ஆரவ்வை விட அதிகமான சந்தோஷத்தில் இருக்கிறேன்- பிக்பாஸ் சினேகன்

Wednesday, November 15, 2017

“அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்.. அந்த நினைவுகள் நெஞ்சில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்..” பாடல் எழுதிய சினேகனின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள்.. ஏக்கங்கள். ஆனால், இறுதியில் எல்லாம் சுபமே.

 பிக்பாஸால் கிடைத்த புகழ் வெளிச்சத்தை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் இயல்பாய் பேசினார் சினேகன்!

“இந்த உலகத்தில் உண்மைக்கும், நேர்மைக்கும், அன்புக்கும் மரியாதை இருக்குமா? என்கிற மிகப் பெரிய சந்தேகம் எனக்குள்ளே இருந்துகொண்டே இருந்தது. பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது எனக்குள்ளே ஒரு யோசனை ஓடிக்கொண்டே இருக்கும். வெளியே போகும்போது, நிச்சயம் நம்மை எல்லோரும் அழுகு மூஞ்சி என்றே சொல்லப்போறாங்க என்பதுதான் அது. உண்மையில், இதுதான் நான்!.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு அன்பும், உண்மைக்கும் இப்போதும் கூட மரியாதை இருக்கு என்பதை அறிந்து கொண்டேன்.

இன்னும் எங்கள் மனிதர்களுக்குள் ஈரம் இருக்கு என்பதையே என்னுடைய அடையாளமாக கருதுகிறேன்!. பிக் பாஸுக்கு முன்பு சினேகனுக்கு மட்டுமே தெரிந்த சினேகன், அந்த  நிகழ்ச்சிக்கு பிறகு, இப்போது எல்லோருக்கும் தெரிந்த சினேகனாக மாறியிருக்கேன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் வெற்றி பெறாதது எனக்கு பெருமிதமாக இருக்கிறது. பிடித்தவர்கள் பாராட்டியிருப்பார்கள். பிடிக்காதவர்கள் என்னை வசைபாடியிருப்பார்கள். நான் ஜெயித்திருந்தால் இதுதான் நடந்திருக்கும். வெற்றி பெறவில்லை என்றவுடனே, பலரும் தங்களுடைய பாசத்தை பலவிதமான வழிகளில் என்னிடம் தெரிவித்தார்கள்.

இந்தப் பூமியில் யதார்த்தமான மனிதன் நான். சினேகன் பேரழகன் எல்லாம் கிடையாது. என்னுடைய யதார்த்தத்தை சினிமாவில் காண்பிக்க முடியவில்லை. அதை பிக் பாஸ் வீட்டில் காட்டுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, அவ்வளவுதான். எனக்காக துன்பப்பட்ட, எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது நான், ஆரவ்வை விட அதிக சந்தோஷத்தில் இருக்கிறேன்.

பெண்களிடம் பேசும்போதெல்லாம் நம்பிக்கை பெறுகிறேன். ஆண்களிடம் பேசும் போதெல்லாம் நம்பிக்கை தருகிறேன். என்னுடைய பலமே, என்னுடைய தோழிகளும் தேவதைகளும் தோழர்களும் தான். எப்போதுமே என்னைச் சுற்றியுள்ளவர்களை ஊக்கப்படுத்திக்கொண்டே தான் இருப்பேன்.  பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த பத்து சதவிகிதத்தை தான் தொலைக்காட்சியில் காட்டியிருக்கிறார்கள். உண்மையில், நான் பேசியது அதிகம். அடுத்தவர்களுக்காக என்னை இழந்தது அதிகம். என்னுடைய அர்ப்பணிப்புகளும் அதிகமே. இறுதியாக, அந்த வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றபோது கூட, ஆரவ்வை முன்னால் விட்டுவிட்டு கடைசி ஆளாகத்தான் நான் வந்தேன். ஏனென்றால், அந்த பிக்பாஸ் வீட்டை எனக்கு அவ்ளோ பிடிக்கும்!” என்று முடித்தவாறே விழியோரம் எட்டிப் பார்க்கும் கண்ணீரை பொருட்படுத்தாமல், புன்னகைத்தார் சினேகன். கவிஞரின் சிறப்பே அதுதான்!

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles