்பாக பயன்படுத்தச் செய்யும் வழிகள் என்ன?

முன் பதிலில் கண்ட உண்மைகளின் அடிப்படையில் பார்த்தால், சில ஆட்டிசம் குழந்தைகளிடம் உள்ள மிகை நினைவாற்றல் வெறும் அலங்காரப்பொருளாகப் பார்க்கப்பட வாய்ப்புள்ளது. அதைப் பார்த்து பலர் வியக்கலாம். ஆனால், அந்த ஆற்றலை எவ்வாறு அந்தக் குழந்தைகளின் வாழ்க்கைக்குப் பயன்படும் திறமையாக மாற்றுவது என்பதே, நாம் கவனிக்க வேண்டிய ஒன்று.

மிகையறிவு இல்லாத ஆட்டிசம் குழந்தைகள் கூட, இசையை மற்றவர்களை விட நன்கு நினைவில் வைத்துக்கொள்கிறர்கள் என்று கண்டுபிடித்துள்ளனர். பொதுவாகவே, ஆட்டிசம் கண்ட குழந்தைகளுக்கு இசையைப் பயிற்றுவித்தல் மிகவும் நல்லது.

ஆட்டிசம் கண்ட குழந்தைகளின் ஒவ்வொரு செயலையும் சிறு வயதிலிருந்தே கூர்ந்து கவனிக்க வேண்டும். மிகையறிவோ, அதிக நினைவாற்றலோ இருப்பதைக் கவனித்துவிட்டால், சற்றும் காலம் தாழ்த்தாமல் அவர்களைச் சிறுகச்சிறுக  பல பயிற்சிகளில் ஆழ்த்தி, எதில் அவர்கள் மிகவும் விருப்பமாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். இந்த பயிற்சியை வெறும் அலங்காரத்துக்கும் பெருமைக்குமான பயிற்சியாக நிறுத்திவிடாமல், அதைச் சார்ந்து ஏதாவது தொழிலில் ஈடுபடுத்த முடியுமா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

பாடகராகவோ, இசை  மீட்டுவராகவோ, வரைகலை நிபுணராகவோ தொழிலை அமைத்துக்கொள்ள  இருக்கும் வாய்ப்புக்களைத் தொடர்ந்து ஆராய வேண்டும். சிலர் கணக்கு மேதைகளாக வளரவும் வாய்ப்பு உள்ளது. 

ஐன்ஸ்டீன் உட்பட உலக அளவில் பல துறைகளைச் சார்ந்த வல்லுனர்கள், சிறுவயதில் மன வளர்ச்சி நோய் தாக்கியவர்களாகவோ, கற்கும் திறன் அற்றவர்களாகவோ இருந்திருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். எதுவாக இருப்பினும், பயிற்சி இல்லாமல் எந்த சாதனையும் நிகழாது என்பதே உண்மை. 

 

நோயால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

ஆட்டிசம் கண்ட குழந்தைகளை மனதில் கொண்டே, பெரும்பாலான நடவடிக்கைகள், விவாதங்கள் இருக்கின்றன. வளரும் பருவத்தில் குழந்தைகளுக்கு பல அறிகுறிகள் மறைந்தோ, மாறியோ போய்விடுகின்றன. பொதுவான, ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையை (Acceptable stage) அவர்கள் அடைந்து விடுவதால், பெரும்பாலும் சிக்கல் இல்லாமல் போய்விடுகிறது. 

பிறரைப் பாதிக்கும் செயல்பாடுகள்  கொண்ட ஆட்டிசம் உள்ள ஒருவரை, சிறு குழந்தையாக இருக்கும்போது ஏற்றுக்கொண்ட சமூகம், வளர்ந்த பிறகு புரிந்து கொள்வது கடினம். ஆகவே, ஆட்டிசம் கண்டவர்களுக்குச் சிறு வயதிலிருந்தே சமூகம் பற்றிய குறைந்தபட்ச புரிதலை ஏற்படுத்தி விடுவது நல்லது

பொதுவாக, வேலை செய்யும் இடத்தில் வேலையை நன்கு புரிந்துகொண்டு, பிறரை விடவும் சிறப்பாக வேலைகளை முடிக்க ஆட்டிசம் நோய் கண்டவருக்கு  வாய்ப்புள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் மாற்றாமல் செய்ய வேண்டும் என்ற பிடிவாதம், அவர்களுக்கு சில வகைகளில் சாதகமாக அமைகிறது. ஆனால், பிறரிடம் நெளிவுசுளிவோடு பழகுதல் போன்ற விஷயங்களில், அவர்கள் சரியாக இருக்க மாட்டார்கள். இதை நன்கு புரிந்துகொள்ளும் சூழலில் வேலையில் அமர்ந்தால், அவர்களுக்கும் பிறருக்கும் துன்பம் இல்லை. இன்னும் இந்த நோய் பற்றிய அறிவு சமூகத்தில் வளராத நிலையில், இப்போதைக்கு இது ஒரு கடினமான பகுதிதான். இதனால் ஆட்டிசம் கண்டவர்களின் பலம் மற்றும் பலவீனம் பற்றி, முதலிலேயே உடன் வேலை செய்யும் பிறரை அறியச்செய்தல் நல்லது. எதிர்காலத்தில், அரசாங்கங்கள் இவர்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களை இயற்ற வாய்ப்பு உள்ளது.

ஆட்டிசம் கண்ட மிகப்பலரை சிறு வயதில் நாம் கண்டு கொள்வதுபோல், வளர்ந்ததும் கண்டுபிடித்தல் கடினம். வெளிப்பார்வை மற்றும் அவர்களது செயல்பாடுகளைப் பொறுத்தவரை, அவர்கள் எல்லோரையும் போலத்தான் இருப்பார்கள். பழகும் விதத்தில் பேதங்கள் தென்படலாம் அல்லது குறிப்பிட்ட சில தருணங்களில் மட்டும், அவர்கள் சராசரி எதிர்பார்ப்புகளுக்குள் வராமல் போகலாம். 

ஆட்டிசம் நோயினால் வாழமுடியாமல் போய்விட்டார் என்று, இது வரையில் யாரைப் பற்றியும் நாம் கேள்விப்படுவது இல்லை. ஆட்டிசம் நோயுள்ளவர்களும், வளர்ந்த பிறகு பிறரைப்போலவே உயர் கல்வி பயிலுகிறார்கள், வேலை செய்து சம்பாதிக்கிறார்கள், சுய தொழில்களில் ஈடுபடுகிறார்கள், திருமணம் செய்து கொள்ளுகிறார்கள் என்பதே உண்மை. ஏதாவது ஒரு வகையில், சமூகம் அவர்களை உள்வாங்கிக் கொள்ளத்தான் செய்கிறது. எல்லோரையும் போலவே, மிகப்பல நேரங்களில் அவர்கள் தன்னிலை இழக்காமல் வாழத்தான் செய்கிறார்கள். 

ஆட்டிசம் கண்டவர்களுக்கு சிறுவயதில் / வளரும் பருவத்தில்  பயிற்சி தேவைப்படுகிறது. வளர்ந்த பிறகு, அவர்களைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள சமூகத்துக்கு ப் பயிற்சி தேவைப்படுகிறது. அவர்களைத் தவறாக புரிந்துகொண்டு தொந்தரவு செய்யாத வரையில், அவர்கள் தங்களை வாழ வைத்துக்கொள்வார்கள்.

-இரா. கோவர்தன்  
(kalthondri@gmail.com)

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles