படத்திற்கும் பாட்டுக்கும் இடைவெளியே இருக்கக் கூடாது - பாடலாசிரியர் வைரமுத்து

Wednesday, September 13, 2017

பி ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில் 50 கல்லூரி மாணவர்கள் இணைந்து, தயாரித்துள்ள படம் ‘நெடுநல்வாடை’. இதில் விவசாயி பாத்திரத்தில் ‘பூ’ ராமு நடித்துள்ளார். மேலும், இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி, ஐந்து கோவிலான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடைபெற்றது.

இப்படம் குறித்து பாடலாசிரியர் வைரமுத்து கூறும்போது, 

“தமிழ் சினிமாவை தலைப்புப் பஞ்சம், பிடித்து ஆட்டுகிறது. தமிழில் பேர் வைத்தால்தான் வரிச்சலுகை கிட்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டிய அளவுக்கு தமிழ் சினிமாவில் தலைப்புகள் தமிழை விட்டு தள்ளிப்போய்க் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஈராயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு தமிழ் இலக்கியத்தின் தலைப்பை, தனக்கு ஆபரணமாகச் சூடிக்கொண்டு வெளிவரப் போகிற படம்தான் ‘நெடுநல்வாடை’.

இந்தப் படத்திற்குப் பாட்டெழுதியது எனக்கு ஒரு சுகமான அனுபவம். “நெல்லை மாவட்டத்து வட்டார வழக்கில் எழுதுங்கள் என்றும், ஆங்கிலச் சொல்லே கலவாமல் முழுக்க முழுக்க தமிழ்ப்பாட்டு எழுதுங்கள்” என்றும் இயக்குனர் செல்வகண்ணன் கேட்டபோது நான் மகிழ்ந்து போனேன். ஒரு படத்தில் பாட்டு என்பது, உடலில் தொங்குகிற ஆடையாக இல்லாமல் உடம்பில் ஒட்டியிருக்கும் தோல் மாதிரி இருக்கவேண்டும் என்று நம்புகிறவன் நான். படத்திற்கும் பாட்டுக்கும் இடைவெளியே இருக்கக் கூடாது. படத்தின் அங்கம்தான் பாட்டு. இந்த இலக்கணத்தை ‘நெடுநல்வாடை’யில் நீங்கள் காண்பீர்கள்.

கிராமத்து வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்ட இந்தக் கதையில், இன்னும் அறுந்து போகாத தமிழ்க் கலாச்சாரத்தின் பழைய வேர்களைத் துப்பறிந்திருக்கிறார் இயக்குநர். இப்படம் தமிழர்களின் உறவின் மிச்சத்தையும், எச்சத்தையும், உச்சத்தையும் சொல்லும் படமாகத் திகழும் என்று நான் நம்புகிறேன். ஒரு கிழவன் செய்கிற தியாகம்தான் படத்தின் கரு. தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை. தியாகத்தை உள்ளடக்கமாகக் கொண்ட இப்படமும் வெல்லும்!” என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles