இரும்புச்சத்து குறைபாட்டைப் போக்கும் ரசம்!

Monday, November 21, 2016

இரும்புச் சத்து குறைபாடு தற்பொழுது எங்கும் நீக்கமற நிறைந்துவிட்ட பிரச்சனையாகி விட்டது. உலகிலேயே இரும்புச் சத்து குறைபாட்டினால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதற்கு, நாம் தனிப்பட்ட முறையில் யாரையும் குறை சொல்லமுடியாது.

நமது வாழ்க்கை முறையும்,  நம்மை  நாமே கவனித்துக் கொள்ள இயலாத அவல நிலையும் தான் இதற்குக் காரணம். நாம் உண்ணும் கீரை, காய்கறிகள் மற்றும் பழவகைகளிலேயே இரும்புச்சத்து அதிகப்படியாகக் காணப்படுகிறது. இவை அனைத்தையும் உண்டபிறகும், இரும்புச்சத்து குறையினால் அவதிப்படுகிறீர்களா? நீங்கள் உணவில் ரசத்தைச் சேர்த்துக்கொண்டால் போதும்; உங்கள் குறை சட்டென்று மறைந்துவிடும். அப்படியொரு மாயத்தைச் செய்யும் வல்லமை கொண்டது உலர் திராட்சை ரசம். 

உலர் திராட்சை ரசம் எப்படி செய்ய வேண்டுமென்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம். 

தேவையான பொருட்கள் :

 • உலர் திராட்சை  - 1 கப்
 • பருப்பு தண்ணீர் (வேகவைத்த துவரம் பருப்பு ) - 1 கப்
 • தக்காளி    - 2
 • புளிக்கரைசல்  - 1 மேஜைக்கரண்டி          
 • பூண்டு (தட்டியது)   - 4-5 பல் 
 • ரசப்பொடி   - 1 தேக்கரண்டி          
 • மஞ்சள்     பொடி   - ஒரு சிட்டிகை     
 • காய்ந்த     மிளகாய்   - 1     
 • தட்டிய மிளகு, சீரகம் - 1 தேக்கரண்டி          
 • கறிவேப்பிலை     - சிறிதளவு          
 • கொத்தமல்லி   - சிறிதளவு          
 • சீரகம்    - 1/4 தேக்கரண்டி          
 • கடுகு - 1/4 தேக்கரண்டி          
 • உப்பு        - தேவையான அளவு     
 • எண்ணெய்       - தேவையான அளவு     

செய்முறை :

 

 • உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்து, அரைத்து, அதனைச் சாறெடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
 • வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
 • இத்துடன் தட்டிய பூண்டு சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
 • பச்சை வாசனை மறைந்ததும், தக்காளி மற்றும் ரசப்பொடி சேர்த்து, தக்காளி கரையும்வரை நன்றாக வதக்கவும்.
 • தக்காளி கரைந்ததும், புளிக்கரைசல், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை நன்றாகக் கொதிக்க விடவும்.
 • இத்துடன் பருப்பு தண்ணீர் சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி ஒரு கொதி வருமாறு செய்யவும். 
 • ஒரு கொதி வந்ததும் தட்டிய மிளகு, சீரகம் மற்றும் அரைத்து வைத்த உலர் திராட்சையைச் சேர்த்து, நன்கு கலந்து, அடுப்பை விட்டு இறக்கவும்.

இப்போது உலர் திராட்சை ரசம் தயாராகிவிட்டது. உங்கள் குறைகளைப் போக்க, உணவில் இதைச் சேர்த்துக்கொண்டால் போதும். எந்த பாதிப்பும் இன்றி, நீங்கள் ஆரோக்கியமாக வாழலாம்!

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles