பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் ‘எக்ஸ் வீடியோஸ்’! - இயக்குநர் சஜோ சுந்தர்

Wednesday, November 1, 2017

இயக்குநர்கள் ஹரி, பிரகாஷ் ராஜின் பட்டறையில் இருந்து சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார் சஜோ சுந்தர். தன்னுடைய நண்பனின் மனைவிக்கு ஏற்பட்ட பாலியல் பிரச்னையை மையமாக வைத்து, ‘எக்ஸ் வீடியோஸ்’ எனும் படத்தை இயக்கியுள்ளார்.

விரைவில், கோலிவுட்டிலும் பாலிவுட்டிலும் வெளியாக உள்ள இப்படம் குறித்து, அவர் பேசும்போது,

“நம்முடைய சமூகத்தில் ஆபாச வீடியோக்களால் பாதிக்கப்பட்டு, தன்னுடைய வாழ்க்கையை இழந்தவர்கள் அதிகம். அவர்களுடைய ஆன்மாக்கள் தான், எனக்கு பின்னால் பலமாக இருந்து ‘எக்ஸ்  வீடியோஸ்’ படத்தை எடுக்க வைத்திருக்கு!.

படம் இயக்கணும்கிற ஆர்வத்துலதான் நான் சினிமாத்துறைக்குள்ள வந்தேன். எல்லார் மாதிரியும் கமர்ஷியல், காமெடி படங்கள் இல்லாமல், சமூகத்துக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய படத்தை, நாம ஏன் எடுக்கக் கூடாது?ன்னு நினைத்தேன். அந்த முயற்சியின் பலன்தான் இந்தப் படம். ‘நம்முடைய தினசரி வாழ்வில், நமக்கே தெரியாமல் நாம் எத்தகைய ஆபத்தில் சிக்கிக் கொள்ள நேர்கிறது’ என்பதன் ஒன்லைனே ‘எக்ஸ் வீடியோஸ்’!

காதலுக்கு சாட்சியாக, முன்பு கடிதங்கள் தான் இருக்கும். ஆனால் இன்றைய ஆண்ட்ராய்டு யுகத்தில், காதலர்களுக்கு சாட்சி, அவங்களோட அந்தரங்கப் படங்கள்தான். காதலன் கேட்கிறானேன்னு, விழிப்புணர்வே இல்லாமல் தன்னுடைய அந்தரங்ககளை ஷேர் செய்றாங்க. ஒருமுறை டிஜிட்டல்ல உங்களோட படங்களை பதிவேற்றிட்டீங்கன்னா, அதனை எக்காலத்துக்கும் அழிக்க முடியாது. ஆகவே, காதலர்கள் ரொம்ப எச்சரிக்கை உணர்வோடு இருக்கணும்!. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணித்தலும் அவசியம்!

நம்முடைய நாட்டில், செக்ஸ் என்கிற வார்த்தையையே தவறான அர்த்தம் கொண்டதாக மாற்றிவிட்டோம். கடந்த இருநூறு வருடங்களாகத்தான் இப்படி ஒரு நிலைமை, சமூகத்துல இருக்கு. அதற்கு முன்பே, நம்முடைய முன்னோர்கள் கோயில் சிற்பங்கள் மூலமாக, செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்காங்க. அதற்கான ஆதாரங்கள் இப்பவும் நம்முடன் இருக்கு!

நம்முடைய பிள்ளைகளுக்கு சரியான வயதில், செக்ஸ் எஜூகேஷனை போதித்தால் கட்டாயமாக அவர்களுக்கு புரிதல் ஏற்படும். பல தவறுகள், ஆபத்துகளை எளிமையாக தவிர்க்கலாம்!.

‘எக்ஸ் வீடியோஸ்’ கதையை எழுதி, முடித்துவிட்டு பல தயாரிப்பாளர்கள்கிட்டே வாய்ப்பு கேட்டு, அலைந்தேன். ஆனால் அவர்கள் இதை ஆபாச படமாகத்தான் புரிஞ்சிக்கிட்டாங்க. யாருமே தயாரிக்க முன்வராதபோது, நானும் என்னுடைய சில நண்பர்களும் சேர்ந்து படத்தை தயாரிக்கும் முடிவுக்கு வந்தோம். இப்போது எங்களுடைய முயற்சி வெற்றி பெற்றிருக்கு!

தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் படம் வெளியாகுது. ஹிந்தியில் வெளியிட சென்சார் போர்டுக்கு படத்தை காண்பித்தேன். அந்தக் குழுவில் பெரும்பாலும் பெண்கள்தான் இருந்தாங்க. படம் பார்த்துட்டு, “இது போன்ற தவறுகள் எல்லாம் நடக்குமா?”ன்னு கேட்டு ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஆனாங்க!. பெண்களை மனதில் வைத்து, சில காட்சிகளை மட்டும் நீக்க சொன்னாங்க. பெண்களுக்கான பிரத்யேக காட்சிகள் திரையிட நான் பேசிட்டு இருக்கேன்.

‘எக்ஸ் வீடியோஸ்’ படத்தை  கல்லூரி, பள்ளிகளில் திரையிடணும். வயதுக்கு வந்த ஆண்கள், பெண்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது. முக்கியமாக, பெற்றோர்கள் இப்படத்தை பார்க்கணும் அறிவுறுத்துறேன். படம் பார்த்துட்டு, தங்களுடைய பிள்ளைகளையும் இந்தப் படத்தை பார்க்க அனுமதிக்கணும்னு வேண்டுகோள் வைக்கிறேன்!.” என்று கூறி நமக்கு வியப்பும், ஆச்சர்யம் மேலிட வைத்தார் இயக்குநர் சஜோ சுந்தர். அண்மையில் இப்படத்தின் டீசர் ஒன் மில்லியன் பார்வையாளர்களை சென்று சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது!.

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles