திரையரங்கில் படம் பார்ப்பது ஒரு சமூக கடமை!

Tuesday, January 23, 2018

லோன்வுல்ப் புரொடக்ஷன் சார்பில் இயக்குநர் மிஷ்கின் தயாரித்து, நடித்துள்ள படம் ‘சவரக்கத்தி’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் மிஷ்கின் பேசும்போது,  “என்னுடைய தம்பியும் இயக்குனருமான ஆதித்யாவிடம் நான் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். போஸ்டர்களில் என்னுடைய பெயரை அவருடைய பெயரை விட பெரிதாக போட்டிருக்கிறார்கள். அதற்கு படத்தை வாங்கியவர்கள் தான் காரணம்.

என்னுடைய பெயர் பெரிதாக இருந்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பதால் தான் அப்படி போட்டிருக்கிருக்கார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு எப்போதும் என்னுடைய படத்தின் விளம்பரங்களில் என்னுடைய பெயரை பெரிதாக போடுவது பிடிக்காது. 

நான் சென்ற பிறகு ஐம்பது வருடம் கழித்து என்னை பற்றியும், நான் எடுத்த படம் இது என்றும் எல்லோரும் பேசினால் போதும். எனக்கு ‘சவரக்கத்தி’ படத்தின் மூலம் எந்த லாபமும் இல்லை. எனக்கு எந்த லாபமும் வேண்டாம். அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. அரோல் குரோலி என்னுடைய மனதுக்கு நெருக்கமான இசையமைப்பாளர். படத்தில் ஓர் இடத்தில் அம்மாவின் பாசத்தை மையப்படுத்தி ஒரு இசை ஒன்றை கொடுத்துள்ளார். அது எனக்கு மிகவும் பிடித்த இசை. இந்த படத்துக்காக இயக்குநர் ராம் கடுமையாக உழைத்துள்ளார். தன்னுடைய காலில் அடிபட்ட பின்னரும் அவர் படபிடிப்பில் தொடர்ந்து கலந்துகொண்டு சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். 

எம்.ஜி.ஆர் , சிவாஜி , ரஜினி , கமல் போன்ற நடிகர்கள் இல்லாவிட்டால் நாம் எப்படி உயிரோடு இருந்திருப்போம் என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் தான் இத்தனை வருடங்களாக நம்மை மகிழ்வித்து வருகிறார்கள். அவர்கள் நடித்த படங்களை நான் திரையரங்குக்கு சென்று கண்டுள்ளேன். அப்படங்கள் எனக்கு மிகப்பெரிய பிரமிப்பை அளித்துள்ளது. திரையரங்கில் படம் பார்ப்பது ஒரு சமூக கடமை. திரையரங்கில் படம் பார்த்தால் தான் நன்றாக இருக்கும்” என்றார். 

இந்த விழாவில் ‘சவரகத்தி’ படத்தின் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா, இயக்குநர் ராம், நடிகை பூர்ணா, நடிகர் கீதா ஆனந்த், இசையமைப்பாளர் அரோல் குரோலி, ஒளிப்பதிவாளர் கார்த்திக், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கொண்டனர்.

 

- கிராபியென் ப்ளாக் ​

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles