நல்ல கதையாக இருந்தால் காசு வேண்டாம்! - நடிகர் விதார்த்

Monday, September 18, 2017

“தோல்விகள்தான் வெற்றியின் அருமையை நமக்கு கற்றுத் தருகிறது. ‘குரங்கு பொம்மை’ படத்தின் வெற்றியையும்அப்படிதான் பார்க்கிறேன். இப்போ, நல்ல கதையாக இருந்தால் காசு வாங்காமல் கூட நடிக்கக் தயார்” பக்குவமாக பேசுகிறார் நடிகர் விதார்த்.

‘மைனா’, ‘குற்றமே தண்டனை’, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் வெற்றிகளுக்குப் பிறகு, குரங்கு பொம்மையில் அடுத்த லெவலுக்கு போயிருப்பவரிடம் உரையாடியதில் இருந்து..

படத்தின் வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்?

“ ‘மைனா’ படம்தான் எனக்கு விசிட்டிங் கார்டு. அதன்பிறகு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தேன். ஆனால், ஏனோ அவையெல்லாம் மக்களை போய்ச் சேரவேயில்லை. “நீங்கள் நடிக்கிற திரைப்படங்கள்ல சமூக கருத்துக்கள் இருந்தாலும், கமர்ஷியல் வேல்யூ இல்லியே”ன்னு, என் காது படவே பலர் பேசியிருக்காங்க. ஆனால் ‘குரங்கு பொம்மை’யை மக்களும் மீடியாவும் கொண்டாடுவதை பார்க்கும்போது, இந்த தோல்விகள் எல்லாம் நிரந்தரம் இல்லையோன்னு தோணுது!”

பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதன் காரணம்?

“நான் கதை கேட்கும்பொழுது, என்னுடைய பாத்திரம் அழுத்தமானதாக இருக்கான்னு மட்டும்தான் பார்ப்பேன். ‘குரங்கு பொம்மை’ படத்தின் கதையை இயக்குநர் நித்திலன் என்கிட்டே சொல்லும்போது “குரங்கு படம் போட்ட பையிலதான் ட்விஸ்ட் இருக்கு”ன்னு சொன்னாரு. அந்த இடத்துல நான் ரொம்ப ஜெர்க் ஆகிட்டேன். என்னுடைய பாத்திரம் பற்றி கூட நான் கேட்கலை. உடனடியாக நடிக்க சம்மதிச்சுட்டேன்!”

பெங்காலி நடிகர் போல் விதார்த் சிறப்பாக நடித்திருக்கிறார் என இயக்குநர் இமயம் பாரதிராஜா பாராட்டியுள்ளாரே?

“ஜாம்பவான்களால் போற்றப் பட்டவர்தான் இயக்குநர் பாரதிராஜா. அவரிடம் இருந்து, இப்படியொரு வார்த்தை வந்திருக்குன்னா வசிஷ்டர் வாயிலிருந்து பிரம்மரிஷி பட்டம் கிடைத்த மாதிரி தான் இருக்கு!”

இயக்குநர் நித்திலனின் இயக்கம் குறித்து?

“ஒரு நாள் கார்ல போயிட்டு இருக்கும்பொழுது தற்செயலாக இயக்குநர் நித்திலன் எடுத்த குறும்படத்தை பார்க்க நேர்ந்துச்சு. அது ஏற்படுத்தின தாக்கத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. எனக்கு கண்ணீரே வந்துடுச்சு. என் சகோதரரை அந்தக் குறும்படத்தை பார்க்கச் சொன்னேன்.  அவருதான் “அவருகிட்டே நல்ல கதை இருந்தால் அதனை நாம் ஏன் தயாரிக்கக் கூடாது”ன்னு கேட்டாரு. அப்படிதான் ‘குரங்கு பொம்மை’ உருவானது. இந்தப் படத்தில் வேலைப் பார்த்த அனுபவத்துல சொல்றேன். அவருடைய எல்லா கதைகளிலும் எமோஷன் இருக்கு. அதுவே பல வெற்றிகளை அவருக்கு தேடித்தரும்!”

சினிமாவில் சாதித்துவிட்டோம் என்று எப்போதாவது தோன்றியிருக்கிறதா?

“இல்லை! ஏன்னா, எங்கேயாவது படப்பிடிப்புக்கு போனால்தான் நான் நடிகர் என்றே தெரியும். இதை வெளிப்படையாக நானே சொல்றேன். சராசரியான வாழ்க்கையைத்தான் வாழ்ந்துட்டு இருக்கேன். இதுல சாதித்து விட்டேன் என்று கூறுவதில் ஒன்றுமே இல்லை!” சாந்தமாக முடிக்கிறார் விதார்த். அதில், கடந்து வந்த பாதையின் வலிகள் தெரிகிறது!

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles