கேமராமேனின் உதவி எனக்கு தேவையில்லை! - இயக்குநர் மிஷ்கின்

Sunday, October 15, 2017

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மிஷ்கின் அலுவலகத்தில், அறையெங்கும் நிறைந்து கிடக்கின்றன புத்தகங்கள். அவற்றின் ஒரு பகுதியாகவே அமர்ந்திருந்தார் மிஷ்கின். விஷால் நடிப்பில், ‘துப்பறிவாளன்’ பட வெற்றியின் பாதிப்பின்றி பேசினார். நள்ளிரவு ஒன்றில் நடந்த கலந்துரையாடலின் ஒரு பகுதி இது!

“நான் ஒரு இயக்குநர் அதற்கு முன்பு நான் ஒரு திரைக்கதை ஆசிரியர். என்னுடைய கதைகள் எப்படி எழுதப்படுகிறதென்றால், கண்ணை மூடிக்கொண்டு ஒரு காட்சியைப் பார்க்கிறேன். ஒரு அறையில் என்னுடைய பாத்திரம் ஒன்று, கதவைத் திறந்துகொண்டு வந்து, ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கிறது. அதை எப்படி பார்க்கிறேன் என்றால் அவர் கதவு திறந்தபோது அவருடைய உயரம் என்ன? அவர் எப்படி கதவை திறக்கிறார்? வேகமாக வந்து உட்கார்ந்தாரா? இல்லை மெதுவாக நடந்துவந்தாரா? அவர் உட்காரும்போது எந்த மாதிரியான புத்தகத்தை எடுத்தார்? புத்தகத்தை எவ்வளவு அருகில் வைத்து படிக்கிறார்?. இப்படியாக அந்தக் காட்சிக்குள் எனக்கு பேசியல் டெம்போரல் தெரியும்!

சின்ன வயதில் இருந்தே, ஒரு காட்சியினுடைய அளவு பற்றி நிறைய பயிற்சி செய்திருக்கிறேன். ஆக, ஒவ்வொரு ஷாட்டையும் நான் ஒரு லென்ஸாகவே பார்க்கிறேன். ஒரு பாத்திரத்தை க்ளோஸ் அப்பிலேயோ, மிட் ஷாட்டிலோ, மிட் லாங்கிலோ அல்லது எக்ஸ்ட்ரீம் லாங் ஷாட்டாகவோ வைத்து பார்ப்பேன். அப்படி ஷாட்டுகளை லென்ஸ் இல்லாமல் என்னால் பார்க்க முடியாது!.

உதவி இயக்குநராக பணியாற்றும்போது லென்ஸ் குறித்து நிறைய வாசித்தேன். டைரக்டர் ஒரு ஷாட்டை சொன்னால், அந்தக் காட்சிக்கு எந்த லென்ஸ் பயன்படுத்தலாம் என்று யோசிப்பேன். கேமிராமேனிடம், “50 லென்ஸ் போடுங்க.. பிறகு, கேமிராவை இங்க வைங்க.. கேமிராவை அங்க வைங்க.. இங்க வைத்தால் போதும்..” இப்படித்தான் ஒளிப்பதிவாளரிடம் சொல்லுவேன்!. அப்படியாகத்தான் இப்போதும் ஒவ்வொரு காட்சியையும் எழுதறேன்!. இது போதும் என நினைக்கிறேன். எனக்கு கடுமையான கம்போசிஷன் எல்லாம் தேவையில்லை. அதுபோல கம்போஷனல் இன்டரஸ்ட்டையும் வெறுக்கிறேன். எனக்கு எந்த கேமிரமேன் வந்தாலும், நான் லென்ஸ் பற்றி சொல்வேன்!

உலகம் முழுவதும் சினிமாவை நன்றாக படித்த இயக்குநர், லென்ஸ் பற்றி கேமிராமேனிடம் சொல்லத் தெரியவில்லை என்றால், அவர் டைரக்டராகும் தகுதியில்லை.

நான் படித்த எல்லா மாஸ்டர்களும் லென்ஸ் பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஒரு கேமிராமேனின் வேலை என்பது காட்சிக்கு எளிமையான வகையில் ஒளியூட்டுவதுதான். அதுதான் முக்கியம். கேமிரா லென்ஸ் பற்றி அறிந்துகொள்ள நேரமில்லாமல் சிலர் சினிமாவுக்குள் வந்திருக்கலாம். அவர்களுக்கு வேண்டுமானால் கேமிராமேனின் உதவி தேவைப்படலாம். எனக்கு எந்த கேமிராமேனின் உதவியும் தேவையில்லை!. என் படத்தில் கேமிராவோ, எடிட்டிங்கோ, இசையோ, துருத்திக்கொண்டு நின்றால், அந்தப் படம் தோற்றுப்போனதாய் உணர்கிறேன். ஆகவே, பண்பட்ட, என்னை புரிந்துகொள்கிற ஒரு கேமிராமேனே எனக்கு போதும்!” தன் கூலிங்கிளாஸ் கண்ணாடியை சரிசெய்தபடியே அதிரடியாய் முடித்தார் மிஷ்கின்.  

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles