காத்திருப்பு பசிக்கு கிடைத்த வாய்ப்புதான் ‘வாடி திமிரா!’ - பாடலாசிரியர் உமாதேவி

Monday, September 18, 2017

தமிழ் சினிமாவின் பிஸியான பாடலாசிரியர் உமாதேவி. கவித்துமான பாடல் வரிகளால் எல்லோரையும் கட்டிப்போடும் ஆற்றல் அவரிடம் உள்ளது. அது ‘மகளிர் மட்டும்’ படத்திலும் எதிரொலித்துள்ளது. பெண்களின்  உணர்வுகளை “வாடி திமிரா...”

என்ற பாடலின் மூலம் உலகத்துக்கு உறக்கச் சொல்லியிருக்கிறார்.இப்பாடலின் மகத்துவத்தைப் பற்றி அவரிடம் உரையாடிய பொழுது..

“என்னுடைய சொந்த ஊரான அத்திப்பாக்கத்துல இருக்கும்பொழுது இயக்குநர் பிரம்மாவிடமிருந்து  எனக்கு அழைப்பு வந்துச்சு. ‘மகளிர் மட்டும்’ படத்தை நடிகை ஜோதிகாவை  வச்சு இயக்கிட்டு இருக்கேன். இதில் ஏற்கனவே, தாமரை, விவேக் பாடல்களை எழுதி இருக்காங்க. முக்கியமான பாடல் ஒன்று இருக்கு. அதை நீங்க எழுதினா ரொம்ப நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்”ன்னு சொன்னாரு. அவர் பேச்சின் நேர்மை எனக்குப் பிடித்திருந்தது. அப்பவே அவர் மீது மரியாதையும் உருவாகிடுச்சு!.

‘மகளிர் மட்டும்’ திரைப்படத்துல நான் எழுதிய ‘வாடி திமிரா’ பாடல் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கு. படத்துக்கு  இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைச்சிருக்காரு. என்னுடைய இந்தப் பாடல் தலைப்புப் பாடல். படத்தின் இயக்குநர் பிரம்மா மிகவும் கண்ணியமாகவும் அக்கறையோடும் பரிவோடும் நடந்துக்கிட்டாரு. சினிமாவைக் கண்டு பயந்தோடும் பெண்களுக்கு, பிரம்மா போன்ற இயக்குநர்கள் தான் பலம்.

இதனை ஏன் சொல்றேன்னா, “பாடலுக்கான சிச்சுவேஷனை சொல்லும்பொழுது “உங்களோட வாழ்க்கை, எங்கிருந்து தொடங்கிச்சு, எங்கெல்லாம் பயணப்பட்டீங்க, உங்களோட சாதனை எந்த இடத்துல இருக்கு என்பதை எழுதுங்க. அதுதான் இந்தப் பாடல்”னு எளிமையா சொன்னாரு. பாடலில் இடம்பெறும் ஒவ்வொரு வரியும், என்னுடைய காத்திருப்பு பசிக்கு கிடைத்த ஒரு வாய் சோறு என்று பெருமையாக சொல்வேன்!

இந்தப் பாடலில் இடம்பெற்ற முதல் வரியான ‘வாடி திமிரா’ என்பது பெண்ணியம் பேசும் வரிகள் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இந்தச் சமூகம், ஒரு பெண்ணைப் பார்த்து என்ன கூறுகிறதோ அந்த வரிகள்தான் இது. உதாரணத்துக்கு சொல்லணும்னா, ஒரு பெண் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தாலோ அல்லது எதிர்த்து பேசினாலோ அவளை உடனே சமூகம் சொல்வது “பாரேன்! எவ்வளவு திமிரா பேசுறான்னு” என்பதைத்தான். இந்த வாக்கியத்திலிருந்து முளைத்த கவிதை வரிதான் “வாடி திமிரா" என்பதே. சமூகம் பெண்களைப் பற்றி எனக்கு  கற்றுக் கொடுத்ததைத்தான் முதல் வரியாக எழுதியிருக்கேன்.

 

இந்தப் பாடலில் இடம்பெறும் ஒவ்வொரு வரியையும் நான் செதுக்கி இருக்கேன். ஒரு வரியை நீங்க எடுத்தால் கூட இதன் அர்த்தம் அற்றுப் போகும். இந்த வரிகள் மக்களிடம் எளிமையாக போய் சேர்ந்திருப்பதன் காரணம், இசையமைப்பாளர் ஜிப்ரானின் வரிகள் தான். இந்த நேரத்துல நான் இயக்குநர் பிரம்மாவுக்கும், இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கும் நன்றிகள் பல சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்!” எழுச்சியுடன் சொல்லி முடித்தார் உமாதேவி!

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles