ரொமான்ஸ் காட்சிகளில் திணறினேன் - நடிகர் சரீஷ்

Sunday, October 15, 2017

தமிழ் சினிமாவில் இப்போது போதாத காலம். புதிய வரிவிதிப்பு, வீடியோ பைரஸி, தொழிலாளர்கள் போராட்டம், தியேட்டர்கள் வேலைநிறுத்தம், அதிகரிக்கும் விளம்பர செலவுகள் என  பல பிரச்னைகள். ஆனாலும், அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து படப்பிடிப்புகளும், புதிய பட அறிவிப்புகளும் நிகழ்ந்தவாறு இருக்கவே செய்கின்றன.

பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமல்லாமல், சிறிய பட்ஜெட் படங்களுக்கும் கோலிவுட்டில் ஓர் இடம் உண்டு என்பதுதான் அதன் பின்னால் உள்ள சீக்ரெட். அந்த வரிசையில் தயாராகியுள்ள படம் தான் ‘இமை’. இப்படத்தின் மூலமாக மலையாளத்திலிருந்து தமிழுக்கு அறிமுகமாகி உள்ளார் நடிகர் சரீஷ்.

“இமை” படத்துக்குள் வந்தது எப்படி?

“அடிப்படையில் நான் ஒரு வியாபாரி. ஒரு விளம்பரம் நிமித்தமாக, இயக்குநர் விஜய் .கே. மோகனை சந்திக்க நேர்ந்தது. அவரு எனக்கு ‘இமை’ படத்தோட கதையை சொன்னாரு. அது உண்மை சம்பவத்தைச் சார்ந்து எழுதப்பட்டதாக இருந்தது.  கதை, எனக்கும் பிடித்திருந்தது. இதை என் நண்பர் ஃபர்தீக் கிட்டே சொன்னேன். அவரையும் கதை ஈர்த்ததால, தயாரிக்க முன்வந்தார். அப்படியே நானும் நடிகனாகிட்டேன்!”

நடிப்புக்காக பயிற்சி எடுத்தீர்களா?

“படப்பிடிப்பின்போது இயக்குநரும், அவருடைய உதவியாளர்களும் சொல்லித் தந்ததை தான் செய்தேன். அது தவிர, ‘பருத்தி வீரன்’ போன்ற சிறந்த படங்களை அதிகம் பார்த்தேன். அந்தப் படங்களில் வரும் பாத்திரங்களின் உடல்மொழியை உற்று கவனித்தேன். கேரளாவில் நடந்த நடிப்புக்கான பயிற்சி பட்டறையில் சேர்ந்து என்னை பட்டை தீட்டிக்கிட்டேன்!”

நாயகி அக்ஷய ப்ரியா உடன் நடித்த அனுபவம்?

“கதைப்படி ரௌடியை துரத்தி துரத்தி காதலிக்கும் பெண் அக்ஷய ப்ரியா. ஷுட்டிங் இடைவேளையின் போது என்னோட தமிழ் டீச்சர் அவங்க தான். தமிழை எப்படி பிழையில்லாமல் உச்சரிக்க வேண்டும் என்பதை கற்றுத் தந்ததோடு, நல்ல தோழியாகவும் இருந்தாங்க. படத்தில் எங்கள் இருவருக்குமான காம்பினேஷன் காட்சிகள் அதிகம் இல்லை. ஆனாலும், அவங்களோடு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும்போது மட்டும் திணறினேன்!”

தமிழ் சினிமா அனுபவம் எப்படியிருக்கு?

“படத்தின் தயாரிப்பாளர் குஜராத்தி, இயக்குநரும்  நானும், மலையாளி. நாங்க மூன்று பேரும் கோலிவுட்டுக்கு வந்து, எதற்கு படம் எடுக்கிறோம்னு கேட்டீங்கன்னா, தமிழ் மொழி மேல் உள்ள பற்றுதான் சொல்வோம்!. தமிழ் சினிமாவில் நிறைய பிரச்னைகள் இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி ஆரோக்கியமாத்தான் இருக்கு. அதனாலதான் நாங்களும் ரிஸ்க் எடுத்திருக்கிறோம். தமிழக மக்களிடம் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்னு நம்புறோம்!” நம்பிக்கையோடு முடிக்கிறார் சரீஷ்.

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles