சினிமா எடுக்க நாயகனோ, தயாரிப்பாளரோ முக்கியமில்லை - இயக்குநர் ஏகாதசி

Wednesday, November 15, 2017

“தமிழ் சினிமாவில் ஒரு போக்கு இருந்தது. இப்போதும் இருக்கிறது. கவிஞர்கள், பாடலாசிரியர்களுக்கு சினிமா எடுக்க தெரியாது என்பதுதான் அது. அறிவுமதி, பா.விஜய் மற்றும் மறைந்த நா.முத்துக்குமார் போன்றவர்கள் சினிமா படம் எடுக்கவே சென்னை வந்தார்கள்.

பாடல் எழுத அல்ல; பாட்டு எழுதுபவர்களுக்கு படம் எடுக்கத் தெரியாது என்கிற தவறான கண்ணோட்டம் இப்போதும் நீடிக்கிறது. அந்த கண்ணோட்டத்தில் என்னையும் சேர்த்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

அந்தவகையில் நான் குட்டி சாதனை பண்ணியிருக்கேன் என்றுதான் சொல்வேன். முதல் முறையாக பாடலாசிரியர் இயக்குநராகவும் மாறி, ஜெயிக்க முடியும் என்பதுதான் அது!” வார்த்தைகளில் நம்பிக்கை தெறிக்க பேசுகிறார் பாடலாசிரியரும் இயக்குநருமான ஏகாதசி. தற்போது புது முகங்களை வைத்து ‘கனகாம்பரம்’ படத்தை இயக்கி உள்ளார். தொடர்ந்து அவர் பேசும்போது,

“தமிழ் சினிமா எப்போதுமே தயாரிப்பாளர், இயக்குநர் என இரண்டு பாதைகளில் பயணிக்கும். தயாரிப்பாளரோட நோக்கம் பணம் சம்பாதிப்பதிலும், இயக்குநரோட நோக்கம் உயர்ந்த படைப்பை கொடுப்பதிலும் இருக்கும். இந்த இரண்டு புள்ளிகளும் இணைவது ரொம்ப அபூர்வமான விஷயம். முரண் பல நேரங்களில் சாத்தியப்படுகிறது. சில நேரங்களில் முரண் முரணாகவே இருக்கிறது.

தயாரிப்பையும், இயக்கத்தையும் ஒருசேர யாரும் விரும்பி செய்வதில்லை.

அப்படித்தான் ‘கனகாம்பரம்’ படத்தை நானே தயாரித்து, இயக்கும் நிலைக்கு வந்தேன். இந்த கதையை முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், விதார்த், பிரசன்னா உள்ளிட்ட பலருக்கு  சொன்னேன். அதேபோல நிறைய தயாரிப்பு நிறுவனங்களிலும் ஏறி, இறங்கினேன். ஆனால், இந்த கதையை தயாரிக்கவோ, நடிக்கவோ யாரும் முன் வரவில்லை. ‘வேறு கதை இருந்தால் சொல்லுங்களேன்’ என்றுதான் பலரும் சொன்னார்கள். படைப்பாளி எங்கேயும் தோற்க விரும்ப மாட்டான். நான் தோற்றுப்போக விரும்பவில்லை. இந்தப் படத்தை நானே தயாரிக்க முடிவு செய்தேன்.

பாடலாசிரியராக பல ஊர்களுக்கு சென்றிருக்கிறேன். பலர் என்னிடம் முகவரி வாங்கியிருக்கிறார்கள். ஆனால், ஒருவரும் என்னை வந்து சென்னையில் பார்த்ததில்லை. ஆனால், முகவரியே வாங்காத பலர், என்னை தேடி வந்து பார்த்தது உண்டு. அப்படியாக, ஒரு படம் எடுக்க கதாநாயகனோ, தயாரிப்பாளரோ முக்கியமில்லை. படம் எடுக்க வேண்டும் என்கிற முனைப்பு இருந்தாலே போதும். அப்போது பணம் ஒரு தடையாக இருக்காது.

‘கனகாம்பரம்’ படத்தின் படப்பிடிப்பில் எனக்கு ஒரு டீ தேவையென்றாலும், மற்றவர்களுக்கு டீ தர வேண்டுமென்றாலும், அதை முடிவு செய்ய வேண்டிய ஆளாக நானே இருந்தேன். போர்க்களத்தில் நிற்பது போல உணர்ந்தேன். ஆனால், அது எனக்கு பிடித்திருந்தது.”

என்றவரிடம் தொடர்ந்து மதுரையை மையமாக வைத்தே படங்கள் அதிகம் வெளியாகிறதே? எனக் கேட்டதற்கு,

“முதல் படத்திலேயே இந்த கேள்வியை என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள். அப்போது சொன்ன அதே பதிலைத்தான் இப்போதும் சொல்கிறேன். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த நிறைய பேரில், 80 சதவீதம் பேர் மதுரையை சேர்ந்தவர்கள் தான். அதில், அதிகமான பேர் இயக்குநர்களாக இருக்கிறார்கள். எனக்கும் சொந்த ஊர் மதுரை தான். நான் சேலத்திலோ, தூத்துக்குடியிலோ, கோவையிலோ படப்பிடிப்பை நடத்த முடியாது. அது எனக்கு சௌகரியமாக இருக்காது.

நான் பிறந்து, வளர்ந்த பூமியில் ஷுட்டிங் நடத்துவதே எனக்கு சரியென படுகிறது. காரணம், சொந்தத் தயாரிப்பில் இறங்கும்போது உறவுகளின், நண்பர்களின் உதவி தேவை. அது சொந்த ஊரில் மட்டுமே சாத்தியம். அதுபோல, ‘கனகாம்பரம்’ படத்தை நான் சென்னையிலோ, வேறு ஊர்களிலோ எடுத்திருக்கவே முடியாது. நான் எழுதுகிற கதையும் என் மண் சார்ந்தது தான். அதனால் உசிலம்பட்டியே எனக்கு உசிதம்!. உண்மைக்கு பக்கத்தில் இருந்து ‘கனகாம்பரம்’ படத்தை எடுத்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடித்திருப்பவர்கள் ஒப்பனையற்ற முகங்கள், எண்ணெய் வடிந்த முகங்கள். ஆகவேதான் மதுரையையே தேர்வு செய்தேன்!” நச்சென்று முடித்தார் ஏகாதசி.

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles