விக்ரம் பிரபுவும் நிக்கி கல்ரானியும் அழகான ஜோடி - ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்

Friday, September 1, 2017

“ ‘நெருப்புடா’ படத்துக்கு நான்தான் ஒளிப்பதிவாளர்னு முடிவானதும், பிரபு சார், “என் மகனை உங்ககிட்டே ஒப்படைச்சிட்டேன், அவரை நீங்கதான் பத்திரமா பார்த்துக்கணும்”னு சொன்னாரு. படப்பிடிப்பு முடிந்து, பர்ஸ்ட் லுக் பார்த்துட்டு, என் கையை பிடிச்சிக்கிட்டு ரெண்டு நிமிஷம் கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்தார். பிறகு, “என் வாக்கை காப்பாத்திட்டீங்க..!”என்றார். டிரைலர் வெளியானபோது, ரஜினி சார் பார்த்துட்டு, “ஹாட்ஸ் ஆஃப் டு கேமிராமேன்”னு வாழ்த்தினார்.

அவரின் வார்த்தைகள் உத்வேகம் தந்துச்சு. பிரபு சாரின் வேண்டுதலை நான் காப்பாத்திட்டேன் என்பதில் இரட்டிப்பு  மகிழ்ச்சி!” சிலிர்ப்போடும் நெகிழ்வோடும் பேசினார் ஆர்.டி.ராஜசேகர். இந்திய சினிமா வியக்கும் ஒளிப்பதிவு ஆளுமையோடு உரையாடிதிலிருந்து..

அன்னை இல்லம் வீட்டுக்குள் கால் வைத்திருக்கிறீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?

“சினிமாவின் மாபெரும் ஆளுமை சிவாஜி சார். அவரின் குடும்பத்தாரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு   ‘நெருப்புடா’  படம் மூலமாக எனக்கு கிடைத்ததை பெரிய வரமாக பார்க்கிறேன். அவங்க வீட்டுக்கு போகும்போதெல்லாம் ‘சிவாஜி சார் எங்கே நிற்பார், உட்காருவார், எந்த இடத்தில் உட்கார்ந்து சாப்பிடுவார்?’ போன்ற கேள்விகளையெல்லாம் பிரபு சாரிடம் கேட்பேன். அவர் சுவாசித்த இடங்களை எல்லாம் பார்த்து, மெய்சிலிர்த்து போனேன். அப்படி நான் மரியாதை வைத்திருக்கிற கலைஞனின் குடும்ப உறுப்பினர்களோடு வேலை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்!”

‘நெருப்புடா’ படம் குறித்து?

“தீயணைப்பு வீரர்கள் பற்றிய தனித்துவமான சினிமாக்கள் எதுவும் தமிழில் வந்ததில்லை. இயக்குநர் அசோக் என்கிட்டே கதை சொல்லும்போதே எனக்கு ரொம்ப வித்தியாசமாக தெரிஞ்சுது. தீயணைப்பு வீரர்கள் தன் உயிரைப் பற்றி பெரிதாக நினைக்காமல், தீயில் சிக்கியவர்களை காப்பாற்றுவதே கடமையாகக் கொண்டு வாழ்வதை, கதைக் களமாக வைத்திருக்கிறார். இதனைச் சார்ந்து தான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கு. சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள கண்ணகி நகரில்தான் படப்பிடிப்பை நடத்தினோம். மிகவும் பரபரப்பாக இருக்கும் அந்த இடத்தில் எந்தப் பிரச்னையும் இன்றி, ஷுட்டிங்கை முடித்தோம். எல்லாவற்றுக்கும் காரணம் ஒரேயொருவர் தான் என்பது எனக்கு தெரிந்தது. அந்த ஒருவர் பிரபு சார் தான்!”

சவாலான காட்சி என்றால் எதைச் சொல்வீர்கள்?

“இன்றைய சூழலில் பார்வையாளர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கு. அவர்களை ஏமாற்ற முடியாது.

அவர்களை மனதில் வைத்துக்கொண்டு வேலை பார்த்தோம். தீயை வச்சு, ஷூட் பண்ணும்பொழுது மட்டும் எங்களுக்கு கொஞ்சம் சிரமமா இருந்தது. உதாரணத்துக்கு, படத்துல குடிசை எரியுற மாதிரி ஒரு காட்சி இருக்கு. அதை தொண்ணூறு சதவீதம் கேமராவுல படம்பிடித்திருக்கிறோம். மீதமுள்ள பத்து சதவீதத்தை தான் கிராபிக்ஸில் கொண்டு வந்தோம். கதையின் பாத்திரங்களுக்கு லைட்டிங் செய்வதைத் தாண்டி, தீ காட்சிக்கும் தனியா லைட் பண்ணனும். நிஜ சவால் அதுதான்!”

விக்ரம் பிரபு நிக்கி கல்ரானி ஜோடி எப்படி?

“சொன்னா நம்ப மாட்டீங்க. நானும் என் கேமராவும் ரகசியமாக  பேசிக் கொள்வோம். கேமரா கோணங்கள்ல எது சரி? எது தப்பு?ன்னு, அது எனக்கு சொல்வது போல தோணும். அப்படித்தான் நான் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கேன்; செய்துகிட்டு வர்றேன். அது ஒருவேளை என்னோட உள்ளுணர்வாகக் கூட இருக்கலாம். என்னோட வெற்றிகளுக்கும் அதுதான் காரணமுன்னு நினைக்கிறேன். படத்தில் எந்த கோணத்தில் விக்ரமும் நிக்கியும் அழகாகத் தெரிவாங்கன்னு, பார்த்து பார்த்து ஒளிப்பதிவு செய்தேன். ‘நெருப்புடா’வில் இருவரும் ஸ்பெஷலாக தெரிவதன் ரகசியம் இதுதான்!”

இயக்குநர் அசோக்குமார் பற்றி?

“அடிப்படையில அசோக்கும் ஒரு ஒளிப்பதிவாளர். ரவிவர்மன்கிட்டே, உதவியாளராக இருந்திருக்காரு. ‘நெருப்புடா’ படத்துக்காக என்கிட்டே பேசும்பொழுது “இந்த ஸ்க்ரிப்டை உங்ககிட்டே ஒப்படைக்கிறேன். இதனை ஒளி மூலமாக, நீங்க பாதுகாத்து கொடுப்பீங்கன்னு முழுசா நான்  நம்புறேன்”ன்னு சொன்னார். அந்த நம்பிக்கையை காப்பாத்தியிருக்கேன்னு நினைக்கிறேன்!” அதே குழைவும், சாந்தமுமாக முடித்தார் ஆர்.டிஆர்!

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles