கற்ற வித்தையை காட்ட இலக்கணத்தை மீறுவது தவறு - படத்தொகுப்பாளர் பிரேம்

Sunday, October 15, 2017

தமிழ் சினிமாவில் ‘குற்றம் கடிதல்’, ‘மகளிர் மட்டும்’ படங்களின் வழியே அடையாளப்படுத்தப்பட்டவர் படத்தொகுப்பாளர் பிரேம். பிரபல ஃபிலிம் எடிட்டர் லெனின் பள்ளியிலிருந்து வந்தவர். அதனாலேயே தேர்ந்தெடுத்து படங்கள் செய்கிறார்.

இவரது முதல் படம் இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளியாகமல் இருக்கும் ‘களவாடிய பொழுதுகள்’. தன்னையும் வாழ்வையும் களவாடிய படத்தொகுப்பின் அனுபவங்களை வாசகர்களிடம் இங்கே பகிர்ந்துள்ளார்!

“என் பெற்றோர்களுக்காக எம்.பி.ஏ. படித்தேன். ஆனால் எனக்கு சினிமா மேலதான் ஆசை. படத்தொகுப்பாளர் ஆகணும்கிற ஆசை எல்லாம் முதலில் இல்லை. ஆனால், கிராஃபிக்ஸ்ல தான் ஆர்வம் இருந்தது. பெரிய தொகை எல்லாம் கட்டி படிக்க முடியாத குடும்பச் சூழல் என்பதால் அதை கைவிட்டுட்டேன்.

என் நண்பன் மூலமாக,  தொலைக்காட்சி ஒன்றில் எடிட்டிங் கற்க, வாய்ப்பு கிடைத்தது. அப்படியே அது மேல ஆர்வமும் வந்தது. பிறகு, படத்தொகுப்பாளர்கள் ஸ்ரீகர் பிரசாத், லெனின் கிட்ட உதவியாளராக சேர முயற்சித்தேன். ஸ்ரீகர் பிரசாத் கிட்டே வாய்ப்பு கிடைக்கல. ஆனா, ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராமின் விளம்பர நிறுவனத்தில் எடிட்டிங் வேலைக்கான வாய்ப்பு வந்தது. அங்கே என்னை மேலும் பட்டை தீட்டிக்கிட்டேன். அங்கே தான், லெனின் சாரோட அறிமுகம் கிடைத்தது.

“உனக்கு பணம்தான் குறிகோள்ன்னா, என்கிட்டே வராத.. எடிட்டிங்கில சாதிக்கணும்னா நீ என்கிட்டே சேரலாம்..” சொன்னார். அடுத்த நாளே அவரோட டீமில் ஒருவனா சேர்ந்துட்டேன். எடிட்டிங்கின் இலக்கணங்களை சரியா புரிஞ்சுக்க, எனக்கு உதவினார் லெனின் சார். ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கும் மேலே அவரோட இருந்தேன். அப்படித்தான் ‘களவாடிய பொழுதுகள்’ படத்துக்கு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் லெனின்&பிரேம் என டைட்டிலில் பேர் வரும். ஏனோ, அந்தப் படம் இன்னும் வெளியாகல. சில இடைவெளிக்குப் பிறகுதான் பிரம்மாவோட அறிமுகம் கிடைத்தது. அப்படித்தான் அவரோட முதல் படமான ‘குற்றம் கடிதல்’ படத்தில் வாய்ப்பு வந்தது!

“ஒரு பெண்ணிடம் காட்டுகிற அன்புக்கு இணையானது எடிட்டிங். எவ்வளவு தூரம் நாம், நம் வேலையை நேசிக்கிறோமோ, அதே அளவுக்கு வெற்றி நம்மைத் தேடிவந்து அணைத்துக் கொள்ளும். பெண்ணின் ப்ரியத்தைப்போல!” குருநாதர் லெனின் சார் அடிக்கடி சொல்லும் தாரக மந்திரம் இது. ஒவ்வொரு படத்திலேயும் ஒப்பந்தமாகும்போது இதைதான் முதலில் நினைச்சுப்பேன்!. அப்படிதான் ‘மகளிர் மட்டும்’ படத்துக்கும் பணியாற்றினேன்.

இந்தப் படத்தோட திரைக்கதை பிரதியை படிக்கும்போது, அப்படியே அதில் மூழ்கிப் போயிட்டேன்.  காரணம், கதையில் வருகிற மூன்று பெண் பாத்திரங்களும் என்னுடைய வாழ்வில் சந்தித்தவர்கள் தான். என்னைச்  சுற்றி வாழும் உறவுப் பெண்களும் சகோதரிகளும் தான் கதையில் தெரிந்தார்கள். அதனால், படத்தின் காட்சிகளை எடிட்டிங் பண்ணும்போது சில இடங்களில் என்னையும் மீறி உணர்ச்சிவயப்பட்டேன். நான் சந்தித்த சம்பவங்கள் என் கண் முன்னால் காட்சிகளாக விரிந்து கிடந்தது. சினிமாவும் வாழ்க்கையும் வேறல்ல தெரிஞ்சுக்கிட்ட தருணம் அது!

கோலிவுட்டில் சிலர் எடிட்டிங் இலக்கணத்தை மீறி படத்தொகுப்பு செய்யுறாங்க. கதையை அழுத்தமா சொல்ல, இலக்கணத்தை மீறித்தான் ஆகணும் என்றால், அது தவறில்லை. அதைவிட்டுட்டு நாம் கற்ற வித்தையை காட்டுவதற்கு இலக்கணத்தை மீறுவது தவறு!”  ஷார்ப்பாக கத்தரி போட்டு, முடித்தார் பிரேம்!

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles