சமூக அரசியல் படம் ‘அருவி’ - இயக்குநர் அருண் பிரபு

Sunday, October 15, 2017

கோலிவுட்டின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இப்போது ‘அருவி’ படம் மூலம் இயக்குநராக புரமோஷன் ஆகியிருக்கிறார் அருண் பிரபு. படத்தை ஒரு வருடத்துக்கு முன்பே முடித்துவிட்டாலும், அதை தியேட்டரில் வெளியிடாமல் உலகம் முழுக்க நடக்கும் திரைப்பட விழாக்களில் பங்கேற்க செய்து, பல விருதுகளை குவித்துக்கொண்டு வந்திருக்கிறார்.

அண்மையில், சென்னையில் இப்படத்தின் சிறப்பு திரையிடல் நடந்தது. ஒரு சேர அனைவரின் பாராட்டு மழையில் நனைந்திருந்தவரிடம் பேசினோம்!

‘அருவி’ திரைப்படம் குறித்து?

“எனக்கு இரண்டு சகோதரிகள். அதனால பெண்களின் பிரச்னைகளை என்னால் ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும். பெண்களுடைய எமோஷனல் ரோலர் கோஸ்டரை பிரதிபலிக்கும் படம்தான் ‘அருவி’. ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் வர்ற பெண் பாத்திரப் படைப்பு போல இருக்காது. மாறாக, ஒரு குடும்பத்தை சேர்ந்த பெண்ணுடைய கதையும் இது கிடையாது. அருவி என்ற பெண் பாத்திரம் மூலமாக, ஒட்டு மொத்த சமுதாயத்தின் நிலைமையை சித்தரித்திருக்கிறேன். சரியாக சொல்ல வேண்டும் என்றால், சமூக அரசியல் படம் தான் ‘அருவி’!.”  

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸில் வாய்ப்பு எப்படி?

“2013ஆம் ஆண்டில் ‘அருவி’ படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தேன். ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் மூலமாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் கதை சுருக்கத்தை கொடுத்தேன். ட்ரீம் வாரியர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. பிரபுவிடம் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் கதை சொன்னேன். வேறு எந்த சிந்தனைக்கும் இடம்  கொடுக்காமல், கதையை கேட்டு, ஓ.கே. பண்ணினார்.

பிறகு, ‘அருவி’ படத்தின் நாயகிக்காக எட்டு மாதம் எடுத்துக்கிட்டேன். ஒரு அறிமுக இயக்குநருக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைக்குமான்னு எனக்குத் தெரியாது. ஆனா, என்னுடைய ஸ்க்ரிப்டை நம்பி, அதற்கு முக்கியத்துவம் தந்து, பொறுமையாக இருந்த பிரபு சாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்!”

படத்தின் நாயகி அதிதி பாலன் எங்கே சிக்கினார்?

“அவங்களை கண்டு பிடிக்கிறது பெரிய வேலையாக இருந்துச்சு. சமூக வலைத்தளங்கள்ல  விளம்பரங்கள் செய்தோம். நாங்களே சில முகநூல் பக்கங்களை பார்த்து பலரின் விருப்பத்தை கேட்டோம். இப்படியான முயற்சியின்போது கிடைத்தவங்கதான் அதிதி. கதையை  அவங்ககிட்டே சொன்னேன். தன்னோட பாத்திரம் பற்றி தெரிந்ததும் ரொம்ப ஆர்வமாயிட்டாங்க. அவங்களோட கேரக்டர்தான் அருவி. படத்தில் மூன்று நிலைகளில் தன்னோட பாத்திரத்தை வெளிப்படுத்தியிருக்காங்க. இயல்பிலேயே, பயணத்தை விரும்பும் பெண்ணாகவும் புதுப்புது மனிதர்களை சந்திப்பதில் ஆர்வமுடையவராகவும் அதிதி இருந்ததால் ‘அருவி’ கதை அவங்களுக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கு!”.

ஸ்டார் வால்யூ இல்லாமல் களமிறங்கியது ஏன்?

“பொதுவாக சினிமாவுக்கு கதைக்கு ஏற்ற பாத்திரம்தான் தேவை. படத்துல கிட்டத்தட்ட ஐம்பது பாத்திரங்கள் இடம்பெற்றிருக்கு. தியேட்டரில் படம்  பார்த்துட்டு  வர்ற ஆடியன்ஸ், எல்லா கேரக்டர்ஸ் பற்றியும் பேசுவாங்க. இந்த கதைக்கு பெரிய நட்சத்திரப் பட்டாளம் தேவைப்படலை. ஏன்னா, பாத்திரத்தின் உளவியலை புரிஞ்சுகிட்டு வெளிப்படுத்துறவங்கதான் தேவைப்பட்டாங்க. அதனால, என்னை சுற்றி இருந்த இயல்பான மனிதர்களையே நடிக்க வைத்தேன். உதாரணத்துக்கு, செக்யூரிட்டியா ஒருத்தர் வர்றாருன்னா, நிஜ வாழ்க்கையில செக்யூரிட்டியா இருந்து ஓய்வு பெற்றவரைத்தான் தேர்வு செய்தேன்!”

படத்தின் போஸ்டரால் சர்ச்சை எழுந்ததே?

‘அருவி’ படத்தின் போஸ்டரை வெளியிட்ட பொழுது, சமூக ஊடகங்களில் நிறைய விமர்சனங்கள் வந்தது. “பாரத மாதா கையில எதுக்கு துப்பாக்கி கொடுத்திருக்கீங்க? வன்முறையைத் தூண்டுற மாதிரி இருக்கு!”ன்னு கமெண்ட் பண்ணாங்க. படத்தை பார்த்தாங்கன்னா, எதற்கு இப்படி ஒரு காட்சி அமைத்திருக்கிறோம்னு அவங்களுக்கேத் தெரியும்!”

படம் வெளிவருவதற்கு முன்பே விருதுகளை குவித்திருக்கிறதே?

“படத்தை பல சர்வதேச திரைப்பட  விழாக்களுக்கு அனுப்பி வைத்தோம்.  படம் எல்லோருக்கும் பிடித்திருந்தது. திரைப்பட விழாவுக்கான இலக்கணங்களை மீறி ‘அருவி’ படம் இருந்தாலும், ஷாங்காய் திரைப்பட விழாவுல இன்டர்நேஷனல் பனோரமா கேடகரியில படம் தேர்வாகி, விருது பெற்றது.  மும்பை திரைப்பட விழா உள்பட பல பெஸ்டிவலில் படம் தேர்வாகியிருக்கு, அது எங்க டீமுக்கு பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கு. தீபாவளிக்கு பிறகு படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கோம்!.”

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles