ஷாம்பூவை தவிர்க்கலாமே!

Tuesday, August 9, 2016

இருபத்தியோராம் நூற்றாண்டில் மனிதகுலம் சந்திக்கும் மாபெரும் பிரச்சினைகளின் வரிசையில் முதலிடத்துக்கு வந்துவிட்டது மன அழுத்தம். உலகமயமாக்கல், முதலாளித்துவம் போன்றவை மனிதனின் அன்றாட வாழ்வைச் சிக்கலான வலைப்பின்னலுக்குள் இழுத்துக்கொண்டு வந்துவிட்டது. விளைவு, பெயரிட முடியாத பல நோய்கள் பரிசாகக் கிடைத்திருக்கின்றன. உணவே மருந்தாக இருந்ததுபோய், இன்று மருந்தே மனிதனின் உணவாகிப் போய்விட்டது. இது மனித குல அழிவின் தொடக்கங்களில் ஒன்று. மெல்ல இதிலிருந்து மீண்டு, இயற்கைக்குத் திரும்புதலே மானுடத்தை மீட்டெடுப்பதற்கான அறவழிகளில் ஒன்றாக இருக்கும்! 

 

அன்றாடம் நாம் உபயோகிக்கும் உணவுப்பொருட்களில் இரசாயன கலப்பின் விகிதம் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. பெண்களோ அல்லது ஆண்களோ, இன்றைய தேதியில் எல்லோருக்கும் இருக்கும் தலையாய பிரச்சினை, முடி உதிர்தல். இயற்கையான முறையில் முடி உதிர்தலைத் தவிர்ப்பது எப்படி? அதற்கான தீர்வு என்ன என்பதை பார்ப்போமா!

 

“ஷாம்பூ உபயோகிச்சாதான் என்னோட முடி பளபளப்பாக இருக்கும், எண்ணெய் பசையோட இருக்காது” அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு, பூந்தி கொட்டை ஒரு நல்ல தீர்வு. இதை எப்படி உபயோகிக்கிறதுன்னு யோசிக்கிறீங்களா? ரொம்ப சிம்பிள் தாங்க. உலர்ந்த பூந்தி கொட்டையைக் உடைத்து, கொட்டையை நீக்கி, அதன் தோலை வெதுவெதுப்பான நீரில் ஊற வச்சுக்கோங்க. ஊறவைத்த தண்ணீரில், சீயக்காய் சேர்த்து தலைக்கு குளிச்சீங்கன்னா, உங்க கூந்தல் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். முடி உதிரலும் குறையும்.

 

பூந்தி கொட்டையின் மற்ற பயன்கள் வெள்ளி பாத்திரங்கள், ஆபரணங்களைச் சுத்தம் செய்யலாம்.

இதனைப் பயன்படுத்தி பட்டுத் துணிகளைத் துவைத்தால், சாயம் போகாமல் பட்டு ஜரிகையை பளிச்சென்று இருக்கும்.பேன், பொடுகு தொல்லையிலிருந்து விடுபட, வாரமிருமுறை தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.தினசரி குளியலில் சோப்புக்குப் பதிலாக இந்த பூந்தி கொட்டையை தேய்த்துக் குளித்தால், தோல் நோய்கள்  நம்மை அண்டாது. கழிவுநீரில் இது கலக்கும்போது, சுற்றுச்சூழல் மாசு ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

 

இன்று ஒரு மனுஷனுடைய அடையாளங்களில் முக்கியமான இடத்தை வகிக்கிறது தலைமுடி. வழுக்கையைப் பற்றி யோசிக்கிற இளம் தலைமுறை, இருக்கிற முடியைக் காக்கிறதுல கொஞ்சம் கவனம் செலுத்தலாமே..!

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles