மீண்டும் ‘சதுரங்க வேட்டை’!

Friday, September 23, 2016

‘இப்படியெல்லாமா ஏமாத்துவாங்க’ என்று நம்மவர்களைப் புலம்பவைத்த திரைப்படம் ’சதுரங்க வேட்டை’. ஆனால், அந்தப் படம் நல்ல சினிமாவை ரசிப்பவர்களை ஏமாற்றவில்லை. அதே வேளையில், மக்களை விதவிதமாக ஏமாற்றுபவர்களை அடையாளம் காட்டியது.  ‘எப்படி தாங்கள் ஏமாற்றப்பட்டோம்?’  என்பதை, அதுவரை ஏமாந்தவர்களுக்குப் புரியவைத்தது. ஆனாலும், வெவ்வேறு வடிவங்களில் மக்கள் ஏமாறுவது இப்போதும் தொடர்ந்து வருகிறது.

கிராமம், நகரம் என்ற பாகுபாடு, இந்த விஷயத்தில் செல்லுபடியாவதில்லை. இதனை மையமாக வைத்துத் தயாராகப் போகிறது சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகம். 

 

இயக்குனர் மனோபாலாவின் தயாரிப்பில் வெளியான சதுரங்க வேட்டை படத்தை இயக்கியவர் வினோத். இவரது கதை, திரைக்கதை, வசனத்தில் தயாராகிறது ச.வே. இரண்டாம் பாகம். இதனை இயக்கப் போகிறவர் நிர்மல்குமார். இவர், விஜய் ஆண்டனியின் ‘சலீம்’ படத்தை இயக்கியவர். இந்தப் படத்தில் அரவிந்த்சாமி நாயகனாகவும், த்ரிஷா நாயகியாகவும் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார் த்ரிஷா. 

 

சாதாரணனின் ஆதங்கத்தை, சமூக கோபத்தை, எதிர்பார்ப்பை வெளிப்படுத்தப் போதுமான வெளி நம் சமூகத்தில் கிடைப்பதில்லை. பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அவை வெளிப்படும்போது, வெறுமனே ஒரு புலம்பலாக மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது. இம்மாதிரியான விஷயங்கள் ஊடகங்களில் வெளிப்படும்போது மட்டுமே, அவை ஒட்டுமொத்த சமூகத்தின் ஈர்ப்பைச் சம்பாதிக்கின்றன. அதுவே, சதுரங்க வேட்டை மாதிரியான படங்கள் கவனிக்கப்படக் காரணம். இம்மாதிரிப் படங்கள் பெருகுவதன் மூலமாக, ஏமாற்றும் பேர்வழிகள் வேறு விஷயங்களைத் தேடிச்செல்லும் கட்டாயம் ஏற்படும். அதோடு, ஏமாறும் அப்பாவி மக்களின் விகிதமும் குறையும்.  

 

மண்ணுளிப்பாம்பு, கோவில் கலசம், எம்.எல்.எம் போன்ற மோசடிகளை நுணுக்கமாகச் சித்தரித்தது சதுரங்க வேட்டை திரைப்படத்தின் முதல்பாகம். அந்த வகையில், இதன் இரண்டாம் பாகம் ஸ்டைலிஷாக அரங்கேறும் ஏமாற்றுவேலைகளை அம்பலப்படுத்தும் என்று நம்பலாம். 

- பா.உதய்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles