சூர்யாவோடு தினம் ஜிம்முக்குப் போறேன்-நடிகை ஜோதிகா 

Friday, September 8, 2017

தமிழ் சினிமாவில் ‘குற்றம் கடிதல்’ படம் மூலமாக எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் பிரம்மாவின் இரண்டாவது படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார். அவரோடு சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.செப்டம்பர் 15 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. 

இப்படம் குறித்து நடிகை ஜோதிகா பேசும்போது, 

“ரோட் ட்ரிப்பின்போது, மருமகள் ஒருத்தி தன்னுடைய மாமியாரையும் அவருடைய நண்பர்களையும் எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பதுதான் ‘மகளிர்’ மட்டும் படத்தின் கதை. இப்படியான ஒரு கதை ஆணிடம் இருந்து எப்படி வந்தது என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோரோடு இணைந்து நடிக்கும்போது சிறிது பயமாக இருந்தது. எங்கள் முதல் நாள் படப்பிடிப்பு ஒரு படகில் வைத்து நடந்தபோது, என்னால் சரியாக வசனம் பேசி, நடிக்க முடியவில்லை. அப்போது, அவர்கள் மூவரும் தான் என்னை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தார்கள். நான் ஊர்வசியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

படத்தில் புல்லட் ஓட்டி நடிக்க வேண்டிய ஒரு காட்சி இருந்தது. எனக்கு சூர்யா இரண்டு நாட்கள் புல்லட் ஓட்ட பயிற்சி அளித்தார். என் மகள் தியாவை பள்ளிக்கு புல்லட்டில் அழைத்து சென்று, டிராப் செய்தபோது அவளுக்கு பெருமையாக இருந்தது. மகன் தேவ்வுக்கு சூர்யா தான் எப்போதும் ஹீரோ. ‘நாச்சியார்’ படத்தின் மூலம் தேவ்வுக்கு ஹீரோவாக தெரிவேன் என்று நம்புகிறேன். தற்போது சூர்யாவோடு ரெகுலராக ஜிம்முக்கு போறேன். இப்படத்தில் என்னோடு நடித்த சக நடிகர்களை விட ஐந்து வயதாவது இளமையாக தெரிவேன் என்று நம்புகிறேன்.

பெண் இயக்குநர்களுக்கு யாரும் தற்போது முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இயக்குநர் சுதா கொங்காராவுக்கு மாதவன் வாய்ப்பு கொடுத்தது நல்ல விஷயம். அவர் வாய்ப்பு கொடுத்ததால் தான் ‘இறுதிச்சுற்று’ என்று ஒரு படம் வெளிவந்து, வெற்றிபெற்றது. இந்த நிலை மாற வேண்டும்” என்றார்.  

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles