நெருப்பு காட்சிகளில் ரிஸ்க் எடுத்தார் விக்ரம் பிரபு - இயக்குநர் அசோக்குமார்

Friday, September 1, 2017

பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் சீடர். இந்திய அளவில் நம்பர் ஒன்னாக இருக்கும் ‘சி.என்.என். ஐ.பி.என்.’ சேனலின் கேமிரா மேன் என்பதையெல்லாம் தாண்டி, இப்போது அசோக்குமாரின் அடையாளம் ‘நெருப்புடா’ படத்தின் இயக்குநர். முதல் படத்திலேயே மொத்த திரையுலகையும் தன் பக்கம் ஈர்த்திருப்பவர். ‘மனம்’ இதழுக்காக அவர் மனம் திறந்தபோது..

“தமிழ் சினிமாவில் நிறைய கதைகள் சொல்லப்பட்டிருக்கு. ஆனா, தீயணைப்புத்துறையினரை பற்றி பெரிய பதிவுகள் இல்லை. படத்தில் ஒரு அங்கமாகத்தான் அவர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்களே ஒழிய, முழுமையாக ஒன்றும் இல்லை. அவர்களுடைய வாழ்க்கைக்குப் பின்னால் நிறைய வலிகளும், வேதனைகளும் இருக்கு. அதை செல்லுலாய்டில் பதிவு செய்ய நினைத்தேன்.

தம் உயிரை பணையம் வைத்து, மக்களை காப்பாற்றுபவர்களை ‘வீரன்’னு சொல்லுவாங்க. அப்படி, நம்ம அரசாங்கமும் இரண்டு பேரை மட்டும்தான் வீரர்களாக அங்கீகரித்து இருக்கு. ஒன்று ராணுவ வீரர்கள் மற்றொன்று தீயணைப்பு வீரர்கள். அதனால் அப்படியொரு களத்தை தேர்ந்தெடுத்தேன். தீயணைப்புத் துறைக்குள் போகத் துடிக்கிற ஐந்து இளைஞர்களை பற்றிய கதைதான் இது. ஃபயர் சர்வீஸோட வால்யூ ‘நெருப்புடா’ படம் மூலமாக மக்களை போய்ச் சேரும்!

விளிம்பு நிலை மக்கள் என்றாலே, கலீஜா இருப்பாங்க என்பது மாதிரியான பிம்பம், நம்மோட சினிமாவில் கட்டமைக்கப்பட்டிருக்கு. ஆனா, அங்கே கலர்புல்லான வாழ்க்கையும் உண்டு. அதைத்தான் நான் தொட்டிருக்கேன். ‘பொல்லாதவன்’ படத்தின் பேக் டிராப்பில் ஒரு படம் பண்ணணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. ‘நெருப்புடா’வில் அதை சாத்தியமாக்கியிருக்கேன்.

சிவாஜி சார் வீட்டுக்கு எதிரே எனக்கு நடந்த சம்பவத்தை மையமாக வைத்துதான் ‘நெருப்புடா’ படத்தோட கதையை எழுதினேன். கதையில் வர்ற நாயகனுக்கு யார் சரியா பொருந்தி வருவாங்க?ன்னு யோசித்தப்போ, எனக்கு கண்ணு முன்னால வந்து நின்னது விக்ரம் பிரபு சார்தான். அவரை சந்தித்து, கதை சொன்னேன். படத்தோட முதல் பகுதியை கேட்டுட்டு, “நல்லாயிருக்கு”ன்னாரு. இரண்டாவது பகுதியை ‘வீர சிவாஜி’ படத்தின் ஷுட்டிங் பிரேக்குக்கு இடையில சொன்னேன். நாம சேர்ந்து பண்ணலாம்னு சொல்லி, வேகமாக படப்பிடிப்பு வேலைகளை தொடங்கியதோடு, அவரே தன்னோட ‘பர்ஸ்ட் ஆட்டிஸ்ட்’ நிறுவனம் மூலமாக தயாரிக்கவும் செய்தாரு.

எந்த ஜார்னரில் வேண்டுமானாலும் கதை சொல்லலாம். ஆனா, அது உணர்வுபூர்வமாக ரசிகர்களோட மனதைப்போய் சேரணும். அப்படி ‘நெருப்புடா’ படத்தோட கதையை முதலில் எழுதிட்டு, அதில் சில ஃபீலிங்கான சில விஷயங்களை பின்னர் சேர்த்தேன். பல தயாரிப்பு நிறுவனங்களில் “அதை மட்டும் தூக்கிட்டா, படம் பண்ணலாம்”னு சொன்னாங்க. என்னால, அதை ஏத்துக்க முடியலை. ஆனா, அதை சரியாக உள்வாங்கிக்கிட்டு, பட வாய்ப்பு தந்தார் விக்ரம் பிரபு சார். இந்த நேரத்தில் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்!

படப்பிடிப்பின்போது விக்ரம் பிரபு சார் மேல ரொம்ப கேர் எடுத்துக்கிட்டேன். நெருப்பு காட்சிகளில் எல்லாம் துணிச்சலா உள்ளே போய் நடிப்பார். ஆனா, எனக்குள்ளே ஒரு பயம் ஓடிக்கிட்டே இருக்கும். ஒரு நிமிஷம் தப்பானாலும் எல்லாமே மாறிப்போயிடும். ஃபயர் சீன் என்பது ரொம்ப ரிஸ்க்கான விஷயம். அந்த ரிஸ்க்கை ‘நெருப்புடா’வில் பலமுறை எடுத்தார் விக்ரம் பிரபு சார். அதற்காகவே இந்தப் படம் பெரிய வெற்றியை அடையும்னு நம்புறேன்!

கண்ணகி நகருக்கு நடுவே மணிக்கூண்டு அமைத்த ஆர்ட் டைரக்டர் பிரபாகர் சார், ஃபயருக்கு நடுவே ஸ்டண்ட் காட்சிகளை எடுத்த சூப்பர் சுப்புராயன், திலீப் சுப்புராயன் மாஸ்டர்ஸ், ரொம்ப நேர்த்தியாகவும், அழகாகவும் ஒளிப்பதிவு செய்த ஆர்.டி.ராஜசேகர் சார் எல்லோரும் படம் சிறப்பாக வர, கடுமையாக உழைத்திருக்காங்க. அதனால் படம் பாக்ஸ் ஆபிஸில் நிச்சயம் ஹிட்டடிக்கும்!  

படத்தோட ஷுட்டிங் நடந்துக்கிட்டு இருக்கிறப்போ, ஒருத்தர் வந்து என்னிடம் கைகுலுக்கிவிட்டு, “ரொம்ப சந்தோஷமாக இருக்கு சார்.. நிறைய போலீஸ் படங்கள் சினிமாவுல வந்திருக்கு. ஆனா, யாரும் ஃபயர் சர்வீஸ் ஆளுங்களை பத்தி படம் எடுத்தது கிடையாது. இந்தப் படத்துக்கு பிறகு, எங்க வீட்டம்மா, என் வீட்டுக்காரரும் ஃபயர்மேன்தான் பெருமையாக சொல்லுவாங்க..” என்றார். அவருடைய வார்த்தைகளைத்தான் பெரிய பாராட்டா நினைக்கிறேன்.” என்றார். அவர் பேசி, முடித்ததும் நமக்குள்ளும் ஃபயர் பற்றிக்கொண்டுவிட்டது!

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles