நான்கு மனிதர்களை சுற்றி நடக்கும் கதை ‘விழித்திரு’! - இயக்குநர் மீரா கதிரவன்

Wednesday, November 1, 2017

தமிழ் சினிமாவில் ‘அவள் பெயர் தமிழரசி’ மூலம் தோல்பாவை கூத்திற்கு மகுடம் சூட்டியவர் இயக்குநர் மீரா கதிரவன். கோலிவுட்டில் சமூகம் சார்ந்து, சிந்திக்கும் இயக்குநர்களில் ஒருவர். ‘விழித்திரு’ மூலமாக, தனது அடுத்தப் பாய்ச்சலுக்கு தயாராகி இருக்கிறார். தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ள அவர், படம் குறித்து பேசியபோது,

“நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் அறிந்தோ அல்லது அறியாமலோ ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு நல்லது அல்லது தீமையைச் செய்து விட்டு செல்கின்றனர். இப்படிப்பட்ட நான்கு மனிதர்களை சுற்றி நடக்கும் கதையே ‘விழித்திரு’ படம். இப்படத்தின் திரைக்கதையை எழுதுவதே சவாலாக இருந்தது.

மூன்று ஹீரோயின்கள் இருந்தாலும், காதல் கிடையாது. அன்றாடம்,  சமூகப் பிரச்சினைகளை மக்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர்?, அரசியல்வாதிகளின் நாற்காலி வெறி, பாமர மக்களை எவ்வாறு வேட்டையாடுகிறது? என்பதுதான் இந்தப் படம். வழக்கமாக காதலைச் சொல்லித்தான் மக்களை சுவாரஸ்யப்படுத்த முடியும் என்ற தவறான கருத்தை உடைத்த படமாகவும் ‘விழித்திரு’ இருக்கும். சீனு ராமசாமி, வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குநர்கள் படம் பார்த்துட்டு, “இது ஒரு புதுவிதமான திரைக்கதை”ன்னு பாராட்டியிருப்பதே அதற்கு சான்று!

பெரும்பாலும் படப்பிடிப்பு இரவு நேரங்களில் தான் நடந்தது. சென்னையின் முக்கிய சாலைகளில் முழு படப்பிடிப்பையும் நடத்தினோம். ஒவ்வொரு நாளும் சென்னையின் நிறங்கள் மாறிகிட்டே இருக்கும். அதனால கன்டினியூட்டில கவனமா இருக்க வேண்டியிருந்தது. இரவு நேரங்களில் படப்பிடிப்பு என்பதால ஆர்ட்டிஸ்ட் பேபி சாரா தூங்கிடுவாங்க. அதுக்குள்ள அவங்க சம்பந்தப் பட்ட ஷாட்ஸ்களை  வேகமாக எடுக்கணும். இதையெல்லாம் படப்பிடிப்பின்போது எதிர்கொள்ள வேண்டியிருந்தது!

இப்படத்தின் கதாநாயகன் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் தான். இரவு நேர ஒளிப்பதிவை சிறப்பா செஞ்சிருக்காரு. ஆடியன்ஸுக்கு ‘விழித்திரு’ விஷுவல் ட்ரீட்டா இருக்கும். இரவு நேரத்தில் ஷுட்டிங் என்பதால், படப்பிடிப்பு குழுவினர் பல நேரங்களில் சோர்ந்துடுவாங்க. அதாவது மூன்று இரவுகள் தொடர்ச்சியா படப்பிடிப்பு நடந்தால், பத்து நாட்கள் அவங்க ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்துல ஆர்டிஸ்ட்டுகளோட எடையிலோ தோற்றத்திலோ எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கக் கூடாது. நடைமுறையில் இதெல்லாம் எங்களுக்கு ரொம்பவே கடினமானதாக இருந்தது. ஏறக்குறைய படப்பிடிப்பு முடியவே இரண்டு வருடங்கள்  ஆனது. பல கட்ட தடைகளுக்குப் பின் படம் இப்போ வெளியாக உள்ளது மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கு!” விழிப்புணர்வோடு முடித்தார் மீரா கதிரவன்!

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles