மறக்க முடியாதது கமல், ரஜினி பாராட்டு!

Monday, January 22, 2018

கடந்த 2017 ஆம் ஆண்டில் தெலுங்கில் ‘கைதி நம்பர் 150’, ‘நேனு லோக்கல்’, ‘ராரண்டோய் வேடுக சூதம்’, ‘துவ்வாட ஜெகந்நாதம்’, ‘ஜெய ஜானகி நாயகா’, ‘ஜெய் லவ குசா’, ‘உந்நாதி ஒகட்ட ஜிந்தகி’, ‘மிடில் கிளாஸ் அப்பாயி’ என எட்டு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் தேவிஸ்ரீபிரசாத். இந்த எட்டு படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன. இந்நிலையில் மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் அவருக்கு மகுடம் சூட்டுவது போல ஒரு நிகழ்வு நடந்தேறியது. அதை அவரே கூறுகிறார்.

 

“நட்சத்திர கலைவிழாவில் நான் மேடையில் பாட்டுப் பாடிக் கொண்டே நடனமாடினேன். விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற என்னுடைய நிகழ்ச்சியை, அனைத்து திரையுலக நட்சத்திரங்களுடன் முன் வரிசையில் அமர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ரசித்து கேட்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பலரும் எழுந்து நின்று மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர். இது என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

அப்போது நான் மேடையிலிருந்து இறங்கி சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகனின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்தபோது, அவர்கள் தங்களுடைய மத்தியில் என்னை அமரவைத்துக் கொண்டனர். புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்ளும் அற்புதமான வாய்ப்பும் கிடைத்தது. இது என்னுடைய வாழ்நாளில் இது வரை கிடைக்காத சந்தோஷம். அது கிடைத்தபோது பரவசமானேன். இந்த இரண்டு பேருடைய பாராட்டும் ஒரே நேரத்தில் கிடைத்தது வாழ்க்கையில் மறக்க முடியாதது’ என்றார். 

தற்போது தேவிஸ்ரீபிரசாத், தமிழில் ‘சாமி ஸ்கொயர்' என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles